மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -18

பிரம்மத்தை அறிந்தவன் மகிழ்ச்சியில் துள்ளுவதுமில்லை. துயரத்தில் துவளுவதுமில்லை. “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். வாசல்தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை!” என்று கண்ணதாசன் இந்த ஞானநிலை பற்றித்தான் பாடியிருக்கின்றார். ஆனால் நாமோ உணர்ச்சிகளே வாழ்க்கையாக வாழ்கின்றோம். இதுவும் கடந்து போகும் என்னும் பக்குவ நிலை நம்மில் எத்தனை பேருக்கு இருக்கின்றது?

எல்லாவற்றின்மீதும் அளவு கடந்த ஆசை. அடையவேண்டுமென்ற துடிப்பு அல்லது எதற்கெடுத்தாலும் பயம். எதைச் செய்யப்போனாலும் தயக்கம். அதன் பலனில் சந்தேகம். விளைவு மாறி வந்துவிட்டால் உடனே உலகத்து சோகமெல்லாம் நம்மிடம் தான். என்னுடைய நாடகத்தில் இது ஒரு காட்சி என்ற மனநிலையுடன், வருபவற்றை எதிர்கொண்டு, அதனால் பாதிப்பு அடையாமல், அடுத்தது என்ன என்று வாழ்பவர்களே அறிவுடையவர்கள். ஆனால் இது எல்லோருக்கும் சட்டென்று வந்துவிடாது. அறியாமையும் அகந்தையும் உள்ளவரை எல்லாமே கஷ்டம் தான். துன்ப துயரம் தான்.

எனவே தான் ஞானம் பெற்ற நிலையில் கர்மயோகியாக வாழச்சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். ஞானம் பெற்றவர்களால் தான் மேற்சொன்ன அந்தச் சமநிலையில் இருக்க முடியும். எத்தனையோ பாமர மக்கள் எந்தவிதப் படிப்பறிவும் இல்லாமலேயே இத்தகைய பக்குவமடைந்த மனநிலையில் பிரச்னைகளை எதிர் கொள்கின்றனர் என்பதும் ஓர் உண்மை.

“இவ்வாறு விவேகத்தால் விடுதலை பெற்றவன் புலன் இன்பங்களாலும், புறப்பொருட்களாலும் கவரப்படுவதில்லை. அதற்கு மாறாக அவன் தன்னுள்ளே இன்பத்தில் திளைத்து மூழ்குபவனாக இருக்கிறான். இவ்வாறு பிரம்மத்தில் கருத்தைச் செலுத்துவதால் தனக்குள்ளே இன்பத்தை அனுபவிப்பவன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை அடைகின்றான்.” என்கிறது கீதை.

ஞானியர் தனிமையை நாடுவதன் பொருள் இப்போது புரிகின்றதா? ஆன்ம சாதகர்கள் தனிமையை விரும்ப வேண்டும். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் போன்ற களியாட்டங்களில் ஒன்றுமில்லை என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இருக்க வேண்டும். ஐம்புலன்களையும் குறைவாகப் பயன்படுத்தப் பழக வேண்டும். பயனற்ற, சிறிதும் நன்மை தராத செயல்களில் புலன்களை ஈடுபடுத்தி அவற்றின் வழி செல்லாமல், புலனடக்கம் கொண்டவர்களாய் இருந்தால் தான் மனம் அடங்கும். மனம் அடங்கிய பின் தான் ஞானவழி திறக்கும். நித்ய அநித்ய பேதம் விளங்கும். .

கடோபநிஷத்தில் ஆத்ம வித்தையை அறியத் துடிக்கும் நசிகேதன் என்னும் சிறுவன் அதற்குரிய வழியை மரணத்தின் தேவதையான யமனிடம் கேட்கின்றபோது, யமன் அவனது வேண்டுகோளைத் தவிர்க்கிறான். தேவர்களாலும் விளங்கிக்கொள்ள முடியாத அந்த ரகசியம் உனக்கு உதவாது என்று கூறுகிறான். நசிகேதனோ தொடர்ந்து அதையே தனக்குரிய வரமாகக் கேட்கின்றபோது அவனிடம் உலக இன்பங்களையெல்லாம் பட்டியலிட்டு அவற்றையெல்லாம் அப்படியே வரமாகத் தருவதாக ஆசை காட்டுகிறான். ஆனால் ஞானத்தைப் பெறுவதில் நாட்டம் கொண்ட நசிகேதன் அழியக்கூடிய உலக இன்பங்களில் ஆசை கொண்டு புலன்வழிச் செல்ல விரும்பவில்லை. மாறாக இனி பிறவாமைக்கு உரிய வழியைச் சொல்லித்தரும்படி யமனிடம் பிடிவாதமாகக் கேட்கின்றான். நீங்கள் தருவதாகச் சொல்கின்ற எல்லாமே அழியக்கூடியவை. எனக்கு அவை தேவையில்லை. அவற்றையெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அழியாத நித்ய சுகத்தைத் தரக்கூடிய ஆத்மஞானத்தைப் பற்றிய விளக்கத்தைப் பெறவே நான் விரும்புகின்றேன். அந்த வரம் தான் எனக்கு வேண்டும் என்கிறான் அவன்இப்படிப்பட்ட உறுதியான மனநிலையில் தான் ஆன்ம சாதகர்கள் எப்போதும் நிற்க வேண்டும். புற இன்பங்கள் எல்லாமே நிலையற்றவை. அழியக்கூடியவை. ஆன்மாவில் நிலைபெறுவதே முக்திக்கு வழி.

