மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -22

வாழ்க்கைச் சிறைக்குள் ஜீவன் பல கட்டுக்களால் கட்டுண்டு கிடக்கின்றது. அகப்பற்று, புறப்பற்று எல்லாம் ஜீவனை அலைக்கழிக்கின்றன. சின்னஞ்சிறு வட்டத்தில் அறியாமையால் சிக்குண்டு கிடக்கின்ற ஜீவனை உபதேசத்தால் ஞானமடையச் செய்கின்றார் குரு. அவரது உபதேசத்தால் ஜீவன் நானல்ல, நான் ஆத்மன் என்பது நமக்கு உணர்த்தப்படுகிறது.

ஜீவன் வேறு, ஆத்மா வேறு. ஜீவன் பல நூ று பிறவிகள் எடுத்து எடுத்து மாய்வது. நான் இந்த ஜீவனல்ல என்பதை இந்த ஜீவனுக்கு ஒளி கொடுக்கும் ஆத்மனாகிய நான் உணருகின்றவரை ஜீவன் பிறப்பெடுக்கும். மரணம் எய்தும். மீண்டும் பிறக்கும். நான் ஆத்மா என்பதை ஞானத்தால் அறிந்த பிறகு இந்த ஜீவனில் உள்ள கர்மப்பதிவுகளை எரித்து அழிப்பதற்கு உதவுவதே தியானம். இதுதான் தியானத்தின் சிறப்பு.

நான் ஆத்மா! நான் ஆத்மா! என்று நமக்கு நாமே திரும்பத் திரும்ப நினைவூட்டிக்கொள்ளவே தியானத்தின் வழியே உயிராகிய ஆத்மாவில் இணைகிறோம். இந்த ஜீவனை சுத்தப்படுத்திப் பளிங்குபோல் ஆக்கினால் அங்கு ஆத்மா பிரகாசிக்கும். தியானத்தால் தான் இது நடக்கும். அதன் பின் இது ஜீவாத்மா.

ஐயோ! இது ரொம்ப கஷ்டம்! என்று நினைக்கத் தோன்றும். கஷ்;டம்தான். இதைக் கிருஷ்ணனே அர்ச்சுனனிடம் ஒப்புக்கொள்கிறார். ஆனால் வாழ்க்கையில் கஷ்டம் என்பதற்காக எதையாவது செய்யாமல் விட்டுவிடுகிறோமா? அதுபோலக் கஷ்டமாகத் தெரிந்தாலும் முயற்சி செய்யத்தான் வேண்டும். நம்பிக்கையும், சிரத்தையும், விடாமுயற்சியும் தான் தேவை.

தியானம் செய்யாதவன் மனச்சிறையில் இருக்கின்றான். தியானம் செய்யாதவன் வாழ்க்கையின் முழு பரிணாமத்தையும் காண இயலாது. தியானம் செய்பவனுக்குத் தான் வாழ்க்கையின் முழுமை தெரிய வரும். பரவெளியில் மனம் விரிந்தால் தான் மனக்கட்டுக்கள் உடைபடும். நமக்குள் இருக்கின்ற ஆத்மாதான் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமாகப் பரவி நிற்கின்றது என்பதை தியானத்தால் மட்டுமே உணர முடியும். நானும் அதுவும் ஒன்றாகி அதுவே என்று ஆகின்ற நிலை இது. இந்நிலையில் தியானிப்பவனே தியானமாகி விடுகின்றான்.

இதுநாள் வரை பழைய மதசம்பந்தமான பழக்க வழக்கங்களில் ஈடுபட்டு சிறைப்பட்டிருந்த மனம் இப்பொழுது தியானம் செய்கின்றபோது புதிய எல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. இந்நிலையில் ஒருவித பயம் ஏற்படும். இவ்வித பயத்தால் மீண்டும் பூஜை ஜபம் பண்ணுதல் போன்ற பழைய பழக்கவழக்கங்களுக்கு மனம் திரும்பும். இவையெல்லாம் தியானப்பயிற்சியின் இடையில் ஏற்படுகின்ற நிலைகள். தொடர்ந்த பயிற்சியால் இவற்றைக் கடக்க வேண்டும்.

