மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -12

இனி வாழ்க்கையில் ஏற்படும் எந்தப் பிரச்னைக்கும் சரியான முடிவை எடுக்கத் தெரிய வேண்டும். தடுமாறக்கூடாது. தனது, பிறரது என்று பாகுபடுத்திப் பிரித்துப்பார்க்காமல், அறவழியில் நின்று அறிவுபூர்வமாக முடிவெடுக்கின்றபோது அங்கு ஞானமாகிய தெளிந்த அறிவு செயல்படும்.

செயல்பட்டால் அதற்குரிய பலன் வரும் என்பது நியதி. நியதி என்றும் மாறாது. எனக்கு வருகின்ற பலன் ஏற்கனவே உள்ள நியதிகளுக்கு உட்பட்டது. நியதிகள் நாம் ஏற்படுத்தியவை அல்ல. நியதிகளுக்கு நாம் பொறுப்பல்ல. நாம் செயலைச் செய்தாலும் பலனைத் தருபவன் இறைவன். இதைப் புரிந்துகொண்டால் தான் கடமையைச் செய்! பலனை எதிர் பார்க்காதே! என்ற அரிய வார்த்தையின் அர்த்தம் புரியும்.

எது வந்தாலும் ஏற்கின்ற மனப்பக்குவத்துடன் செயல்படுபவர்களைக் கர்மயோகி என்று அழைப்பார்கள். பெருந்தலைவர் காமராஜருக்கும் கர்மவீரர் காமராஜர் என்று புகழ்ப்பெயர் ஒன்று உண்டு. தனது செயல்களை அயராமல், விருப்பு வெறுப்பு இன்றி, விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல் செய்துகொண்டே போகின்றவனை உலகத்தில் அவன் கர்மயோகி! என்று கூறுவர்.

இல்லறத்தில் இருப்பவர்களுக்குச் செயல்களும் கடமைகளும் அதிகம். கடமையைச் செய்பவன் ‘வருவது வரட்டும்’ என்று அறவழியில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே போகும்போது அப்படிப்பட்டவர்கள் கவனிக்கப்படுவார்கள். அவர்களுக்கு வாழ்வில் உயர்வு நிச்சயம் ஏற்படும். அப்படியின்றி கணக்குபோடுவதும், சுயநலத்துடன் செயல்படுவதும், விருப்பு வெறுப்புகளுக்கேற்பச் செய்வதும் என்றிருந்தால் வீழ்ச்சியையும், மனசஞ்சலத்தையும், எதிர்மறை குணங்களையும் தான் ஏற்படுத்தும்.

எனவே வாழ்க்கையில் இனி எந்த மோசமான பிரச்னை ஏற்பட்டாலும், சூழ்நிலை நமக்கு எதிராக அமைந்தாலும், நாம் எதிர்பார்க்காதபடி எதுவும் நடக்கவில்லையென்றாலும் அவற்றையும் இறைவன் தந்த பிரசாதமாகவே எண்ணி அமைதியாக ஏற்க வேண்டும். மிகப் பெரிய வெற்றி ஏற்பட்டாலும் அதற்காகக் கூத்தாடாமல் அமைதியாக அதை ஏற்க வேண்டும். வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஈஸ்வரப் பிரசாதமாக ஏற்கின்ற மனச் சமநிலை ஏற்பட்டு விட்டால், தெய்வீகம் அங்கு மலரும்.

அர்ச்சுனன் கிருஷ்ணனின் சாங்கிய யோகத்தை மேற்கொண்டு போரைத் தவிர்த்துத் துறவு கொள்ளவே விரும்பினான். ஆனால் கிருஷ்ணரோ, நீ சம்சாரி ஆகையால் உனக்குரிய கர்மாவைக் செய்துதான் ஆக வேண்டும். விட்டுவிட்டு ஓடுவது சம்சாரிக்கு அழகல்ல. செய்ய வேண்டியதை விருப்பு வெறுப்பின்றி, இறைவன் தந்தது! என்று பிரசாதமாக ஏற்றுச் சரியாகச் செயல்படு! என்று கர்மயோகத் தத்துவத்தை எடுத்துக் கூறினார்.

