மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -17

பற்றின்றி செயல்படுதல் என்னும் உணர்வு ஒரு பழக்கமாகவே ஓர் இந்துவின் வாழ்க்கை முறையில் பதிக்கப்பட்டிருக்கின்றது. நம் குடும்பக் காரியங்களை நினைத்துப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். நம் வீட்டுப் பெரியவர்கள் நமக்கு முக்கியமாக எதைப் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைச் சற்று யோசியுங்கள். ஒரு நல்ல குடும்பத்தில் உள்ளவர்கள் தாங்கள் எந்தச் செயலைச் செய்வதற்கு முன்னாலும், வீடு கட்டுவது, வியாபாரம் துவங்குவது, திருமணம் செய்வது, ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பது, என்று இப்படி எது என்றாலும் முதலில் என்ன செய்கின்றோம்? நன்கு குளித்து முழுகித் தூய்மையாகி நம் வீட்டுத் தெய்வத்தின் முன் நின்று கும்பிட்டுக் கண்மூடிப் பிரார்த்தனை செய்து, தான் செய்யப்போவதைச் சொல்லி அதற்குத் துணை செய்யும்படி வேண்டிப் பணிந்துவிட்டுத் தான் அந்தச் செயலைத் துவங்குகின்றோம் இல்லையா?

சிலர் எந்தச் செயலை செய்யும் முன்பும் இறைவனுக்கு ஒரு சின்ன பூஜை செய்து, தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி வணங்கி விட்டுத்தான் ஆரம்பிப்பார்கள். அதே போல, எதைப் புதிதாக வீட்டிற்குக் கொண்டு வந்தாலும் அதை சாமி அறையில் வைத்துக் கும்பிட்டுவிட்டுத்தான் எடுத்துப் பயன்படுத்துவார்கள். சற்றே கண் மூடி இப்படி என்னென்ன பழக்க வழக்கங்கள் நம் வீடுகளில் செய்யப்படுகின்றன என்று நினைத்துப் பாருங்கள், இதன் விரிவு தெரிய வரும். இதன் உட்பொருள் என்ன? இது உன்னுடையது. நான் எடுத்துச் செய்கிறேன் நீ பார்த்துக்கொள் அல்லது உதவி செய்! என்று செயலை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு ஆசையால் அலைவுறாமல் நேர்மையாகச் செயல்படுகின்ற தன்மையல்லவா?

வீட்டில் எது நடந்தாலும், துன்பமும், தோல்வியும், சோதனைகளும் தொடர்ந்து வந்தாலும் வீட்டிலுள்ள பெரியவர்கள், பதட்டப்படாதே! பொறுமையாய் இரு! எல்லாமே நல்லதிற்குத் தான். எல்லாம் அவன் செயல். அவன் பார்த்துப்பான்! என்று அந்த சுக துக்கங்களிலேயே நாம் மூழ்கிப் போய்விடாமல் தடுத்து இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வேலையைப் பாரப்பா! என்று நம்பிக்கை ஊட்டுவார்கள்.

இதிலுள்ள உண்மையைப் புரிந்து கொண்டவராய் வீட்டில் உள்ளவர்களும் அவற்றிலிருந்து விடுபட்டு, மீண்டும் சமநிலையில் செயல்படத் துவங்கிவிடுவார்கள். இப்படிப் பற்று இல்லாமல் இறையை நம்பிச் செயல்படுவதால் ஒர் இந்துவிற்கு மன அழுத்தமோ, மனச்சோர்வோ ஏற்படுவதில்லை. பயமோ, பழி வாங்கும் வெறியோ எழுவதில்லை. ஆனால் இந்நெறி பழகாதவராய் மனம் போன போக்கில் இறை சிந்தனையின்றி வாழ்பவர்களுக்கு மேற்குறித்தவை எல்லாமே ஏற்பட்டுவிடுகின்றன என்பதால் தான் “அர்ச்சுனா! தான் செய்கின்ற அனைத்துச் செயல்களையுமே இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல், யார் உலக விவகாரங்களில் ஈடுபடுகின்றாரோ அவர், தாமரையிலை மீது இருக்கின்ற தண்ணீர்போல், சகல பாபங்களிலும், கர்மாவிலும் சிக்காமல், சுய விருப்பு, வெறுப்பு இல்லாமல் வாழ்கிறார்.”

