மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -16

சந்யாசம் என்பது வெளி விஷயங்களையெல்லாம் மனதால் துறந்து விடுவது. எதைச் செய்தாலும் அதில் பற்று எதுவும் இன்றிச் செயல்படுவது. யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் என்று பொருள். ஒரு வகையில் பார்த்தால் சந்யாசமும், யோகமும் ஒன்று என்றே சொல்லலாம். தான் அல்லாத, ஐம்புலன்களுடன் கூடிய உடலையும், மனதையும், புத்தியையும் விட்டு விலகுதல் சந்நியாசம். தான் என்னும் உண்மையான நானில் அதாவது ஆத்மாவில் சென்று இணைவது யோகம். தான் அல்லாதவற்றிலிருந்து விலகுவது சந்நியாசம் என்றால், தானாகிய தன்னில் இணைவது யோகம். எனவே தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் “ செயலை யோகமாகச் செய்!” என்று கூறினார்.

ஆனால் கிருஷ்ணர் சொல்வது என்ன என்பது நம்மைப்போலவே அர்ச்சுனனுக்கும் புரியவில்லை. ஏனெனில் அர்ச்சுனன் நமது பிரதிநிதியாகத் தானே அங்கு பேசிக்கொண்டிருக்கிறான். அதனால் தான் அவன் கிருஷ்ணரிடம், “ பகவானே! நீங்கள் ஒரு சமயம் செயலைத் துறந்துவிடு என்று கூறுகிறீர்கள். மற்றொரு சமயம் கர்மாவை யோகமாகச் செய் என்கிறீர்கள். நான் எல்லாவற்றையும் துறந்து தவம் செய்யப் போவதாக சொன்னபோது, நீ செயல் புரியத்தான் வேண்டும் என்கிறீர்கள். எனக்கு எதுவும் புரியவில்லை. ஆகவே இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை, எது நிச்சயமாக நன்மையைத் தரக்கூடியதோ அதை எனக்கு எடுத்துச்சொல்லுங்கள்!” என்கிறான்.

நமக்கு வேண்டியதும் இதுதான். நமக்கு நன்மையைத் தரக்கூடியது எது என்பது நமக்கும் தெரிவதில்லை. ஆன்மீகத்தை நோக்கி நமது மனம் திரும்புகின்ற வரை வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன என்பது நமக்குத் தெரிவதில்லை. சாதாரணமாக, அறியாமையுடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கையின் நோக்கம் என்பது, புற உலகத்தில் உள்ள பல்வேறு சாதனைகளை அடைவதாகவே இருக்கிறது. உயர்ந்த கல்வி, நல்ல மனைவி-கணவன், நிறைந்த செல்வம், நன்மக்கட்பேறு, சமுதாயத்தில் நன் மதிப்பு, அழகான வீடு, விலை உயர்ந்த கார் என்று இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி அழியக்கூடிய பொருள்களின் மீது கொண்ட ஆசையால் செய்கின்ற முயற்சிகளும் அதற்கான தேடல்களுமே வாழ்க்கையின் லட்சியமாகத் தெரிகிறது. இது புலன் வழிச் செல்லும் வாழ்க்கை முறை. இந்த முறையால் நன்மை விளைவதில்லை. மாறாக இப்படி வாழ்கின்றவரை நமது செயல்கள் கர்மாவாக மாறிப் பதிவுகளாகிப் பிறவித் தொடர்பை வளரச் செய்யும்.

ஆன்மீகத்தை நோக்கித் திரும்பிய பிறகு, தான் யார்? என்ற உண்மையைக் குருவின் மூலம் அறிந்த பிறகு, இனி எனக்கு எதுவுமே வேண்டாம். என் கடமைகளைச் செய்ய எனக்கு விருப்பமில்லை. ஞானம் அடைந்து விட்டதால் இனி எதையும் நான் செய்யமாட்டேன் என்று கூறுவதும் சரியில்லை. ஏனெனில் தனக்குரியவற்றைச் செய்யாமல் யாரும் இருந்து விட முடியாது. உடல் இருகின்றவரை செயல்படத்தான் வேண்டும். சரியான பக்குவ நிலையும், இறையருளும் இருந்தாலன்றி யாருமே சும்மா இருந்துவிட முடியாது. இயற்கையும் அப்படி இருக்க விடாது.

