மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -13

இதுவரையில் நாம் கதைகளோடு கூடிய விதத்தில் நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றிய துணையோடு கீதையைப் பயின்று கொண்டு அல்லது கீதை சொல்வதைப் புரிந்துகொண்டு வந்தோம். இனி வரும் அத்தியாங்களில் ஆழமாகக் கொஞ்சம் கொஞ்சமாகத் தீவிர கவனத்தை ஏற்படுத்திக்கொண்டு பயில வேண்டும். கீதை என்பது ஒரு சாதாரண விஷயமல்ல. நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றி அமைத்துத் தரக்கூடிய வல்லமை படைத்தது.

பல்லாயிரக் கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டும் இருக்கிறது.இதுவரை நாம் அறிந்திராத பல புதிய உண்மைகளைக் கிருஷ்ணர் எடுத்துரைக்கின்ற நிலையில் அதைப் புரிந்து கொள்கின்ற மன நிலைக்கு நம்மை நாம் தயார்ப்படுத்திக்கொண்டால் தான் மாயை வசப்பட்டு மனம் சலித்து இதனை ஒதுக்காமல் அறிதலைத் தொடர முடியும்.

நம்மைப்பற்றி நாமே நமக்குள் நிறைகுறைகளை சீர் தூக்கிப்பார்த்து, அறியாமல் பிழையாகச் செய்தவற்றைக் கண்டுபிடித்துத் திருத்திக்கொள்ள கீதை நமக்கு ஒரு வாய்ப்பைத் தந்துகொண்டிருக்கிறது. இதை அலட்சியப்படுத்தி விடாமல் கிணற்றில் விழுந்து கிடப்பவன் கயிற்றைப் பிடித்துக்கொண்டு மேலேற முயல்வதைப்போல் கீதையைப் பிடித்துக்கொண்டு நாம் மேல் நிலையை அடைய வேண்டும்.

இந்த உயர்நிலையை அடைவதற்காகத் தான் முதலில் தன்னைப் பற்றி அறிதல் ஆகிய சாங்கிய யோகத்தைச் சொல்லி அடுத்து ஒருவன் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைக் கர்மயோகமாகச் சொல்லி அடுத்ததாக அறிவுடன் கூடி செய்யப்படுகின்ற செயல் எவ்வாறு பற்று இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஞான கர்ம சன்யாசயோகம் என்னும் பகுதியாக கண்ணன் அர்ச்சுனனுக்கு உரைக்கின்றார்.

இந்தப் பிரபஞ்சம் உருவானகாலத்தில் அத்யாத்ம சாதனை என்னும் இந்த யோக முறையானது ஒலியலைகளாக அண்டத்தில் பரவி இருந்தது. அந்த ஒலியலைகளைத் தங்கள் உள்ளுணர்வால், யோக சக்தியால் தவ யோகிகள் உய்த்து உணர்ந்தார்கள். அந்த ஒலியலைகள் அவர்களின் அகத்திலிருந்து வேத மந்திரச் சொற்களாக வெளிப்பட்டன.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்:
“இந்த அழிவற்ற யோகத்தை நான் முதலில் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவிற்குச் சொன்னான். மனு இஷூவாகு மன்னனுக்குச் சொன்னான். இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். அர்ச்சுனா! அந்த யோகம் கால மிகுதியால் இவ்வுலகில் இழக்கப்பட்டது. அந்தப் பழைய யோகத்தை இன்று நீ என் பக்தனும் தோழனுமாக இருப்பதால் நான் உனக்குச் சொன்னேன்.”


இங்கு விவஸ்வானாகக் குறிக்கப்படுவது சூரியன். இது எதைக் குறிப்பிடுகின்றது என்றால் பிரத்தியட்சப் பிரம்மமாகத் திகழ்கின்ற சூரியனுக்கு இறைவனால் உரைக்கப்பட்ட இந்தப் பிரம்ம வித்தையானது மனு என்ற மன்னன் வழியாக உலகில் பரவி, பரம்பரை பரம்பரையாக ஒருவர் வழி மற்றவருக்கு எனக் குரு சிஷ்ய வம்சாவளியாகச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இப்படித் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இது இடையில் மறக்கப்பட்டதால் ஸ்ரீ கிருஷ்ணர் மீண்டும் இதனை அர்ச்சுனனுக்கு எடுத்துரைப்பதாகக் கூறுகின்றார்.

