மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -21

“மண்ணாங்கட்டி, கருங்கல், தங்கம் இம்மூன்றையும் சமமாக மதிக்கும் அறிவு பெற்றவன் அவன். பொருள்களில் மட்டுமல்ல உற்றார், உறவினர், நண்பர், பகைவர், மதிப்பவர், மதியாதவர், பொதுவானவர், வெறுக்கத்தக்கவர், நல்லவர், தீயவர் என அனைவருடனும் சமபுத்தியுடன் அவன் பழகுபவன். இப்படிப்பட்ட சமபுத்தி உள்ளவனே மிகச் சிறந்த மனிதன்”

இவையெல்லாம் கிருஷ்ணர் நம்மைப்பற்றி நாம் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள, சுயபரிசோதனை செய்துகொள்ள கொடுக்கின்ற குறிப்புகள் ஆகும். இவற்றைப்பற்றி ஆழமாக சிந்திப்பது கூட ஒரு தியானம் தான்.

இவ்வாறு தியானம் என்ற சொல்லின் உட்பொருளை உபதேசித்த ஸ்ரீகீருஷ்ணர் இத்தகைய தியானப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுத் தன்னை உயர்த்திக்கொள்ள விரும்புபவனுக்குத் தியானம் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதையும் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

“சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், தாழ்வில்லாமலும் துணி, மான்தோல், தர்ப்பை, இவற்றில் ஏதாவது ஒன்றின்மீது தனக்கோர் ஆசனம் அமைத்துக்கொண்டு அமர்ந்து மனதை ஒருமுகமாக்கி உள்ளத்தையும் ஐம்புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி ஆத்மா தூய்மை அடையும்படி யோகத்தில் பொருந்த வேண்டும்” என்கிறார் அவர்.

தர்ப்பை, மான்தோல் போன்றவையெல்லாம் கீதை நடந்த காலத்திற்குரியவை. இப்போது அவற்றைத் தேடித்திரியத் தேவையில்லை. தியானம் செய்ய சுத்தமான, அமைதி சூழ்ந்த தனி இடமே போதுமானது.

“உடல், கழுத்து, தலை மூன்றையும் நிமிர்த்தி, நேராக, அசையாமல் அமர வேண்டும். பார்வை மூக்கு நுனியில் நிலையாக இருக்க வேண்டும். தியானப் பயிற்சி செய்யும் சாதகன் சாந்தம் அடைந்தவனாக அச்சத்தைப் போக்கியவனாக, பிரம்மச்சரிய விரதத்தில் நிலைபெற்றவனாய் மனதை வசப்படுத்தி என்னிடத்திலே சித்தத்தைச் செலுத்தி என்னையே தியானித்தவாறு அமர்ந்திருக்க வேண்டும்”.

ஆன்மாவை, ஆன்மாவில், ஆன்மாவாலேயே உணர்தல் ஆனந்தம் என்று கிருஷ்ணர் உரைக்கின்றார். தேடியவனும் தேடிய பொருளும் இணைகின்றபோது அங்கு தேடியவனும் இல்லை. தேடிய பொருளும் இல்லை. நிறைவு மட்டுமே அங்கு இருக்கிறது. இதுதான் தியானத்தின் சிறப்பு. அன்பைப் பெருக்கி, அன்புத் தீயிலே கலந்து, அன்பு மயமாக மாறிவிடுதலே தியானத்தின் உச்ச கட்ட உயர்வு.

எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகின்றாய்! என்கிறது கீதை. அன்பை நினைத்து அன்பில் கலந்தால் அன்பு மயமாக ஆகிவிடலாம் இல்லையா? நாம் வேறு அது வேறல்ல. நாமும் அதுவும் ஒன்று. மனதிலிருந்து பேதத்தை நீக்கிவிட்டால் எல்லாம் ஒன்று. எனவே நம்மை நாமே குறைத்து இழிவாக நினைக்காமல், உயர்வாக நினைத்து உயர்வாக நடந்துகொள்ள வேண்டும்.

ஒருவன் மனதால் உயர்ந்து தனது உண்மை சொரூபமான இறைத்தன்மையை அடைந்துவிட்டால், பிறகு அந்த இறைத்தன்மைதான் அவனிலிருந்து வெளிப்படும். தன்னை அந்த இறைநிலையில் தொடர்ந்து வைத்திருக்கத்தான், நான் தெய்வம் எனத் தன் உண்மை நிலையை நினைத்துக்கொண்டே இருப்பதற்குத் தான் தியானம் செய்ய வேண்டும்.

