மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -14

செயலின்மை, செயலின்மையில் செயல் என்ற முக்கியமான ஒரு கருத்து ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. ஒரு செயலில் முழு கவனத்துடன் ஈடுபடுகின்றபோது அங்கு மனம் செயல்படுவதில்லை. அப்போது எதைப்பற்றியும் யோசிக்காமல் மனம் சும்மா இருக்கும். அதாவது அங்கு மனமே இல்லை. இது தான் செயலில் செயலின்மை எனப்படுவது.

சில சமயம் ஒரு வேலையும் இல்லாமல் சும்மா உட்கார்ந்திருப்போம். அந்த நிலையில் மனம் எதை எதையோ பற்றி யோசித்துக்கொண்டிருக்கும். உடல் சும்மா இருக்கும்போது மனம் சும்மா இருக்காது. ஆயிரம் யோசனை வலம் வரும். இது செயலின்மையில் செயல் எனப்படுவது.

ஒரு செயலைச் செய்கின்ற போதே இச்செயலை நான் செய்யவில்லை. எனக்குள் இருக்கின்ற பரப்பிரம்மமே இதைச் செய்கிறார் என்று உணர்ந்து தன் விருப்பு வெறுப்புகளை அச்செயலில் ஏற்றாமல் இயல்பாக இருக்கின்ற தன்மையில் செய்கின்றபோது அது செயலில் செயலின்மை எனப்படுகின்றது. இந்நிலையில் ஒருவன் ஒன்றைச் செய்யும்போது அச்செயல் இறை விருப்பமாக செயல்படுகின்றது.

செயலின்மையில் செயலாக இருப்பதும் அவனே என்பதைப் புரிந்துகொள்பவர்கள் ஞானியராகி விடுகின்றனர். வாழ்வின் நோக்கம் புரிந்தவர்களாக அவர்கள் செயல்படுகின்றனர். இதற்குச் சூரியனையே எடுத்துக்காட்டாகக் கூறலாம். சூரியன் இறைசக்தியின் வெளிப்பாடாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதாவது இறைசக்தி சூரியன் வழியாக வெளிப்பட்டு உலகை இயக்கிக்கொண்டிருக்கிறது. பூமியின் நிகழ்வுகளில் சூரியனுக்கு எந்த பாதிப்பும் இல்லை. என்றாலும் நடப்பவை எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சூரியனோ வெறும் சாட்சியாக மட்டுமே இருக்கின்றது. இதை ஞான சாதகன் நன்கு ஆராய்ந்து அறிந்து புரிந்துகொள்ள வேண்டும்.

நான் கருவி மாத்திரமே. அதற்குமேல் ஒன்றும் இல்லை என்ற விதத்தில் செயல்பட இந்தப் புரிதல் உதவுகின்றது. இந்நிலையில் அவன் செய்வது எதுவும் அவன் செயலல்ல. இப்படி இதனை உணர்ந்ததால் செய்கின்ற செயலில் பற்று அற்றவனாய், எப்பொழுதும் திருப்தி உடையவனாய், எதையும் விரும்பியோ, சார்ந்தோ செயல்படாமல், சதா செயல்பட்டுக் கொண்டிருந்தாலும் அவன் செயலற்றவனாகவே திகழ்கின்றான்.

இப்படி ஆசையற்றவனாய், புலனடக்கம் கொண்டு, ஆத்மாவைத் தானாக உணர்ந்து, எதையுமே பலனாக அடையும் விருப்பமின்றி அப்படிப் பெறுவதையும் துறந்து, வெறுமனே செயல்களை மட்டும் செய்து கொண்டிருப்பவனைக் கர்மா தொடர்வதில்லை.

சரீரம், அந்தக்கரணம் இரண்டையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும், சேமித்து வைத்துள்ள எல்லாவற்றையும் தியாகம் செய்பவரும், உலகியல் ஆசைகள் இல்லாதவருமான சாதகர் உடல் சம்பந்தமான காரியங்களைச் செய்துகொண்டிருந்தாலும், கர்ம பந்தத்தில் சிக்குவதில்லை.

