-கிருஷ்ணர் என்றாலே ஆனந்தம் தான் –

ராதா கிருஷ்ணா திருமண வைபவம் 2012

மிஸிஸாகாவில் அமைந்துள்ள சிவ-சத்தியநாராயணா கோவில், கடந்த 26.5.12 சனிக்கிழமையன்று மாலையும், 27.5.12 அன்று ஞாயிறு காலையும் திவ்ய நாம சங்கீர்த்தன பஜனையுடன் கூடிய ராதா கல்யாண வைபோகத்தால் குதூகலித்துக் குலுங்கியது. மிக அருமையாகத் திட்டமிட்டுச் செய்யப்படுகின்ற எந்தக் காரியமும் நிறைவையும், வெற்றியையும் தான் தரும் என்பதை அந்த நிகழ்ச்சி நிரூபித்தது. அவர்தான் செய்தார், இவர்தான் செய்தார் என்று இல்லாமல் திரு முரளி திருமதி உமா முரளி ஆகியோரின் ஏற்பாட்டில் எல்லோருமாகச் சேர்ந்து செய்த ஒரு செயலாக, அந்த ஒற்றுமையால் மிகச் சிறப்பானதாக இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் அமைந்தன. திருக்கோயிலூர் சத்குரு ஸ்ரீ ஞானானந்தரின் வழிபாட்டு முறையில் ஸ்ரீ ஹரிதாஸ் சுவாமிகள், ஸ்ரீ நாமானந்த சுவாமிகள் ஆகிய மகான்களின்; பக்தர்கள் ஒன்று சேர்ந்து மிஸிஸாகாவில் பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணருக்கும், ஜீவாத்ம தத்துவமான, பரமபக்தையான ராதாவிற்கும் கோலாகலமாகக் கல்யாணம் செய்து வைத்து மகிழ்ந்தனர்.

கலியுகத்தில் மனிதர்கள் இறைவனை அடைவதற்கு மிகச் சுலபமான சிறந்த வழி திவ்யநாம சங்கீர்த்தனமே. அதை நெறிப்படுத்தி ஒரு பஜனை நடன சம்பிரதாயத்தை உருவாக்கியிருக்கின்றனர் நம் முன்னோர்கள். அதனை முறையாகப் பயின்ற பாகவதர்களான நியுயார்க் (buffalo) மகா ஸ்ரீ வாலாடி நாகராஜ பாகவதரின் சம்பிரதாய பஜனை மண்டலி குழுவினர் இச்சிறப்பு வைபவத்திற்காக கனடாவிற்கு வந்து தாள வாத்திய கோஷ்டியுடன் உற்சாகமாகப் பாடி, ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

ஒரு குத்து விளக்கை குருதேவராக, இறைவனாக உருவகித்து அதனை ஏற்றி ஆடியபடியே எடுத்து வந்து நடுபீடத்தில் வைத்து, அதனைச் சுற்றி முதலில் ஆண்களும், பிறகு பெண்மணிகளும் ஆடினர். இனிய பஜனைப் பாடல்களுடன் கோலாட்டம், கும்மி ஆகியவையும் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. சன்ஸ்க்ரிதி (sanskriti) டான்ஸ் அகாடமியின் ஆசிரியை திருமதி பிரபா ராகவனின் மாணவியர் ஸ்ரீநிதி, சித்திகா இருவரும் மிக அற்புதமாக நடனமாடி பக்தர்களை பரவசப்படுத்தினார்கள். சுவை மிகுந்த பிரசாதத்துடன் மாலை நிகழ்ச்சி நிறைவடைந்தது.

