மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -20

மனித வாழ்க்கை என்பது செயல் விளைவு தத்துவம் ஆகும். அதாவது இன்றைய எமது இந்த வாழ்க்கை முற்பிறவியில் செய்த கர்மாவின் பதிவுகளே. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றைக் கொண்ட சூட்சும உடல் ஜீவன் எனப்படுகின்றது. இவற்றோடு சேர்ந்த கர்மப்பதிவுகளோடு தான் ஒரு ஜீவன் தகுந்த உடல் எடுத்துப் பிறக்கின்றது. நான் அல்லாத இவற்றை இல்லாமற் செய்தால் தான் பிறவி அழியும்.

பழைய கர்மாக்களின் சேமிப்புக் கிடங்கு இந்த ஜீவன். அவைதான் எண்ணங்களாக, ஆசைகளாக வெளிப்பட்டு வாழ்க்கையாக அமைகின்றது. ஆகவே இந்தப் பிறவித் தளையிலிருந்து விடுபட வேண்டுமென்றால் ஜீவனில் பதிந்திருக்கின்ற கர்மப்பதிவுகளைத் தியான நெருப்பில் எரிக்க வேண்டும்.

கடந்து சென்ற எத்தனையோ பிறவிகளில் கோவில், குளம், பூசை, யாகம், யாத்திரை என்று எத்தனை எத்தனையோ செய்திருக்கின்றோம். அவை நமது நிலையை உயர்த்தியிருக்கலாமே தவிர அவற்றால் எல்லாம் கா;மாவிலிருந்து விடுபட முடியாது. ஆனால் தன்னைத் தன்னோடு இணைக்கின்ற தியானத்தால் கர்மாவை அழித்துப் பிறவியிலிருந்து விடுபட முடியும்.

பிறவிகள்தோறும் தொடர்வது சஞ்சித கர்மா. இப்போது நாம் அனுபவிப்பது பிராரப்த கர்மா. இந்தப் பிறவியில் நாம் செய்பவற்றின் புதிய பதிவுகள் ஆகாமிய கர்மா. இந்த மூவகைக் கர்மாவையும் தியானத்தால் அழிக்கலாம். பகவத்கீதை உபதேசம் என்னும் ஞானவேள்வியின் மூலமாக ஆன்மீக சாதகன் தனக்குள்ளேயே சுய பரிசோதனை என்னும் ஞான நெருப்பை வளர்த்து அதில் தன் கர்மாவை ஆஹூதீயாக இட்டுப் பிறவியை இல்லாமல் செய்து விடலாம்.

தியானப் பயிற்சியில் ஈடுபடுகின்ற ஆரம்ப நிலையில் ஒருவருக்கு எண்ணங்கள் அடுக்கடுக்காக மனதில் எழும். மனதில் மறைந்து கிடக்கின்ற பிரச்சினைகள் அல்லது காட்சிகள் வெளிப்பட்டு தியானம் செய்ய விடாமல் குறிக்கிடும். ஆனால் நாம் அதைப் பொருட்படுத்தாமல் ஓடவிட்டுத் தொடர்ந்து தியானம் செய்யச் செய்ய அந்த எண்ணங்கள் படிப்படியாகக் குறைந்து நாளடைவில் மனம் ஒருமைப்படும். இதற்கு விடா முயற்சியும் பொறுமையும் தான் தேவை. மனதை சமநிலைப்படுத்தி ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து சிந்தனையைத் தவிர்த்து மனமும் பேசாமல் மௌனத்தில் ஆழ்வதே நம் செயலாக இருத்தல் வேண்டும்.

ஆன்ம சாதனையில் ஈடுபட விரும்புபவர்கள் முதலில் உலக விவகாரங்களிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள வேண்டும். தனிமையை விரும்ப வேண்டும். வெளி விஷயங்களிலேயே சதா அலைந்து திரிந்து பழகிய மனதை உள்முகமாகத் திருப்பும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இதற்கு ஆர்வமும் முயற்சியும் தன்னைப் பற்றிய அறிவும் நமக்கு இருக்க வேண்டும்..