செயலில் ஈடுபாடு கொண்டவராகச் செயல்படும் சாதகரும் சூழ்நிலைக்குத் தகுந்தபடி தம்மை மாற்றிக்கொண்டு மன நிறைவு பெறுகிறார். அதாவது நம்மைப் போல் குடும்பத்தில் இருந்து கொண்டு ஆத்ம சாதனை புரிபவர்கள் செய்ய வேண்டிய செயல்கள். எது என்றாலும் அவற்றைப் பொறாமை, சஞ்சலம், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் செய்து கொண்டே போக வேண்டும். செயல் வெற்றியடைந்தாலும், தோல்வியைத் தந்தாலும் சமமாக ஏற்றுக்கொண்டு செயல்படுகின்றவர்களுக்குக் கர்மா ஏறுவதில்லை. எவர் விருப்பு வெறுப்புகளைக் கடந்தவரோ, சுதந்திரமானவரோ, எவருடைய குறிக்கோள் பரமாத்மாவை அடைவதையே முனைப்பாகக் கொண்டிருக்கிறதோ அத்தகைய சாதகர்கள் உலக நன்மைக்காகவே செயலைப் புரிவர். இந்த நிலையில் செயல் யோகமாகிறது. செய்பவர் செயலின்மையில் செயல்படுபவராகத் திகழ்வார். இவையெல்லாம் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு எடுத்துரைத்த கர்ம தத்துவங்கள்.

இனி நாமெல்லாம் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை நாம் தான் முயன்று பழகிக்கொள்ள வேண்டும். ஏனெனில் ஆசா பாசங்களுக்கும், சூழ்நிலைகளுக்கும். ஈகோவிற்கும் காலங் காலமாக அடிமைப்பட்டுப் பழகியவர்களல்லவா நாம். பழக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியுமா?

இந்தக் கட்டத்தில் நாம் மீண்டும் ஒரு முறை சுய பரிசோதனையில் ஈடுபட வேண்டும். ஏனெனில் ஞானம் பெற்றாலும் கூட செயல்படுகின்ற விதம் தான் இன்னும் பிடிபடுவதில்லை. ஏனெனில் துன்பப் பாதையில் பழகிப் போன உடலும் மனமும் புத்தியும் நம்மை முன்னேற விடாமல் பாடாய்ப் படுத்துகின்றன. அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு ஆன்மீகச் சாதனையில் முன்னேறுவதற்கு ஆழ்ந்த தியானமும் அறிவும், கூரிய சிந்தனையும், புலனடக்கமும் கட்டாயம் தேவை. நூல்களில் சொன்னவற்றை வெறுமனே படிப்பதாலோ, குருவின் உபதேசத்தைப் பாடமாக்குவதாலோ, பெரியவர்கள் சொல்லி வைத்த பக்திப்பாடல்களைப் பிழையில்லாமல் பாடுவதாலோ, மந்திர ஸ்லோகங்களைத் தினமும் மனப்பாடமாகச் சொல்வதாலோ ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் ஏற்படாது. இவை வெறும் படிகள் மட்டும் தான்.

நாம் பெறுகின்ற ஞானம் உள்ளுணர்வில் சென்று கலக்க வேண்டும். அப்படிக் கலந்தால் தான் இது நம்மில் செயல்படும். முன்னேற்றத்தை உண்டாக்கும். ஏனெனில் இந்தப் பயிற்சி மூலம் நாம் நம் பிறவியையே மாற்றி அமைக்க முற்படுகின்றோம்.

சந்தேகப் புத்தியைக் கொண்டவன் அழிந்துபோய் விடுவான். ஆன்மா என்று ஒன்று இருக்கிறதா என்று ஆன்மாவைப் பற்றி எவன் சந்தேகப்படுகிறானோ, அவனது மனதில் நஞ்சு கலக்குகின்றது. சாதாரண வாழ்க்கையிலேயே எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவர்கள், அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ எனக் கற்பனை செய்து செய்து அழிந்தே போவார்கள்! ஆன்மாவை சந்தேகப்படுபவன் அழிவான் எனக் கிருஷ்ணர் கூறுகிறார்.

