மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 27

இறைவனின் படைப்புகளில் மனித குலத்தின் அளவு மிகக் குறைவு. இவர்களிலும் தன்னைப்பற்றியும், இந்த உலகத்தைப்பற்றியும் உள்ள உண்மைகளை அறிய விரும்புபவர்கள் அதிகமில்லை. அதிலும் சாத்திரங்களின் வழிகாட்டுதல் மூலம் இந்த அறிவைப் பெற முயல்கின்றவர்கள் மிகக் குறைவு. அப்படியே தேடி விரும்பிப் படித்தாலும் கூட அவற்றைப் புரிந்து கொண்டவர்களும் மிகக் குறைவு. அவர்களில், படித்துப் புரிந்துகொண்டும், அதை அப்படியே ஏற்றுத் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்து நடப்பவர்கள் அரிதிலும் அரிது. அப்படிக் கடைப்பிடித்தாலும் கூட அதுவாகவே தன்னை உணர்ந்து மனித நிலையிலிருந்து தெய்வ இயல்பை அடைகின்றவர்கள் மிக மிக மிக அரிது. மனிதன் என்பவன் தெய்வமாகின்ற முயற்சி அரிதிலும் அரிதான ஓர் அரிய செயல் என்பது இப்போது புரிகின்றதல்லவா!

எனவே தான் உண்மையான வேதாந்த உபதேசங்கள் மிகக் குறைவான சில இடங்களில் மட்டுமே நடக்கும். ஏனெனில் அந்த உபதேசத்தைக் கேட்டுப் பெறுகின்ற தகுதியை அடைவதற்கே பல கோடி பிறப்புகள் எடுத்திருக்க வேண்டும். ஒரு நுண்ணுயிர், தன் இனத் தன்மையிலிருந்து மாறி, அடுத்த உயர் இன நுண்ணுயிராக மாறிப் பிறப்பதற்கே கோடி முறை முயற்சி செய்யும்! என்கிறது விஞ்ஞானம்.

துன்பங்கள் நிறைந்த நடைமுறை வாழ்க்கையில் அதிருப்தி அடைந்தவர்களாய் வேதாந்த விசாரணையில் ஈடுபட்டு, பெறப்படும் வேத உண்மைகளை உடனடியாக உணர்ந்து அதன்படி நடக்க முயல்பவர்கள் எல்லோரும் ஆன்மக் கோயிலின் வாசலில் நிற்கிறார்கள்! என்று தன் சீடர்களிடம் சுவாமி சின்மயானந்தர் கூறுவாராம்.

‘சிரத்தாவான் லபதே ஞானம்’ என்பது கீதையில் வரும் ஒரு சொற்றொடர். சிரத்தை உள்ளவருக்குத் தான் ஞானம் சித்திக்கும் என்பது இதன் பொருள். குருவின் மீதும் சாத்திர உண்மைகளின் மீதும் நம்பிக்கை வைத்து, முழு அக்கறையும் கவனமும் கொண்டு சிரத்தை உடையவனாகித் திரும்பத் திரும்பச் சிந்திப்பதன் மூலம் தான் ஞானம் நிலைபெறும்.

அறிவு பூர்வமாக ஞானம் எப்படி இருந்தாலும் அன்பு பூர்வமாக அது வெளிப்படாவிட்டால் அந்த ஞானம் பூரணமாகாது. இந்தப் பூரண அன்பைப் புரிந்து கொள்வதற்காகத்தான் மனைவி, குழந்தை, தாய், தந்தை, நண்பன், காதலி என்று நம் அன்பு வளர்ந்து அதிகரிக்கின்றது. ஆனால் இந்த அன்பில் சுயநலம், அகங்காரம், அதிகாரம் எல்லாம் கலந்திருக்கும்.

உண்மையான அன்பை அறிந்துகொள்ள வாழ்க்கை இப்போது பயிற்சியளித்துக்கொண்டு வருகிறது. சுயநலத்தை விட்ட பிறகு இந்த அன்பு அருளாக மாறி விடுகின்றது. அன்பின் முழுமையான இந்த அருள் நிலை ஒரு ஞானியிடம் தான் ஏற்படுகின்றது.