அர்ச்சுனன் கிருஷ்ணரின் தோழனாகவும், கிருஷ்ணரை வழிபடும் பக்தனாகவும் இருந்ததோடு, சீடனாகத் தன்னை ஏற்கும்படி கிருஷ்ணரைப் பணிந்ததாலுமே பகவத்கீதை அவனுக்குக் கிடைத்தது. இதன் பொருள் என்னவெனில், இறைவனைத் தன் நண்பனாகக் கருதி உண்மையான பக்தனாகத் திகழ்கின்ற ஒருவன் ஒரு குருவிடத்தில் முழுமையாகச் சரணடைந்து சீடனாகிப் பணிவுடன் நெருங்கினால் அவனுக்கு நிச்சயம் கீதா உபதேசம் கிடைக்கும்.

இந்த இடத்தில் முக்கியமான இருவருக்கு நாம் நன்றி செலுத்தியே ஆகவேண்டும். குரு வம்சத்தைச் சேர்ந்த அந்த இருவரால் தான் நமக்கு இரண்டு ஞானப் புதையல்கள் கிடைத்திருக்கின்றன. தாத்தாவும் பேரனுமான அந்த இருவரின் புண்ணியத்தால் தான் நமக்கு பகவத்கீதையும் பாகவதமும் கிடைத்தன. தாத்தா அர்ச்சுனனால் பகவத்கீதை கிடைத்தது. பேரன் பரீட்சித்து மன்னன். அபிமன்யு, உத்திரை ஆகியோரின் புதல்வனான பரீட்சித்து மன்னனைப் பாம்பு கடித்து இறக்க வேண்டிய சாபம் ஏற்பட்டதால் தான் சுகப் பிரம்ம ரிஷியிடம் அவர் பாகவதத்தைக் கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டது. எனவே அர்ச்சுனனுக்கும், பரீட்சித்து மன்னனுக்கும் நாம் இங்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

ஒருவன் தன் வாழ்நாளில் ஒரு தடவை கீதையில் ஒரே ஒரு அத்தியாயமாவது கட்டாயம் படிக்க வேண்டும், கங்கையின் புனித நீரை ஒரு செம்பு அளவிலாவது பருக வேண்டும். தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கிருஷ்ணரை வணங்க வேண்டும் என்று ஆதிசங்கரர் பஜ கோவிந்தம் பாடலில் குறிப்பிடுகின்றார். கீதை நம்மைப் பற்றி நமக்கு விளங்க வைக்கின்ற அற்புத யோக நூல்.

கீதையின் ஒவ்வொரு ஸ்லோகமும் வாழ்க்கையின் அநித்யத்தை உணர்த்தி இந்த வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிந்து போய்விடும். அதற்குள் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதையும், முற்பிறவி வாழ்க்கையின் விளைவு இன்றைய வாழ்வாகக் கழிந்துகொண்டிருக்கும் கர்மாவை ஏறாமல் கட்டுப்படுத்தி எப்படிப் பரிணாமத்தில் முன்னேறுவது என்பதற்குரிய வழியையும் தெளிவாகக் கற்றுத் தருகின்றது.

எதையும் நான் செய்யவில்லை, அனைத்தையும் அவன் தான் செய்விக்கிறான் என்பதை நமக்கு உணர்த்தி சரணாகதி அடையும் வழியைக் காட்டுகிறது. திமிரை அடக்கிப் பணிவை உண்டாக்கி, எல்லாம் அவன் செயலே என்று நம்மை ஏற்க வைக்கின்றது. பகவத்கீதையைப் படிப்பதன் பயன் இதுதான். நீ பிடித்துவைத்துக் கொண்டிருக்கின்ற போலித்தனங்கள் எல்லாவற்றையும் விட்டு விடு. என்னைச் சரணடைந்துவிடு. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்! என்று ஸ்ரீ கிருஷ்ணர் அபயமளிப்பதுதான் கீதையின் சாரம்.

ஆனால் அர்ச்சுனனோ நம்மைப் போலவே குழம்பிப்போய் நிற்பதால் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்ல வருவதில் கவனத்தைச் செலுத்தாமல், இந்தக் கிருஷ்ணன் என்னோடு பிறந்து வளர்ந்து இதோ என் முன்னால் ஒத்த வயதினராய் என்னிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அப்படி இருக்க இவர் எப்படி சூரியனுக்கும், மனுவிற்கும் இந்த உபதேசத்தைச் செய்திருக்க முடியும்? இது என்ன, நம்ப முடியாத கதையாக இருக்கிறதே! என்று குறுக்காக யோசிக்கத் துவங்கி விட்டான்.