அர்ச்சுனா! நீ சத்திரியன். போர் செய்வது உன் குல தர்மம். உன்னால் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்ய முடியாது. ஏனெனில் உன்னில் ரஜோ குணம் தான் இருந்திருக்கிறது. அதர்மத்தை அழிக்கப் போர் செய்யத்தான் வேண்டும். போரிடுதல் தீது அன்று. அது வீரம் என்று கிருஷ்ணர் மனிதனுக்குரிய மூன்று குண இயல்புகளைப் பற்றி எடுத்துரைக்கின்றார்.

ஒரு மனிதனை மூன்று வித குணங்கள் ஆள்கின்றன. அவற்றின் தன்மைக்கேற்ப அம்மனிதனின் இயல்புகள் அமைகின்றன. சாத்வீகம், ராஜசம், தாமஸம் என்ற முக்குணங்கள் ஒரு மனிதனை ஒவ்வொரு நாளும் ஆள்கின்றன. இவற்றின் தன்மையறிந்து இவற்றை வென்று மேம்பட முயற்சிக்கும் மனிதன் தான் தெய்வீகம் என்னும் உயர்நிலையை அடைகின்றான். அந்நிலையில் அம்மனிதன் மக்களால் தெய்வம் என்று போற்றப்படுகின்றான்.

சாத்வீகம் என்பது பக்குவமாகச் செயல்படுகின்ற அமைதியான சாந்த நிலை. ராஜசம் என்பது படபடத்து விரைந்து செயல்படுவது, தாமசம் என்பது சோர்வுற்றுத் தளர்ந்து ஆர்வமின்றி செயலைக் கைவிடுவது அல்லது செயலைச் செய்யச் சோம்பி அதனைத் தள்ளிப்போடுவது. நம்மை நாமே உற்றுக் கவனித்தால் நாம் எந்த குணத்தில் இருக்கிறோம் என்பது தெரியும்.

காலையில் எழுந்தவுடன் அமைதியான சாந்த நிலை இருக்கும். சற்று நேரமான பின் மதிய வேளையில் படபடப்பும் சுறுசுறுப்புமாக செயல்படும் வேகம் அதிகமாகும். மாலை சென்று இரவு வந்ததும் எப்படா படுப்போம்! என்ற அயர்வும் சோர்வும் ஏற்படும். இந்த குணங்கள் மூன்றும் மாறி மாறி மனிதனை ஆள்கின்றன. இவற்றில் சாத்வீகக் குணம் தான் சிறந்தது. நன்மை தருவது.

குணவேறுபாட்டிற்கு உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவிற்கு ஏற்ற விதத்தில் தான் நம் இயல்பு அமைகிறது. சைவ உணவு சாத்வீகத்திற்கு ஏற்றது. உடல் நலத்திற்கும் அது தான் சிறந்தது. குடும்ப ரீதியாகவே சாத்வீக உணவை உண்ணும் பழக்கம் உடையவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அப்படிப் பரம்பரைப் பழக்கம் இல்லாதவர்கள் தங்கள் பழக்கத்தை மாற்றி சைவ உணவை மட்டுமே உண்ணப் பழகுவது மிக நல்லது.

ஆசையும் பற்றும் தான் ரஜோ குணத்திற்கு அடிப்படை காரணம். ஒரு செயலை படபடத்துக்கொண்டு ஏன் செய்கிறோம். அதைச் செய்து அதன் மூலம் வரும் பலனை அடைந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை. எதுவுமே வேண்டாம், தூங்கினால் போதும் என்பது ஆசையற்ற நிலையல்ல. அது தமோ குணம். அதாவது சோம்பேறித் தனம். செயல்பட வேண்டிய நிலையிலிருந்தும் செயல்படாமல் சோம்பியிருப்பது. எனக்கென்ன, எப்படியோ போகட்டும்! என்பது சோம்பலால் வரும் இயலாமை. நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? என்பதும் தமோ குண இயல்பினால் தான். ஆனால் சாத்வீகமோ செய்ய வேண்டிய செயலை, செய்ய வேண்டிய நேரத்தில், செய்ய வேண்டிய விதத்தில் பதறாமல் செய்ய வைத்து விடும். இது தான் சரியான நிலை.

