மனிதன் என்பவன் தெய்வமாகலாம் – 25

நல்லொழுக்கமும் நற்பண்புகளுமே தர்ம வழியில் நடப்பதாகும். இப்படித் தர்மவழியில் நடப்பவருக்குத் தான் இந்த ஞானம் ஏற்படும். நல்லொழுக்கமும் நற்பண்புகளும் யாருக்கு இல்லையோ அவருக்கு ஞானம் ஏற்படாது. இவை இரண்டும் இருந்தபோதிலும் கூட ஞானம் ஏற்படலாம், ஏற்படாமலும் போகலாம் என்பதும் உண்மை. “எவனொருவன் மனதை ஒருமுகப்படுத்தி ஆத்ம தியானத்தில் முழமையாக ஈடுபடுகிறானோ, அவனே எனக்கு விருப்பமானவன். அப்படி வருபவர்களிலும் என்னைத் தன் தியானப் பொருளாகக் கொள்பவர் சிலரே. அவரிலும் என்னையும் என் உண்மை நிலையையும் அறிந்துகொள்பவர்கள் மிகச் சிலரே!” என்று கிருஷ்ணர் உரைக்கிறார்.

ஒன்றைப்பற்றி அறிவது வேறு. அறிந்ததைப் புரிந்துகொள்ளுதல் என்பது வேறு. ஆகவே அறிவிற்கு அப்பால் அனுபவ நிலையில் யார் உணர்கிறார்களோ அவர்களுக்கே வேதாந்தம் போதிக்கப்பட வேண்டும். இறைவனைப்பற்றி சொல்லால் அறிய வைப்பதே ஞான உபதேசம் ஆகும். குரு சொல்கின்றபோதே இந்த ஆனந்த அனுபவத்தை உணர்பவருக்குப் பூரண அமைதி ஏற்பட்டுவிடும். வீட்டில் பிரச்சினை என்று எதுவும் இருக்காது. அப்படியே மலைபோல் ஏதாவது பிரச்னை ஏற்பட்டாலும் அது சிறு துரும்பைப் போல் ஆகிவிடும். அது அவரை பாதிக்காது. மேலும் வந்ததைப் போலவே தானாக விலகிப்போய்விடும்.

பஞ்சபூதங்கள், மனம், புத்தி, அகங்காரம் ஆகிய இயற்கையின் எட்டு அம்சங்களும் நமக்குள் இருக்கும் சத்தியத்தை மறைக்கின்றன. கிருஷ்ணர் சொல்கிறார், “இவற்றிற்குள்ளே, இவற்றிற்கப்பாலாய் நான் மூலமாய் இருக்கின்றேன். எனக்கு இரு வகை சொரூபங்கள் உள்ளன. உயிருள்ளதாயும், உயிரற்ற ஜடப்பொருளாகவும் இருப்பது நானே! இவ்விரு சொரூபங்களின் சேர்க்கையால் தான் எல்லா உயிரினங்களும் உற்பத்தியாகின்றன” என்று. அதாவது இயற்கைத் தன்மையுடன் கூடியதாய் அமைந்துள்ள இந்த உடலும் பிரபஞ்சமும் ஜடப்பொருள்கள். இவற்றோடு சைதன்யம் சேருகின்றபோது அவை இயங்குகின்றன. சைதன்யம் இவற்றைக் கைவிடுகின்றபோது இயக்கம் நின்று சடப்பொருளாகிவிடுகிறது. கண் இருந்தாலும் பார்க்க முடியாது, கைகள் இருந்தாலும் அசைக்க முடியாது.

உலகம் இன்பமயமானது. நமக்கு ஏற்படுகின்ற உடல், மனக்குறைபாடுகளால் தான் இதனைத் துன்பமயமானதாக நினைக்கிறோம். நான் பரிபூரணமான பிரம்மம் என்ற அறிவைப் பெற்றுவிட்டால் அது ஞானம். இப்படிப் பெற்ற அறிவை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழப் பழகினால் அது விஞ்ஞானம். நான் பெற்ற அறிவும், எனது அனுபவமும், நான் அவனே என்ற உணர்விலேயே நிலைத்திருந்தால் அது யோகம். இது தான் ஞான விஞ்ஞான யோகத்தின் விளக்கம்.

இந்த ஞானத்தைப் பெறுவதற்கு ஒருவர் முதலில் சத்சங்கத்தை நாட வேண்டும். அதில் தொடர்ந்து தன்னைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அங்கு மூன்று வழிகளைப் பின்பற்றப் பழக வேண்டும். அவை
1.சிரவணம் (குரு சொல்பவற்றைக் கவனமாகக் கேட்டல்)
2 மனனம் (கேட்டதைத் திரும்பத் திரும்பச் சிந்தித்தல்)
3. நிதித்யாசனம் (சிந்தித்தவற்றைப் புரிந்துகொண்டு தனதாக்கித் தன்வயப்படுத்துதல்) என்பவையாகும்.
இவற்றில் சிரவணம் மிக முக்கியம். மற்றவை இதனைத் தொடர்ந்து வருபவை.