இவ்வாறு இவற்றைக் கடந்தபின் மனம் புலன்களைப் பற்றிக்கொண்டிருந்த நிலை மாறி அவற்றை விட்டு விலகி அறிவுக்குப் பின்னால் செல்கிறது. அறிவு ஆன்ம சிந்தனையைத் துhண்டி அதில் மனதை லயிக்கச் செய்கிறது. இதன் காரணமாக உலக வயப்பட்ட எண்ணங்களால் சூழப்பட்டிருந்த மனம் ஆன்ம சிந்தனை மயமாக மாறுகின்றது. தொடர்ந்த சிந்தனையால் மனச்சமநிலை ஏற்படுகிறது. இந்நிலையிலேயே தொடர்ந்து இருக்கப் பழகுபவர்கள் நிச்சயமாக ஆத்மாவை அடைகின்றனர் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

தியானம் செய்வதற்கு என்று தனியாக நேரம் எதுவும் இல்லை. ஒருவன் எந்த நிலையில் இருந்தாலும் உள்ளுணர்வோடு தொடர்பு கொண்டு இருப்பதே சிறந்த தியானம். இந்த நிலைக்கு வரும்வரை தியானத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் செய்யத் தான் வேண்டும்.

ஆத்மாவோடு தொடர்பு கொண்ட நிலையில் அமைதியாக இருந்து பழகப் பழக, எதற்கும் அசையாத ஒருவராக, மகிழ்ச்சி என்றாலும் துயரம் என்றாலும் எதுவுமே பாதிக்காதவராக ஆகிவிடலாம். இந்த ஆடாத சம நிலையில் இருப்பவரை சிதப்ரக்ஞன் என்பர். நெருப்பு நல்லதையும் எரிக்கும். கெட்டதையும் எரிக்கும். ஆகையால் அது வணக்கத்திற்குரியது. அதுபோல இவர்களைப் போற்றினாலும் தூற்றினாலும் இவர்கள் நிலை குலைவதில்லை.

இப்படிப்பட்ட உயர்ந்ததான தியானப் பயிற்சியில் ஈடுபடுகின்ற ஆன்ம சாதகன் சாப்பிடவேண்டிய முறையைப் பற்றிக்கூட கிருஷ்ணர் கீதையில் சொல்லியிருக்கின்றார். அதிகமாக சாப்பிடுபவருக்கும், சாப்பிடாமலேயே இருப்பவருக்கும் தியானம் அமையாது. அதிகமாகத் துhங்குபவருக்கும், துhங்காமலேயே இருப்பவருக்கும் தியானம் அமையாது. அதிக அளவாக எதையுமே செய்யக்கூடாது.

சாத்வீக உணவைத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். வயிற்றை நிரப்புவது மட்டும் உணவு ஆகிவிடாது. மனதை நிரப்புவதும் அறிவை நிரப்புவதும் கூட உணவு தான். உடல், மனம், அறிவு மூன்றிற்கும் சாத்வீக உணவையே தர வேண்டும். மிதமான உணவு, மிதமான உறக்கம், தொடர்ந்த தியானம் என்று விழிப்பு நிலையில் அமைதியாக வாழ வேண்டும்.

இவ்வாறு ஓர் ஆன்ம சாதகன் தொடர்ந்து விழிப்புணர்வில் தங்கியிருந்து தியானம் செய்து அந்தப் பரிபூரணத்துடன் இணைந்த தொடர்பிலேயே வாழ்ந்து கொண்டிருந்தால் அவனது பிறவி முடிந்தாலும் பெற்ற ஞானம் வீண் போகாது. அடுத்த பிறவியில் அந்த ஞானத் தொடர்ச்சி நிலையிலேயே அவர்களின் தன்மை அமைந்து பரிணாம வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும் என்று கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் உறுதியளிக்கின்றார்.

மனிதர்களை உற்றுக் கவனிப்பவர்களுக்கு இந்த உண்மை புரியும். ஒருவர் பிறரிடம் பழகுகின்ற தன்மையாலும் சமநிலையாலும் கண்ணியத்தாலும் அவர் ஞானத் தொடர்ச்சியில் முற்பிறவியில் பயிற்சியைப் பாதியில் விட்டு மீண்டும் அதைத் தொடர்வதற்காகப் பிறந்தவர் என்பதைப் பிறருக்குப் புரிய வைக்கும்.

அவர்களின் அன்பும், பண்பும், பணிவும், நற்குணங்களும் அவர்களை வெளிப்படுத்தும். நாம் கொண்டு வந்தவைதான் நமது இன்றைய வாழ்க்கை. இந்த வாழ்க்கையை நாம் செப்பனிடுகிற விதத்தில், உயர்த்துகின்ற விதத்தில் தான் நமது அடுத்த பிறவி அமைய இருக்கின்றது. இந்த ஞானத்துடன் தியானத்திலும் ஈடுபடும்போது நம்மை உயர்த்துவதால் இறையருளும் துணை செய்தால் பிறவியே இல்லாமற் போகலாம். மேலும் இந்தப் பிறவியிலேயே வாழ்க்கை செம்மையாக அமையும்.

