மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -15

ஒருவரது ஆத்மாவைத் திறக்கின்ற மந்திரசக்தி குருவிற்கு மட்டுமே இருக்கிறது. உடலை ஒதுக்கி, மனதிலிருந்து, அறிவிலிருந்து, ஆன்மீகத் தளத்திலிருந்து நமது ஆத்மாவைத் திறந்து அந்தப் பிரம்மத்துடன் நம்மை இணைய வைக்க குரு ஒருவரால் மட்டுமே முடியும். இப்படி அவர் திறந்தால் தான் எங்கும் எல்லாமாய்ப் பரந்து நிறைந்திருக்கின்ற பரமாத்மாவோடு பரவெளியில் நாம் கலக்க முடியும். அந்தப் பரவெளி, நமக்குள்ளேயே தான் இருக்கிறது என்ற உண்மையை உணர முடியும். குருவின் சக்தி என்னவென்று புரிகிறதா?

எனவே வெளிப்புறச் சடங்குகளால் செய்யப்படுகின்ற அனேக விதமான யாகங்களைக் காட்டிலும் ஞானயக்ஞம் மிகச் சிறந்தது. ஏனெனில் ஞானம் பெற்ற பிறகு தான் கர்ம பந்தம் அறுபடுகின்றது. இந்த ஞானவேள்வியைச் செய்வதற்கு உயரிய குரு வேண்டும். அந்த குரு ஆழ்ந்த சாஸ்திர அறிவு பெற்றவராகவும், பிரம்மத்துடன் முழுமையாகக் கலந்த பூரண உணர்வு பெற்றவராகவும் இருந்தால் தான் வேள்வி பூரணமாக நடைபெறும்.

இத்தகைய உண்மையான ஞான குருவை வணக்கத்துடனும், பணிவுடனும் அணுகி, அவருக்கு உயரிய தொண்டு புரிந்து, ஆழ்ந்த கவனத்துடன் அவரது உபதேசத்தைக் கேட்டு, அதைத் திரும்பத் திரும்பச் சிந்தித்து, உள்வாங்கி, அப்படிப் புரிந்துகொண்டதைத் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் சீடன் இடையறாது ஈடுபட வேண்டும்.

நான் அறிகின்றவற்றை அறியச் செய்பவன் யார் என்பதை நான் எப்பொழுது அறிகின்றேனோ அப்பொழுது எனது தேடல் அங்கு முடிகிறது. அறிபவனை நீ அறிய வேண்டும் என்னும் அரிய கருத்தினை நமது சனாதன தர்மம் தான் கூறியிருக்கிறதே தவிர, வேறு எந்த வித மதமும் இப்படிச் சொல்லவில்லை.

“இந்த ஞானத்தை நீ அடைந்துவிட்டால் அர்ச்சுனா! பிறகு நீ இவ்வித மயக்கத்தில் மூழ்கித் தடுமாற மாட்டாய். இப்படிச் செய்யலாமா, அப்படிச் செய்யலாமா என்ற தயக்கம் பிறகு உனக்குள் எழாது. மாறாக இதனால் நீ எல்லா உயிர்களையும் உனக்குள்ளேயே காண்பாய்! அதன் மூலம் அவற்றையெல்லாம் என்னுள்ளேயும் காண்பாய்!” என்றார் கிருஷ்ணர். இது கிருஷ்ணர் நமக்குத் தரும் உறுதி. ஞான யக்ஞத்தின் உயர்வும் சிறப்பும் இதை விட வேறு என்னவாக இருக்க முடியும்?

இந்த ஞானத்தைப் பெறுவதன் மூலம் அதாவது செயலை யோகமாகச் செய்வதன் மூலம் எத்தனையோ பிறவிகளில் எத்தனையோ பாவங்களைப் புரிந்தவனாக இருந்தாலும் அப்பாவத்தையெல்லாம் ஞானமெனும் தோணியால் ஒருவன் கடந்து செல்ல முடியும். இந்த ஞானத்தீ எல்லா வினைகளையுமே, நன்றாக எரிகின்ற நெருப்பானது விறகுகளை எரித்துச் சாம்பலாக்கி விடுவதைப்போல, எரித்து சாம்பலாக்கிவிடும், அதாவது இல்லாமற் செய்து விடும்.

ஞானத்தைப் போல் தூய்மை தரும் வேறு சாதனம் இவ்வுலகில் எதுவுமில்லை. பற்றறுத்துப் பலனில் எதிர்பார்ப்பு இன்றிக் கர்மத்தை யோகமாகச் செய்பவன் உயர் உணர்வு நிலையை அடைந்து, தானாகவே தக்க பருவத்தில் இந்த ஞானத்தைத் தனக்குள் அடைகின்றான்.