வேதாந்தத்தை சிரவணம் செய்வதற்கு சப்தப்பிரமாணம் தான் சாதனமாக அமைகிறது. இந்த சிரவணம் என்னும் சொல்லை இன்னும் விளக்கமாகப் பொருள்படுத்தினால் கேட்டல், சிந்தித்தல், தெளிவு பெறுதல், உணர்தல், அனுபவித்தல், ஐக்கியப்படுதல், பிரதிபலித்தல்; என்றெல்லாம் வரும். கேட்டலில் இவ்வளவும் அமைய வேண்டும்.

குரு, சொற்களைத் துல்லியமாகப் பதம் பதமாகப் பிரித்து ஞான விளக்கம் செய்ய வேண்டும். வேதாந்த உண்மைகளை உண்மையாக உணர்ந்தவரும், குரு பரம்பரை வழி பயிற்சி பெற்றவருமான குருவாக அவர் இருக்க வேண்டும். பிரம்மத்தில் தோய்ந்த நிலையில் அவர் திகழ வேண்டும். அதோடு வேதாந்தம் இந்த ஆன்மீக அறிவை எனக்கு உணர்த்தும் என்ற நம்பிக்கையும், சிரத்தையும் நமக்கு இருக்க வேண்டும். இது ஆத்மசாதகர்களுக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தகுதி.

அன்பர்களே! நமக்கு நடைமுறை வாழ்க்கையில் தெரிய வராத பல விஷயங்களைப்பற்றி இப்பொழுது நாம் ஆராயத் தொடங்கியிருக்கின்றோம். சிரமப்பட்டால்தான் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய நம்மைப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள முடியும். இனி வர இருக்கும் பகுதியைச் சற்றுத் தீவிர கவனத்துடனும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் வாசிக்க வேண்டியது அவசியம். இதைத்தான் சிரத்தை என்று ஆன்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் மேலெழுந்தவாரியாகப் படித்துக்கொண்டு போனால் தலையைச் சுற்றும். கண்களையும் சுழற்றும். ஆர்வத்துடன் முனைந்து படிக்க முற்பட்டால் மிகத் துல்லியமாக விளங்கும். ஏனெனில் இவற்றையெல்லாம்பற்றி வெறும் சொற்களால் மட்டுமே விளக்க முடியும்.

குருவால் விளக்கப்படுகின்ற வேதாந்தக் கருத்துக்களைத் தம்மில் கொண்டிருப்பவை வேதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வேதங்கள் நான்கு என்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த வேதங்கள் இரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
1. கர்ம காண்டம். இதில் ஒரு பகுதி உபாசன காண்டமாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
2. ஞான காண்டம். முதல் காண்டமாகிய கர்ம காண்டத்தில் யாகங்கள், சடங்குகள், வழிபாட்டு முறைகள், தேவையானவற்றை உரிய தேவதையிடம் வேண்டிப் பெறக்கூடிய மந்திரங்கள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இவை நடைமுறை வாழ்க்கைக்கு உரியவை. இதனை பூர்வபாகம் என்றும் சொல்லுவார்கள். நாம் செய்ய வேண்டியவை, அடைய வேண்டிய உலகங்கள், மழை பொழிய, புத்திரப்பேற்றிணை அடைய உரிய சாதன சாத்தியங்கள் போன்றவையெல்லாம் இப்பகுதியில் வருகின்றன.

இரண்டாவது பகுதியான ஞானகாண்டம் உத்திரபாகம் என்று அழைக்கப்படுகின்றது. ஞானத்தைப் பெறக்கூடிய வழிவகைகளைத் தெளிவாக எடுத்துரைக்கின்ற உபநிஷதங்கள் இப்பகுதியல் அமைந்துள்ளன. இதைத்தான் வேதாந்தம் என்று கூறுகின்றனர். மிக உயர்வைப் பெற்றதான இந்த வேதாந்தத்தை அறிவதன் மூலம் தான் நமக்கு ஞானம் ஏற்படும்.

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷிகளால் உணர்ந்து உரைக்கப்பட்டவையான இதில் ஜகத் என்பது நமக்குள் இருக்கின்ற எண்ண உலகம், உணர்ச்சி உலகம், மன உலகம் ஆகியவையும், வெளி உலகமும் சேர்ந்தது ஆகும். ஜகத் என்றால் உலகம் என்று மட்டும் தான் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். ஆனால் நமக்குள்ளேயும், வெளியேயுமாக விரிந்திருக்கின்ற ஜகத் பற்றி இப்போது தான் தெரிய வருகின்றது இல்லையா?