தொடர்ந்தும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனைப் பார்த்து, “குந்தியின் மைந்தனே! புலன்களும் போகப்பொருள்களும் சேர்ந்து கிடைக்கச்செய்யும் அனுபவங்கள் எல்லாமே துன்பம் விளைவிப்பவை தாம். ஆரம்பமும் முடிவும் உள்ளவை தான். ஆகையால் அறிவுடையவன் இவற்றில் ஆர்வம் கொள்வதில்லை. இத்தகைய விஷயங்களில் ஈடுபடுவதில்லை. அனுபவிக்கவும் விரும்ப மாட்டான்” என்கிறார்.

இதை உணர்வது தான் ஞானம். நம் கர்மாவிற்கேற்ப நமது வாழ்க்கை அமைகிறது. அதில் வரும் உறவுத் தொடர்புகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்ற எல்லாமே நமது கர்மா கழிவதற்கும், வந்து சேர்பவர்களின் கர்மா நம்மோடு சேர்ந்து கழிக்கப்படுவதற்கும் தானே தவிர, அவற்றால் ஒருநாளும் உண்மையான இன்பம் கிடைப்பதில்லை. முதலில் இன்பமாகவும், சுகமாகவும் தெரிகின்ற ஒன்றே பிறிதொரு நிலையில் துன்பமாகவும், சுமையாகவும் ஆகிவிடுகின்றது. இது வாழ்வியல் உண்மை. ஆனால் இந்த உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. புலன்களின் வழியாகத்தான் இன்பங்கள் அனுபவிக்கப்படுகின்றன. இவை நிலையற்றவை. நிலையற்ற எதிலுமே ஞானம் அடைந்தவன் ஆர்வம் கொள்வதில்லை.

“எந்த ஒரு மனிதன் இந்த உடலை விட்டு நீங்கும் முன் தன்னைக் கட்டுப்படுத்திப் புலன் இன்பங்களிலிருந்து விடுபட்டு ஆசை, கோபம் இவற்றையும் கட்டுப்படுத்தித் தலை காட்டாமல் செய்துவிடுகிறானோ அவனே யோகியாவான். அவன் தான் தீரனான ஆண்மகன். அவன் இவ்வுலகில் வாழ்கின்றபோதே மகிழ்ச்சியுடனிருப்பான்.” – கீதை.

“ இப்படிக் காமக் குரோதம் முதலான கீழானவற்றின் தூண்டலிலிருந்து விடுபட்டு விடுவதால் அவனுக்குப் பரமாத்ம தத்துவத்தில் ஏற்படும் நித்திய சுகம் கிடைக்கிறது. அவன் அதில் லயித்து ஆனந்தமடைகிறான். அவன் ஞானத்தினால் தெளிவடைந்து, பிரம்மத்திலேயே கலந்து பிரம்மசொரூபமாகிறான். தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளேயே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளிபெற்றவனாகிய யோகி தானே பிரம்மமாய் பிரம்;மத்தை அடைகிறான்.” – கீதை

வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படுகின்ற பலவிதமான கஷ்டங்களுக்கும் மூலகாரணம் பிரம்மத்துடன் தனக்குள்ள உறவை ஒருவன் மறந்திருப்பதே ஆகும். பரமனுடன் தனது சம்பந்தத்தை உணர்ந்தவன் உடலால் வாழ்வுச் சிக்கல்களில் சிக்கித் துன்பப்பட்டாலும் கூட விடுதலை பெற்றவனேயாவான்.

“இருமைகளை இல்லாமற் செய்து தன்னைத் தானே கட்டுப்படுத்தி எல்லா உயிர்களுக்கும் நன்மை செய்வதில் மகிழ்ச்சி அடைகின்ற ரிஷிகள் பாவங்கள் ஒழிந்து பிரம்மபதத்தில் நிலைபெறுகின்றனர்.”