யாரும் செயலிலிருந்து தப்ப முடியாது. “செயலை நீ செய்வதாக நீ எண்ணுவதே பிழை!” என்று கிருஷ்ணர் கூறுகின்றார். நீ செயல்படுவதில்லை. உனக்குள் கர்த்தாவாகிய நான் இருந்துகொண்டு உன் கர்மாவிற்கேற்றபடி உயிராக, உயிர்ச் சக்தியாக செயல்படுகின்றேன் என்கிறார் அவர்.

நம் செயல்கள் எல்லாமே கர்ம வாசனையால் தான் அமைகின்றன. நாம் விரும்புபவை எல்லாம் நம் கர்மாவால் தான் நம்மை ஈர்க்கின்றன. செய்பவன் நானல்ல. செய்விக்கப்படுகின்றேன். அவன் இயக்குகிறான். நான் இயங்குகின்றேன் என்று எண்ணிச் செயல்படுவது தான் உண்மையான துறவு. ஏ மனமே! அஞ்சாதே எல்லாம் ஈசன் செயல்! என்ற வாசகத்தின் பொருள் விளங்குகின்றதா?

எந்த மனிதன் புலன்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆசை, பாசத்திற்கு அடிமையாகாமல் பற்றின்றித் தன் கடமைகளைச் செய்து வருகிறானோ அவன் தான் உத்தமன். மனம் போன போக்கில் செயல் புரிவதை விட விதித்துள்ள கடமையைப் புரிவது உயர்ந்தது. கடமைச் செயலை எவ்வித சுயநல எண்ணமும் இல்லாமல், கடமையை நிறைவேற்ற வேண்டும் என்னும் உணர்வுடன் செய்வது தான் சாலச் சிறந்தது.

கிருஷ்ணர் கூறுகிறார், மனித இனத்தைப் படைக்க ஆரம்பித்தபோதே பிரும்மதேவர் இந்த நியதியை ஏற்படுத்திவிட்டார். சிருஷ்டி என்னும் சக்கரத்தைச் சுழற்ற கடமைச் செயலை செய்யவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் எல்லா உயிரினங்களுமே உணவாகிய அன்னத்திலிருந்து உற்பத்தியாகின்றன. அந்த உணவு மழையினால் விளைகின்றது. அந்த மழை பெய்வதோ முனிவர்கள் செய்கின்ற வேள்வியின் பயனாக. அந்த வேள்வி சுயநல உணர்வின்றி உலக நன்மைக்காகவே செய்யப்படுகின்றது. அந்த வேள்விகளைச் சரியாகச் செய்யும் விதிமுறைகளை வேதங்கள் போதிக்கின்றன. அந்த வேதங்களோவெனில் பரம்பொருளிடமிருந்தே வெளிப்பட்டவை. யாகமாகவும், யாகப் பொருளாகவும், யாகம் செய்பவராகவும் விளங்குபவர் அந்தப் பரமாத்மாவே. இது ஒரு சுழற்சி முறை. இந்த சுழற்சி முறையில் இதனைப் பாதுகாக்க மனிதர் தம் கடமைகளை முறையாகச் செய்ய வேண்டியது மிக மிக அவசியம். இதனைப் புறக்கணித்து கடமை தவறுவதால் தான் இந்த வாழ்க்கைச் சக்கரச் சுழற்சி முறை தவறிப் போகின்றது! என்று.

ஆகையால் தான் செயலால் உயர்ந்தவர்கள் தங்கள் செயலை சமுதாய நன்மைக்காக என்றே முழுமையாக அர்ப்பணிக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் சேவையால் தான் உலகம் செழிக்கிறது. அவர்களது சேவை சுயநலமற்ற வேள்வியாக நடைபெறுகிறது. அவர்களால் தான் மழை பெய்கிறது. மழையால் பயிர்கள் தழைக்கின்றன. அதனால் உணவு கிடைக்கின்றது. உணவால் உலகம் நிறைவாக வாழ்கின்றது.