சர்வம் பிரம்ம மயம் என்று அனைத்தையும் ஒன்றாகப் புரிந்து கொண்டு புலன்களைக் கட்டுபடுத்தியவனாய், சிரத்தையுள்ளவன் ஞானத்தை அடைகின்றான். இந்த ஞானத்தை அடைந்தவன் விரைவில் பரிபூரண அமைதித் தன்மையை பெறுகின்றான்.

மாறாக இந்த விஷயத்தை நம்பாமல் சந்தேகப்படுபவன், அறிவை நம்பாமல், இதை அறிந்து கொள்வதற்கு சிரத்தையுமில்லாமல் ஐயத்தையே இயல்பாகக் கொண்டவன் அழிந்து போகின்றான். சந்தேகப்படுபவர்களால் இவ்வுலகத்திலும் நிம்மதியாக வாழ முடியாது, மேலுலகையும் அடைய முடியாது. இன்பமென்பது கிடைக்காது.

“யோகத்தால் செயல்களைத் துறந்து, ஞானத்தால் சந்தேகம் நீங்கப் பெற்றுத் தன்னைத் தான் ஆள்பவனைத், தனஞ்சயா! கர்மங்கள் கட்டுப்படுத்தமாட்டா! ஆகவே உன் மனதில் அறியாமையால் எழுந்து நிலை கொண்டிருக்கும் ஆயிரம் கேள்விகளை உன் ஞான வாளினால் அறுத்து எறிந்துவிட்டு யோக நிலையில் நின்று செயல்படுவாய்!”

இவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் தன் பிரியத்திற்குரிய பக்தனான அர்ச்சுனனுக்கு உபதேசித்தது, பகவத் கீதையின் ஞான கர்ம சந்யாச யோகம் என்னும் நான்காம் அத்தியாயமாக ஒளி வீசிக் கொண்டிருக்கிறது.

இனி செயலை யோகமாகச் செய்வோம்!

சந்நியாச யோகம்:

கீதாச்சாரியனான கண்ணன் மனிதன் மிகச்சரியாக யோகதர்மத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், அப்படிச் சரியாக அவன் புரிந்துகொண்டால்தான் மாயையிலிருந்து அவனால் விடுபட முடியும் என்பதற்காகத்தானோ என்னவோ கீதையில் முதலில் ஞானத்தைப் பற்றி விளக்குகிறார். அதனை அடுத்துக் கர்மாவைப் பற்றித் தெளிவாக உரைக்கின்றார். அதைத் தொடர்ந்து ஞானத்துடன் கர்மாவை எவ்வாறு பற்று இல்லாமல் செய்யவேண்டும் என்பதை விவரிக்கின்றார். அதற்கும் மேலாகப் பற்றின்மை என்றால் என்ன என்பதை இப்போது விளக்க முற்படுகின்றார்.

சந்நியாச யோகம் என்றவுடன் நமக்குள் பயம் ஏற்படும். பக்தியும், மரியாதையும் கலந்த உணர்வு உண்டாகும். நம்மை விட வேறுபட்ட ஒரு நிலை என்ற எண்ணம் ஏற்படும். காவி உடையும், ஜடா முடியும், கமண்டலமும் மனக்கண்ணில் தோன்றும். ஆனால் நம் கற்பனையில் தோன்றுகின்ற இந்தக் கருத்துக்களெல்லாம் சந்நியாசம் என்ற சொல்லின் உண்மையான பொருள் அல்ல.

சந்நியாசம் என்பது துறத்தல் அல்லது விட்டு விலகுவது என்று பொருள்படும். ‘ந்யாஸ’ என்றால் தியாகம் செய்வது என்று பொருள். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்துகொண்டு தான் வருகிறோம். சம்ந்யாஸ என்றால் முழுவதையும் தியாகம் செய்பவர் என்று பொருள். இந்த உலக விஷயங்கள் அனைத்தையும் துறந்து விடுவது சந்நியாசமல்ல. அப்படி அனைத்தையும் துறப்பதென்பது சாத்தியமானதும் அல்ல.

துறவி என்று சொல்லிக் கொள்பவர்கள் கூடப் பார்க்கப்போனால் எதையுமே துறப்பதில்லை என்பது இப்போது அடிக்கடி நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. தாடி வளர்த்தவரோ, காவி உடுத்தவரோ துறவியல்ல. உண்மையான துறவி என்பது தோற்றத்தாலோ செய்கையாலோ தெரிவதல்ல. தன்னை அறிந்தவராய், தன்னில் தோய்ந்தவராய், செய்பவை எல்லாமே செய்விக்கப்படுபவை என்பதை உணர்ந்துகொண்டு விட்ட ஞான நிலையில், செயலிலே ஆசையின்றி, அச்செயலுக்கான பலனிலும் எதிர்பார்ப்பு எதுவுமின்றி, நடுநிலை மன நிலையில் இருந்து செய்துகொண்டு போகின்றவரே உண்மையான துறவியாவார்.