“மேலும் கர்மத்தை யோகமாகச் செய்பவர் ஆத்மாவோடு இணைந்து, அதன் தூய்மைக்காகவே செயலாற்றுகின்றார். அவர் தன் புலன்கள், உடல், உள்ளம், அறிவு இவற்றைத் தனதாக எண்ணி இவற்றின்மீது பற்றோ, கர்வமோ, ஏற்படுத்திக்கொள்ளாமல் இயல்பாகச் செயல்படுகிறார். அவர் செயல்களினால் ஏற்படுகின்ற பயனை ஆசையுடன் எதிர்ப்பார்ப்பதில்லை. எனவே அவருக்கு எந்த நிலையிலும் மாறாத நிம்மதி கிடைக்கின்றது.”

“ஆனால் இந்த நிலையில் இருந்து செயல் புரியாமல், பலனில் ஆசை கொண்டு செயலாற்றுபவர்கள் சம்சார பந்தத்தில் சிக்கி, உலகியல் கட்டுக்களில் கட்டுப்பட்டு உழல்கின்றார்கள்!” என்றெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் துறவின் தன்மையை மிக மேன்மையாக விளக்குகின்றார்.

கிருஷ்ணர் உரைத்த உண்மையை உணர்ந்து வாழ்வதற்காகத்தான் நம் முன்னோர்கள் முதல் காரியமாக இறைவனை வைத்தார்கள். ஒரேயொரு கடவுளை அவர்கள் காட்டித் தரவில்லை. அவரவரின் விருப்பத்திற்கேற்றபடி பலவித உருவங்கள். பார்க்கின்ற அனைத்தையுமே கடவுளாகப் பார்க்கச் சொல்லித் தந்து ஒன்றுபடுத்தினார்கள். விலங்குகளையும், பறவைகளையும் கூட பிரம்ம ஸ்வரூபமாகப் பார்த்து அவற்றிற்கும் தெய்வ வடிவம் தந்து வணங்குகின்றார்கள். ஓர் இந்துவிற்கு நதியும், கடலும்,மலையும், இயற்கையும் கூடத் தெய்வம் தான்.

ஆகையால்தான் நாம் பேதமின்றி எந்தக் கோயிலென்றாலும் அங்கு செல்கின்றோம். நம்பிக்கையுடன் பிரார்த்தனையைச் செலுத்துகின்றோம். எதைக் கண்டாலும், யாரைப் பார்த்தாலும் கை கூப்பிக் கும்பிடுகிறோம். அவன் கொடுத்தது! அவன் பிச்சை! அவன் அருள்! என்றே அனைத்தையும் ஏற்றுக்கொண்டு நன்றி செலுத்தும் விதமாகப் பலவிதப் பிரார்த்தனைகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றோம். எல்லாமாகிய பரம்பொருளுக்கு இவையெல்லாம் தேவையா? நம் அன்பின் வெளிப்பாடு அது!

இப்படி நினைத்துப் பழகி வாழ்வதுதான் பெறுவதைப் பிரசாதமாகப் பெற்றுத் தருவதைக் காணிக்கையாகச் செலுத்தி வாழ்கின்ற உயர்ந்த வாழ்க்கை. நம் பெரியவர்கள் பழக்கித்தந்த இந்தப் பாதையை விட்டு விலகி, ஆசை, சுயநலம், தற்பெருமை, பழைய நல்ல வழக்கங்களை அறவே கைவிட்ட நிலை, உடம்பையே உண்மையென்று நினைத்து வாழும் மேற்குலக நாகரீகத் தாக்கம் ஆகியவற்றில் சிக்கி இப்போது நிம்மதியிழந்த நிலையில் நோய்களும் அமைதியின்மையுமாக ஆடம்பரத்தில் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கிறது இன்றைய சமுதாயம்.

கண்ணன் கீதையில் குறிப்பிடுகின்ற மூன்று வகை யோகிகளில் ஒரு வகையினரான பக்தியோகி தன் அனைத்துச் செயல்களையும் பகவத் கைங்கர்யமாக நினைத்துப் பக்தி பூர்வமாக செயல்படுகின்றார். கர்மயோகி தான் செய்கின்ற செயல்களைப் பற்று நீக்கி யோகமாகப் பலனில் அக்கறையற்றவராய்க் கடமையாக நினைத்துச் செய்கின்றார். சாங்கிய யோகியான ஞானியோ எனில், இந்தப் பிறவி அவன் விருப்பத்தால் செயல்படுகின்றது. ஒன்பது துவாரங்களைக் கொண்ட இந்த சரீரம் தனக்குரியவற்றைத் தனக்கேற்ற விதத்தில் செய்து கொண்டு போகிறது என்று ஞானத்தால் உண்மையை உணர்ந்தவராய், நான் வேறு, இந்தச் சரீரம் வேறு என்று நிம்மதியாகத் தன் யோக நிலையில் நிலைத்திருக்கின்றார்.