கிருஷ்ணர் சொல்கிறார், ‘‘ஞானி என்னுடன் இரண்டறக் கலந்தவராகி விடுவதன் காரணம் அன்பால் அவர் என்னை அணுகுவதே!”. அன்பு செய்யப்படுபவரும், அன்பு செலுத்துபவரும் ஒன்றி ஐக்கியமாகி விடுவது தான் உண்மையான அன்பின் அடையாளம். அந்த அன்பில் பேதமில்லை. பிரிவினையில்லை. அந்த அன்பு எந்தக் காலத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் பெருகிக்கொண்டே இருக்கும். உண்மையான அன்பு கைம்மாறு கருதாது, அதிகாரம் செய்யாது, அரவணைத்து அனுசரித்துப் பிழை பொறுத்துக் காக்கும். ஒரு தலை அன்பு உண்மையான அன்பல்ல. இரண்டு பக்கங்களிலும் அன்பு செலுத்தப்பட வேண்டும்.

இத்தகைய பரிபூரணமான அன்பைப் பரமாத்மாவாகிய என்னிடத்தில் எவர் செலுத்துகிறாரோ அவரே ஞானி. அவர் எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் எந்தக்காலத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் என்னில் அன்பு செலுத்துகிறார்.

இந்த உண்மையை அறியாதவர்கள் தான் பல்வேறு வகையான தெய்வ வடிவங்களைப் படைத்து உருவ வழிபாடு செய்கின்றனர். அன்பினால் கடவுளை அடையத் தெரியாமல், எல்லோரிடத்திலும் முழு அன்பைச் செலுத்தி அவர்களின் உள்ளிருக்கும் இறை சக்தியை உணரத் தெரியாமல் சண்டையும் பூசலுமாக வாழ்ந்துகொண்டே, அது வேண்டும், இது வேண்டும் என்று ஒவ்வொரு தெய்வத்திடம் ஒவ்வொரு வேண்டுகோளை வைத்துப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றோம்.

இவையெல்லாம் கீழ் நிலைகளில் இருப்பவர்களுக்கென வடிவமைக்கப்பட்டவை. ஞானம் பெறா நிலையில் ஒரு பற்றுக்கோடாக, ஒரு நம்பிக்கைக்காக, ஒரு தார்மீக செயல்முறைக்காக என்றே உருவ வழிபாடு அமைந்திருக்கின்றது. இறைவனின் சக்தியைப் பல்வேறு சாஸ்திரக் கோட்பாடுகளின்படி, ஆகம விதிகளின்படி, மிக முறையாக ஒன்றிணைத்துக் கொண்டு வந்து ஓர் உருவமாக்கி அமைக்கப்பட்ட கோவில்களில் சென்று, மனதைக் குவித்து, உள் சக்தியை ஒன்றுபடுத்தி வணங்கி நின்றாலே போதும். அங்கு நிரம்பியிருக்கின்ற தெய்வீக சக்தி நமக்குள் ஒரு நிறைவை, நிம்மதியை ஏற்படுத்தி விடும். அப்படி அந்த சாந்நித்யத்தை அனுபவிப்பதை விடுத்துப் பரிகாரச் சடங்குகளில் வீணாக ஈடுபட்டு, இருக்கிற நிம்மதியையும் தொலைத்து விடுகிறோம். இது பற்றிச் சிந்திக்க வேண்டும். ஞானம் பெற்ற பிறகு உருவ வழிபாடு தேவையில்லை.

“எங்கும் நிறைந்திருக்கின்ற என்னை மூடர்கள் உருவங்களில் வைத்து வணங்குகின்றார்கள். அவர்கள் அப்படிச் செய்தாலும் அவற்றையும் ஏற்றுக்கொண்டு அவரவர் வழிபடும் தேவதை, தெய்வங்களின் சக்திக்கேற்ப அவர்கள் வேண்டுவனவற்றையும் நான் அந்தந்த உருவத்தில் இருந்து அருள் பாலிக்கின்றேன். ஆனால் அப்படிப்பட்டவர்கள் சுயநல விருப்பத்துடன் பலன் கருதி அதற்குரிய தேவதையை உபாசிப்பதால், அதனால், அழியக்கூடிய பயன்களே கிடைக்கின்றன” என்கிறார் கிருஷ்ணர்.

“முக்தியை அடைவதற்கு ஞானம் தான் வழி. அது இல்லாமல் உருவ வழிபாடு செய்து பக்தி செலுத்துபவர்கள் சொர்க்கம் முதலான உலகங்களுக்குப் போய்த் திரும்பவும் வந்து பிறக்கிறார்கள். மேலும் இப்படிப்பட்ட மூடர்கள் என்னை உணராதபோது அவர்களில் நான் வெளிப்படுவதில்லை. மாயையின் மயக்கத்தின் காரணமாக அத்தகைய மூடர்களும் என்னைப் புரிந்துகொள்வதில்லை.