மறுநாள் காலை முதல் நிகழ்ச்சியாக உஞ்சவிருத்தி பஜனை பக்திபூர்வமாக சம்பிரதாய முறைப்படி மிக அழகாக நடந்தது. பல்வேறு இனிய பாடல்களின் பின்னணியில் நடைபெற்ற இந்கிழ்ச்சி, கிராமங்களில் இது நிகழ்கின்ற காட்சியை நினைவுபடுத்தியது. அதனைத் தொடர்ந்து வெர்ஜீனியாவிலிருந்து வருகை புரிந்த ஸ்ருதி என்ற 9 வயதே ஆன சிறுமி மிக அழகாக ஆறுகட்டை ஸ்ருதியில், பல்வேறு அருமையான பாடல்களின் தொகுப்புடன் கூடிய ஜெயதேவரின் தெய்வீக வாழ்க்கையில் சில பகுதிகளை, அவர் எழுதிய அஷ்டபதியின் பெருமைகளை மிகப் பிரமாதமாகத் தமிழ் மொழியில் ஹரிகதா காலட்சேபமாக நடத்தி பக்தர்களின் மனதை நெகிழ வைத்துவிட்டாள். இந்த வயதில் இத்தனை திறமையா என அனைவரையும் வியப்புறச் செய்தாள்.

அதனை அடுத்து முத்துக்குத்தல் என்னும் அருமையான நிகழ்ச்சி இடம் பெற்றது. முதலில் சின்னஞ் சிறுமிகள், பிறகு சிறுவர்கள், பிறகு சுமங்கலிப் பெண்கள், பின்னர் ஆண்கள் என்று உரலில் நெல் மணிகளைப் போட்டு, உலக்கையால் அதனை இடித்து அந்த முத்துமுத்தான அரிசி மணிகளைத் திரட்டி என்று ஆடியபடியே அவர்கள் எல்லாம் செய்தது ரசிக்கக்கூடியதாக இருந்தது. பிறகு அந்த உலக்கையை இருபுறமாக நின்று பிடித்தபடி ஒவ்வொரு தம்பதிகளாக தாளத்துடன் கூடிய பாடலுக்கேற்ப மெதுவாகவும், விரைந்தும் ஆடிய நிகழ்ச்சி பக்தர்களை அப்படியே கட்டிப்போட்டதோடு, அங்கு ஆனந்தத்தைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று தோன்றச் செய்தது.

இதைத் தொடர்ந்து திருக்கல்யாணம். அதற்கு நம் பெண்மணிகள் சீர் கொண்டு வந்த அழகு இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. வகை வகையான பட்சணங்கள், பலகார வகைகள். வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய், புஷ்பம், ஆகியவற்றை இனிப்பாலேயே செய்து அங்கு வைத்திருந்ததை எல்லோருமே வியப்பாகப் பார்த்து ரசித்தனர். ஊஞ்சலில் ஆடிய வண்ணம் ஆனந்தமாக வீற்றிருந்த ராதா – கிருஷ்ணருக்கு ஊஞ்சல் லாலி பாடி, மாலை மாற்றி, சம்பந்தி மரியாதை செய்து, குலம், கோத்திரம் பற்றி மூன்று முறை அறிவித்து முறைப்படி திருமாங்கல்ய தாரணம் செய்வித்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க, ஆலய சிவாச்சார்யார் சந்திரசேகரன் என்னும் சிவஸ்ரீ சந்தரு குருக்கள் மந்திரங்களை உச்சரிக்க பக்தி;ப் பரவசப் பாடல் ஒலியுடன் மாங்கல்யதாரணம் நடைபெற்று மட்டற்ற மகிழ்ச்சியுடன் கூடிய நிறைவைத் தந்தது. அந்த ஆனந்தத்தின் வெளிப்பாடாக செல்வி ஸ்னேகா, செல்வன் பவஜன் ஆகிய இருவர் ராதையும், கிருஷ்ணனுமாக பாவனை செய்து மிக மிக அற்புதமாக ஒரு நடனம் சுழன்று சுழன்று ஆடி வந்திருந்தவர்களை மகிழ்வித்தனர். நிறைவு நிகழ்ச்சியாக நலங்கு நடைபெற்று, வந்திருந்த பாகவதர்களுக்கு மரியாதை செய்து, சிறப்பான கல்யாண விருந்துடன் இந்த ராதா கல்யாண வைபவம் ஆனந்தமாக நிறைவுற்றது.

Photos:


Radha kalyanam 2k12

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s