தியானத்தின் மூலம் மனதின் குறைபாடுகள் நீங்கி, அக, புறப் பற்றுக்கள் நீங்கி அவனும் நானும் என்ற உணர்வில் மட்டுமே தங்கியிருக்க முடியும். இதைத்தான் நாம் தியானப்பயிற்சியில் பழக வேண்டும். இதை இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் நான் என்பது பெயர் உருவம் என்ற விதத்தில் அமையாமல், நான் இறைவன், எங்கும் பரந்துள்ள இறைசக்திதான் இந்த உடலுக்குள் நானாக இருக்கிறது. அதுவே நான் என்ற உணர்வில் கலந்திருத்தல். இதுதான் உண்மையான தியானம். இந்த தியானமே யோகமாகிறது.

தியானம் எல்லோராலும் செய்யப்படுக்கின்றது. தியான வகுப்புகள் ஏராளம். ஆனால் அதன் தெய்வீகத் தன்மையை உணராமலேயே தியானம் செய்யப்படுகின்றது. மருத்துவ உலகிலும் உடல் நலத்திற்குத் தியானம் சிபாரிசு செய்யப்படுகிறது. தியானம் செய்தால் சர்க்கரை வியாதி போகும், இரத்த இழுத்தம் சீராகும் என்றெல்லாம் சொல்கிறார்கள். பிறவிப் பிணியையே தீர்க்கக்கூடியதான தியானத்தால் இந்த வியாதிகளை எல்லாம் போக்க முடியாதா என்ன?

இரண்யகசிபு, கம்சன், ராவணன் போன்றவர்களெல்லாம் கூடத் தியானம் செய்தார்கள். தவம் செய்தார்கள். ஆனால் அவர்கள் செய்ததெல்லாம் உண்மையான தியானம் அல்ல.

அகங்காரத்தை அழிக்கக்கூடியதான, இறைசக்தியோடு இணைக்கக்கூடியதான தியானமே உண்மையான தியானம். தான் என்று உடலோடு சம்பந்தப்பட்டதாக செய்யப்படுகின்ற தியானம் அகங்காரத்தோடு சேர்ந்ததாக அமைகிறது. சரீரத்திற்காகவும், சரீர சுகத்திற்காகவும் தவமும் தியானமும் செய்பவன் அசுரன்.

தவம் செய்யாமல் அசுரனாக முடியாது. தனக்குத் தேவையான வலிமையைப் பெறத் தவம் தேவை. அத்யாத்ம சாதனை என்பது அசுரனாவதற்கும் தேவையான ஒன்றுதான். எனவே தான் மேலே குறிப்பிட்டவர்கள் நம்மைப் போன்ற சாதாரணமானவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத விதத்தில் மிகக் கடுமையான தவங்களை மேற்;கொண்டனர். இருந்தாலும் அந்த முயற்சியில் தான் என்னும் அகங்காரமே மிகுந்திருந்ததால் அவர்கள் வரம் பல பெற்றும் தீயவர்களாகவே திகழ்ந்து அழிவைத் தேடிக்கொண்டனர். ஆகவே செய்யப்படுகின்ற தியானம் ஆத்மாவோடு மட்டும் சம்பந்தப்பட்டு இறைவனை அடைவதற்காக மட்டுமே செய்யப்படும்போது அகங்காரம் நீங்கிய நிலையில் அது யோகமாகிறது.

நான் இறைவன் என்பதை மனதில் பதிய வைப்பதற்காகச் செய்யப்படும் இந்த தியானப் பயிற்சி ஒரு கட்டத்தில் நான் அவனே என்ற உணர்வால் நிறைவடைகின்றபோது பிறகு தியானம் செய்யத் தேவையில்லை. சர்வம் பிரம்ம மயம் என்னும் அதி உயர் உணர்வு நிலை அது. இந்நிலை அடைய ஞானமும் இறையருளும் தான் துணை நிற்க வேண்டும்.

உடல் இருக்கின்றவரை பொருள்உலகத்துடன் தொடர்பு இருக்கத்தான் செய்யும். என்றாலும் அந்தப் பொருள்உலகம் தனது அதி உயர் உணர்வு நிலைக்கேற்ப மாற்றி அமைக்கப்படும். எங்கும் பரவி நிற்கின்ற இறைசக்தியை நாம் நமக்குள் பிடிக்கின்ற வழியைத்தான் கிருஷ்ணர் இங்கு சொல்லிக் கொடுக்கின்றார்.