செயல்படத்தான் வேண்டும். ஆனால் அப்படிச் செயல்படும் நிலையில் ஞானம் உதவ வேண்டும். ஞானத்தால் செயலை உணர்ந்து செயல்படுபவனே வாழ்க்கைச் சுழலிலிருந்து விடுபட்டவனாகிறான். எனவே தான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனன் கேட்ட கேள்விக்கு, துறவு, கர்மயோகம் இரண்டுமே உயர்ந்த நன்மையைத் தருபவை தான். இவற்றில் செயலைத் தொலைப்பதைக் காட்டிலும் அதாவது கர்மத் துறவை விட கர்மயோகமே சிறந்தது என்று பதில் கூறினார்.

மேலும் கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் “அர்ச்சுனா! யார், தான் செய்கின்ற செயல்களால் ஏற்படப் போகின்ற விளைவுகளைப் பற்றியோ, அதனால் கிடைக்கப்போகின்ற பலன்களைப் பற்றியோ எந்தவித விருப்பும் வெறுப்பும் இல்லாதவர்களாய், தன் செயல்களைக் கடமையாகக் கருதிச் செய்து வருகின்றார்களோ அவர்கள் இருமைகளிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். (இன்பம் துன்பம், மகிழ்ச்சி துயரம், வெற்றி தோல்வி போன்ற எதிரிடையான உணர்வுகள் இருமை எனப்படும்). அவர்களிடம் வேண்டாம் என்ற வெறுப்புணர்ச்சியும் இல்லை. வேண்டும் என்ற பெரு விருப்பமும் இல்லை. இப்படிப்பட்ட மனநிலையில் செயல்படுபவர்கள் பந்தங்களிலிருந்து விடுபடுகின்றனர்” என்றார்.

இந்த இடத்தில் ஒரு கதை ஞாபகத்திற்கு வருகிறது. சுவாமி சிவானந்த ஸரஸ்வதியிடம் ஒருவர் வந்து, ஸ்வாமி! நான் எத்தனையோ வருஷங்களாக இராமாயணக் கதையை ஊர் ஊராகப் போய் மிக அழகாக உருகி உருகிச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் ஸ்ரீ ராமபிரானைக் கண்குளிரத் தரிசிக்கும் பாக்கியம் கனவில் கூட அடியேனுக்கு வாய்க்கவில்லையே! என் பக்தியில் என்ன குறை இருக்கிறது ஸ்வாமி?” என்று வருத்தத்துடன் கேட்டார்.

அதற்கு சுவாமி சிவானந்தர், “நீங்கள் கதை சொல்கிறபோதே, கதை முடிந்தபிறகு எனக்கு என்ன சன்மானம் தருவார்கள்? எப்படியெல்லாம் என்னைப் புகழ்ந்து பேசுவார்கள்? என்று வரப்போகின்ற வருமானத்தையும் வெகுமானத்தையும் நினைத்துக்கொண்டே கதை பண்ணினால் பிறகு ராமர் எப்படி காட்சி கொடுப்பார்? சூர்ப்பனகையும், தாடகையும் வராமல் இருப்பதே பெரிய காரியம்!” என்று சொன்னாராம்.

நாமும் இப்படித்தானே! யாருக்கு எதைச் செய்தாலும் நமக்கு என்ன வரும்? என்ற நினைப்புடன் தானே செய்கின்றோம். இப்படிப்பட்ட எண்ணம் எழாமல் எதைச் செய்தாலும், இதைச் செய்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்ததே என்று மன நிறைவுடன் அச்செயலில் முழுமையாகத் தோய்ந்து இறை உணர்வுடன் செய்யப் பழக வேண்டும். செய்வது தான் நமது வேலையே தவிர, அதைப்பற்றிய பலாபலன்களை நோக்கிச் சிந்தனை போகக்கூடாது. இது தான் கர்மயோகத்தின் முழு விளக்கம். இப்படி விருப்பு வெறுப்பின்றிப் பரிபூரண மனநிறைவுடன், பலனைப் பற்றிய எண்ணமின்றிச் செயலை யோகமாகச் செய்பவனே உண்மையான சந்நியாசி.

கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால், புலன் வழிச் செல்லல் அழிவைத் தருவதேயன்றி வேறல்ல என்பதை ஞானத்தால் அறிந்து அதன் காரணமாகத் துறவை மேற்கொள்வது சந்நியாசம். இது ஞானம் என்று நாம் சொல்கின்ற சாங்கிய யோகம் ஆகும்.

பகவான் எனக்குள் இருந்து செயல்பட வைக்கிறான். நான் செய்பவற்றை எல்லாம் ஈஸ்வர அர்ப்பணமாக, இறைவனுக்குரிய சேவையாகச் செய்கிறேன் என்று இறைவனுடன் ஒன்றிய நிலையில் செயல்படுதல் கர்மயோகம். ஆகவே சாங்கிய யோகம், கர்மயோகம் இரண்டுமே வேறு வேறாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றுதான். ஆனால் இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். செயல்முறை வழியும், துறவு முறை வழியும் ஒன்றென்று அறிந்துகொள்பவனே உள்ளதை உள்ளபடி காண்பவனாகிறான்.

ஒன்று (உலக இன்பங்களைத்) துறந்து தன்னை உணர்தல். மற்றது (தன்னை) உணர்ந்து செயல்படுதல். இரண்டும் ஒன்றேயாகும். யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுவது கஷ்டம். அதாவது ஆத்மாவுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளாதவனால், நான் என்பது ஆத்மாவே! என்பதை அறிந்து செயல்படாதவனால் துறவியாக இருக்க முடியாது.

இது குழப்பத்தைத் தருவதாக இருக்கலாம். ஆனால் இதைக்கேட்டு வைத்துக் கொள்வோம். போகப்போக அதாவது ஆன்மீகத் தெளிவு நம்மில் வளர, வளர அதன் பொருள் புரியும். நாம் எத்தனையோ பிறவிகளை எடுத்த பிறகே இந்தப் பிறவியை எடுத்து வந்திருக்கிறோம். அப்படிப் பிறந்தும் தான் யாரென்ற உண்மையை அறியாமல்தான் வாழ்ந்துகொண்டிரு;கிறோம். இருந்தாலும் எத்தனையோ பிறவிகளாகச் செய்த முயற்சியின் பயனாகத்தான், தேடலின் விளைவாகத்தான் இந்தப் பிறவியில் ஒரு குருவைச் சேர்ந்து, அவர் அருகிலிருந்து ஞானம் பெற முடிந்தது. உண்மையான உண்மை என்ன என்பதை ஓரளவிற்கேனும் புரிந்து கொள்ள முடிந்தது.

நாம் காலம் காலமாகச் செய்து வந்தவற்றைத் தான் இப்போதும் இதுவரை செய்து கொண்டிருந்தோம். ஆனால் ஞானம் பெற்ற பிறகு தான் நித்ய, அநித்ய வஸ்துக்களைப் பற்றிய அறிவு நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை அழியக்கூடிய விஷயங்களை உண்மை என்று நம்பிக்கொண்டு அறியாமையுடன் ஆசை, சுயநலம், விருப்பு, வெறுப்பு என்று எதை எதையோ பிடித்துக்கொண்டு அதன் அடிப்படையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் செயல்பட்டிருக்கின்றோம்.

அதனால் தான் இதுவரை நம்மை, நான் செய்கிறேன்! என்ற அகங்காரமும், இது என்னுடையது! என்ற மமகாரமும் (மமதை) பிடித்து இயக்கிக்கொண்டிருந்தன. இவைகளின் பிடியில் சிக்கிய நிலையில் நமது செயல்களால் நமக்கு இன்ப துன்பங்கள், வெற்றி தோல்விகள், மான அவமானங்கள், லாப நஷ்டங்கள் போன்ற இரட்டைகள் மாறி மாறி ஏற்பட்டன.