இதற்கு மாறாக சுயநல எண்ணத்துடன், தான் வாழ்ந்தால் போதும் என்று நினைத்துத் தனக்கு வசதியான விதத்தில், செயல்களை இயற்கைக்கு விரோதமாக மனிதன் செய்கின்றபோது, அவன் புலன்களுக்கு அடிமைப்பட்டுப் போக வாழ்வில் உழலும் பாவத்தைப் புரிகிறான். பாவம் நிறைந்து வாழ்பவன் வாழ்க்கை வீண். அதோடு பூமிக்கும் பாரம். அவன் வாழ்வதை விட இறப்பதே மேல். இப்படிப்பட்ட பாவிகளால் தான் தர்ம சுழற்சி தடைபடுகின்றது. இயற்கை பாதிப்பு அடைகின்றது. முறையாகவும், தர்மப்படியும் நடக்க வேண்டிய செயல்பாடுகள் தாறுமாறாக மாறிப்போய் வன்முறை, பேரழிவு, இயற்கையின் சீற்றம் என்று எல்லாமே துன்பத்தைத் தருபவையாக மாறிப் போய்விடுகின்றன.

பிரபஞ்ச சக்திகளெல்லாம் சுய அர்ப்பணிப்புடன் தமது கடமைகளை வேள்வியாகச் செய்கின்றன. பலனை எதிர்பார்க்காமல் சேவையாகச் செயல்படுகின்றன. பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் ஒளியைத் தருகின்றன. காற்று வீசுகின்றது. மழை பொழிகின்றது. மரங்கள் கனிகளைத் தருகின்றன. பருவ காலங்கள் முறைப்படி மாறுகின்றன. இவையெல்லாம் தமது கடமைகளை மனித சமுதாயத்திற்கு சேவையாகவே செய்கின்றன. இவை நம்மிடம் எதையுமே பலனாக எதிர்ப்பார்பப்தில்லை.

இயற்கையைப் பார்த்துத் தனி மனிதன் இந்த இயற்கையோடு இணைந்து சுயநலமில்லாமல் சேவையாகத் தன் கடமைகளைச் செய்கின்றபோது குடும்பம் உயர்வடைகிறது. சமுதாயம் மேன்மையுறுகின்றது. இந்த சமுதாய உயர்வை வரலாறு பொற்காலம் என்று போற்றுகின்றது. மாறாக சுயநலம் மட்டும் இருந்து போர், வன்முறை, அடக்குமுறை போன்ற கொடுமைகள் மிகுந்த சமுதாயச் சீரழிவை இருண்ட காலம் என்று தூற்றுகிறது.

தனி ஒருவரின் எண்ணப்போக்கும் கடமையுணர்வும், தன்னலமற்ற சேவையும் உலக இயக்கத்தின் போக்கையே அசையச் செய்யும். மாற்றி அமைக்கும். உலகில் ஏற்படும் பேரழிவுகள், வௌ்ளப் பெருக்கு, பூகம்பம் போன்றவையெல்லாம் மனித மனக் கொந்தளிப்பின் வெளிப்பாடே ஆகும். அதே சமயம் நூறுபேர் நல்ல எண்ணங்களுடன் அன்பை வெளிப்படுத்தி உலக அமைதிக்காக தியானிக்கின்றபோது அது இயற்கையை சாந்தப்படுத்தும்.

அத்தகைய உத்தமர்கள் மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் வாழ்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் தங்களுக்கென்று எதையும் செய்யாமல் உலக நன்மைக்காகவே தம் கடமைகளைக் குறைவின்றிச் செய்கின்றார்கள். ஜனகர் போன்ற மகா புருஷர்கள் தன்னலம் கருதாமல் தங்கள் கடமைப் பணிகளை செம்மையாகச் செய்தார்கள். பரமாத்மாவின் பூரண அருளைப்பெற்ற பின்பும் அவர்கள் உலக நலன்களுக்காகக் கடமையாற்றி இருக்கின்றனர். ஏனெனில் தமது கடமைகளைச் செய்வதன் மூலமாகவும், வாக்குறுதிகள் மூலமாகவும் மேன் மக்கள் புரியும் செயல்களைப் பார்த்து மக்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். மேலும் அவர்கள் தமது வாக்குகளால் புலப்படுத்தும் நெறிமுறைகளை மற்றவர்கள் ஏற்றுச் செயலாற்றுகிறார்கள்.