பார்க்கப்போனால் மூன்று நிலைகளுமே ஒன்றுதான். பக்தியில் தோய்ந்து இறைவனுக்காக என்று செய்கின்ற பக்திநிலை, இது என் கடமை என்று செய்கின்ற கர்மநிலை , நான் எதுவுமே செய்யவில்லை, இது தான் செய்கிறது என்று செயல்படுகின்ற ஞான நிலை என்ற இந்த மூன்றிலுமே பற்று இல்லை, நான் என்னும் அகங்காரம் இல்லை என்பது கவனித்தால் தெரியும்.

சர்வ சக்தியும் எங்கும் நிறைந்திருப்பதுமாகிய பரம்பொருள் ஏதோ ஒரு காரணத்திற்காக, ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு கணத்தில் ஆத்மாவாகப் பிறப்பு எடுக்;கிறது. இப்படி எத்தனை எத்தனையோ பிறப்புகளை எடுத்தெடுத்து அறியாமையுடன் வாழ்ந்து கர்மாவை ஏற்றிக்கொள்கின்றது. கர்மப்பலன் ஜீவனுக்கே உரியது. ஆத்மனுக்குக் கர்மா கிடையாது.

ஒருவன் தன் பூர்வ புண்ணிய பலத்தால் ஒரு குருவைத் தேடி அடைந்து தன்;னைப் பற்றிய உண்மைகளை அறியும் வரை, வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும், அழிவிற்கும் காரணமாய் அமைந்த இந்த உடலையே தான் என்று எண்ணுகின்றான். ஐம்புலன்கள் சேர்ந்த இந்த உடல் அனுபவிக்க விரும்புபவற்றை அவன் அனுபவிக்கின்றான். இந்த அனுபவங்கள் அவனுக்கு நன்மை, தீமை ஆகிய இரண்டையும் அளிக்கின்றன.

இப்படி மனம் போன போக்கில் வாழ்கின்ற மனிதன், தன் இன்ப துன்பங்களுக்கு இறைவனே காரணம் என எண்ணுகின்றான். ஆனால் மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற எல்லா நிகழ்வுகளுக்கும் கடவுள் பொறுப்பல்ல. இநத மனித உடலாகிய ஆலயத்தின் நாயகன் அவன். ஆனால் வெறும் சாட்சியாக, தங்கியிருப்பவனாகவே அவன் இருக்கின்றான். அவன் அப்படி இருப்பது தெரியாமல்தான், மனிதன் தன் போக்கிற்கு ஆடி அலைக்கழிந்து அல்லற்பட்டு, அடிவாங்கி அடங்குகிறான். பொறுப்பற்ற வாழ்வின் போக்கிற்கு அவனது இயல்புதான் காரணமே தவிர இறைவனல்ல. கர்மப் பதிவால் ஜீவன் செயல்பட ஆத்மா ஆதார சக்தியை வழங்குகிறது. ஆத்மா என்பது இறைசக்தி.

வேதத்தில் சொல்லப்பட்டதாக ஒரு கிளிக்கதையை அடிக்கடி ஸ்வாமி விவேகானந்தர் தம் உரைகளில் கூறுவதை ஞானதீபம் என்னும் அவரது உரைகளின் தொகுப்பில் நான் படித்தேன். ஒரு ஜீவ விருட்சத்தில் இரண்டு கிளிகள் ஒன்றாக இருந்தன. இரண்டுமே தெய்வீக ஒளியால் சூழப்பட்டு தங்கமாக ஜொலித்துக்கொண்டிருந்தன.