இப்பொழுது நான் யார்? என்னைப்பற்றிய உண்மை என்ன? என்ற ஞானம் ஏற்பட்டவுடன், நாம் செயல்படும் தன்மையும், மாறி விட வேண்டும். அதாவது நான் யார்? நான் ஆத்மா. என்னைப் பற்றிய உண்மை என்ன? இந்தப் பிறவி நானல்ல. சுத்த சைதன்யமாகிய கடலில் ஓர் அலையே நான்! என் முற்பிறவிக் கர்மப் பயனாய் இந்தப் பிறவி எனக்கு வாய்த்திருக்கிறது. இது பிரம்ம விருப்பம்.

இப்படி இதைப் புரிந்துகொண்டு, ஆத்மாவாகிய நான் இப்பிறவியின் கடமைகளைப் பற்றின்றிச் செய்வேன் என்று செயலை நாம் யோகமாகச் செய்கின்றபோது, அந்த யோகத்தால் சந்நியாசியாக மாறுகின்றோம். இப்படி செயல்படுபவன் படிப்படியாக உயர் நிலையை அடைந்து, விரைவில் பிரம்மத்தை அடைகின்றான். இந்நிலை பற்றிக் கீதை இவ்வாறு உரைக்கின்றது.

“கர்மாவை யோகமாகச் செய்பவன் மனத்தூய்மை அடைகின்றான். அவன் விருப்பு வெறுப்பின்றி, பலனில் ஆசையின்றிக் கருத்துடன் செயல் புரிவதால் புலன்களின் வழிச் செல்வதில்லை. தன்னை வென்றவனாக, அன்பு கொண்ட உள்ளத்துடன், எல்லா உயிர்களையுமே தானாகக் கருதி அவன் உலக நன்மைக்காகவே செயல்படுகின்றான்”

“ஐம்புலன்களையும் அடக்கி வென்றவனாய், அப்பழுக்கில்லாத மனப்போக்குடன், உடலையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துச் செயல்படுகின்ற இப்படிப்பட்டவன் எல்லாப் பிராணிகளிடமும் தன்னையே பார்த்து அனைத்திலும் அன்பு செலுத்துகிறான். இப்படிப்பட்;ட கர்மயோகி செயல்புரிந்து வந்தாலும், செயலின் ஆசாபாசங்களில் சிக்குவதில்லை. அதோடு அந்த கர்மயோகி பரமாத்ம நிலையை அடைகின்றான்.”

ஓர் ஆன்ம சாதகன் ஆன்மீகப் பயிற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றபோது, இறையருளாலும், குருவின் கருணையாலும் ஐம்புலன்கள் அவனது மனதை வெளியில் இழுத்துத் திரிய வைப்பதில் தோல்வியடைகின்றன. ஞான உபதேசத்தால் மனம் அடங்குகின்றது. மனம் அடங்கிய நிலையில் புலன்கள் செயல்படுவதில்லை. ஐம்புலன்களும் அந்தந்த இடத்தில் செயலற்று இருக்கப் பழகுகின்றன. இந்நிலையில் அந்த ஐம்புலன்களும் மனதில் ஒடுங்குகின்றன. மனம் புத்தியில் ஒடுங்குகின்றது. புத்தி ஆத்மாவில் ஒடுங்குகின்றது. இப்படி மனமும், புத்தியும் அடங்குவதால் ஆத்ம ஒளி பிரகாசிக்கின்றது. இது ஞானத்தால் ஏற்படுகின்ற தெளிவு.