மேலும் பகவான் இப்படித் தொடர்ந்து கூறுகின்றார். “ஞானிகள் விருப்பு வெறுப்பு இல்லாத ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். அவர்கள் பகுத்தறிகின்ற விவேக புத்தியுடன் சிந்தித்து விருப்பம், பற்று, மமதை, வருத்தம் போன்ற எந்தப் பாதிப்பும் இல்லாமல் கடமையை உணர்ந்து தமக்குரிய செயல்களைச் செய்கின்றார்கள். வீரனும் அறிவிற் சிறந்தவனுமாகிய நீயும் இந்த நிலையில் நின்று உன் வீர இயல்புக்கு ஏற்றபடி போர் புரிவாய்!” என்கிறார்.

சாதாரண மனிதனின் ஒவ்வொரு புலனும் செயல்படும் விதத்தில் விருப்பு வெறுப்பு கலந்திருப்பதை நாமே நம் அனுபவத்தில் நன்றாக உணரலாம். கட்டின வீட்டிற்குக் குற்றம் சொல்ல ஆயிரம் பேர்! என்று ஒரு பழமொழி உண்டு. உலகத்தையே நம் மனப் போக்கிற்கு ஏற்றபடி தான் நாம் பார்க்கப் பழகியிருக்கிறோம். ஒருவரைப் பற்றி நம் மனதில் ஓர் அபிப்ராயம் தோன்றிவிட்டால் உடனே, அவர் சரியில்லை என்று சொல்லிவிடுகிறோம், இது தவறான பார்வை. நம்முள் பார்வை மாற்றம் ஏற்பட வேண்டும். இறைவனின் படைப்பு இவ்வளவுதான் என்று ஏற்கின்ற மனப் பக்குவம் ஏற்பட வேண்டும். ஆகையால் நாம் புலன்களுக்கு அடிமையாகாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும். விருப்பு-வெறுப்பு இவ்விரண்டு உணர்ச்சிகளுமே மனிதனின் பகைவர்கள். நாம் நம் கடமையை அறநெறியாக மதித்து நிறைவேற்ற வேண்டும். கடமையை நிறைவேற்றும்போது மரணம் ஏற்பட்டாலும் அது நல்லதே! என்று கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் சொல்கிறார்.

ரஜோ குணத்தால் ஏற்படுகின்ற தீவிர ஆசை தான் ஒருவனைத் தீயவழியில் செல்லத் தூண்டுகின்றது. பாவச் செயல்களைச் செய்ய வைக்கிறது. ஆசை அதிகரிப்பதால் தான் குரோதம் விளைகிறது. ஆசை மேலும் மேலும் வளருமே தவிர ஒரு நாளும் திருப்தி அடையாது. போதும் என்ற மனம் ஆசை உள்ளவனுக்கு இருப்பதே இல்லை. ஆசையே மாயையாக இருந்து மனிதனை ஆட்டிப் படைக்கின்றது.

காமம் எனப்படும் ஆசையின் தன்மை குறித்து கிருஷ்ணர் இவ்வாறு கூறுகின்றார். “எப்படி புகை தீயை மறைத்திருக்கிறதோ, தூசி கண்ணாடியை மறைக்கிறதோ, ஜவ்வுப்படிவம் கருப்பையை மூடியிருக்கின்றதோ அதுபோலக் காமம், பாவம் செய்ய விரும்பாத மனப்பான்மையைத் தடுத்து பலவீனப்படுத்துகிறது. மனிதனைப் பாவம் செய்யத் தூண்டுகிறது. குந்தி மைந்தனே! ஆசை, தீயைப் போல் எரிக்க எரிக்கத் தணியாதது. விவேகிகளான சாதனையாளர்களுக்கு ஆசை எதிரி. ஆசை வயப்பட்ட மனிதனின் பகுத்தறிவு மறைக்கப்பட்டு விடுகிறது.

நம் புலன்களிலும் மனதிலும் புத்தியிலும் மாயையால் பரவியிருக்கின்ற ஆசையை வெல்ல நாம் முதலில் புலன்களை அடக்க வேண்டும். நம் பாரத தேசத்தில் பிறந்த ஞானிகள் இதை நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை ஒழித்தால் இன்பம் பெறலாம்! என்றார் கௌதம புத்தர். தீயதைப் பார்க்காதே! தீயதைக் கேட்காதே! தீயதைச் சொல்லாதே! என்று குரங்கு பொம்மைகள் நீதி உரைக்கின்றன. புலன்கள் அடங்கினால் மனம் அடங்கும். மனம் அடங்கினால் புத்தி அடங்கித் தெளிந்த நல்லறிவு பிரகாசிக்கும். இந்த நிலையில் வந்த பிறகு தான் ஆசையை நம்மால் அழிக்க முடியும். அழியக்கூடிய அனைத்தின் மீதும் வைக்கின்ற ஆசை அழிவையே தரும்.