ஏனெனில் அப்படிப்பட்டவர்களால் ஆத்ம சுகத்தை அனுபவிக்க முடியாமற் போய்விடும். சந்தேகம் இருப்பதால் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் எந்தச் சூழ்நிலையிலும் அவர்களால் அனுபவிக்க முடிவதில்லை. சந்தேகம் என்பது தீர்க்க முடியாத ஒரு வியாதி. அது இருந்தால் திருப்தியோ, நிறைவோ ஏற்படாது.

இனி நாம் கீதைக்குத் திரும்புவோம். “உன்னையும், உலகத்திலுள்ள அனைத்தையும் ஆத்மாவாகப் புரிந்துகொள்ளாவிட்டால், எல்லாம் பிரம்மமே தவிர வேறில்லை, அந்த ஒன்றுதான் எல்லாமாக இருக்கிறது என்பதை ஐயமின்றி நீ ஏற்காவிட்டால், அழிவாய்! என்கிறார் கிருஷ்ணர்.

“மன்னனும் நானே! மக்களும் நானே! மரம் செடி கொடியும் நானே!” என்ற கர்ணன் படப் பாடல் வரிகளைச் சற்றே நினைத்துப் பாருங்கள். நான், நான் என்று சதா உணரப்படும் அந்த உணர்வு அனைத்திலுமே ஒன்றித்தான் உணரப்படுகின்றது. உலகிலுள்ள அனைத்துமே படைப்பால் உருவ அமைப்பால் வேறுபடுகின்றனவே அல்லாமல், உள்ளே உள்ள பொருள் ஒன்றேயாகும்.

ஒரு செயலை நான் செய்கிறேன் என்னும் எண்ணம் எழாத நிலையில் செய்கின்றபோது கர்மவினை இல்லை. ஈகோவால் செயல்படுபவனுக்குக் கர்மா உண்டு. சூட்சும சரீரத்தில் தடத்தை ஏற்படுத்துபவை எல்லாம் கர்மா. இந்தப் பதிவுகள் தான் மறுபிறவியைத் தரக்கூடியவை. சூட்சும சரீரம் தான் அடுத்த பிறப்பைத் தேடிச் செல்கிறது. இதற்குள் தான் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் மனத்தொகுப்பு இருக்கிறது.

இந்த சூட்சும சரீரத்தைப் பற்றி ஞானத்தால் அறிந்து, தியானத்தால் எரிக்க வேண்டும். தியானம் செய்ய செய்யத்தான் நான் இந்த உடலல்ல, மனமல்ல, புத்தியல்ல, பிராணன் அல்ல, நான் ஆத்மா! என்னும் ஞானம் மெல்ல மெல்ல வலிவடைகின்றது. இப்படி உடல், மனம், புத்தி ஆகியவற்றிலிருந்து நாம் விடுபட்டால் தான் நமக்கு ஆத்மாவில் சென்று சேர முடியும். ஏனெனில் உடல் பொருள்களைப் பற்றிக் கொள்கிறது. மனம் உணர்ச்சிகளைப் பற்றிக் கொள்கிறது. அறிவு கருத்துக்களுடன் தன்னைப் பிணைத்துக்கொள்கிறது.

உடல், மனம், புத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு, அவற்றை அகமுகமாகத் திரும்பச் செய்வதற்கு நாம் அவற்றின் மேய்ச்சல் நிலத்தை மாற்ற வேண்டும். பயனை எதிர்பார்க்காத சேவைகளைச் செய்வதன் மூலமும், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்வதன் மூலமும் உடலையும், புலன்களையும் கட்டுப்படுத்தலாம்.

