அக மாற்றம் தேவை புத்தக வெளியீடு நிகழ்வு : Apil 21,2012

திருமதி விஜயா ராமன் அவர்களின் புத்தக வெளியீட்டு நிகழ்வுத் தொகுப்பு

:: திருமதி ஹேமா ராகவன்/ உஷா முரளி::

இனிமையான மாலை நேரம். அருமையான வார முடிவின் ஒரு சனிக்கிழமை. கடந்த 21.04.12 அன்று ஸ்காபரோ எல்ஸ்மேர் வீதியில் 1967 இலக்கத்தில் உள்ள சென்டேனியல் பொழுதுபோக்கு மையத்தின் கலையரங்கில் திருமதி விஜயா ராமன் அவர்களின் அற்புதமான ‘ அகமாற்றம் தேவை’ எனும் புத்தக வெளியீட்டு விழா மிகவும் எளிமையான முறையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆவல்மிகு மனதுடன் அரங்கினுள் நுழைந்தோம்.

சிறுமி அனாமிகா சுந்தரின் இறைவணக்க ஸ்லோகமும், அடுத்து திருமதி இந்திரா சூர்யா அவர்களின் கடவுள் வணக்கப் பாடலும் காற்றில் கலந்து செவியை செம்மைப்படுத்தியது. அங்கு கூடியிருந்த தமிழ் மக்களின் கூட்டத்தில் மொழிப்பற்றும் ஆன்மீகப்பற்றும் வெளிப்பட மனம் குதூகலித்த வண்ணம் பொன்னான விழா நிகழ்ச்சியை எதிர்கொண்டு இருக்கையில் அமர்ந்தோம்.

முதலில் கண்களைக் கவர்ந்ததே மேடைக்குப் பின்னணியாக அமைத்திருந்த பேனரில் திருவள்ளுவரும், பாரதியாரும் பெருமையாக இடம் பெற்றிருந்தது விவரிக்க இயலாத புத்துணர்ச்சியைக் கொடுத்தது. அவர்கள் இருவரும் வளப்படுத்தி அறநெறி புகட்டிய வழியில் திருமதி விஜயாவின் அகமாற்றம் அவரது மனதை நெறிப்படுத்தி அனைவரின் வாழ்விற்கும் வழிகாட்டியாய் விளங்கக்கூடிய விதத்தில் ஒரு நல்ல நூலை வெளிப்படுத்த வைத்துள்ளது.

மேடையில் தவத்திரு ஸ்ரீ பரமாத்மானந்த ஸ்வாமிகள் அன்புடன் அமர்ந்திருந்தது எல்லோரையும் வழி நடத்த வந்தாற்போலிருந்தது. திருமதி விஜயா ராமன் அவர்கள் கனிவுமிகு கண்களால் அங்கிருந்த அனைவரையும் வரவேற்று புன்முறுவலுடன் வீற்றிருந்தது அவர் எழுதியுள்ள புத்தகத்தின் நல்ல கருத்துக்களைப் பறைசாற்றும் வண்ணம் இருந்தது.

வரவேற்புரை வழங்கிய எழுத்தாளரின் கணவர் திரு புதுவை இராமன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அவருக்கேற்றாற் போல் மிகப் பெருந்தன்மையுடன் ஆருயிர் மனையாளின் அருமைகளை எடுத்துரைத்து “ஜாடிக்கேற்ற மூடி என்பார்களே அதுபோல் மனைவியைப் புகழும் கணவர் – கணவர் புகழும் வண்ணம் வாழும் மனைவி” – இது ஒரு தெய்வீக அமைப்பு. இதைக் காணும் பாக்கியம் நாம் பெற்றோம்.

