மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 24

ஞான விஞ்ஞான யோகம்

ஞானம் என்றால் அறிவு என்பது பொருள். பொதுவாக உலகில் அஞ்ஞானத்தையே அறிவு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒருவர் பிறக்கும்போது கூடவே இருக்கின்ற அறிவு தன்னைப் பற்றிய அறிவுதானே ஒழிய மற்றவையெல்லாம் கற்றுக்கொள்வதால் பெற்றுக்கொள்கின்ற புற அறிவு.

உலக விஷயங்கள் அத்தனையையும் கரைத்துக் குடித்திருப்பது தான் அறிவு என நினைப்பது தவறு. அந்த ஆள் மெத்தப் படித்தவர் என்கிறோம். ஆனால் பெயருக்குப் பின்னால் போட்டுக்கொண்டிருக்கின்ற பட்டங்களின் பட்டியல் பெரிதல்ல. தன்னை அறிவதே உண்மையான அறிவு. ஆனால் இந்த அறிவைப் பற்றிய எண்ணமே பெரும்பாலோர்க்கு இருப்பதில்லை. “அறியும் தன்னை அறியாமல் அறிவதெல்லாம் அஞ்ஞானம்” என்று கூறினார் ரமணர்.

இந்த உடலைத் தானாக எண்ணிக்கொண்டு புலன் இன்பங்களில் ஈடுபட்டு அவற்றால் வரும் இன்ப துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் வரை ஒருவனுக்கு மெய்யறிவு ஏற்படுவதில்லை. அதைப்பற்றி அறியும் ஆர்வமும் இயல்பாக ஏற்படுவதில்லை. பல பிறவிகளாகத் தொடர்ந்த தூண்டுதலின் காரணமாகவே ஒருவனுக்குப் பிரம்மஞானத்தைப்பற்றி அறிகின்ற அவா ஏற்படக்கூடும். அறிய வேண்டியதான இந்த மெய்யறிவைப் பற்றியே ஸ்ரீ கிருஷ்ணர் ஞான விஞ்ஞான யோகமாக அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார்.

இவ்வுலக விஷயங்களைப் பற்றிய கல்வியைப் பெறுவதற்கு ஒருவனுக்கு ஐம்புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றின் உதவி தேவை. இவற்றைப் பயன்படுத்தித்தான் உலக விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் ஆத்ம ஞானமாகிய மெய்யறிவை அடைவதற்கு இவை எதுவுமே பயன்படாது. சொல்லப்போனால் இவற்றை ஒதுக்கித் தள்ளி இவற்றிலிருந்து விடுபட்டால்தான் இவ்வறிவைப் பெறவே முடியும்.

இவ்வறிவைப் பெற சப்தப் பிரமாணம் ஒன்றுதான் வழி. அதாவது சொற்களின் வாயிலாக ஒன்றைப்பற்றி அறிவது. வேறு எந்த விதத்தாலும் அறிந்துகொள்ள இயலாத தன்னைப்பற்றி சொற்களால் விளக்குவதால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் ஒருவன் தன்னை சுத்த சைதன்யமாக அறிந்துகொண்டுவிட்டால் பிறகு அவனுக்கு இவ்வுலகில் அறிந்துகொள்வதற்கு வேறு எவ்வித அறிவுமே தேவையில்லை.

இப்படித் தன்னைப்பற்றி அறிய முற்படுபவர்கள் அரிதிலும் அரிது. அப்படி முயல்பவர்களும் தானாக அறிந்துகொள்ள முடியாது. பிரம்மத்தைப்பற்றி அறிந்த, பிரம்மத்தைத் தான் என்று உணர்ந்துகொண்ட, அந்த பிரம்மத்திலேயே தன்னை மூழ்கடித்துக்கொண்ட, அதைப்பற்றி அறிந்தவர்களின் தொடர்பிற்குள்ளே இருப்பவரான தக்க குருவின் மூலமாகவே ஒருவன் இந்த அறிவைப் பெற முடியும்.

அப்படிப்பட்ட குருவாகவே கண்ணபிரான் நின்று அர்ச்சுனனுக்கு இந்த மெய்யறிவை எடுத்துரைக்கின்றார். தன்னையறிதலாகிய மெய்யறிவைப் பெற முயல்கின்றவனுக்குப் பகவத்கீதை தான் எளிய வழிகாட்டி. ஏனெனில் தெய்வமே மனித குலத்திற்கு நேரடியாக வழங்கிய கொடை இது. இதனை அறிவாகப் பெறுவதை விட அனுபவமாக உணர்தலே மிக உயர்ந்த பயனைத் தரும்.

அறிவு என்பது சேமிப்பு மட்டுமே. அனுபவம் என்பது உணர்வோடு கலப்பது. அனுபவிக்கின்ற நிலை அது. அனுபவத்தைச் சொல்ல முடியாது. உணரத்தான் முடியும். அப்படி உணர்ந்ததை உணர்த்தவும் சொற்கள் மட்டும் தான் வழி. இது தான் ஞான விஞ்ஞானச் சிறப்பு. உணர்த்தவும் உணரவும் கூடிய யோக வழி இது. அதுவே சொல்கின்றது. அப்படிச் சொல்வதை அதுவே கேட்கின்றது.

நீ முழுமையானவன். நீ பிரம்மம்! என்று சொல்வது வேதாந்தம். வேதத்தின் முடிவு இதுதான். வேதங்கள் நம்மைப்பற்றித்தான் எடுத்துச் சொல்கின்றன. நம்மைக் கடவுளாக நமக்குத் தெரியப்படுத்துகின்றன. வேதம் நீ, நீ என்று என்னை நேரடியாகச் சுட்டிக்காட்டுவதற்குக் குருவின் சொற்களே பிரமாணமாக அமைகின்றன.