மனதை அடக்க ஆன்மீக சாதனைகளில் ஈடுபட வேண்டும். நல்ல ஆன்மீக நுhல்களைப் படிப்பது, சத் சங்கங்களுக்குப் போவது போன்றவற்றைச் செய்யலாம். புத்தியை அலையவிடாமல் ஆன்ம சிந்தனையில் ஈடுபடுத்தி ஆத்மாவாகிய தன்னைப்பற்றியும், இந்தப் பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மை பற்றியும் சிந்திக்க வைக்கும் பயிற்சியைத் தரலாம். இப்படி நம்மை நாமே உலக விஷயங்களிலிருந்து விடுவித்து, ஒதுங்கியிருந்து, தனிமையை விரும்பி, அதனைப் பழகி, ஆத்ம சிந்தனையில் மூழ்கி மெல்ல மெல்லத் தியான நிலையை உயர்த்துவதன் மூலம் பரிணாம உயர்ச்சி பெற முடியும்.

எனவே உலக வாழ்க்கையில் செயல்படத்தான் வேண்டும். அப்படிச் செயல்படும்போது அச்செயலை ஞானத்துடன், ஈஸ்வர அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். அப்பொழுது அச்செயல் யோகமாகிவிடும். சொல்லப் போனால் நம் இந்து கலாச்சாரத்தில் செய்பவை அனைத்தும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்த பின்பு தான் செய்யப்படுகின்றன.

ஓர் இந்து எந்த ஒரு காரியத்தைச் செய்யத் துவங்குவதற்கு முன்பும் கடவுளைக் கும்பிட்டு, ஒரு பூசை செய்து, தேங்காய் உடைத்துக் கற்பூரம் காட்டி, தான் செய்ய இருப்பதைக் கடவுளிடம் ஒப்படைத்துத் தனக்கு உடனிருந்து உதவும்படி வேண்டிக்கொண்டுதான் துவங்குவான். தினமும் செய்கின்ற செயலிலிருந்து ஒரு புதிய தொழில் துவங்குவது வரை எது என்றாலும், ‘முதலில் சாமி கும்பிட்டுவிட்டு…’ என்று சொல்வதைத் தன் வழக்கமாகக் கொண்டு தன் குழந்தைகளுக்கும் இதைப் பழக்கப்படுத்தி வைக்கிறான். தொழிற் கருவியைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுத்தான் வேலையைத் துவங்குவது, உணவை முதலில் இறைவனுக்குப் படைத்துவிட்டு, அதைப் பிரசாதமாக நினைத்துக் கும்பிட்டுவிட்டுப் பிறகு சாப்பிடுவது என்பதெல்லாம் பண்பட்ட இந்து வாழ்க்கையில் படித்த பாடம் என்றே கூறலாம்.

செத்த வீட்டில் கூட உடனே அங்கே ஒரு ஸ்டூலில் குத்துவிளக்கு ஏற்றித் தேங்காய் உடைத்து வைத்து, அவர் தெய்வீகமாகி விட்டார்! என்றுதான் சொல்கிறோம். கட்டிப் பிடித்து அழுது புரள்வதெல்லாம் பிறகு.

இவற்றின் பொருள் என்ன? எல்லாம் இறைமயம் என்ற உணர்வு இந்துவின் இரத்தத்தில் கலந்த ஒன்று. எனவே தான் தன் செயல்களை எல்லாம் இறைவனோடு பிணைத்துவிட்டு ஈஸ்வர அர்ப்பணமாகச் செய்து, அதன் விளைவைப் பிரசாதமாகப் பெற்று அனுபவிக்கிறான். இது பரம்பரை பழக்கமாக உள்ள ஒன்று.

இந்த விதத்தில் தான், “படைப்பவன் பிரம்மம்! படைக்கின்ற பொருள் பிரம்மம்! படைத்ததை உண்பவனும் பிரம்மம்! உண்டதைச் செரிக்கச் செய்வதும் பிரம்மமே!” என்ற பொருளில், சாப்பாட்டை இறைவனுக்கு நிவேதனம் செய்கின்றபோது பலரும், பல இடங்களில் குறிப்பாக ஆசிரமங்களிலும் கீதையின் இந்த ஸ்லோகங்களைச் சொல்கின்றனர்.