ஆகவே “எந்த சாதகருடைய உணவு முறையும், நடைமுறையும், செயல்முறையும் அளவாக, ஒழுங்காக இருக்கின்றனவோ, செயலில் ஈடுபடுகின்ற தன்மையும் அச்செயலுக்கான முயற்சியும் தன்னலமின்றி நெறிமுறைப்படி அமைகின்றனவோ, யாருக்கு தூக்கமும், விழிப்பும் மிதமாக உள்ளனவோ அப்படிப்பட்டவருக்குத் துன்பங்களைப் போக்கக்கூடியதான இந்த தியானயோகம் வெற்றியைத் தருகின்றது!” என்று கிருஷ்ணர் மிகத் தெளிவாக தியானத்தின் உயர்வை விளக்குகின்றார்.

தியானப் பயிற்சியில் நிலைபெற்று உயர்ந்துள்ள யோகியின் தன்மை பற்றி அவர் இவ்வாறு கூறுகின்றார். “அசைவில்லாத தீபத்தின் சுடர் சிறிதும் அசையாமல் இருப்பதைப்போல் தியான யோகத்தில் ஆழ்ந்திருக்கும் யோகியின் சித்தம் சஞ்சலமின்றி ஒரே முனைப்பில் ஆழ்ந்திருக்கும்.”

இப்படி சாதுக்களின் உன்னத நிலைபற்றி கிருஷ்ணர் விவரிக்கும்போது அர்ச்சுனன் குறிக்கிட்டு, “மதுசூதனா! நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். புலன்களை அடக்கியவர்களாய் ஞானம் பெற்ற நிலையில் மனதைச் சமநிலையில் வைத்துக்கொள்ளும் அமைதித் தன்மையில் தோய்ந்தவர்களாய்த் திகழ்கின்ற சாதுக்களுக்கும் சந்நியாசிகளுக்கும் தியானம் எளிதாகச் செய்யக்கூடிய ஒன்றாக இருக்கலாம். ஆனால் மனதில் உருவாகின்ற சஞ்சலம் காரணமாகத் தியானயோகத்தில் தொடர்ந்து ஈடுபடுவது எனக்குக் கஷ்டமாகவும் கடினமான ஒரு செயலாகவும் இருக்கின்றதே. இதற்குக் காரணம் மனம்; மிக சஞ்சலமானது; குழப்பம் ஏற்படுத்துவது; வலிமையானது; பிடிவாதமுள்ளது. இப்படிப்பட்ட அடங்காத மனதைக் கட்டுப்படுத்துவது என்பது காற்றைக் கட்டுப்படுத்துவதைப்போல் மிகக் கடினம். இதில் வெற்றி காண்பது மிக அரியதான ஒன்று என்றே நான் எண்ணுகின்றேன்.” என்றான்.

இதைக்கேட்ட கிருஷ்ணரின் முகத்தில் புன்னகை. இதைப் படிக்கின்ற நமக்குமே அர்ச்சுனன் இந்த சந்தேகத்தைக் கேட்டவுடன் அப்பாடா! என்று இருக்கின்றது அல்லவா? ஐந்துக்கும் பத்துக்கும் ஆலாய்ப் பறந்துகொண்டு, அன்றாடப் பிரச்னைகளில் தலையைப் போட்டு உடைத்துக்கொண்டு, நடுவில் சத்சங்கம், ஞான உபதேசம், ஆன்மீகம் என்று போய் ஆத்மாவைப் பற்றி அறிந்து கொண்டால் வாழ்க்கையைக் கொஞ்சம் பாரமில்லாமல் கொண்டு செல்லலாமே என்னும் நப்பாசையால் தியானம் செய்ய முற்படுகின்ற நமக்கு, ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து கண்களை மூடிப் புலன்களை அலையவிடாமல் அடக்குவதே எவ்வளவு அரிய பெரிய முயற்சி என்பது தெரியும். பெற்ற ஞானத்தால் அறிவு அடங்க முயற்சித்தாலும் இந்த மனம்தானே நம் முதல் எதிரி. நம்மை நாம் அடையச் செய்யும் முயற்சியைத் தடுக்க மாயை பயன்படுத்துகின்ற வலிமையான ஆயுதம் அல்லவா நம் மனம்!

இந்நிலையில் புலன்களைத் திருப்பி மனதில் சேர்த்து மனதை அடக்கிப் புத்தியில் சேர்த்துப், புத்தியைப் பிடித்து ஆத்மாவில் இணைத்து….அப்பப்பா! நடக்கின்ற காரியமா இது? குருவின் சக்தியால் ஓரளவு அடங்கி ஒடுங்குகின்ற மனம் தனியாக வீட்டில் அமர்ந்து தியானிக்க ஒன்றுபடுகின்றதா? தியானம் செய்பவர்களைக் கேட்டுப் பாருங்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s