மனிதன் என்பவன் தெய்வமாகலாம்- 23

நாங்களெல்லாம் எங்கள் குருவிடம், குருவே! உங்கள் முன்னிலையில் அமர்ந்து தியானம் செய்யும்போது மனம் அடங்கிப் பூரண அமைதியையும், நிறைவையும் ஓரளவு ஆனந்தத்தையும் அனுபவிக்கின்ற நாங்கள், வீட்டில் தியானம் செய்கின்றபோது இந்த அளவிற்கு அனுபவிக்க முடியவில்லையே! புலன்களும் மனமும் ஓடுகின்றனவே! என்று அடிக்கடி கேட்போம். அதற்கு அவர் பெரிதாகச் சிரிப்பார்.

அப்படியே ஓடட்டும். ஓடத்தான் செய்யும். ஓட விடுங்கள். ஆனால் உங்களில் நீங்கள் நிலைபெற்று அமைதியாக இருந்து விடுங்கள். அதன் பின்னாலேயே நீங்களும் ஓடிவிடாதீர்கள். இப்படியே பழகப் பழக உங்களது தீவிரத் தன்மையால் எல்லாம் அடங்கி ஒன்றுபடும். உங்களது முயற்சி தியானமாக மட்டும் இருக்கட்டும். ஞானத்தால் உங்களை நீங்கள் நன்றாகப் பக்குவப்படுத்துகின்ற நிலையில் மனம் தானாகவே அமைதி அடையும் என்று கூறுவார். இது நமது நிலை. இது இப்படியே இருக்கட்டும். நாம் கீதையின் நாயகன், அர்ச்சுனனுக்கு என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.

பகவான் சொல்கிறார், “அர்ச்சுனா! நீ சொல்வது சரிதான். மனம் சஞ்சலம் மிகுந்ததுதான். இதை அடக்குவதும் மிகக் கடினம் தான். ஆனால் பயிற்சியினாலும் வைராக்கிய சிந்தையினாலும் மனதைக் கட்டுப்படுத்த முடியும். மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்த இயலாதவரால் தியான யோகத்தில் சித்தி பெற முடியாது.”

கடிவாளத்தைப் பயன்படுத்திக் குதிரைகளைக் கட்டுப்படுத்தி அடக்கிச் செலுத்துவதைப்போல ஞானம் பெற்ற புத்தியைப் பயன்படுத்தி ஐம்புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்தலாம். கட்டுப்படுத்த வேண்டும். மனதையும், புலன்களையும் செயலிழக்கச் செய்யும் ஆற்றல் பெற்றவரால் நிச்சயம் தியானயோகத்தில் வெற்றி பெற முடியும்.


இந்த நேரத்தில் அர்ச்சுனனுக்கு மற்றுமொரு சந்தேகம் ஏற்படுகின்றது. “ஆத்ம சாதனையில் ஈடுபட விருப்பம் ஏற்பட்டு சத்சங்கத்தைச் சேர்ந்து ஞான உபதேசம் பெறுகின்ற நிலையில், சிரத்தை இருந்தும் பயிற்சி செய்யப் போதிய மனவலிமையின்றி முயற்சி பலவீனமான நிலையில் முழு வெற்றி அடைய முடியாமல் சிலர் தடுமாறிவிடுகின்றனர். சிலரால் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட முடியாமற் போய்விடுகின்றது. தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்ற சிலரும் அந்திம காலத்தில் யோக சாதனையில் ஈடுபட முடியாமற் போய்விடுகிறது. இப்படிப்பட்டவர்களால் சாதனையில் வெற்றி அடைய முடியாமல் போய்விடுகின்றதே. இவர்களின் கதி என்ன?”

யோக சித்தியும் இன்றி, உலகியல் வாழ்க்கையில் புகலும் இன்றி இரண்டும் கெட்ட சாதகர், சிதறிப்போன மேகத்தைப் போல் உருக்குலைந்து போவார்கள் இல்லையா? இப்படிப்பட்டவர்களுக்கு என்ன வழி? இந்த சந்தேகத்தை நீங்கள் தான் போக்க வேண்டும் என்று கண்ணனிடம் அவன் வினவுகின்றான்.