“பிரம்மார்ப்பணம் ப்ரம்ம ஹவிர் பிரம்மாக்னௌ பிரஹ்மணாஹுதம்
பிரம்மைவ தேன கந்தவ்யம் பிரம்ம கர்ம ஸமாதினா: (4-24)
“அஹம் வைச்வாநரோ பூத்வா ப்ராணிநாம் தேக மாச்ரித
ப்ராண பான ஸமாயுக்த: பசாம்யன்னம் சதுர்விதம் (15-14)

ரிஷிகளாலும், ஞானிகளாலும் செய்யப்படுகின்ற யாகங்கள் எல்லாம், இந்தப் பூரணமான பிரம்ம உணர்வினாலேயே. உலக நன்மைக்காகவும், தமது தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய தேவதைகளைத் திருப்தி செய்வதற்காகவும் செய்யப்படுகின்றன. இந்து கலாச்சாரம் உற்பத்தி சக்திகள் அனைத்தையும் தேவதைகள், தேவர்கள் என்று குறிப்பிடுகின்றது. முப்பது முக்கோடி தேவர்கள் என்பது இந்த உலகத்திலும், நம் உடலிலும் செயல்படுகின்ற சக்திக் கலங்களையே குறிப்பிடுகின்றன.

பேரறிவு ஆன பிரம்மம் சத்வ குணத்தின் வழியாக வெளிப்படுகின்றபோது அது இறைவன் அல்லது தெய்வம் என்றழைக்கப்படுகின்றது. பேரறிவு என்னும் பிரம்மமே முனிவர்களால் குறியீடுகளாகக் கணிக்கப்பட்டு, தெய்வ வடிவங்களாக வடிவமைக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் பிரம்மம் என்னும் ஒன்றின் பல்வேறு வெளிப்பாடே. இவற்றில் பேதமில்லை.

இந்தத் தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும், தேவதைகளுக்கும், உரிய அவிர் பாகத்தை வேள்வியில் இட்டு யாகம் செய்து உலகிற்குரிய நன்மைகளை ரிஷிகள் வேண்டிப் பெறுகின்றார்கள். தாங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையுமே சம்சாரிகள் உலக நன்மைக்காக என்று சரியான விதத்தில் செய்கின்றபோது அவை ஒவ்வொன்றுமே ஒரு யாகமாக தேவர்களால் ஏற்கப்படுகின்றது என கீதை உரைக்கின்றது.

இன்னொரு வேள்வி இருக்கின்றது. அது குருவின் உதவியால் ஆன்மீக சாதகன்; செய்கின்ற ஞானவேள்வி. இங்கு மாணவனின் அறியாமை என்னும் சமித்துக்களை அவனது ஆத்ம நெருப்பில் போட்டுத் தனது உபதேசம் என்னும் நெய்யை அதில் வார்ப்பதன் மூலம் அந்த ஞான நெருப்பைக் கொழுந்து விட்டு எரியச் செய்கிறார் குரு. இந்த அவரது அயராத பெரும் முயற்சியினால், தான் அல்லாத உடல், மனம், புத்தி போன்றவையெல்லாம் இல்லாமற் போய்விட, அதாவது அவற்றின் உண்மைத்தன்மை புரிந்துகொள்ளப்பட்டு ஞான சாதகன் தான் ஆத்மன் என்ற உண்மையை அறிந்தவனாய், சத் சித் ஆனந்த வடிவாய்த் தன்னை உணரத் துவங்குகின்றான்.

இங்குக் குருவாய் வந்திருந்து இந்த ஞானவேள்வியைச் செய்பவர் கிருஷ்ணரே. அதனால் தான் அவர் ‘என் பணி செய்கின்ற குருவின் நலன்கள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன்! என்று தானும் குருவும் ஒன்றென்பதை விளக்குகின்றார்.

Advertisements

2 thoughts on “மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -14

  1. today, i have read your article Manidhan enbavan deivamagalam part 14. Really superb. No words to appreciate Sivaramakrishnan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s