அந்த மரத்தில் இனிய அருமையான சுவையுடன் கூடிய பழங்கள் நிறைய பழுத்திருந்தன. அவற்றைப் பார்த்த ஒரு கிளி மெதுவாகக் கிளைகளில் தாவிக் கீழே இறங்கி வந்து ஒரு பழத்தைப் பறித்து உண்டது. அதன் சுவை அதற்கு மிகவும் ருசித்தது. எனவே மேலும் பழம் தின்னவென்று இன்னும் கீழே இறங்கியது. இனிமை மிகுந்த பழங்களைத் தின்று ருசித்ததில் அது. தான் கீழே வந்துவிட்டதைக் கவனிக்கவில்லை.

இப்படி கிளி கீழே இறங்க இறங்க அதன் தெய்வீக ஒளி மங்கத் தொடங்கியது. பழத்தின் ருசியும், இனிப்பும், புளிப்பும், கசப்புமாக மாறி அமைந்தது. அப்போது தான் அந்தக் கிளி தன்னைப்பற்றி, எண்ணிப் பார்த்து, தன்னுடன் இருந்த ஜோடிக்கிளியை அண்ணாந்து பார்த்தது. அந்தக் கிளி மேலே அமைதியாக அமர்ந்து ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருந்தது. கீழே வந்த கிளி உடனே பறந்து சென்று அந்தக் கிளியை அடைந்தது. ஆனால் அதனால் அங்கேயே இருக்க முடியவில்லை. பழத்தின் சுவை அதை மீண்டும் இழுக்க, அது திரும்பத் திரும்பக் கீழே வருவதும், மேலே போவதுமாக அலை பாய்ந்தது. கடைசியில் ஆகக் கீழே வந்து விட்ட கிளி தன் சோபையை இழந்து, மேலே பறக்கவும் முடியாமல், புளிப்பும், கசப்புமாக மாறிவிட்ட பழங்களைத் தின்னவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அவஸ்தைப்பட்டது.. அப்பொழுதும் மேலே இருந்த தெய்வீகக் கிளி எந்தவித சலனமுமின்றி ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருந்தது.

இந்த நிலைதான் இன்றைய மனிதனின் நிலை. அறியாமை காரணமாக மனிதன் தனது உண்மையான தெய்வீகத் தன்மையை உணராமல் மயங்கிவிட்ட நிலையில், தனது செயல்களைத் தானே செய்வதாகவும் அச்செயலுக்குரிய பலனைத் தானே அனுபவிப்பதாகவும் நினைத்துக்கொள்கின்றான். இதன் விளைவாகப் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கிச் சுழன்று கொண்டிருக்கிறான். அவனது ஆத்மா இந்த விளையாட்டில் சிக்காமல் வெறும் சாட்சியாக மட்டும் இருக்கிறது என்கிறது கீதை.

ஆனால் தம்மை அறிந்தவர்களாகிய ஞானிகள் தமது விவேகத்தால் அஞ்ஞானத்தை அழித்துவிடுகிறார்கள். அறியாமை என்ற இருள் அகன்றதும் ஞானமாகிய ஒளி சுடர்விட்டுப் பிரகாசித்துப் பரமாத்மாவை அறிந்து கொள்ள உதவுகின்றது. மேலும் அப்படிப்பட்ட ஞானியருடைய அறிவும் உள்ளமும் பரமாத்மாவிடமே லயித்து விடுகின்றன. சிற்றின்பப் பாதையை விடுத்து அவர்கள் பேரின்பப் பாதையைத் தேர்ந்தெடுத்து விடுவதால் பரமானந்தத்தை அடைகின்றனர். இப்படிப் பரமாத்ம தத்துவத்திலேயே நிலைத்திருக்கின்ற அவர்கள் பரமாத்ம சாதகமாகிய ஞானத்தின் மூலமாகப் பாவ புண்ணியத் தளைகளிலிருந்து விடுபட்டுப் பரமாத்மாவையே அடைந்து விடுவதால் அவர்களுக்கு மறுபடியும் பிறவி ஏற்படுவதில்லை.

இப்படிப்பட்ட ஞானநிலையை ஒரு சாதாரண மனிதன் அடைய வேண்டுமானால் அவன் புறப்பொருள்களிலிருந்து தன் கவனத்தை அக முகமாகத் திருப்ப வேண்டும். தன்னை யார் என்று அறிவதற்கான தேடல் அவனுக்குள் எழ வேண்டும். இந்த நிலை ஏற்படாத வரை ஒருவன் உலக மாயையில் சிக்கிய நிலையில் தான் வாழ முடியும்.