இதற்கு கிருஷ்ணர், “அன்பானவனே! அர்ச்சுனா! நிலை தடுமாறிய சாதகராக இருந்தாலும் அவருக்கு யோகத்திலோ அல்லது இறந்த பின்போ வீழ்ச்சி ஏற்படுவதில்லை. ஏனெனில் நலன் தரும் செயலான தியானத்தைப் பயிலும் எந்த சாதனையாளருமே இழிநிலைக்குச் செல்வதில்லை.”

“சாதனையில் ஈடுபட்டுள்ள நிலையில் உலகியல் ஆசை சிறிதளவேனும் அவர்களது உள்ளத்தில் இடம் பெற்றிருந்தால் அவர்கள் யோகநிலையிலிருந்து நழுவியவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர்கள் புண்ணிய கருமங்களைச் செய்பவர்கள் வாழும் சுவர்க்கம் முதலிய மேலான உலகங்களில் இடம் பெறுகின்றார்கள். அங்கு பல காலம் இருந்தபின் மீண்டும் அழியும் மானிட சமுதாயத்தில் செல்வந்தர்களின் மாளிகையில் வந்து பிறக்கின்றனர்.

வேறு சில சாதகர்களின் உள்ளத்தில் உலகியல் வாழ்விற்குரிய எந்த விருப்பமும் இருப்பதில்லை. இருந்தாலும் அப்படிப்பட்டவர்களும் தமது கடைசி காலத்த்தில் ஏதாவது ஒரு விசேஷ காரணத்தால் யோக சாதனையிலிருந்து தவறினால், அவர்கள் சுவர்க்கம் போன்ற சுகபோக உலகிற்குச் செல்லாமல், நேராக மறுபிறவி எடுத்துத் தத்துவ ஞானிகளின் கூட்டத்தில் பிறக்கிறார்கள். முற்பிறவியில் தாம் தவற விட்ட யோக சாதனையில் அவர்கள் மீண்டும் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். இத்தகைய பிறவி இந்த மனித உலகில் மிகவும் அரிது.” என்று யோக சாதனை செய்பவர்களின் பல்வேறு நிலைகளை மிக விளக்கமாகக் கிருஷ்ணர் எடுத்துரைக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து அர்ச்சுனனின் மனநிலையை அறிந்தவராய் கண்ணனே, “அதேபோல் உலக விஷயங்களில் கொண்ட விருப்பத்தினால் யோகப் பிரஷ்டராகி (யோகத்தைக் கைவிட்டு)த் தொடர்பை விட்டு விலகிய இரண்டுங்கெட்டான் சாதகர், மறுபிறவியில் செல்வந்தர்களின் இல்லங்களில் பிறந்து பிற ஆசாபாசங்களுக்கு இலக்கானாலும், தன்னை அறியாத நிலையில் வாழ்ந்தாலும், முற்பிறவியில் செய்த யோக சாதனையின் காரணமாகப் பரமாத்மாவிடம் கவர்ந்து இழுக்கப்படுகிறார்.”

“இப்படிப் பரமாத்மாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக, இழுக்கப்படுகின்றவரான அத்தகைய சாதகர் விரைவாக சாதனையில் ஈடுபடுகின்றார். அதன் மூலம் சிறிது சிறிதாக சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றார். இப்படிப் பல பிறவிகளிலும் தொடர்ந்து முன்னேறி இறுதியில் பரமகதியான பரமாத்மாவை அடையும் பேற்றினைப் பெறுகின்றார்.”