விழாவைத் தலைமை தாங்கி நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்த திருமதி கலாநிதி கௌசல்யா சுப்ரமணியன் அவர்கள் வெகு நேர்த்தியாக விழாவைத் தொடங்கி வைத்து எல்லோரையும் அன்புடன் வரவேற்று தன் உரையைத் தனிச்சிறப்புடன் ஆற்றினார். அவர் தனது தலைமையுரையில் ஆன்மீகம் என்பது அனைவரையும் நேசிக்கப் பழகுங்கள் என்ற உண்மையைத் தான் உணர்த்துகின்றது. அனைத்துமே பிரம்மம் என்பதை உணர்ந்தவர்களால் தான் அனைவரையும் நேசிக்க முடியும். இதை உணர்த்துவதுபோல் திருமதி விஜயா ராமன் அறம் சார்ந்த அம்சங்களையும், அன்பு சார்ந்த அம்சங்களையும் மிக அழகாக ஒன்று சேர்த்து அதோடு வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து எளிய நடையில் மிக அருமையாகக் கட்டுரைகளை அமைத்துத் தந்திருக்கின்றார். உளவியல், அறிவியல், ஆன்மீகக் கருத்துக்களை தம் குருவிடம் இருந்து பெற்ற ஞானத்தின் துணை கொண்டு எழுதி ஒரு சராசரி வாசகனும் மிக எளிதாகப் புரிந்துகொள்ளத்தக்க வகையில் இந்நூலை அவர் எழுதியிருக்கின்றார் என்று கூறினார்.

திருமதி கலாநிதி கௌசல்யா சுப்ரமணியன் அவர்களின் தலைமை உரை

இதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் ஆசியுரை வழங்க இருந்த சிவஸ்ரீ டாக்டர் சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள் வர இயலாமற் போனதால், அவரது ஆசியுரையினை திருமதி உமா முரளி அவர்கள் வாசித்தார்.

டாக்டர் சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்களின் ஆசியுரை

சிறப்பு விருந்தினரான ஸ்ரீபரமாத்மானந்த ஸ்வாமிகள் தனது உரையில் விஜயா ராமன் எனது ஆன்மீக வகுப்பிற்குச் சேர வந்தபோது இருந்த நிலையையும், இன்று அவர் திகழ்கின்ற விதத்தையும் நினைத்துப் பார்த்தேன். இன்று அவர் புடம்போட்ட நிலையில் விளங்குகின்றார். பாண்டிச்சேரியிலிருந்து அவர் கனடா வந்தபோது அவரிடம் சிறந்த தமிழறிவும் சமய அறிவும் நிரம்பியிருந்தது. இன்று வேதாந்த அறிவும் சேர்ந்துகொண்ட நிலையில், இந்து தர்மம் என்றால் என்ன என்பதை என் உபதேசங்களை உள்வாங்கி நன்கு பயின்று, விளங்கிக்கொண்டு அதைச் சரியான விதத்தில் தமிழ் சமூகத்திற்குக் கொண்டு சேர்க்கின்ற பணியினை இவர் செய்து கொண்டு வருகிறார். எனவே இவரை எனது முதலாவது சிஷ்யை என்று கூறுவதில் நான் பெருமைப்படுகின்றேன். நான் இதுவரை எழுதியுள்ள 17 நூல்களை வெளியிடுவதற்கு இவர் முதலில் கிரியா ஊக்கியாக செயல்பட்டிருக்கின்றார். எனது நூல்களில் சிலவற்றை இவர் தொகுத்து எழுதியிருக்கின்றார் என்று கூறிய அவர், தமது ஆன்மீக உரையை இவ்வாறு நிகழ்த்தினார்.

ஆன்மீகம் என்பது தெய்வத்துடன் மட்டும் தொடர்புடையது இல்லை. அது ஆன்மாவைப்பற்றி அறிந்துகொள்ளுதல் என்பதை அழகுற விளக்கினார். ஆன்மாவை முழுவதும் அறிந்தவர்க்கு சடங்குகள் கூடத் தேவை இல்லை. தம்மை அறிவது என்பது எளிதான காரியம் அன்று. அதற்கு நிறைய முயற்சி செய்ய வேண்டும். எல்லா உயிர்களிலும் இருப்பது ஒரே ஆன்மா தான் என்றுணரும் முதிர்ச்சி வந்துவிட்டால் எங்கும் பகைமை இருக்காது. அன்பு ஒன்றே எங்கும் வியாபித்திருக்கும்.