ஞானத்தை அடைந்துவிட்ட நிலையில் ஞானிகள் சமதர்சிகளாக மாறி விடுகின்றனர். அவர்களின் பார்வையில் எல்லாமே ஒன்றாக, ஒரே பொருளாகத் தெரிகின்றது. அவர்களுக்கு உருவ வேறுபாடுகள் தெரிவதில்லை. உள்ளுக்குள்ளே உறைந்திருக்கும் பரப்பிரம்மமே அவர்களுக்குத் தென்படுகின்றது. பேத உணர்வு நீங்கியவர்களாய் அவர்கள் திகழ்கின்றனர். இதைக் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு இவ்வாறு தெளிவுறுத்துகின்றார். “அர்ச்சுனா! அறிவாளியும், தத்துவ ஞானியுமான மகா புருஷர்கள், கல்வியிலும், பண்பிலும் சிறந்து விளங்கும் பிராமணர்களிடமும், எந்தவித நாகரீகமுமே இல்லாத, நாயைத் தின்னுகின்ற சண்டாளனிடமும், பசு, யானை, நாய் முதலிய சகல பிராணிகளிடமும் சம நிலையுடன் பரமாத்ம தத்துவத்தைத் தரிசிக்கிறார்கள்” என்கிறார் அவர். இதுதான் சமதர்சி தத்துவம். இதுதான் அத்வைத தத்துவம்.

ஞானிகள் உருவத்தையும், குலம், குடிப்பிறப்பையும் வைத்து யாரோடும் தொடர்பு கொள்வதில்லை. உடலால் விளையும் வேற்றுமைகள் ஞானிகள் பார்வையில் பொருளற்றவையாகி விடுகின்றன. அந்தணன், புலையன், ஆகிய இருவரின் உடல், வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் போன்ற எல்லாமே முற்றிலும் மாறுபட்டவை. என்றாலும் ஞானி அவர்களின் உள்ளுறையும் இறைவனையே தரிசிப்பதால் அவருக்குப் புற வேற்றுமைகள் ஒரு பொருட்டல்ல.

அவதார புருஷராகிய ஆதி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் இதற்குத் தகுந்த விளக்கமாக வருகின்றது. அத்வைத தத்துவத்தை உலகில் நிலைநாட்டி, சீர் குலைந்து இருந்த இந்து மதத்திற்குப் புத்துயிர் ஊட்டிய ஸ்ரீ சங்கர பகவத் பாதர் ஒரு நாள் கங்கையில் நீராடிவிட்டு சீடர்கள் புடை சூழக் காசி விசுவநாதர் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது ஒரு புலையனும், புலைச்சியும், நமது ஆச்சார்யர் போகின்ற பாதையில் குறுக்கே வந்துவிட்டார்கள் துர்நாற்றத்துடன் தூய்மையின்றி, அழுக்கு உடையுடன், சடைபிடித்த தலையுடன், கொஞ்சமும் அடக்கமின்றி, போதாக்குறைக்குக் கையில் நான்கு நாய்களையும் கட்டி இழுத்துக்கொண்டு அவர்கள் எதிரில் வந்தனர். சங்கரரின் சீடர்கள் அவர்களிடம், “போ! போ! எட்டிப்போ! விலகி நில்” என்றெல்லாம் கூவினர்.

புலையன் சிரித்தான், “யார் விலக வேண்டும்? இந்த உடலா? அல்லது இந்த உடம்பிற்குள் இருக்கும் நானா? எல்லாமே ஒரு சத்தியமான கடவுளின் தோற்றமே என்கிறது உங்கள் அத்வைதம். அவ்வாறெனில் உங்களைப் போலவே நாய்களும் அதே சத்தியத்தின் தோற்றம் தான். உடல் நமக்கு வேறு வேறானாலும், உடலுக்குள்ளே இருக்கின்ற பரமாத்மா ஒருவர் தான். இந்த உடம்பைப் பற்றிய எண்ணத்தையே விலக்கிவிட்டுப் பரமாத்மாவாக இருக்க வேண்டும் என்றுதான் இந்த சுவாமி உபதேசிக்கிறார். அப்படியிருக்க உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போகவேண்டும் என்று நீங்கள் சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்பினுள் இருக்கும் ஒளியிலிருந்து எங்கள் உடம்பினுள் இருக்கும் ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால், அதுவும் சாத்தியமில்லை. ஏனெனில் இந்த ஒளி எல்லாமே ஒன்றுதான். அது தன்னை விட்டே தான் எப்படி விலக முடியும்?” என்று ஆணித்தரமாகக் கேட்டுவிட்டான் அந்தப் புலையன்.