நான் இந்த உடல், இது என்னுடைய வாழ்க்கை, நான் பார்க்கின்ற அனைத்தும் உண்மையானவை போன்ற மாயையிலிருந்து விடுபட முயல வேண்டும்.. எல்லாம் உண்மைபோல் தோன்றினாலும் தோற்ற மயக்கங்களே! என்ற தெளிவு நமக்குள் திடமாகத் தோன்ற வேண்டும். இந்நிலையில் தனிமையில் இருந்து, தன்னைப் பற்றியே ஆராய்ந்து, தன் நிறைகுறைகளை உணர்ந்து, திருந்திக்கொண்டு தியானப் பயிற்சியையும் தொடர்ந்து மேற்கொண்டு சாதனையைப் பழக வேண்டும். இப்பிறவியில் வெற்றி கிடைக்காவிட்டாலும் நமது முயற்சி வீண் போகாது. இதற்குக் கிருஷ்ணரே உறுதி கூறுகின்றார். இப்படி முயற்சி செய்து ஆன்ம நிறைவு பெற்றவர், பிறகு எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை. அவர் இற்த உலகப் பொருள்களிடையில் இருந்துகொண்டே பற்றுதல் இல்லாமல் துறவிபோல் வாழ்கிறார்.

அவருள் சமநிலை ஏற்பட்டுவிடுவதால் வெளிப்பொருள்கள் அவரை இழுப்பதில்லை. அவர் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை உள்முகமாகத் திருப்பித் தியானிப்பதால் ஆனந்தத்தை அனுபவிக்கின்றார். தொடர்ந்த தியான அனுபவம் அவரைப் பூரண நிறைவில் திளைக்கச் செய்கின்றது.

தான் பெற்ற இந்தப் பூரண நிறைவைப் பிறருக்கும் வழங்குவதற்காகவே அவர் மற்ற உயிர்களின் நலனுக்காக, உயர்வுக்காக சேவை செய்கிறார். வாழ்கின்றபோதே தானும்; நிறைவை அனுபவித்துக்கொண்டு ஆனந்தம் அடைந்து அதனை மற்றவர்களுக்கும் வழங்குகின்ற சேவையாகவும் அது விரிகின்றது. இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை தான் உண்மையான புனிதமான வாழ்வு. இவர்களே மனிதர்களில் தெய்வ நிலையில் வாழ்பவர்கள். இவர்களின் நலன் கிருஷ்ணரின் பொறுப்பாக ஆகிவிடுகின்றது.

துறவு என்பது, தான் மட்டும் சமாதி நிலையில் மூழ்கித் தனது விடுதலையை மட்டும் நாடுவது. அது உண்மையான துறவல்ல. தான் பெற்ற இன்பத்தைப் பிறருக்கும் வழங்கிப் பிறரையும் பரிணாம வளர்ச்சியில் உயர்த்துவதே சிறந்த துறவு ஆகும். இங்கு சமாதி நிலை என்று குறி;ப்பிடுவது, தான் அல்லாதவற்றிலிருந்து விலகி உண்மையான தன்னுனர்வில் முற்றிலும் மூழ்கிவிடுவதே ஆகும். இந்நிலையில் புற உணர்வு அறவே அற்றுப்போய்விடும். காலமோ அல்லது இடமோ தெரியாது.

இந்த உலகமும் மனிதர்களும் உண்மையல்ல. மாயை. இருந்தாலும் வெவ்வேறாய்த் தெரிகின்ற இந்த வேற்றுமைகளின் உள்ளே ஒன்று இருக்கிறது. அந்த ஒன்றுதான் இப்படி எல்லாமாய்த் தெரிகின்றது அந்த ஒன்று நமக்குள்ளிருந்து வெளிப்படக் காத்திருக்கிறது. அந்த உள்ளிருக்கும் ஒன்றை உணர்வதால் தான் யாரையும் பார்த்தவுடன் நாம் கைகுவித்து வணங்குகிறோம். அவரிடம் இருக்கும் தெய்வீகத்தை நமக்குள் இருக்கும் தெய்வீகம் வணங்குகிறது. ஏனெனில் எல்லா உயிர்களுக்குள்ளும் அந்தர்யாமியாகத் திகழ்பவன் இறைவனே!