உடல் என்பது வெறும் உறை மட்டுமே. அதன் உள்ளே அமைந்திருக்கின்ற சூட்சும சரீரமான ஜீவன்தான் தனது கர்மப் பதிவுகளுக்கு ஏற்ப இந்த வாழ்க்கையை அனுபவிக்கின்றது. இந்த ஜீவன் ஆத்மசக்தியைப் பயன்படுத்தி இயங்குகிறது. சக்தியை வழங்குகின்ற ஆத்மா வெறும் சாட்சி மட்டுமே. அது எதனோடும் சம்பந்தப்படுவதில்லை. பங்கெடுத்த வாழ்க்கை நாடகத்தில் தன் பங்கு முடிந்ததும் சூட்சும சரீரமான ஜீவன் உடலைவிட்டு வெளியேறிவிடுகிறது. அது தன்னை ஆத்மாவாக உணராதவரை பிறவி எடுத்துக்கொண்டே இருக்கிறது.

கர்மக் கட்டுகளிலிருந்து விடுபட்டு ஆத்மாவின் ஒளியில் ஜீவன் செயல்படத் தொடங்கினாலோ அல்லது ஜீவன் ஆத்மாவை அடைந்து அதனோடு இணைந்து ஆத்மாவாகவே ஆகிவிடுவதாலோ மரணத்தை வெல்ல முடியும். அடிப்பொருளாகவும், அகப்பொருளாகவும் எல்லா இடத்திலும் எல்லாப் பொருளிலும் நிறைந்திருப்பது ஆத்மா.

அதுவும், இதுவும், எல்லாமும் ஒன்று. ஆத்மாவில் ஜீவனைக் கரைப்பதும், ஜீவனை ஆத்மாவாக மாற்றுவதுமே பரிணாமத்தின் உயர் நிலை. இது ஜீவன் எனத் தனியே இல்லாமல் ஜீவனே ஆத்மாவாக மாறுகின்ற நிலை. இதுவே மனிதன் என்பவன் தெய்வம் ஆகின்ற நிலை.

எல்லாவற்றையும் மன்னிக்கின்ற குணமும், கருணையும் இருந்தால் இந்த இறைநிலையில் தொடர்ந்து இருக்க முடியும். கருணை இல்லாமல் இந்நிலையை அடைய முடியாது. தியான யோகத்தால் தான் இந்நிலையை நாம் எய்த முடியும்.

இப்படி நாம் இறைத்தன்மையோடு கூடியவர்களாய் மாறித் திகழ்வதை மற்றவர்கள் உணர வேண்டும். தியான ஒளி நம்மிலிருந்து வெளிப்பட்டு பரவ வேண்டும். இப்படி நாம் இருக்கின்ற நிலையில் நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களிடமும் மாற்றங்கள் ஏற்படும். எதிர்ப்புத்தன்மையோடு இருந்தவர்கள் கூட நல்ல குண இயல்பு கொண்டவர்களாக மாறி நடந்துகொள்வார்கள். வீட்டுச்சூழ்நிலையிலேயே ஒரு தெய்வீகத் தன்மை வெளிப்படும். மகிழ்ச்சியுடன் நிம்மதியும் அதிகரித்த நிலையில் ஒவ்வொரு நாளும் இருப்பதோடு நம்மில் பதிந்திருக்கும் கர்மாவும் பெருமளவில் அழியும். நமக்குத் தேவையானவை எல்லாம் தானாகவே தடையின்றி நிறைவேறத் துவங்கும். அப்படியின்றி கா;மாவால் துன்பங்கள் தொடர்ந்தால் கூட அவற்றைத் தாங்கக்கூடிய சக்தி நம்மில் ஏற்படும். தியான யோகப்பயிற்சி அந்த வலிமையைத் தரும். நம்மைச்சுற்றி விரும்பாதவை ஏராளம் நிகழ்ந்தால் கூட அதனால் பாதிப்படையாமல் அவற்றை இறைப்பிரசாதமாக ஏற்கின்ற மனப்பக்குவம் ஏற்படும். என் கர்மாவினால் வருகின்ற இந்த அனுபவங்களை நான் ஏற்கத்தான் வேண்டும் என்ற மனத்தெளிவு ஏற்படும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s