கண்களால் நாம் காண்பது மட்டும் உலகம் அல்ல. நமக்குள்ளேயே இருக்கின்ற மேற்குறித்தவையும் உலகங்களே. ஜீவனாகிய நம்மைப் பற்றியும் ஜகத் எனப்படுகின்ற நாம் காணும் உலகத்தையும் ஈசன் என்று குறிப்பிடுகின்ற உண்மை இருப்பைப் பற்றியும் மேலும் எனக்கும் உலகத்திற்கும், எனக்கும் ஈசனுக்கும் என்ன சம்பந்தம் என்பதையும் ஆராய்ந்து தகுந்த சொற்களால் எடுத்துரைப்பதே வேதாந்தத்தின் நோக்கமாகும். இந்த மூன்றும் ஒன்றே என்ற ஆராய்ச்சியில் தான் குருவும் சிஷ்யனும் சேர்ந்து ஈடுபடுகின்றனர். இந்த ஞானவேள்வியில் பங்குபெற்று ஞான ஆராய்ச்சி செய்கின்ற மாணவனுக்கு ஜிக்ஞாசு என்று பெயர்.

இந்த நான்கு வேதங்களும் சூத்திர ரூபமாக நான்கு மகா வாக்கியங்களைக் கூறி அவற்றின் பொருளை நுணக்கமாக விவரிக்கின்றன. இவற்றில் ‘தத்வமஸி’ என்பது ஒரு மகா வாக்கியம். அதுவே நீ! என்பது இதன் பொருள். பகவத்கீதையின் முதல் ஆறு அத்தியாயங்கள் த்வம் என்ற பதத்தை விளக்குகின்றன. த்வம் என்ற சொல்லுக்கு நீ என்பது பொருள். ஏழாவது அத்தியாயம் முதல் 12வது அத்தியாயம் வரை ‘தத்’ என்ற பதம் விளக்கப்படுகின்றது. தத் என்ற சொல்லிற்கு அது என்று பொருள். அடுத்து வருகின்ற 6 அத்தியாயங்கள் ‘அஸி’ என்ற பதத்தை விவரிக்கின்றன. அஸி என்ற சொல்லிற்கு இருக்கிறது என்பது பொருள். நீ அதுவாக இருக்கிறாய் அல்லது அது நீயாக இருக்கிறது என்னும் உண்மையே தத்வமஸி என்னும் வாக்கியம் நமக்கு உணர்த்துவது. இதன் விளக்கமே இந்த பகவத்கீதை.

இந்த உண்மையை அர்ச்சுனனுக்கு உணர்த்துவதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் நண்பன் என்ற நிலையிலிருந்து குருவாக மாறித் தன்னைப் பரம்பொருளாக அடையாளம் காட்டுகிறார். “நான் உன்னை அறிவேன். நீ என்னை அறியமாட்டாய்!” என்று அவர் அர்ச்சுனனிடம் கூறுவதோடு, “நான் உன்னில் இருக்கிறேன். நீ என்னில் இல்லை!” என்றும் கூறுகின்றார்.

நீ என்னில் இல்லை என்ற தொடர் நமக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். இதைப் புரிந்துகொள்வதற்கு முதலில், நான் யார்? என்ற உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். நான் ஆத்மா. இந்த உடலோடு கூடிய ஜீவன் நானல்ல என்றால், பரப்பிரம்மத்தின் ஒரு துளியே ஆத்மா. எல்லா உயிர்களிலும் இருப்பது ஒரே ஆத்மா. அது அவனே! என்று இந்த உண்மை விரியும். இப்போது, நீ என்னில் இல்லை என்ற சொற்றொடரின் பொருளை சிந்தித்துப் பாருங்கள். இங்கு இருப்பது எல்லாமே (கிருஷ்ணராகிய) நான் என்றால் பிறகு நான் என்று எதைப் பிரித்துச் சொல்ல முடியம்? இங்கு நானாகிய தனித்துவம் இல்லை. இருப்பது அவர் மட்டுமே.

மேலும் ஸ்ரீ கிருஷ்ணர், “நான் தான் எல்லா உலகிற்கும் மூல காரணம். ஏனெனில் உலகம் என்னிலிருந்து தான் பிறக்கிறது. பிறகு என்னில் அடங்கிவிடுகிறது. என்னைத் தவிர வேறு எதுவும் துளிக்கூட இந்த உலகிற்குக் காரணமில்லை. நுhலில் மணிகளைப்போல் இவ்வையகம் எல்லாம் என்னில் கோர்க்கப்ட்டுள்ளன. என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை.” என்றெல்லாம் தம் இருப்பை எடுத்துரைக்கின்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s