மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -28

: அத்தியாயம் 8 : அக்ஷரப் பிரம்ம யோகம் :

சென்ற அத்தியாயத்தில் ஞானம் என்பது தெளிந்த அறிவு. விஞ்ஞானம் என்பது அனுபவ அறிவு என்பது பற்றியும், இந்த ஆன்ம சாதனையில் ஈடுபட்டுத் தன் மீது பக்தி செலுத்துபவர்களை ஸ்ரீ கிருஷ்ணர் நான்கு வகை பக்தர்களாகப் பிரித்து அவர்களின் தன்மைகளை விரிவாகக் கூறி, இவர்களில் தனக்குப் பிரியமானவர்கள் யார் என்பதையும் சுட்டிக்காட்டியதைப் பார்த்தோம். மேலும் இந்தப் பிறவியில் சாதனையைத் தொடர முடியாமற் போய்விட்டாலும் கூட அந்த ஞானம் வீண் போகாது. அடுத்த பிறவியிலும் அதனை விட்ட இடத்திலேயே தொடரக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் அவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி முழுமை பெற்று என்னை வந்து அடையலாம் என்ற உறுதியையும் பகவான் அருளியிருக்கின்றார் என்று பார்த்தோம் இல்லையா!

தன் பக்தர்களிடம் எல்லையற்ற கருணை கொண்டிருக்கும் அந்தக் கருணைக் கடல், முன்னர் கூறிய அந்த நான்கு வித பக்தர்களும் தனித்தனியே பின்பற்ற வேண்டிய பக்தி வழிகளையும், அவற்றின் வேறுபாடுகளையும் பற்றி இந்த அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.

இறைக்கருணை எவ்வளவு அற்புதமாக நம்மைப்போன்ற அற்பப் பிறவிகளுக்கு, நீ கொஞ்சமாவது என்னை நம்பி என்னிடம் பக்தி கொண்டு, என்மீது அன்பு செலுத்தியிருந்தாயானால் அதன் தொடர்ச்சியான பயன் உனக்கு அடுத்த பிறவியிலும் கிடைக்கும் என்ற சலுகையை வழங்கியுள்ளது என்பதை நினைத்துப் பாருங்கள்!

வாழ்நாளில் பக்தி செலுத்தி வழிபடத் தவறினாலும், உடலை விட்டு உயிர் பிரிகின்றபோது எத்தகைய எண்ணம் மனிதனின் மனதில் இருக்கின்றதோ, அதற்கேற்ற வாழ்க்கையையே மறுபிறவியில் பெறுகின்றானாதலால், மரணிக்கும் தருணத்தில் கடவுளை தியானித்திருப்பது அவசியம். (மீண்டும் வாசிக்கவும்).

ஆனால் இது அவ்வளவு சுலபமாக நடக்கின்ற காரியமா? உலகத்திலுள்ள அத்தனை ஆசைகளும் ஏக்கங்களாக அப்போது தானே மனதில் முண்டியடிக்கின்றன! அவனுக்குக் கல்யாணம் நடக்கவில்லையே, இவளுக்குக் குழந்தை பிறக்கவில்லையே, இன்னும் சொத்து சேர்க்க வழியில்லாமல் நான் இப்படி சாகக் கிடக்கிறேனே என்றெல்லாம் கன்னா பின்னாவென்று ஏதேதோ விதத்தில் மனம் அலை பாய்ந்து அல்லல்படுமே அல்லாமல் கிருஷ்ணா! ராமா! என்று ஜெபிக்க முற்படுமா? ஓம் நமசிவாய என்று தான் சொல்லுமா?

கதை ஒன்று நினைவிற்கு வருகிறது. ஒரு கிழவர் சாகக் கிடக்கிறார். அவரது அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது. அவரது மருமகள் அறைக்குள் வந்து அந்த விளக்கைத் தூண்டி விட்டு சிறிது எண்ணெயை விளக்கில் ஊற்றுகிறாள். கிழவர் சத்தம் போடுகிறார். போதும்! போதும்! ரொம்ப ஊற்றாதே! எண்ணெய் சீக்கிரம் தீர்ந்துவிடப் போகிறது! என்று. எந்த நேரத்தில் எப்படிப்பட்ட கவலை?

இதைத்தான் சங்கரர் பஜகோவிந்தத்தில் இப்படிப் பாடுகிறார்.
“குழந்தைக்கோ நாட்டம் பல விளையாட்டம்,
யுவனுக்கோ நாட்டம் யுவதியின் தேட்டம்
கிழவனுக்கோ பல மனக்கவலோட்டம்
பரம்பொருள் (மீது) இனி யார்க்குமில்லை நாட்டம்” என்று.

நாம் வாழ்ந்திருக்கும்போதே, மனதைக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டு பண்ணினால் தான், நமது மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலை பெறும். இந்த வாழ்க்கையைப் பற்றின்றி வாழ்ந்துகொண்டு, பக்தியால் தன்னுடனேயே ஒன்றிய நிலையில் வாழப் பழகினால் தான், மனதால் கடவுளைத் தியானம் செய்து கொண்டே தமது கர்மங்களைச் செய்தால்தான் அந்தப் பழக்கத்தின் காரணமாகவாவது இறக்கும் தருவாயில் இறைநாமம் நம்மில் ஒலிக்கும்.

