மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -26

பிரம்மம் தன்னிலிருந்து உலகங்களைப் படைத்து, படைக்கப்பட்டவை எல்லாம் தானேயாகிக் கடைசியில் வெளிப்படுத்தியவற்றையெல்லாம் தானே தனக்குள் இழுத்துக்கொண்டு விடுகிறது. எல்லாமே பிரம்மம். சர்வம் பிரம்ம மயம் எனில் நமக்கு எல்லாமே சொந்தம். இதைப் புரிந்துகொண்டு நிகழ்வன எல்லாம் அவன் செயலே என்ற ஞானம் நமக்குள் பதிந்துவிட்டால் பிறகு எதனாலும் பாதிப்பில்லை. இதற்கு நாம் நம்மை அவனுடன் இணைத்துத் தியானத்தால் ஒன்றிவிட வேண்டும். நான் அல்லாதவற்றை எல்லாம் துறந்து விட வேண்டும். நான் அவன்! அவன் நான்! நானே பிரம்மம்!

இருண்டு கிடந்த அறைக்குள் ஒரு விளக்கை ஏற்றிய கணமே ஒளி பரவவுதைப் போல் இந்த ஞானம் இக்கணமே முழுமையாக நம்மில் ஏற்படவேண்டும். எல்லாம் நானே என்ற இந்த ஞானத்தை மனித மனதில் உருவாக்குவதற்காகத் தான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘‘அர்ச்சுனா! தண்ணீரில் நான் சுவையாக, சூரிய சந்திரனில் நான் ஒளியாக, வேதங்களில் பிரணவமாக, ஆகாயத்தில் ஒலியாக, மனிதர்களில் பேராண்மையாக, பூமியில் புனிதமான மணமாக, தீயில் சூடாக, எல்லா உயிர்களிலும் ஜீவசக்தியாக, தவ சீலர்களிடம் தவமாக இருந்து வருகிறேன்!” என்கிறார்.

சனாதன தர்மம் இதைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்திய விதம் தான் இந்துக்கள் யாரை சந்தித்தாலும் கரம் குவித்து அவர்களை வணங்குவது. எல்லாம் தெய்வம் என்று பார்க்கின்ற பக்குவ வெளிப்பாடு இது. யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்று உலகத்தையே அணைக்கச் செய்தது இந்த உயர்ந்த ஞானத்தால் தான்.

இந்தப் பக்குவம் நமக்குள் வந்துவிட்டால் பிறகு கீதையை ஒவ்வொரு சொல்லாக நுணுக்கி ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமே இல்லை. எல்லாம் ஒன்று. அவ்வளவுதான். பிரச்னையே இருக்காது. எதிரில் இருப்பவரும் நானும் ஒன்று என்று அணைக்கத் தெரிந்தால் தீh;ந்தது. இதைவிட சுலபமான வழி ஏதாவது இருக்கிறதா? எது தடுக்கிறது என்று பார்த்தால் நமக்கு நாமே தான் தடை. புரிகிறதா?

கீதையில் கிருஷ்ண உபதேசம் மேலும் இப்படித் தொடர்கிறது. ‘‘என்னிடமிருந்துதான் சாத்வீகம், ராஜஸம், தாமஸம் என்னும் முக்குணங்கள் உருவாகின்றன. நான் அவைகளைக் கடந்து அவைகளுடன் ஒட்டாமல் இருக்கிறேன். ஆனால் உலக மக்கள் சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் முக்குணங்களில் மோகித்து வாழ்கிறார்கள். அதனால் தான் முக்குணங்களைக் கடந்தவனும், அழிவற்றவனுமாகிய என்னை அறிய முடியாமல் போகிறது.”

“என்னுடைய முக்குணங்களாகிய மாயையைக் கடப்பது மிகவும் கடினம். எந்த சாதகர்கள் இந்த மாயையிலிருந்து விடுபட்டு என்னையே புகலாக அடைகிறார்களோ, அவர்கள் என் அருளால் இந்த மாயையைக் கடக்கிறார்கள். மாயையிலிருந்து விடுபட்ட பிறகு என்னை அறிந்துகொள்கிறார்கள்.”

“அசுர குணம் கொண்டவர்களும், மாயையால் மறைக்கப்பட்ட ஞானத்தைக் கொண்டவர்களும், மிகக் கேவலமானதும் பாவமுமான செயல்களைச் செய்பவர்களும் என்னைச் சரணடைவதில்லை.”

“இதற்கு மாறாக நற்பண்புகளையும், நற்செயல்களையும் கொண்ட மக்களில் நான்கு வகையினர் என்னை வழிபடுகின்றனர்; சரணடைகின்றனர். பயன் வேண்டுவோர், துன்பத்தில் சிக்கி உழல்பவர்கள், என்னைத் தெரிந்துகொள்ள விரும்புபவர், மெய்யறிவைப் பெற்ற ஞானியர் ஆகியோரே இந்த நான்கு வகையினர்.”

“இந்த நான்கு வகை பக்தர்களில் மிகச் சிறந்தவரும், என்னிடம் அதிக ஈடுபாடு கொண்டவரும் ஞானியே ஆவார். இவருக்கு நானும், எனக்கு இவரும் மிக விருப்பமானவர்கள். அந்த பக்தஞானி என் ஆத்மாவின் சொரூபம். அவர் என்னையே புகலாகக்கொண்டு திடமான பக்தி சிரத்தையுடன் தியானித்தும், பூஜித்தும் வருகிறார். என்னைத்தவிர வேறு எதையும் அவர் விரும்புவதில்லை.”