“ஆனால் யார் இந்த நிலையிலிருந்து விடுபட்டு, வேத உண்மைகளைக் குருவின் வாயிலாக சிரத்தையுடன் காதால் கேட்டு, மனதால் சிந்தித்துத் தனதாக ஏற்றுத் தியானப் பயிற்சியின் மூலம் அதையே தன்னில் நிலை நிறுத்தித் தனக்குள்ளே இருக்கின்ற என்னிடம் சரணடைந்துப் புகலடைகின்றார்களோ, அவர்களால் இப்பிறவியில் இல்லாவிட்டாலும் பெற்ற ஞானம் அடுத்த பிறவியில் தொடர்ந்து அவர்கள் முழுமையான ஞானியாகி என்னையே வந்தடைகின்றனர்.

இவை அத்தனையும் நமக்காக ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் கருணை கூர்ந்து அருளியவை. இப்படி கண்ணனின் மேலாம் உயர் கருணை, ஞான விஞ்ஞானம் என்ற அத்தியாயத்தின் வாயிலாகப் பிழிந்து தரப்பட்டிருக்கிறது. இவற்றை சிரத்தையுடன் பெற்று, பலமுறை வாசித்துப் பார்த்துச் சிந்தித்துப் புரிந்துகொண்டு தன் வயப்படுத்தி ஞான மயமாக்க வேண்டியது நம் கைகளில் தான் இருக்கின்றது.

அன்பர்களே! உங்களுடன் சில வார்த்தைகள். மேலோட்டமாகப் படிக்கின்றபோது, ஞான விஞ்ஞான யோகம் என்னும் இவ்வத்தியாயத்தின் கடைசிப் பகுதி சுரீரென்று நமது அடிப்படை நம்பிக்கைக்களைப் பற்றுக்கோடுகளைத் தகர்ப்பதாகத் தோன்றும். ஆனால் எதையும் ஆராய்ந்து பார்த்தால் தான் உண்மை விளங்கும். மிக மிக நுண்ணிய வேறுபாடுகளுடன் கூடிய பல்வேறு நிலைகளில் அல்லது தரங்களில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும், குண இயல்பும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பெருவாரியான ஜன சமுதாயத்திற்கு உரிய பாதை நமது சனாதன தர்மத்திற்காக நம் முன்னோர்களால் போட்டுத் தரப்பட்டிருக்கின்றது. அவர்களோ இறையுணர்வையே தம்முள்ளிருந்து வெளிப்படுத்தியவர்கள்.

உருவ வழிபாடுகளும் தெய்வத் திருஉருவங்களும் இறை விருப்பமாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வழிபட்டு, வளம் பெறுகின்ற வழிமுறைகளும் வேதங்களில் கர்மகாண்டமாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையைத் தாண்டி ஞான காண்டத்தில் நுழைபவர்களுக்கே ஞான வாசல் திறக்கப்படுகின்றது. அப்படிப்பட்டவர்கள் கோடியில் ஒருவராகவே இருக்க முடியும், அல்லவா? அப்படிப்பட்ட பரிணாம உயர்வில் முந்திச் செல்கின்ற நிலையில் தான் முன் சொன்ன வழிபாடுகள் உபாசனை முறைகள் பின்தள்ளப்படுகின்றன என்ற உண்மையை நாம் மிக நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொண்டால் தான் நடைமுறை வாழ்க்கையின் போக்கு வேறு, ஞானப் பார்வையோடு வாழப் பழகுகின்ற வாழ்க்கையின் போக்கு வேறு என்பது தெளிவாகும். அந்தத் தெளிவுதான் சாதாரண மக்களின் வழிபாட்டு முறைகள் மறுக்கப்படவில்லை, அவற்றின் உண்மைத் தன்மைதான் விளங்க வைக்கப்படுகின்றன என்பதைப் புரிய வைக்கும். அப்படிப் புரிந்தால் தான் ஞானம் விஞ்ஞானமாக மாறும். அதுவரை இவையெல்லாம் வாத எதிர்வாதங்களுக்கு உரிய தகவல்களாகவே பார்க்கப்படும். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s