இந்த உண்மையை உணர்ந்த யோகி, நான் எதையுமே செய்வதில்லை என்பதை விளங்கிக்கொள்கிறார். இந்நிலையில் அவர் ஞானியாய் உலகியல் வாழ்வில் ஈடுபட்டு, ஐம்புலன்களின் செயல்களில் பங்கு கொள்கிறார். அவர் பார்த்தல், கேட்டல், தொடுதல், நுகர்தல், சாப்பிடுதல், நடத்தல், உறங்குதல், சுவாசித்தல், பேசுதல், மலஜலம் கழித்தல், பெறுதல், இமைத்தல் என்று எல்லாச் செயல்களையும் செய்தாலும், இவற்றைப் புலன்கள் செய்கின்றன, நான் செய்யவில்லை என்று உணர்ந்துகொண்டு, செயல்களுக்குக் கட்டுப்படாமல், ஆசாபாசங்களுக்கு அடிமையாகாமல் வாழ்கிறார்.

பார்க்கப்போனால் ஒரு வகையில் நாம் எல்லோருமே சந்நியாசிகள் தான், நமக்குப் பிடிக்காத விஷயத்தை நாம் வெகு சுலபமாக விட்டு விடுகிறோம். அது எனக்குப் பிடிக்காது. இது எனக்கு வேண்டாம். ஐயோ! நான் இதைத் தொடவே மாட்டேன்! என்றெல்லாம் எத்தனையோ சங்கதிகளை ஒதுக்கிக் தள்ளி விடுகிறோம். பிடித்தது என்றால் எடுத்து எடுத்து வைத்துக்கொள்கிறோம். பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றோம். இது ராகத் துவேஷத்தால் வரும் துறவு நிலை.

ரமணபக்தரான நொச்சூர் வெங்கட்ராமன் என்பவர், ஓர் ஆத்ம போதகர். ஒரு வேதாந்தி. அவர் தன் உபன்யாசத்தில் அடிக்கடி சொல்கின்ற உண்மைச் சம்பவம் இது. திருவண்ணாமலையில் தன் ஆசிரமத்தில் ரமண மகரிஷி பக்தர்கள் சூழ அமர்ந்திருந்தபோது, யாரோ ஒரு பக்தர் தட்டு நிறைய மாம்பழங்களை அடுக்கி அங்கு எடுத்துக்கொண்டு வந்தார். அவர் அப்படிக் கொண்டு வருகின்றபோதே, அங்கு ஒரு மரத்தில் இருந்த ஆண் குரங்கு ஒன்று சட்டென்று தாவி இரண்டு மாம்பழங்களை மிக சாமர்த்தியமாக எடுத்துக்கொண்டு ஓடி விட்டது. பதட்டமடைந்த பக்தர் பிறகு ஒருவழியாக அமைதியாகிப் பழத்தட்டைக் கொண்டு வந்து, சத்சங்கம் நடந்து கொண்டிருந்தபடியால், ஒரு பக்கமாகத் தட்டை வைத்துவிட்டு உட்கார்ந்தார்.

சத்சங்கம் தொடர்ந்தது. சிறிது நேரம் சென்றது. அப்பொழுது தன் வயிற்றைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்த குட்டியுடன் ஒரு தாய்குரங்கு மெதுவாக அங்கு வந்து தட்டிலிருந்த பழத்தை எடுக்க முயற்சி செய்தது. ரமணாஸ்ரமத்தில் பிராணிகளுக்குப் பஞ்சமில்லை. சகல விதமான பிராணிகளும் அந்த அன்புச் சூழ்நிலையில் சுதந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கும். அவை ரமணருக்குப் பக்கத்தில் பயமேதுமின்றி வந்து அவர் தருவதை வாங்கிக்கொண்டு போகும். அவரும் அவற்றிடம் அன்பைப் பொழிவார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அந்தக் குரங்கு தன் குட்டியுடன் பழத்திற்காக வந்தது.

அந்த சத்சங்கத்தில் சந்நியாசிகள் பலர் அமர்ந்திருந்தனர். காவி உடை தரித்த அவர்களில் சிலர் குரங்கு பழத்தை எடுக்கப்போவதைப் பார்த்தவுடன் சட்டென்று கையை ஓங்கி அதை விரட்டினர். அதோடு ஒருவர் பழத்தட்டை உள் அறைக்குக் கொண்டு வைக்கவும் முற்பட்டார். ரமண மகரிஷி இதைக் கவனித்துவிட்டார்.