“பொருளாசை கொண்டவன் தனக்குக் கிடைக்க வேண்டிய பலன்களுக்காக என்னிடம் பக்தி செலுத்துகின்றான். துன்பப்படுபவர்கள் தங்கள் துன்பத்தைப் போக்கிக்கொள்ளும் விருப்பத்தாலேயே என்னை வணங்குகின்றனர். என்னைப்பற்றி அறிய விரும்புபவர்களிடம் கடவுளைப்பற்றி அறிய வேண்டும் என்ற விருப்பம் தான் மேலோங்கியிருக்கிறது. அதற்கு மேல் எதுவுமில்லை. ஆனால் ஞானியிடம் பற்றோ, ஆசையோ எல்லாமே என்னையே சார்ந்ததாக இருக்குமே அல்லாது வேறு எந்த விஷயத்திலும் இருப்பதில்லை. எல்லாவற்றிலும் இப்படி என்னையே காண்கின்ற இத்தகைய ஞானி உலகில் மிக மிக அரிதாகத்தான் பிறக்கிறார்.”

கண்ணன் அருளிய இந்த அமுதமொழிகளைத் திரும்பத் திரும்ப நாம் படித்து, சிந்தித்து உள்ளத்தில் பதித்துக் கொண்டால் தான் கண்ணனால் விரும்பப்படுபவராக நாம் ஆக முடியும். நமது பற்றோ, ஆசையோ, கண்ணனைச் சார்ந்தவராகவே மாறுகின்றபோதுதான் நம்மில் தெய்வீகம் மலரும். ஆனால் அலைபாயும் மனத்தோடு வாழ்க்கை என்ற காட்டாற்றில் சிக்கி ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, இது ஆகின்ற காரியமா? முயற்சிப்போம், அவன் கருணை நமக்குத் துணை செய்யட்டும்.

ஞானம் முழுமையற்றது. பிறர் சொல்வதைக் கேட்டு ரசிக்கின்ற வரை அது வெறும் அறிவாக மட்டும் இருக்கும். நம்மை அந்தப் பரம்பொருளிடம் முழுமையாகச் சமர்ப்பிக்கின்றபோதே அது முழுமையானதாக மாறும். ஞானத்துடன் கூடிய பக்தியான விஞ்ஞானமே முழுமையானது. விஞ்ஞானம் தான் உண்மையைக் கண்டறியக் கூடியது. ஞானம் என்பது அறிவு. விஞ்ஞானம் என்பது அந்த அறிவை உண்மையெனக் கண்டுகொள்வது. அதுதான் நம்மை இறைவனாக்கும்.

ஞானம் பெற்றுத் தெளிந்த அறிவுடன் தொடர்ந்து தியானத்தின் மூலம் தன்னை அவனுடன் இணைத்துக் கொள்பவரே ஞானியாகின்றனர். அத்தகைய ஞானியிடம் தான், தான் என்றோ, பிறர் என்றோ, இறைவன் என்றோ பேதம் இருக்காது. அப்படிப்பட்டவரே கிருஷ்ணருக்குப் பிரியமானவர். மாயையின் தலையீட்டால் மதி மயங்கிய மனிதர்கள், மதிமயங்கிய கணங்களில், புலனின்ப வழிகளைச் சேர்ந்து வீணாக சக்தியை இழந்து அழிகிறார்கள். அறிவு தெளிந்த நிலையில் இருந்தாலும் மனதால் தடைப்பட்டு, பழகிய பழக்கங்களால் ஏற்படுகின்ற புத்தி மயக்கத்தால் அறிவை இழந்து, ஞானம் மறந்து, பழைய பழக்க வழக்கங்களையே தொடர்கின்றபோது, ஞானத்தையே அது தடுக்கின்றது. ஞானம் பெற்றும் இப்படிப் பழைய நிலையிலேயே நடந்து கொண்டால், பிறகு பெற்ற ஞானத்தால் பயனில்லை.

யார் ஞானத்தால் தெளிவு பெற்றுத் தன்னில் தானே அன்பைச் செலுத்தித் தன்னையே பரம் பொருளின் ஒரு துளி என்று நினைத்துத் தொடர்ந்து தன்னில் அன்பும் பக்தியும் கொண்டிருக்கிறாரோ, அவரிடம் அந்தப் பரம்பொருள் வசப்படும். அதோடு மட்டுமின்றி எல்லாப் பொருள்களுமே அவரை நோக்கிக் கவரப்படும். இது ஒரு ரகசியமான உண்மை. ‘‘என்னைத் தேடு! உன்னைத் தேடி எல்லாமே வரும்!” என்றார் இயேசுநாதர். தியானத்தை நீங்கள் முறையாக முழுமையாக செய்தால், உங்களுக்குத் தேவைப்படுகின்றவை எல்லாம் தாமாகவே உங்களைத் தேடி வரும், மனமும் புத்தியும் தான் இதைத் தடுக்கின்றன என்று எங்கள் குரு எம்மிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.

எதை நாம் பெற விரும்பினாலும் ஒன்றை இழந்தால் தான் அதைப் பெற முடியும். எதுவென்றாலும் கூட! உலக விவகாரங்களை அல்லது பழைய பழக்க வழக்கங்களை விட்டால் தான் ஞானம் நிலைத்து நிற்கும். அதையும் பிடித்துக்கொண்டு இதற்கும் முயற்சி செய்தால் முன்னேற்றமில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s