சீடர்கள் திகைத்துப்போய் நின்றனர். சத்தியத்தையே தலையால் வணங்கும் ஸ்ரீ சங்கரர், இப்பேர்ப்பட்ட ஞான நிலையை அடைந்து பேசுபவர் புலையனாக இருக்க முடியாது என்று நினைத்துக் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அன்னையுமே நம்மை சோதிக்க இப்படி வந்திருக்கின்றனர் என்பதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ‘மனீஷா பஞ்சகம்’ என்ற அற்புதமான ஐந்து ஸ்லோகங்களைப் பாடினார். அடுத்த நொடியில் புலையன் நின்ற இடத்தில் விசுவநாதப் பெருமானே நின்றார். புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நான்கு வேதங்களாயின. “என் அம்சத்தைத் தாங்கி அவதரித்த சங்கரா! வாய்ப்பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல், வாழ்விலும் அதைப் பேதமின்றி நடத்திக் காட்ட வேண்டும் என்பதை உலகறியச் செய்யவே இந்த நாடகத்தை நடத்தினேன்! என்று கூறி ஆசி வழங்கி மறைந்தார் ஈசன்.! என்று ஸ்ரீ சங்கர விஜயம் என்ற நுhல் இதனை விவரி;க்கின்றது.

சங்கரரின் வாழ்வில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் கீதையில் சந்நியாச யோகம் என்ற அத்தியாயத்தில் 18வது ஸ்லோகத்திற்குத் தகுந்த விளக்கமாகத் திகழ்கின்றது. ஒரு நிலைக்கு மேல் உயர்ந்த பின், எல்லோருமே ஒரே பிரம்மத்தின் பல்வேறு தோற்றங்களே என்னும் சமநோக்கு ஏற்பட்டுவிட வேண்டும். உபநிஷத வகுப்பு நடைபெறுகின்றபோது எங்கள் குரு உபதேசத்தின் இடையில் நீங்களெல்லாம் என் கண்களுக்குத் தீபங்களாகத் தெரிகின்றீர்கள். உங்கள் உருவம் எனக்குத் தெரிவதில்லை! என அடிக்கடி கூறுவார்.

இப்படி மனம் சமநிலையில் நிற்கப் பழகியவர்கள் இவ்வுலகிலேயே இயற்கையை வென்றவர்களாய் வாழ்கின்றனர். இவ்வுலகில் நிறைகுறைகள், ஏற்றத் தாழ்வுகள், எந்த விதத்திலும் அவர்களைப் பாதிப்பதில்லை. அவர்களுக்கு ஆண்டியும் ஒன்றே, அரசனும் ஒன்றே. சாதி, மதம், இனம், நாடு மொழி, நிறம், தோற்றம் என்ற எந்த பேதமும் காணாத மிக உயர்ந்த மனிதம் அவர்களிடம் மலர்ந்து விடுகின்றது.

உடலோடு ஒன்றியதாகத் தன்னை எண்ணும் வரை ஆத்மா கட்டுப்பட்டதாகின்றது. ஆத்மாவை அறிந்து பேதம் நீங்கி, சமநிலை பெற்றவுடனேயே ஒரு ஜீவன் விடுதலையடைந்து விடுகின்றது. பிரம்மத்தில் நிலைபெற்றவராகி விடுவதால் அவர்கள் மாசற்றதும் சமநிலை உற்றதுமான பிரம்மத்தைப் போலவே குற்றமற்றவர்களாகி விடுகின்றனர்.

இத்தகைய சமத்துவ நிலையிலேயே தொடர்ந்து நீடித்திருக்க என்ன வழி கிருஷ்ணா?” என்ற அர்ச்சுனனின் வினாவிற்குக் கிருஷ்ணரின் பதில் இது தான். “விரும்பியவற்றை அடைவதால் மகிழ்வும், விரும்பாதவற்றை அடையும்போது துயரமும் கொள்ளாமல், சுய அறிவுடனும், மயங்காமலும், பிரம்மத்தை அறிந்தவராகவும் இருந்து அந்தப் பரமாத்மாவிடமே நிலைத்திருக்க வேண்டும்!”

Advertisements

2 thoughts on “மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -17

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s