சாந்தஸ்வரூபியாகிய அவர் சட்டென்று குரலை உயர்த்தி, “பேஷ்! பேஷ்! நாமெல்லாம் சந்நியாசிகள். ஆனால் உண்மையான சந்நியாசி வரும்போது அவரை விரட்டுகின்ற சந்நியாசிகள் போல இருக்கு. பாவம் அவள்! அவளுக்கென்று வீடு, வாசல் ஏதாவது இருக்கா? ஒரு மரத்திலே ஒண்டி வாழ்ந்திண்டிருக்கா. நாளைக்கு வேணுமென்று அவ எதையாவது சேர்த்து வைத்திருக்கிறாளா? தன் குட்டியையே கூடத் தன் வயிற்றிலேயே அள்ளி வெச்சிண்டு, அங்கேயும் இங்கேயுமா அலைஞ்சு திரியறா. இப்படிப்பட்ட உண்மையான சந்நியாசி, தன் வயித்துப் பசிக்காகப் பழத்தை எடுக்க வர்றபோது, அதை எடுக்க விடாம அவளை விரட்டி விட்டு அந்தப் பழத்தை நாளைக்கு வேணுமென்று உள்ளே கொண்டுபோய்ப் பத்திரப்படுத்தற நாம தான் சரியான சந்நியாசிகள்!” என்று சொன்னார்.

பழத்தட்டை எடுத்தவர் வெட்கிப்போய் அதனை ரமணரின் அருகிலேயே கொண்டு வந்து வைத்துவிட்டார். ஓடிப்போய் சற்று தூரத்தில் பயத்துடன் நின்ற தாய்க் குரங்கைப் பார்த்து ரமணர் மிருதுவாக, “வாம்மா! வா! ஒருத்தரும் ஒண்ணும் பண்ணமாட்டா! பயப்படாம நீ வா! வா, வந்து இந்தப் பழத்தை எடுத்துக்கோ! என்று பல முறை அன்போடு கூப்பிட்டார். அந்தத் தாய்க் குரங்கு கண்களில் மிரட்சியுடன் பயந்து பயந்து மிக மெதுவாக நடந்து வந்து தட்டிலிருந்த மாம்பழங்களில் ஒரேயொரு பழத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டது.

“பார்த்தீர்களா! அவ இப்ப இந்தத் தட்டையே தூக்கிண்டு போயிருக்கலாம். ஆனா அவ தன் பசிக்காக ஒரேயொரு பழத்தை மட்டும் எடுத்து, உங்க முகத்தில் எல்லாம் கரியைத் தேய்ச்சிட்டுப் போயிட்டா!” என்று ரமணர் கூறினார். அவர் சொன்னதன் உட்கருத்தைப் புரிந்துகொண்டு விட்ட பக்தர்கள் வெட்கத்தால் தலை குனிந்தனர்.

இங்கு ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் சந்நியாசிகளுக்கும் கூட ஆசை இருக்கும். உண்மையான துறவியெனில் மனதை விட்டு ஆசை அறவே போய்விட வேண்டும். பற்று என்பதே இருக்கக்கூடாது. ஈசனோடு என்றாலும் கூட ஆசை அறுமின்! என்று பாடியிருக்கின்றனர். அப்படிப்பட்ட பற்றறுத்த மனதில் தான் உண்மையான உலக அன்பு மலரும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துகின்ற இறைநிலைப் பண்பு வரும். அப்படிப்பட்டவர்களைத் தான் எல்லோரும் தேடிச் சென்று பழகுவார்கள். விரும்பி அன்பு செலுத்துவார்கள். இந்த உண்மையைத் தான் இந்த அத்தியாயத்தில் 8வது ஸ்லோகமாகக் கண்ணன் விளக்கியிருக்கின்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s