இந்த உண்மையை வாழ்க்கைப் பாடமாகப் பெற்றதால் தான் ஓர் இந்து காலையில் கண் விழிக்கும்போதே தன் கரங்களைத் தேய்த்துக் கண்களில் ஒற்றி இறைவனைக் கைகூப்பி வணங்கிவிட்டு எழுகிறான். தனது செயல் அத்தனையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறான். இரவு படுக்கின்றபோதும் தன் கடவுளை ஒரு முறை கூவி அழைத்து விட்டுப் படுக்கின்றான்.

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்”

மனம் பழக வேண்டும். பழக்கத்தால் தான் நாம் எதையுமே செய்கிறோம். பழக்கம் விட்டுப் போய்விட்டதென்றால் மறந்து விட்டது என்று சொல்கிறோம். “ஏமாந்து போகாதே! இமைகளை மூடாதே! எமன் வந்திடுவான்! ஏய்த்திடுவான், மாய்த்திடுவான், நாக்கை மடக்கி விடுவான், மனதில் ஓயாமல் துதித்திடு!” என்று திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான் சேஷாத்திரி ஸ்வாமிகள் பக்தர்களை எச்சரிப்பார். எனவே இறை சிந்தனை நம்முள் இடையறாமல் நினைக்கும்படி நாம் பழகிக்கொள்வது நல்லது. ஏனெனில் இறைவனிடம் தொடர்ந்த பக்தியைப் பழகினால் தான் எந்த நேரத்திலும் கவர்ந்து செல்ல வரும் காலனைப் பற்றிய கவலையோ, பயமோ இன்றிக் கண்ணன் கழலிணையைப் (இரண்டு கால்களையும்) பிடித்துக் கரை சேரலாம். சரிதானே!. இனி அக்ஷர பிரம்ம யோகம் என்றால் என்ன என்று பார்ப்போம்!

அக்ஷரம் என்றால் அழியாதது. மாறாததும் அழிவற்றதுமான பிரம்மத்தைப் பற்றிய ஞானமே அக்ஷர பிரம்ம யோகம். இறைவனும் நானும் ஒன்று என்பதை அறிந்து வாழும் ஞானிக்கு அடுத்த பிறவி இல்லை என்ற கிருஷ்ணரின் உறுதிமொழியே இவ்வத்தியாயமாக மலர்ந்திருக்கின்றது.

இந்த உடல், மனம், புத்தியே நான் என நினைக்கின்ற வரை நான் ஷரப் பிரம்மம். அழியக்கூடிய, வரையறைகளுக்கு உட்பட்டவன். இது அறியாமைக்குரிய நிலை. ஆனால் உண்மையில் நான் அழிவற்றதும் மாறாததுமான அக்ஷரப் பிரம்மமே. இந்த உண்மையை நான் அறியவேண்டுமென்றால், நானல்லாதவற்றை, அழியக்கூடிய தன்மை கொண்ட உடல், மனம், புத்தியை விலக்கி நிறுத்தி, அந்த பிரம்மம் தான் இங்கு நானாக இருந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது என்னும் அக மாற்றத்தை என்னுள் ஏற்படுத்துவது தான் ஒரே வழி. இறைவனாகிய நான் படைக்கப்பட்ட பாத்திரமாக நடிக்கிறேன். அந்த இறைவனே படைப்பவனாக நடிக்கிறான். ஆனால் இரண்டுமே ஒன்றுதான்.

இந்த உண்மையை அறிவதுதான் ஆன்மீகம். ஆன்மாவை நான் என அறிகின்ற பயிற்சி இது. இந்த ஆன்மீகத்தை அறிந்த ஞானிகள் அதனால் தான் இந்த உலகம் ஒரு நாடகமேடை – நாமெல்லாம் நடிகர்கள்! என்றார்கள். “இந்த ஞானத்தால் என்னை அறிபவன் என்னைச் சேர்ந்தவனாகின்றான்!” என்கிறார் கிருஷ்ணர். யார் ‘நான் செய்பவனில்லை, நான் அனுபவிப்பவனுமில்லை. ஆகையால் எனக்குச் செயல்களின் பலனில் அக்கறையில்லை’ என்பதை உண்மையாகக் கருத்தில் கொண்டு வாழ்க்கையைச் செலுத்துகிறானோ அவனுக்கு எந்தவித கர்ம பாதிப்பும் இல்லை. ஏனெனில் கர்மாவால் தான் பிறவி ஏற்படுகிறது. இந்தத் தெளிவு ஞானத்தால் ஏற்பட வேண்டும். வெறும் விதண்டாவாதப் போக்கு கூடாது. “எவன் ஞான உபதேசம் பெற்று ஞானத்தை அடைகிறானோ அவன் சம்சார சுழற்சிச் சக்கரத்திலிருந்து விடுபடுகின்றான்” என்று கீதை அழுத்தந் திருத்தமாகக் கூறுகின்றது. கர்ம பாதிப்பு இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லை. அவன் பிரம்மத்தில் கலந்து, வாழ்கின்றபோதே ஜீவன் முக்தன் ஆகிவிடுகின்றான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s