இந்தச் சிந்தனையின் அடிப்படையில், ‘வாசுதேவா! எந்தக் காலத்திலேயோ தோன்றிவிட்ட சூரியனுக்கு நீங்கள் இந்த யோக சாதனையை உபதேசித்தேன் என்று கூறுவதன் பொருள் எனக்கு விளங்கவில்லை!’ என்றான்.

அடிப்படையில் பிரம்மனும் ஜீவனும் ஒன்றுதான். பிரம்மம் தான் ஜீவனாகப் பலப்பல பிறவிகளாகப் பிறந்து, வாழ்ந்து, மறைந்து, பிறந்து, வாழ்ந்து மறைந்து என லீலா விநோதங்களைப் புரிந்து கொண்டிருக்கிறது. அந்த விளையாட்டில் தானே தன்னை மறந்ததாக நடித்து, தானே தன்னைக் கண்டுபிடிப்பதாகவும் செய்து காட்டுகிறது. தன்னிலிருந்து தானே பிரிந்து, பிறந்து, தன்னை மறந்து வாழ்ந்து, பிறகு தன்னைத்தானே தேடி அடைவதே பரிணாம சுழற்சி.

இங்கு பிறவிக்குத் தான் யார் என்பது தெரியாதபடி அறியாமை என்னும் திரை இயற்கையாகவே போடப்பட்டிருக்கிறது. எனவே தான் மனிதன் தன்னை இந்த உடலாகவே பார்க்கின்றான். இந்தத் திரையை அகற்றுகின்றவர் குருவே. இங்குக் கிருஷ்ணர் குருவாக இருந்து செயல்படுவதால் அறியாமல் கேள்வி கேட்கின்ற அர்ச்சுனனிடம் அவர், நீயும் நானும் எப்போதும் இருக்கின்றோம். பல நூறு பிறவிகளாக நாம் தொடர்கிறோம். அதையெல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்! என்கிறார்.

மேலும் அவர், நித்தியமும் சத்தியமும், பரப்பிரம்மமுமாகிய நான், படைப்பு எப்பொழுதெல்லாம் தர்மநெறி தவறி அழிகின்ற நிலையை அடைகின்றதோ, எப்பொழுதெல்லாம் அதர்மமே மேலாங்கி எழுச்சி பெறுகின்றதோ அப்பொழுதெல்லாம் நான் என்னைப் பிறப்பித்துக் கொள்கின்றேன். நிறை பொருளாகிய நான் நானாகவே வெளிப்படுகின்றேன்!” என்று தன் அவதார ரகசியத்தை எடுத்து இயம்புகின்றார்.

“அறநெறி மாறாத நல்லோரைக் காப்பதற்காகவும், தீயன செய்பவர்களை அழிப்பதற்கும். அறநெறியை நிலை நிறுத்துவதற்காகவும் நான் யுகங்கள் தோறும் பிறக்கின்றேன்!” என்று வெளிப்படையாக உண்மையைக் கூறுகின்றார்.

“யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத் மானம் ஸ்ருஜாம்யஹம்” (4-7)
“பரித்ராணாய ஸாதூனாம் வினாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தாப னார்த்தாய சம்பவாமி யுகே யுகே!” (4-8)

கீதையில் வரும் இந்த இரண்டு ஸ்லோகங்களும் எப்பொழுதும் மிகப் பிரசித்தி பெற்றவையாக விளங்குகின்றன. மனித நம்பிக்கையை வலுப்படுத்தும் தெய்வ வாக்காக இது மக்களால் போற்றப்படுகின்றது.

காக்கும் கடவுளான விஷ்ணுதான் பல்வேறு அவதாரங்களை எடுக்கின்றவராகத் திகழ்கின்றார். தசாவதாரக் கதைகள் இதற்குத் தக்க ஆதாரங்களாகத் திகழ்கின்றன. மனித மனங்களில் அசுரத் தன்மை மிகுகின்ற தருணங்களிலெல்லாம் இந்த அவதாரம் நிகழ்ந்திருக்கின்றது. யுகம் யுகமாக இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதனை மனிதன் நினைவில் கொள்வதில்லை. பிறவி தன்னைப் பொய்யான ஜீவனாக எண்ணிக் கொண்டிருப்பதால், தன்னுள் இருக்கும் தெய்வீகத் தன்மையை உணராததால்தான் கிருஷ்ணர் ஞான கர்ம சந்நியாச யோகத்தை எடுத்துரைக்கின்றார்.