ஒன்றைப்பற்றி அறிவதற்கு அறிபவர், அறியக்கூடிய பொருள், அறிவதற்கு உரிய கருவி ஆகிய மூன்று அம்சங்கள் தேவை. இங்கு குருவின் சொற்களைக் கேட்கின்ற நான், என் காது, கேட்கும் சத்தம் மூன்றும் என்னைப்பற்றி அறிய உதவுபவை. இவை மூன்றும் ஒத்து இருந்தால் தான் இவ்வறிவு ஏற்பட முடியும்.

ஞான உபதேசம் செய்ய குரு வேண்டும். அவர் சொல்வதைக் கேட்பதற்கு நான் உடலால் அங்கு இருக்க வேண்டும். என் காது எந்தவிதக் குறையுமின்றி நன்றாகச் செயல்பட வேண்டும். மனம் அங்கு இருந்து சொல்வதைக் கவனிக்க வேண்டும். குரு சொல்வதைக் கேட்பதற்குரிய தயார் நிலையில் நான் இருத்தல் மிக மிக அவசியம். அதாவது மனம் தூய்மை பெற்று கேட்பதற்குரிய தகுதியுடன் இருத்தல் வேண்டும். குரு எவ்வளவு விளக்கமாகவும் நுணுக்கமாகவும் வேதாந்தக் கருத்துக்களை எடுத்துக் கூறி விளக்கினாலும் அதைக் கேட்டுப் புரிந்து அனுபவிக்கின்ற பக்குவ நிலை மாணவருக்கு இருந்தால் தான் அந்த போதனை பயனளிக்கும்.

பக்குவ நிலையும், அவசரத் தேவையும், ஆர்வமும் தான் இந்த மெய்யறிவைப் பெறுவதற்குரிய தகுந்த நிலையாகும். சப்தப்பிரமாணம் என்னும் சொற்கள் அடங்கிய இந்த அறிவுச் சாதனத்தின் மூலம் தான் நான் யார் என்ற உண்மையை அறிய முடியும். நான் இந்த உடல், மனம், புத்தியாகிய சடப்பொருள்கள் அல்ல. இவற்றையெல்லாம் இயக்குகின்ற மின்சாரம் போன்ற ஆத்மாவே நான். இந்த ஆத்மா என்னும் உயிர்ச்சக்திதான் மேற்குறித்த சடப்பொருள்களின் உள்ளே புகுந்து நான் என்னும் அகங்காரமாக வெளிப்பட்டு வாழ்கின்றது.

இத்தகையதான இந்த சடப்பொருள்களின் தன்மைகளைச் சொல்லி, இவையல்லாத ஆத்மாவை இவற்றிலிருந்து தனியே பிரித்துக் காட்டி, இந்த ஆத்மாவே நீ! மற்ற அழியக்கூடிய எவையும் நீயல்ல! என்ற உண்மையை வேதாந்தம் சொற்களின் மூலம் விளக்கிக் கூறுகின்றது. இதைக் கேட்டறிந்து ஆத்மாவாகிய நான் ஆத்மாவின் விரிவாக இந்த உடலில் வெளிப்பட்டுச் செயல்படுகின்றேன் என்பதைப் புரிந்துகொள்வதுதான் வேதாந்த ஞானம்.

இந்த ஞான அறிவைப் பெற்று என்னை நான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவைக் காண வைத்தால் ஜீவனாகப் பிரிந்து நிற்பது மூலத்துடன் சேர்ந்துவிடும். நான், நான் என்று மார்தட்டி, எனக்கும் நிம்மதியின்றி மற்றவருக்கும் நிம்மதியைத் தராமற் செய்த இந்த நான் என்பது இப்போது ஆத்மாவுடன் சேர்ந்துகொள்ளும் வழியைத் தெரிந்துகொண்டுவிட்டது என்று சொல்லலாமா? வேதாந்தத்தின் துணையுடன் இந்த நானைப் பிரித்தெடுத்து ஆத்மாவுடன் இணைக்கின்ற பணியைச் செய்பவரே குரு!

ஆமை தன் தலையையும், கை கால்களையும் வெளியே நீட்டிக்கொண்டிருக்கின்ற வரை அது ஆமையாகத் தெரியும். இவ்வைந்தையும் அது உள்ளுக்குள் இழுத்துக்கொண்டு விட்டால் வெறும் கல்லாகத்தான் தெரியும். அதுபோல நான் என்பது வெளிப்பட்டுத் திரிகின்றபோது தெரிகின்ற பேதங்கள் எல்லாம் அது அடங்கி உள்முகமாகத் திரும்பி மூலத்துடன் ஒன்றிவிடுகின்ற நிலையில் சுத்த சைதன்யமாகி விடுகிறது.

தகுந்த குரு உபதேசிக்கின்றபோது சொல்கின்ற பொருளையும் அதன் உட்பொருளையும் உணர்ந்து தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு எந்த மாணவன் அவரோடு சேர்ந்து செல்வானோ அவனால் அப்பொழுதே அந்த நொடியே ஆத்மாவின் கூறுகளை அனுபவிக்க முடியும். இதற்குத் தயார் நிலைதான் தேவை.

இப்படித் தன்னை அறியாத நிலையில் வாழ்ந்து வருகின்ற மனிதனின் சிற்றறிவு ஞானம் பெற்றுப் பயில்கின்ற தியானத்தின் மூலம் எப்படி விரிந்து எல்லைகளைத் தாண்டிப் பேரறிவாக மாறுகின்றது என்பதை அர்ச்சுனனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் உரைப்பதுதான் இந்த ஞான விஞ்ஞான யோகம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s