மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -19

ஒரு சாதாரண மனிதனுக்கு இவர் உண்மையான குரு என்பது எப்படித் தெரியவரும்? எவரைக் குருவாக அடைந்து ஞானம் பெறுகின்ற நிலையில் ஒருவனுடைய மனம் சாந்தியடைகிறதோ, அடங்கி அமைதியுறுகிறதோ, அவரே அவனது குரு. குரு எப்படியும் இருக்கலாம். அவரது ஆத்மாவின் கருணை இவனது ஆத்ம உயர்வுக்கு வழிகாட்டி அல்லது ஒளிவிளக்கு. அவ்வளவுதான். வேறு எந்த வித ஆராய்ச்சியும் தேவையில்லை.

ஒரு சாதகனுடைய சரணாகதி மிக மிக உண்மையானதாக இருந்தால், அவனுக்கு உண்மையான குரு கிடைப்பார். தேடலின் தீவிரத்திற்கேற்பத் தான் பலனும் கிட்டும். ஒருவன் தனக்குரிய குருவை அடைந்து அவரிடம் முழுமையாகச் சரணடைந்துவிட வேண்டும். அந்நிலையில் அவர் ஒரு தாயின் கருணையுடன் அவனது அறியாமையை நீக்கி, அவனல்லாதவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி நீக்கச்செய்து, தியானப் பயிற்சியையும் தந்து, மேற்குறித்த விதத்தில் அந்த ஆன்மிக சாதகனின் உடல், மனம், புத்தி ஆகியவற்றை உள்முகமாகத் திரும்பச்செய்து அவனின் உள்ளேயே இருக்கின்ற ஆத்மஜோதியைத் தரிசிக்க வைக்கின்றார்;.

இந்நிலையை அடைவதற்குக் குருவும் சிஷ்யனும் பெரும்பாடு பட வேண்டும். ஆன்ம சாதகன் ஆத்மாவில் ஒன்றுவதற்கு இயற்கை விடாது. மாயை தடுக்கும். கர்மா பின் நின்று இழுக்கும். ஈகோ தலைவிரித்து ஆடும். போலித்தனமான உணர்வுகள் முன்னேற விடா. சூழ்நிலை குறுக்கே நிற்கும். வெளி உலகம் அவன் உள்ளத்தில் புகுந்து எண்ணங்களாகித் தியானம் செய்வதைத் தடை செய்யும்.

அனைத்தையும் போராடி வெல்ல வேண்டும். இதற்குக் குருவின் ஆசியும் இறையருளும் கிடைக்க வேண்டும். விடுதலை என்பது என்ன? போராடிப் பெற வேண்டியதல்லவா? அது அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடுமா? எத்தனை தடைகள்? எத்தனை இழப்புகள்? எத்தனை தியாகங்கள்? இப்படி இதற்கு இத்தனை போராட்டங்கள் இருக்கிறது என்பதால் தான் உபநிடதங்களில் ஒரு பிரார்த்தனை, சாந்தி பாடம் என்ற பெயரில் வைக்கப்பட்டிருக்கிறது. ‘ஓம் ஸஹனாவவது’ என்று தொடங்கும் அந்தப் பாடலில் ஒரு வரி, “இந்த வித்தையைப் பயில்கின்ற குரு சிஷ்யராகிய எங்கள் இருவருக்கிடையில் எந்தவிதப் பிரச்சினையும் ஏற்படாத நிலை நிலவட்டும்”!!”மா வித் விஷா வஹை”!என்று வரும்.

குருவின் உதவியால் ஞான விசாரணை செய்து ஆத்ம வித்தையைக் கற்று தன்னையறிதலாகிய வழியை இவாவாறு பெற முடியும் என எடுத்துரைத்த கண்ணபிரான் மேலும் ஒரு சுலபமான வழியையும் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கின்றார்.

“எவர் என்னை எல்லா உலகங்களுக்கும் பாது காவலனாகவும் பரிபாலிப்பவனாகவும் மதிக்கிறாரோ, எவர் என்னை எல்லா உயிரினங்களுக்கும் பரம கர்த்தாவாக, உற்ற நண்பனாக அறிகிறாரோ, எவர் என்னை யக்ஞங்களுக்கும், தவத்திற்கும் இறுதி லட்சியமாகவும், அவற்றை அடைபவனாக இருப்பதாகவும் உணர்கிறாரோ அவர், இந்த உலகியல் சம்பந்தமான துயரங்களிலிருந்து விடுபட்டுப் பரம சாந்தி, பேரமைதி நிலையை அடைந்து விடுகின்றார்”.

இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் உலக விவகாரங்களைத் துறந்து அவற்றை அறவே ஒதுக்கித்தள்ளி ஞானத்தைப் பெறுவதன் மூலம் என்னை அடையலாம் எனவும், உலக விவகாரங்களைத் துறக்காமலேயே செய்வதைக் கடமையாகச் செய்து, வருவதைப் பிரசாதமாக ஏற்று, பெறுவதைக் காணிக்கையாக அவனுக்கு அர்ப்பணித்து, பக்திபூர்வமாகத் தன்னை இறைவனிடம் சரணாகதி செய்து இணைவதன் மூலம் என்னை அடையலாம் எனவும் இரண்டு வழிகளை அர்ச்சுனனுக்குக் காட்டித் தருகிறார்.

ஓன்று துறந்து இணைதல்! மற்றொன்று இணைந்து துறத்தல்! இதுவே கீதையில் சந்நியாசயோகம் என்னும் அழகிய அத்தியாயமாக மலர்ந்திருக்கிறது. மனிதன் என்பவன் தெய்வம் ஆவதற்குரிய இரண்டு வழிகளைப் பரந்தாமன் நமக்குக் கூறியிருக்கின்றார். இனி துறப்பதும், இணைவதும் நம் கையில் தான் இருக்கிறது.