தியானப் பயிற்சியில் ஈடுபடுபவர்கள் இறையருளைத் தேடி வேறு எங்கும் ஓடத் தேவையில்லை. அந்த இறைவன் நமக்குள்ளேயே இருந்துகொண்டு உட்குரலாக ஒலித்து வழிகாட்டுவான். வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கெல்லாம் தானாகவே தகுந்த தீர்வு கிடைக்கும்.

மனதின் ஆதிக்கத்திலிருந்து விடுபடாமல் மனிதன் எந்தவித யோகியாகவும் ஆக முடியாது. மனதைக் கட்டுப்படுத்துதல் என்பது மிகவும் கடினமான ஒன்று. யோகம், தியானம் வழியாகத் தம் மனதைக் கட்டுப்படுத்திவிட்டதாகக் கூறுபவர்கள் கூட அதனை இழக்கின்ற தருணங்கள் எத்தனையோ ஏற்பட்டுவிடுகின்றன.

பக்தி செய்தாலும் தியானம் செய்தாலும்கூட உள்ளம் பலவித சிந்தனைகளால் தூண்டப்பட்டு ஓடிக்கொண்டே தான் இருக்கும். இப்படி உள்ளத்தில் தோன்றும் சிந்தனைகள் அவரவரின் அனுபவங்களுக்கு ஏற்ப அமையும். ஆகையால் மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதைவிட, மனதைப் பக்குவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம். இதற்கு ஞானம் தான் உதவ முடியும்.

உள்ளம் பக்குவம் அடைந்து உயர்வதற்கு முட்டுக்கட்டைகளாக இருப்பவற்றில் அறியாமை தான் முதலிடம் வகிக்கிறது. அறியாமையின் காரணமாகத்தான் சுயநலம், பேராசை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றிலிருந்து விடுபட்டு மனப்பக்குவத்தைப் பெற முதல்படியாக உலக விஷயங்களைத் துறக்கத் துணிய வேண்டும்.

அதோடுமட்டுமின்றித் தனிமையை விரும்பித் தனிமையில் இருக்கப் பழக வேண்டும். ஏனெனில் மன அமைதியுடன் தனிமையில் இருந்து, பற்றுதல் இல்லாமல் கடமையை மட்டும் செய்துகொண்டு மனதை உள்முகமாகத் திருப்புகின்றவனுக்குத் தான் தியானம் சித்திக்கும்.

“எந்த மனிதன் தன்னைத் தானே வெற்றிகொள்கிறானோ, நிலையற்ற உண்மையற்ற விஷயங்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறானோ அவனே அவனுக்கு நண்பன்.”

“எவன் தனக்குத் தானே தோல்வி அடைகிறானோ அதாவது நிலையற்ற உண்மையற்ற பொருள்களுடன் தொடர்பு கொண்ட நிலையில் ஆத்ம சிந்தனையில் ஈடுபடுகின்றானோ அவனே அவனுக்கு விரோதி.”

“எவன் தன்னைத் தானே வென்றிருக்கிறானோ அவன் முன்வினைப் பயனாக ஏற்படும் நன்மை தீமைகளிலும், நடைமுறை வாழ்வில் செய்யப்படும் செயல்களின் வெற்றி தோல்விகளிலும், பிறர் தனக்கு ஏற்படுத்தும் மான அவமானங்களிலும் தளர்ந்து விடாமல் நடுநிலையில் கலக்கமின்றி இருக்கிறான். ஆகையால் திட சித்தனான அந்த மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.”

“அப்படிப்பட்டவனின் உள்ளம் எப்பொழுதும் மெய்யறிவாகிய ஞானத்துடன் நிரம்பித் திருப்தியுடன் இருக்கிறது. அவனிடம் எல்லாப் புலன்களும் அடங்கி ஒடுங்கி இருக்கின்றன. அவன் எற்தச் சூழ்நிலையிலும் மனம் பேதலிக்காமல் விருப்பு வெறுப்புகளுக்கு இலக்காகாமல் நடுநிலையில் இருக்கிறான்.”

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s