தண்ணியைக் நம் நாட்டில் குரங்காட்டி ஒருவன் வீதியில் ஒரு குரங்கை வைத்துக்கொண்டு வித்தைகள் காட்டிக் காசு கேட்பான். அந்தக் குரங்கு செய்வதை வேடிக்கை பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அந்தக் குரங்கு தான் செய்பவற்றோடு தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாதது போல் குரங்காட்டி சொல்வதைக் கடனே! என்பதுபோல் செய்யும். அத்தைக்கு தண்ணிக்குடம் தூக்கடா ராமா! என்று குரங்காட்டி சொன்னவுடன் ஒரு சின்ன சொம்பைத் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளும். நடடா, ராமா! என்று கயிற்றைச் சுண்டினால் அங்கும் இங்கும் சிறிது நடக்கும். குடுடா ராமா! என்றவுடன் செம்பைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விடும். இதைப்போல் ஒவ்வொன்றையும் அது செய்யும்போது, குரங்காட்டியின் கட்டளை, குரங்கின் செயலாக வெளிப்படுமே தவிர. குரங்கு தானாகச் செய்வதாக எதுவுமே இருக்காது. இது தான் சந்நியாசம். அதற்குச் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. எஜமான் சொல்கிறானே என்பதற்காக அது செய்கிறது. அவ்வளவுதான். அடிக்குப் பயந்துகொண்டு செய்கிறது, ஆகாரத்தின் மீது விருப்பம்; வைத்து செய்கிறது என்ற வாதமெல்லாம் இங்குத் தேவையில்லை. அவன் சொல்வதை அப்படியே செய்துவிட்டு ஓரமாகப் போய் உட்கார்ந்து விடுகிறது அல்லவா? அதைத்தான் நாம் இங்கு சிந்திக்க வேண்டும்.

ஆன்ம விசாரணையில் ஈடுபட்ட ஒருவர் தன்னையும் தனக்குள் இருக்கின்ற ஆத்மாவையும் ஆராய்கின்றபோது, உயிராகிய ஜீவனை ஈகோ என்றும், அந்த ஜீவன் இயங்குவதற்குக் காரணமான ஆத்மாவை நான் என்றும் ஞானத்தால் பிரித்துப் பார்த்து அறிய முடியும். இப்படி ஆத்மாவை நான் என்று அறிந்தபின், வரையறைகளுக்கு உட்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற ஜீவனை அகந்தை என்றுஅடையாளம் காண முடியும். நான் என்று நினைத்திருந்த இந்த அகந்தையைத் துறந்து, ஆத்மாவே நான்! என்று அறிந்து வாழ்பவன் – சந்யாசி, துறவி, ஞானி, ஜீவன் முக்தன், தத்வதர்சி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றான்.

ஞானத்தின் மூலமே ஒருவர் இந்நிலையை அடைய முடியும். சத் என்பது ஆத்மா. சத்து வேறு. அசத்து வேறு. சைதன்யம் வேறு. ஜடம் வேறு. சைதன்யம அழிவற்றது. ஜடம் அழிந்துபோவது. சைதன்யம் விடுபட்டு சுதந்திரமாக இருப்பது. ஜடம் பந்தப்பட்டிருப்பது. சைதன்யம் சுத்தம். ஜடம் அசுத்தம். சைதன்யம் சாசுவதம். ஜடம் அசாசுவதம். அதாவது நிலையற்றது. சைதன்யம் சுகமாய் இருப்பது. ஜடம் துக்க மயம்.

ஆனால் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நாம், ஜடமாகிய இந்த உடலை சைதன்யமாகவும், சைதன்யமாகிய ஆத்மாவை ஜடமாகவும் நினைத்திருக்கின்றோம். இந்த அறியாமை போக வேண்டுமெனில் ஜடத்தை ஜடமென்றும், சைதன்யத்தை சைதன்யமென்றும் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படித் தெரிந்துகொண்டு விட்டால் துக்கம் விலகிவிடும்.