தியானயோகம்

ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்கு வழங்கப்பட்டுள்ள பகவத்கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் உயரிய உபநிஷத்துக்களில் ஒளிந்து கிடக்கின்ற ரத்தின கற்கள் ஆகும். எல்லாமே விலை மதிப்பற்றவை. இவற்றைத் தனித்தனியாகத் தேடிக் கண்டறிவதென்பது அரிதிலும் அரிதான ஒன்று. இவற்றையெல்லாம் ஒன்று சேர்த்து அடுக்கடுக்காக, மிகத் தெளிவாக ஒவ்வொரு யோகமாக அர்ச்சுனனிடம் எடுத்துரைக்கின்றார் ஸ்ரீ கிருஷ்ணர். ஏனெனில் அவர் அர்ச்சுனனைத் தனது உயிரில் கலந்தவனாக ஏற்றிருந்தார். பக்தர்களை பகவான் தானாகவே கருதுகின்றார். தானாகிய தன்னைத் தன்னிடம் சேர்க்கவே யோகங்கள் கீதையாக மலர்ந்திருக்கின்றன. இவற்றில் ஒன்றையேனும் நம்முடையதாக ஏற்று அதனைப் பயில்வதால் நாம் தெய்வமாகலாம்.

இந்த பகவத்கீதையில் அர்ச்சுனனின் மனப்போராட்டத்தையும் அவனது சஞ்சலத்தையும் போக்கி அவனை மீண்டும் ஞானத்துடன் கர்மயோகத்தில் நின்று செயல்படச் செய்வதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் முதலில் உடல் வேறு, ஆத்மா வேறு என்பதை உணர்ந்துகொள்ள சாங்கிய யோகத்தையும், கர்மத்தை எப்படி யோகமாகச் செய்வது என்பதை விளக்கக் கர்மயோகத்தையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து, ஞானத்துடன் செயல்புரிகின்றபோதே எப்படி அச்செயலைப் பற்றின்றி பகவத்சேவையாகச் செய்யலாம் என்பதை ஞானகர்ம சந்யாச யோகத்தின் மூலம் எடுத்துரைத்து அப்படிப்பட்ட அந்தத் துறவின் தன்மை, மேன்மை, பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை சந்நியாச யோகமாக விளக்கிக் கூறினார். கிருஷ்ணரின் இந்த உபதேசம் இன்றைய வாழ்க்கை முறைக்கும் மிகவும் பயன்படக்கூடிய ஓர் உயரிய வழிகாட்டுதலாக அமைந்திருப்பதுதான் இதன் சிறப்பு.

இந்த வகையில் ஆறாவது அத்தியாயத்தில் தியான யோகம் பற்றி விவரிக்கப்படுகின்றது. ஆன்மீக சாதகர்கள் ஒரு சந்நியாசியையோ, ஒரு குருவையோ சந்திக்கின்றபோது பெரும்பாலும் “எனக்கு தியானம் செய்ய வரவில்லையே! நான் என்ன செய்வது?” என்பதை ஒரு முக்கிய கேள்வியாகக் கேட்கின்றனர். தியானம் என்பது செய்யப்படுவதல்ல. நிகழ்வது. புறப்பொருள்களை லிட்டு விலகி, தான் அல்லாதவற்றிலிருந்து விடுபட்டு ஆத்மாவாகிய தன்னில் லயிப்பதே தியானம் ஆகும். எந்த ஒரு செயலுமே பயிற்சியினால் தான் சிறக்கும்.

சாதாரண வாழ்க்கையிலேயே கூட ஒரு விஷயத்தில் சாதனை செய்ய வேண்டுமென்றால் தியானம் தான் அதற்கு வழி. வேறொன்றையும் நாடாமல், கவனத்தைச் சிதற விடாமல், முழு கவனத்துடன் அதிலேயே மூழ்கி எதைச் செய்தாலும், அல்லது எதைப் பயின்றாலும் அது தியானமே.

மகா பாரதத்தில் அர்ச்சுனன் துரோணரிடம் வில் வித்தை பயின்ற கதை எல்லோருக்கும் தெரியும். மற்ற மாணவர்களுக்கு மரம், கிளை, இலை, பறவை ஆகியவை தெரிந்தபோது, துரோணர் வினவிய பறவையின் கண் மட்டும் அர்ச்சுனனுக்குத் தெரிந்தது. வேறு எதுவுமே அவன் கண்களுக்குப் புலப்படவில்லை. அந்த அளவிற்கு அவன் கவனம் இலக்கில் குவிந்தது. இது தான் தியானம். விஞ்ஞானிகள் ஓர் உண்மையைக் கண்டறிய சோதனையில் ஈடுபடுகின்றபோது இந்த நிலையில் தான் இருந்து செயல்படுகின்றனர். புலன்கள் ஐந்தையும் தன் வயப்படுத்தி உள்முகமாகத் திருப்பி ஆத்மசாதனை புரிவதற்கும் அதனோடு ஒன்றுவதற்கும் தியானமே ஒப்பற்ற உயர்ந்த வழி.

பக்தியாலும், பயன்கருதாமல் பணி செய்வதாலும் கூட அதனோடு ஒன்ற முடியும் பக்தி செய்யும்போதும் செயல் புரிகின்றபோதும் ஏற்படுகின்ற தன்னிழப்பு தியானமே என்பது சிந்தித்தால் விளங்கும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s