கீதை சொல்கின்ற இந்த நிலைதான் ஞானியரின் நிலை. இந்த நிலையில் இப்படிப்பட்டவர்கள் தம்மை உணர்ந்தவராய் தான் வேறு, இந்த உடல் வேறு என்றும், தான் வேறு இந்த வாழ்க்கை வேறு என்றும் அறிந்த நிலையில் ஆத்மாவோடு ஒன்றி, உலக விவகாரங்களில் பற்றின்றி ஒட்டியும் ஒட்டாமல், தாமரை இலையின் மீது விடப்பட்ட நீர் எப்படி அந்த இலையோடு ஒட்டாத நிலையில் நிற்கின்றதோ அதேபோல் செய்யவேண்டியவற்றை ஈஸ்வர சங்கல்பமாக நினைத்து செய்துகொண்டு, செய்கின்றபோதும் அந்த இறையுணர்விலேயே இருந்துகொண்டு, அனைத்தையுமே பிரம்ம ரூபமாகப் பார்த்து, அன்பு செலுத்தி அன்பு மயமாக வாழ்கின்றனர். இப்படிப்பட்ட உயர்ந்தோரால்தான் உலகம் நன்மை அடைகின்றது.

ஞானியரின் நிலைபற்றிக் கிருஷ்ணர் கூறியதைக் கேட்ட அர்ச்சுனன், எல்லோராலும் இந்த நிலையை அடைய முடியாதா? என்று கேட்கிறான். நம்முடைய கேள்வியும் அது தானே! துன்பச்சூழலில் சிக்கித் தவித்துத் தடுமாறிக் கொண்டிருக்கும் எம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட உயர்ந்த யோக நிலையை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எமக்குள்ளும் எழுகின்றதல்லவா? அதற்குரிய வழியைக் கண்ணனே காட்டித் தருகின்றார்.

“அர்ச்சுனா! சுத்த பிரம்மத்தை அடைந்தவர்களிடம் காமம், குரோதம் சிறிதும் இருக்காது. மனம் அவர்கள் வசமே இருக்கும் அவர்கள் சுய உண்மை நிலையை அறிந்தவர்கள். அவர்களை சாங்கிய யோகி என்பார்கள். அவர்கள் வாழும்போதும் இறந்த பிறகும் சுத்த நிர்வாணப் பிரம்மத்தை அடைந்தவர்கள் ஆவார்கள்.”

“அப்படிப்பட்ட நிலையைத் தியானத்தால் தான் பெற முடியும். வெளி விஷயங்களை வெளியிலேயே விட்டுவிட்டு, அதாவது எல்லாப் புலனின்பப் போகப் பொருள்களையும் துறந்துவிட்டுக் கண்களின் பார்வையைப் புருவங்களுக்கு இடையில் நிலை நிறுத்தி, நாசித்துவாரங்களில் சஞ்சரிக்கும் பிராணன், அபானன் என்னும் மூச்சுக்காற்றைச் சமானமாக்கி எல்லாப் புலன்களையும், மனத்தையும், புத்தியையும் தன் வசப்படுத்தி வைத்திருக்கும் சாதகர் ஆசை, பயம், குரோதம் முதலியவற்றைத் துறந்தவராகிறார். இந்நிலையிலேயே நிரந்தரமாய் இருப்பவர் நிச்சயமாய் விடுதலை அடைந்தவரே!”

இவை கண்ணன் வாக்கு. உலகத் துன்பங்களிலிருந்து விடுபடச் சரியான வழியைக் கண்ணன் இங்குக் காட்டித் தருகின்றார். இதற்கு முதல்படி ஆசையைத் துறத்தல். எல்லாவற்றிற்கும் ஆலாய்ப் பறக்காமல் உடலும் மனமும் முதலில் அடங்க வேண்டும். இதற்குக் கட்டாயம் குருவின் உதவி தேவை.

என்ன தான் வெளி விவகாரங்களை ஒதுக்கி சதா பூஜையும், பிரார்த்தனையும் மட்டும் செய்துகொண்டிருந்தாலும் தகுந்த பலன் கிடைக்காது. குருவின் உபதேசம் கிடைக்க வேண்டும். மனம் தூய்மை அடைந்து சரணாகதி செய்தவருக்கே குரு கிடைப்பார். அந்த குருவும் தகுதியுடையவராய், தன்னை உணர்ந்தவராய், பிரம்ம உணர்வில் நிலை பெற்றவராய், குரு பரம்பரையில் வந்தவராய், ஞான விளக்கை ஏந்தியவராய் இருத்தல் வேண்டும். தான் சொல்வது ஒன்று, செய்வது மற்றொன்று என்றிருப்பவரெல்லாம் உண்மையான குருவல்ல.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s