இன்றைய நிலையில் யார் முயன்றாலும் தமது ஞான, தியான முயற்சிகளால் அவர்கள் தங்களது கர்மாவை முற்றாக அழித்து விட முடியும். வரும் 13ம் தேதி வரை சூரியனின் சக்தி மேஷத்தில் இருக்கும் வரை யாராவது முழுமையான தியானம் செய்தால் அவரின் கர்மா அழியும் என்பது நிச்சயம். ஒளிக்கு எப்போதுமே தனி சக்தி உண்டு. தமிழர் வாழ்வில் ஒளிக்கு முக்கிய பங்கு உண்டு ஒளியை சூரியன் தான் வழங்குகின்றது. அந்த சூரியனின் மறுபதிப்புகள் தான் ‘நாம்’. நமது உடலமைப்பு கடைசியில் ஒளி நிலையை அடையும் விதத்தில் தான் அமைக்;கப்பட்டிருக்கிறது. அந்த நிலையை அடைவதற்காகப் பெறுகின்ற அறிவுதான் ஞானம். ஞானத்தின் மூலம் தான் ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்பதை உணர முடியும். இந்த நிலையை அடையும் வழிகளைத்தான் விஜயாராமன் மிக எளிமையாக இந்த அகமாற்றம் தேவை என்ற நூலில் விளக்கியிருக்கின்றார் எனக்கூறி தனது ஆசியுரையை நிறைவு செய்தார்.

அடுத்து ஸ்வர்ணா ஆனந்தராஜா மற்றும் மதுரா ஆனந்த ராஜா என்ற செல்விகள் அருமையாக இசை மழை பொழிந்து நம் செவியைக் குளுமைப்படுத்தினார்கள். “மைத்ரிம் பஜதே“ என்ற திருமதி எம்.எஸ் அவர்கள் ஐ.நா.சபையில் பாடிப் பிரபலப்படுத்திய அற்புதமான பாடலையும், ‘சாந்தி நிலவ வேண்டும்’ என்ற அமைதி விரும்பும் பாடலையும் வெகு நேர்த்தியாக பாவத்துடன் பாடி அனைவரையும் கவர்ந்துவிட்டார்கள்.

தொடர்ந்து அகமாற்றம் தேவை எனும் புத்தகத்தின் முதல் பாகத்தை விமர்சனம் செய்ய வந்த திருமதி புவனா கணேஷ் அவர்கள், சிரிப்பலைகளால் வந்திருந்தோரின் கவனத்தை எளிதாக ஈர்த்தார். புத்தகத்தின் முகப்பில் உள்ள தாமரை மொட்டைப் பற்றி குறிப்பிடுகையில், இந்த புத்தகத்தைப் படிக்கு முன் மொட்டாக இருக்கும் நம் மனம், படித்த பின் மலர்ந்த தாமரையாக விரிந்துவிடும் என்று தொடங்கினார். அன்றாடம் நம் வாழ்வில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளே கூட அகமாற்றத்தை ஏற்படுத்தவல்லன என்றார் அவர். அன்றாட வாழ்க்கையின் போக்கிற்கு ரசிப்புத் தன்மை மிக அவசியம். ரசிப்புத்தன்மையை இழந்தால் என்ன ஆகும்? என்ற பகுதியை விளக்கும்போது, டீ குடிக்கும்போது கூட நாம் பலவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதால், டீயின் சுவைகூட அறியாது, குடித்து முடித்தபின், நாம் இன்று டீ குடித்தோமா? இல்லையா! என்று குழம்பித் தவிக்கின்றோம். அதே போன்று, இந்த கால கட்டத்திற்கு சிறிதும் ஒவ்வாத ‘பூப்பெய்துதல்’ போன்ற சடங்குகள் தவிர்க்க வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டி, சிறு விஷயமானாலும் கவனம் தேவை என்று சில நிகழ்ச்சிகளால் விளக்கினார்.