நான் சுத்த சைதன்யம். இந்த சரீரம் வெறும் ஜடம். சரீரத்தை ஒரு நாளும் சைதன்யமாக்க முடியாது. சைதன்யத்தை ஒருக்காலும் ஜடமாக்க முடியாது. இதைத் தெரிந்துகொண்டுவிட்டாலே முக்தி. இது தான் தத்துவ ஞானம். இந்த ஞானத்தைப் பெற விரும்புபவர்கள், தெளிவாகப் புரிந்துகொள்ள விழைபவர்கள் எப்படியாவது சைதன்யத்தைப்பற்றிக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சரியான ஸத் சங்கத்தைத் தேடிப்போய் ஆன்மாவைப் பற்றிக் கேட்டுக்கொண்டே இருந்தால் தான், இந்த சம்சாரம் என்ற தீப்பிடித்து எரிகின்ற காட்டுக்குள்ளே சிக்கி எரிந்து சாம்பலாகிப் போகாமல் தப்பிக்க முடியும்.

சிறுவனான துருவன் இதைத்தான் விஷ்ணுவைத் தரிசித்தபோது கேட்டான். “இந்தப் பிறவியில் நீ கேட்டு வந்த ஆட்சி பீடத்தையும், அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டு ராஜ்ஜியத்தை ஆண்டு வருவாய். அடுத்த பிறவியில் உனக்கு முக்தி கிடைக்கும்!” என்று பகவான் அருள் புரிந்தார். அதைக்கேட்ட துருவன் அழுதுகொண்டே நாட்டிற்குத் திரும்பினான்.

அவன் ஏன் அப்படி அழுதான் என்றால், சிந்தாமணி நவரத்தினமாகிய ஆத்ம விடுதலையையே தரக்கூடிய பரம்பொருளிடம் வெறும் கண்ணாடித் துண்டைக் கேட்பதுபோல், மூடனான நான், ராஜ்ய பரிபாலனம் வேண்டும், பதவி வேண்டும் என்று கேட்டேனே! என் புத்தி சதி செய்து விட்டதே! என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதானாம். ஸ்ரீமத் பாகவதம் சொல்கின்ற கதை இது.

நாமும் கோயில்களுக்குச் சென்று செலுத்துகின்ற பிரார்த்தனைகளெல்லாம் இப்படிப்பட்டதாகத்தானே இருக்கிறது. எனக்கு வியாதி போக வேண்டும். பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டும். குடும்பத்திற்கு வாரிசு பிறக்க வேண்டும் என்ற அளவில் தான் நாம் விழுந்து விழுந்து வேண்டிக்கொள்கிறோமே தவிர, ஆத்ம ஞானத்தைப் பெற்று ஜென்மம் கடைத்தேற வேண்டும் என்று வேண்டுகின்றோமா?

காஞ்சி பரமாச்சார்யார், “ சனாதன தர்ம நெறியின் அடிப்படையில் ஒரு பீடாதிபதிகளாக, ஆன்மீகத்தைச் சொல்லக்கூடிய தகுதியில் நான் இருக்கின்ற நிலையில், என்னிடத்தில் வருபவர்களெல்லாம் ஆத்மஞானத்தைப் பற்றி ஒரு கடுகளவும் எதுவுமே கேட்காமல், படிப்பு வரணும், பதவி வேணும், சொத்து கிடைக்கணும், பேத்திக்குக் குழந்தை பிறக்கணும்னு இப்படி அழியக்கூடிய உலக சம்பந்தமான ஆசிகளையே என் கிட்டே கேட்டு வந்து நிற்கிறார்களே! என்று சொன்னாராம்.

சிந்திக்க வேண்டிய விஷயம் இது. அனைத்துமாய் இருக்கின்ற ஆண்டவனிடம் அற்ப விஷயங்களையா கேட்டுப் பெற அழுவது? மாணிக்கவாசகர் பாடியதைப்போல “பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி, மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே”என்று அஞ்ஞானத்தை அகற்றுகின்ற வழியைக் கேட்க வேண்டாமா?

எதையோ சொல்லப்போய், விஷயம் எங்கேயோ போய்விட்டது. என்றாலும் பரவாயில்லை. அறிய வேண்டியதை அறிய முற்படும்போது இவற்றையெல்லாமும் பற்றிச் சிந்திக்கத் தான் வேண்டியிருக்கிறது.

Advertisements

4 thoughts on “மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -15

  1. சந்தேகப்படுபவர்களால் இவ்வுலகத்திலும் நிம்மதியாக வாழ முடியாது, மேலுலகையும் அடைய முடியாது. இன்பமென்பது கிடைக்காது. part 15 too good to read.

  2. Vijaya amma,

    My name is Suganthe. I already spoke to you last week. I am slowly reading every day you article. Very interesting.

    Thanks,

    Suganthe.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s