“இப்படிப் பரமாத்மாவினால் ஆட்கொள்ளப்படுகின்றவர்களின் சிறப்பு என்னவென்றால், இவர்கள் மேலே சொன்ன தத்துவ ஞானிகள், தவசீலர்களை விட சிறந்தவர்களாகிவிடுகின்றனர்.” இவ்வாறு ஆத்ம சாதனையிலிருந்து விடுபட்ட இரண்டுங்கெட்டான் பிறவிகளுக்குக் கூடப் பரகதியை அருளும் தம் கருணையை அர்ச்சுனனுக்கு விரித்துரைக்கின்றார், பரமதயாளன். இவ்வாறு தியானயோகப் பயிற்சியைத் தொடர முடியாத நிலையில் பலப்பல பிறவிகள் கடந்தாலும் கூடத் தொடர்ந்து முயன்று பரமாத்மாவை அடையும் பேற்றினைப் பெற முடியும் என விளக்கிய ஸ்ரீகிருஷ்ணர் முடிவுரையாக, “எவரெல்லாம் என்னிடம் ஆழ்ந்து ஈடுபட்டவாறு உள்ளுணர்வுடன் சிரத்தையும், பக்தியும், பிரேமையும் கொண்டு என்னைப் போற்றி வணங்குகின்றாரோ அந்த பக்தர் எல்லாவித யோகிகளையும் விட மேலானவர், மிகச் சிறந்தவர்!” என்று கூறி முடிக்கின்றார். தியான யோகத்தின் இந்த 47வது சுலோகத்துடன் இவ்வத்தியாயம் நிறைவுறுகின்றது.

தியான யோகம் என்னும் இப்பகுதியின் மூலம் பரப்பிரம்மத்தின் சிறுதுளியாகிய நாம், மானிடத் தன்மையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு, மீண்டும் நம் இயல்புத் தன்மையாகிய இறைநிலையை அடைவதற்கு, அதாவது இந்தப் பிறவித் தொடரிலிருந்து விடுபடுவதற்கு சாத்வீக உணவு முறையும், சமநிலைபெற்ற மனநிலையும், தன்னையறிதலாகிய ஞானமும், தொடர்ந்த தியானப் பயிற்சியும், மாறாத பக்தியும் தான் சிறந்த வழி என்பதும், வெளிப்புறமாகத் திரிந்துகொண்டிருக்கின்ற புலன்கள், மனம், புத்தியை அகமுகமாகத் திருப்பித் தியானத்தால் உண்மையானதும், நிலையானதுமான ஆத்மாவுடன் இணைய உணர்வுபூர்வமாகச் செய்யப்படுகின்ற முயற்சியே இனி நமது வாழ்க்கை நெறி என்பதும் புலனாகின்றது அல்லவா!

மேலும் ஒரு பிறவியில் யோக சாதனையைத் தவற விடும்படி நேர்ந்தாலும் நோக்கம் கெடாமல் அடுத்த பிறவியில் விட்ட இடத்திலிருந்து யோக சாதனையை மேற்கொண்டு தொடர்ந்து முன்னேற முடியும் என்னும் கண்ணன் கருணையும் தெரிய வருகின்றது.

அன்பர்களே! இதுவரை நாம் பயின்று வருகின்ற பகவத்கீதையின் இந்த ஆறு அத்தியாயங்களும் நம்மைப்பற்றிப் பேசின. ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனர்களாகிய நமக்கு உண்மையில் நாம் யார் என்ற ஞானத் தெளிவைத் தம் உபதேசத்தின் மூலம் உணர்த்தியுள்ளார். இந்த உடல், மனம், புத்தியாகிய உறைகளுக்கு உள்ளே மறைந்திருக்கின்ற இயக்கு சக்தியாகிய ஆத்மாவே நான் என்பது நமக்குப் புரிய வேண்டும். இதைப் புரிந்துகொண்டுவிட்டால் மட்டும் போதாது. தொடர்ந்த தியானப் பயிற்சியின் மூலம் நான் ஆத்மா என்னும் விழிப்புணர்வில் கலந்து விட வேண்டும். இது தான் இனி நாம் செய்ய வேண்டியது.

இனி அடுத்து வரும் ஆறு அத்தியாயங்கள் இறைவனின் தன்மைகளை எடுத்துரைக்க இருக்கின்றன. கண்ணபிரான் பரமாத்மாவான தமது மகிமைகளைப்பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்ற பகுதி இது. நாம் நம்மை ஆத்மாவாக உணர்தலோடு நமது இறைத்தன்மையையும் உணர்ந்துகொள்ள இப்பகுதி நமக்கு ஒளிவிளக்காக அமைகின்றது. ஆழ்ந்த பக்தியுடனும், ஆர்வத்துடனும் இதனைப் பயின்று ஆன்ம சாதனையில் மேலும் சில படிகள் முன்னேறுவோம்! அந்தப் பரந்தாமனின் பேரருளைப் பெறுவோம்!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s