பொதுவாக இங்கிருந்து சொந்த ஊர் செல்லும்போது ஏற்படும் நிகழ்வுதான். நாம் அன்புடன் கடை கடையாக அலைந்து பலவித அன்பளிப்புப் பொருட்களை பெட்டி கொள்ளாது வாங்;கி அடைத்துச்சென்று, அங்குள்ளவர்களுக்கு கொடுக்கும்போது, ‘இதையா வாங்கிட்டு வந்தே? இதைவிட சிறபப்பாக இங்கேயே கிடைக்குமே!’ என்று அவர்கள் கூறும்போது, நம் மனம் புழுங்கித்தானே போகும். அதே போல் நாம் அன்புடன் தான் செய்கிறோம் என்று நினைத்து, நாம் ஊரில் இல்லாபோது ‘வீட்டிலுள்ளவர்கள் உணவுக்கு சிரமப்படுவார்களே’ என்று நிறைய தோசைகள் செய்து, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அடைத்தால், அது எவருக்கும் பயன்படாது குப்பைத் தொட்டியைத் தான் சென்றடையும் போன்ற பல கருத்துக்களைக் கூறி சிறிய விஷயமானாலும் பெரிய செய்தியாகக் கூறும் விதத்தில் இந்நூலில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன என்றார்.

பொதுவாகவே பெண்களின் இயல்பு என்று கூறப்படும் பொறாமை, புறம் கூறுதல் முதலிய குணங்களை விட்டொழிக்கப் பெண்களுக்கு எப்படி அகமாற்றம் தேவையோ, அதே போன்று பெண்களைக் கொடுமைப்படுத்தாமல் அரவணைத்துச் செல்ல ஆண்களுக்கும் அகமாற்றம் தேவை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இவ்வாறாக இந்நூலின் பல பகுதிகளிலிருந்து நகைச்சுவையாக உரையாற்றிய திருமதி புவனா கணேஷ், அனைவரும் இந்நூலினை வாங்கிப் படித்து பயன்பெற வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டினார்.

புத்தகத்தின் இரண்டாவது பாகமான ‘யாம் பெற்ற இன்பம்’ என்ற பகுதியை அழகாக விமர்சனம் செய்தார் திருமதி கோதை அமுதன் அவர்கள். புத்தக முகப்பில் இருந்த தாமரை மொட்டைக்; காண்பித்து, இலங்கைத் தமிழர்களின் இதயம் வடிக்கும் இரத்தக் கண்ணீரை இந்த மலர் குறிப்பிடுவதாகவும், அதன் பசுமைப் பின்னணி தமது தாயகத்தை நினைவு படுத்துவதாகவும் கூறினார். அன்பினால் அந்த மொட்டான மனம் மலர வேண்டும் என்ற விளக்கம் கொடுத்தார்.. ஆசிரியர் ‘அன்பு’ என்பதையே கருவாகக் கொண்டு கட்டுரைகளை எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஒரு தாய், தன் குழந்தைக்குச் சோறுஊட்டுவதுபோல, நூலாசிரியர் அவர்கள் நல்ல கருத்துக்களை எல்லாம் நன்றாகப் பிசைந்து, குழைத்து நமக்கு அளித்துள்ளார் என்று தனது கருத்தை வெளியிட்டார். தனிமை இனிமையானது என்பதை, தியானம் செய்யும் ஆன்மீக சாதகர்கள் உணர்ந்துள்ளார்கள் என்பதையும், பொதுவாகவே நட்பு சூழ்ந்தே வாழ்ந்து பழக்கப்பட்டவர்களுக்கு, தனிமை இனிக்காது தான் என்று கூறி, வெய்யிலிலே சுற்றித் திரிந்தவனுக்கு, மர நிழல் எவ்வாறு இன்பம் தருமோ, அதுபோல எப்பொழுதும் மனச்சலிப்பில் உழன்றுகொண்டிருக்கும் நமக்கும் தனிமை என்பது ஆத்ம சுகத்தைத் தரும் என்றார்.