அர்ச்சுனன் தன்னை, ‘இந்த உடல் நான்’ என்று நினைத்ததால் தான் தன் உறவுகளை நான் எப்படிக் கொல்வேன்? எனக் கலங்கினான். எனவேதான் உண்மையான செயல்புரியும் தன்மை பற்றிக் கிருஷ்ணர் இங்கு எடுத்துரைக்கின்றார்.

எதிர்கால நம்பிக்கைகளை உதறித்தள்ளி உடலையும் மனதையும் கட்டுப்படுத்தி புலனடக்கத்தை யார் மேற்கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு ஞானம் கிடைக்கும். எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும், உடமை, பற்றுகள் ஆகியவற்றால் ஏற்படும் பெருமையும் இல்லாவிட்டால் ஈகோ செயல்படாது. ஒருவர் தன்னை ஆத்மாவாகப் பார்க்காமல் உடலாகப் பிரித்துப் பார்க்கும்போது தான் ஜீவன் கலங்குகிறது.

இது என்னுடையது என்று நினைக்கின்றபோது தான் பிரச்னைகள் துவங்குகின்றன. ஜீவன் தன்னை ஆத்மாவாக உணர்ந்துகொண்ட பிறகு ஜீவன் ஆத்மாவில் ஒடுங்குகின்றபோது நான், எனது என்ற எண்ணம் எழாது. இப்படி ஜீவன் ஆத்மாவைத் தானாக எண்ணி அதில் கலக்கத் துவங்கும்போது தான் வாழ்க்கை வெற்றி பெறத் துவங்கும்.

ஒரு செயலில் ஈடுபடுகின்றபோதே அச்செயலால் வரும் பயனைப் பற்றி உடனே கற்பனை செய்து மனதை அலைக்கழிக்காமல், கர்மத்தை யோகமாகச் செய்! என்று அர்ச்சுனனுக்குக் கிருஷ்ணர் உபதேசிக்கின்றார். செயல் புரியத்தான் ஒவ்வொருவரும் பிறக்கின்றனர். ஏதாவது ஒரு செயலைச் செய்வதன் மூலம் தான் மனித வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. செயலின்றி வாழ்க்கை இல்லை. அவரவர் குண இயல்புகளுக்குத் தகுந்தபடி தான் செயல்கள் அமையும்.

இதை உணர்த்தத்தான் ஸ்ரீ கிருஷ்ணர், அர்ச்சுனா! நான்கு வருணத்தாரில் நீ சத்திரியனாகப் பிறந்திருக்கின்றாய். உனது குண இயல்பு போர் செய்தல் ஆகும். வீரனான உனது கடமை அதர்மத்தை எதிர்த்துப் போரிடுவது தான். அனைத்தையும் பற்றற்று துறந்தவர்களுக்கு எச்செயலும் ஏற்புடையதாக இருக்கும். எதைச் செய்தாலும் அப்படிப்பட்டவர்கள் பாதிப்படைவதில்ல. ஆகவே அர்ச்சுனா! நீயும் எதைச் செய்தாலும், ‘நான் இதைச் செய்யவில்லை செயலற்றவனும் அழிவற்றவனுமாகிய கிருஷ்ணனே இவற்றைச் செய்கிறார் என்பதைப் புhpந்துகொள்!’ என்றார்.

‘நான் கருவி மாத்திரமே. எனக்கு இச்செயலால் விளையும் பயனில் விருப்பமில்லை. எது வருமோ அதை ஏற்பதே என் இயல்பு என்ற ஞானத்துடன் செயல்புரிபவன் கர்மாவால் பாதிப்படைவதில்லை. செயலால் வரும் எந்த விளைவுமே அவனைப் பாதிப்பதில்லை.’

‘இதைப் புரிந்துகொண்டதால் தான் ஞானிகளும், சந்நியாசிகளும் கூட செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இப்படி முன்னோர்கள் பற்றின்றி செயல்பட்ட விதத்தில் இப்போது நீயும் உன் தொழிலாகிய போரைச் செய்யத்தான் வேண்டும்’ என்று கூறுகின்றார்.

Advertisements