இதை நமக்கு உணர்த்தத்தான் கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், ‘உடலை விட மேம்பட்டவை ஐம்புலன்கள். புலன்களை விட மேம்பட்டது மனது. மனதை விட மேம்பட்டது அறிவு. இந்தப் புத்தியை விட மேம்பட்டது காமம் எனும் ஆசை. ஆகையால் எல்லாவற்றிலும் வலிமை மிகுந்ததான காமத்தைக் கட்டுப்படுத்து. எளிதில் வெல்ல முடியாத இந்த எதிரியை வீழ்த்திவிடு. நீ எல்லா வகையிலும் வெற்றி பெறுவாய்!’ என்கிறார்.

எனவே ஆன்மீக சாதகர்களாகிய நாம் ஞானத்தைப் பெறுகின்ற நிலையில் அதை வெறும் அறிவாக மட்டும் வைத்துக் கொள்ளாமல், செய்வதை யோகமாகச் செய்து, இன்பம், துன்பம் என்று எது வந்தாலும் அதனைப் பிரசாத புத்தியுடன் ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். இப்படி ஏற்றுக் கொள்கின்றபோது அந்த இன்பமோ, துன்பமோ நம்மைத் தாக்குவதில்லை. தாக்கத்தை ஏற்படுத்தாத எதுவும் கர்மாவாக மாறாது. இந்நிலையில் பற்றின்றிச் செயல்படுகின்ற நம் வாழ்க்கையில் எல்லாம் வரும், போகும். ஆனால் அவை நம்மைப் பாதிக்காது. நாம் சரியாகச் செயல்பட்டால் அதன் மூலம் கர்மா அழியும். ஆத்மாவாகிய என்னுடன் இணைந்து இருத்தல் யோகம் எனப்படுகிறது. இந்நிலையில் பற்றின்றி நம் கடமைகளைச் செய்து கொண்டே போவது தான் கர்மயோகம் என்றாகிறது.

அன்பாகப் பேசி, பிரதிபலனை எதிர்பாராமல் அடுத்தவருக்கு உதவி செய்து, என்ன சிரமமென்றாலும் அதனை ஏற்றுக்கொண்டு அனுசரணையாகச் செயல்படுபவர்களே உண்மையான கர்மயோகத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆகின்றனர். அவர்களை எல்லோரும் நல்லவன் என்று பாராட்டுவார்கள்.

கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே! என்ற கீதையின் பொருள் இப்போது புரிந்திருக்குமே! இந்த உயர்ந்த நிலையை அடைவதை நமது ஈகோ தான் தடுக்கும். எதைச் செய்தாலும் நாம் என்ன செய்கிறோம்? நான் தான் செய்தேன்! நான் தான் கொடுத்தேன்! என்று சொல்லாதவர்கள் இருக்கிறோமா? ஆனால் சூரியன் நான் தான் வெளிச்சம் தருகிறேன் என்று மார் தட்டுகிறதா? மழை நான் தான் பயிர்களை வளரச் செய்கிறேன் என்று கட்டணம் வசூலிக்கிறதா? என்று யோசித்துப் பாருங்கள்! என்று கீதா வகுப்பில் குரு ஸ்வாமி பரமாத்மானந்தா அவர்கள் எங்களைப் பார்த்துக் கேட்கும்போது நாங்கள் வெட்கத்துடன் குனிந்து கொள்வோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இனி நாம் ஈகோ இல்லாமல் நமது கடமைகளை சேவையாகச் செய்வோம். இப்படி நம்மை நாம் இறைவனால் இயக்கப்படும் கருவியாக நினைத்துப் பணிவுடன் செயல்படச் செயல்பட, அகங்காரம் இல்லாமற் போகும். அதன்பின் இறைக் கருணை மட்டுமே நம்மில் நிலைத்திருக்கும்.

இதுவே பகவத்கீதை – கர்மயோகத்தில் நாம் கொள்ள வேண்டிய படிப்பினை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s