நான் செத்தால் சொர்க்கம் என்று பெரியோர்கள் கூறுவர் என்ற பகுதியைப் பற்றி விளக்கும்போது, இந்த உடலை நானாக எண்ணிச் செயல்படுகின்ற ஈகோ செத்த பிறகு நாம் வாழ்கின்ற வாழ்க்கை சொர்க்கம் என்பதை விளக்கினார். அன்பு, மனதின் மாசை அகற்றி, ஆன்மாவை உயர்த்தும், நிம்மதியை அளிக்கும். இவற்றையெல்லாம் தக்க முறையில் உரிய எடுத்துக்காட்டுகளுடன் எழுத்தாளர் உணர்த்தியிருப்பதை வெகு அழகாக நமக்கு ஆவலைத் தூண்டும் வண்ணம் இந்நூலில் உள்ளதைப் புகழ்ந்து பேசினார், ஆசிரியை திருமதி கோதை அமுதன்.

செவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று கேட்டிருக்கிறோம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் செவிக்கு உணவோ உணவு அறுசுவை உணவு! மற்றும் வயிற்றுக்கும் நிறைவளிக்கும் வண்ணம் சிற்றுண்டியும், தேனீரும் அளித்தது மட்டுமில்லாமல் அதையும் பார்த்துப் பார்த்துக் கருத்துடன் உபசரித்து தந்த விருந்தோம்பலில் ஒரு குடும்ப நிகழ்ச்சியின் அன்னியோன்னிய பாவம் தெரிந்தது.

நிகழ்ச்சியின் முக்கியமான அங்கமாகிய புத்தக வெளியீட்டை வெகு நல்ல முறையில் அமைத்திருந்தார்கள். திருமதி யோகாம்பாள் சுப்பிரமணியன் என்ற கனிவான ஒரு முதிய பெண்மணி நூலை வெளியிட, அதன் முதற் பிரதியை திருமதி சுசிலா ராகவன் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை திருமதி நாகமணி, திருமதி லலிதா புரூடி, திருமதி ராஜேஸ்வரி சுப்பிரமணியம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். நீடிய நல்ல வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கும் முதிர்ந்த பெண்மணிகள் ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கிய விதம் பெரும் பூரிப்பை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் நம் தமிழ் பாரம்பரியத்துடன் கூடிய மரியாதையும் வெளிப்பட்டு அதனால் சந்தோஷமும் நிறைவும் தொடர்ந்தன.

விழா முடிவில் அனைவரும் எழுத்தாளர் கையொப்பமிட்டுப் புத்தகத்தை வாங்கி சென்ற விதம் பெருமை தரத் தக்கதாய் இருந்தது. அவருடன் அனைவரும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தது அந்த சூழ்நிலைக்கு மிகப் பொருந்தி இயற்கையாகவும் ரம்யமாகவும் இருந்தது. விழாவிற்கு வந்திருந்தவர்களில் முதல்முறையாக சந்தித்துக் கொண்டவர்கள் கூட நெடுநாட்கள் பழகியவர்கள் போல் சரளமாகப் பேசிச் சிரித்துக் குதூகலித்தது மனதைத் தென்றலாய் வருடி லேசாக்கியது. மிக நல்ல முறையில் கழித்த இந்த மாலைப் பொழுது மனமென்ற புத்தகத்தில் நீங்கா இடம் பெற்றது. நிறைவான சந்தோஷத்துடன் எல்லோரிடமும் பிரியாவிடை பெற்று வெளியே வந்தோம்.

Photos from the function

Book release photos

இந்த நிகழ்ச்சி Youtube’-ல் : நன்றி முரளிதரன் (உமா)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s