மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -11

வேதங்கள் – “ஞான காண்டம்”.” கர்ம காண்டம்” என்று இரண்டு பிரிவுகளாக விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஞான காண்டம் என்பது தன்னைப் பற்றிய உண்மைகளை, தானாகிய சத்தியத்தைத் தன்னுள்ளேயே ஆராய்ந்து அறிவால் அறிவது. தன்னைப்பற்றி தன்னால் தானே அறிந்துகொள்ளும் வழிமுறைகளை எடுத்துரைப்பது ஞான காண்டம். இந்த அறிவைப் பெறுவதுதான் ஆன்மீகம். ஆனால் இந்த ஞான மார்க்கத்தைத் தேடி அடையப் பூர்வஜென்ம புண்ணியமும், இறையருளும் நமக்குக் கிடைக்க வேண்டும். ஞானத்தை அடைய வேண்டும் என்ற தேடல் நமக்குள் எழ வேண்டும்.

அடுத்ததான கர்ம காண்டம் என்ற பிரிவில் யாகம், யக்ஞம், மந்திரங்கள், ஸ்லோகங்கள், உலக விஷயங்களில் தமக்கு விருப்பமானவற்றை அடைய உரிய தேவதைகளை, உரிய முறையில் பூஜை, சடங்குகள் செய்து வழிபாடு செய்கின்ற விதிமுறைகள், போன்ற உலக வாழ்க்கையில் முன்னேறுவதற்கான மந்திர, பூஜை முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

மக்கள் சமுதாயம் பெரும்பாலும் வேதங்களிலிருந்து எடுத்துப் பயன்படுத்துபவை கர்ம காண்டத்தில் உள்ளவைகளையே. இவற்றைப் பின்பற்றுபவர்கள் உலக சுகபோகங்களை வாழ்க்கையின் பயனாக நம்பி வாழ்பவர்களாக இருக்கிறார்கள். ஞான காண்டத்தைப் பயிலுபவர்கள் ஆத்மாவைப் பற்றி அறிந்து, ஆத்ம சாதனையில் ஈடுபட்டு பரமாத்மாவிடம் ஒன்றும் உறுதியான அறிவைப் பெறுகின்றனர்.

அர்ச்சுனனுக்கு அறிவுரை கூற முற்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு முதலில் ஸ்ரேயஸ் எனப்படும் உயர்வைத் தரக்கூடிய ஞானத்தை எடுத்துரைத்தார். பிறகு அவன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும், செயல்பட வேண்டிய முறையையும் கூறினார். இதைக் கேட்ட அர்ச்சுனன் மீண்டும் குழம்பிப் போனான். அவன் கிருஷ்ணரைப் பார்த்து, “ஜனார்த்தனா! உங்கள் கருத்துப்படி ஞானம் தான் சிறந்தது. நான் உத்தமமான ஞானத்தை நாடவே விரும்புகின்றேன். கொடுமையான போர்ச் செயலில் ஈடுபட விரும்பவில்லை. ஆனால் நீங்களோ மெய்யறிவை நாடு! என்றும் சொல்கிறீர்கள்! செயலில் ஈடுபடு! என்றும் சொல்கிறீர்கள். உங்களுடைய இந்த மாறுபட்ட அறிவுரைகளால் எனக்குக் குழப்பம் தான் ஏற்படுகிறது. தீர்மானமாக ஒரு வழியைக் காட்டி, அதன் மூலம் நான் நலன் பெற வகை செய்யுங்கள்!” என்றான்.

இந்த நேரத்தில் கண்ணன் மனிதகுலம் அறிந்துகொள்ள வேண்டிய மிகப்பெரிய உண்மையை அர்ச்சுனனுக்குக் கூறுகின்றார். நான் யார்? என்ற உண்மையை அறிகின்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு, வெளி உலகத் தொடர்பிலிருந்து விடுபட்டு ஞானத்தில் தம்மை இணைத்துக்கொள்ள முற்படுகின்ற ஞான யோகிகளுக்கு ஞான யோகத்தில் ஈடுபாடு இருக்க வேண்டியது அவசியம் என்றும், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுத், தான் செய்ய வேண்டிய கடமைகள் பல இருக்கின்ற நிலையில் அந்தக் கடமைகளை எந்தவிதக் குறைபாடும் இன்றித் தர்மநெறியில் நின்று செய்ய வேண்டிய கர்மயோகிகளுக்கு கர்மயோகத்தில் ஈடுபாடு இருக்க வேண்டியது மிக அவசியம் என்றும் அவர் வலியுறுத்துகின்றார். அதுதான் கர்மயோகமாக இங்கு விரிகின்றது.

ஒரு செயலை அந்தச் செயலுக்காக அந்தச் செயலிலேயே ஒன்றிச் செய்வது கர்மயோகம் எனப்படுகிறது. தான் அப்படிச் செய்கின்ற அச்செயலை, அச்செயலினால் வருகின்ற பயனை, அது எதுவாக இருந்தாலும் தெய்வத்திற்குச் சமர்ப்பணம் செய்வதே கர்மயோகியின் வாழ்க்கையாகிறது. தன்னை விடச் செயல் முக்கியம் என்னும் மனநிலை கர்மயோகியின் வாழ்க்கை நெறி.

உலகம் கர்ம பூமி. இதில் ஓயாமல் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. செயல்தான் உலகுக்கு முக்கியம். மனிதன் அல்ல. ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பூமியில் இயங்காமல் சும்மா இருப்பது என்பது சாத்தியமில்லை. சோம்பேறியாய் எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதை விடத் தனக்கும் பிறருக்கும் இந்த சமுதாயத்திற்கும் நன்மை தருகின்ற செயல்களைச் செய்பவர்களே கர்மயோகி எனப்படுவர்.

உடம்பெடுத்தால் செயல்புரியத் தான் வேண்டும். செயல்படாமல் துறவிகளால் கூட இருக்க முடியாது. ஏனெனில் இந்த உடல் இயக்கத்தோடு கூடியது. உலகின் இயக்கத்தோடு சேர்ந்து உடலும் இயங்குகிறது. செயல்படுவதுதான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது கர்மாவை அழித்தல். இருக்கின்ற கர்மாவை அழிப்பதோடு, அதர்மமாகச் செயல்பட்டு மேலும் கர்மாவை இனி ஏற்றாமலும் விழிப்போடு செயல்பட வேண்டும். ஆன்மீகப் பாதையில் விட்டுக் கொடுத்தல் இல்லை. ஒரே லட்சியமாக ஆன்மாவை நோக்கியே செல்ல வேண்டும். தடைகள், இடையூறுகள் வந்தாலும் நின்று தயங்காமல் கடமைகளைச் செய்துகொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும்.

விருப்பு வெறுப்புகளை அகற்றி இன்ப துன்பங்களைப் பொருட்படுத்தாமல் இருப்பவற்றை இருப்பதுபோலவே ஏற்றுக்கொண்டு, புலன்களைத் தன் வசத்தில் இருக்கச்செய்து, செய்யவேண்டியவற்றைச் சரியாகச் செய்துகொண்டே அவற்றின் பலனில் பற்று வைக்காமல் செயல்படுபவன் கர்மயோகி ஆகிறான். எதைச் செய்தாலும் அவனிடத்தில் சமநிலையும், அமைதியும், ஆனந்தமும் குடிகொண்டிருக்கும். மேலும் பலன் கருதாமல் செயல்படுபவனுக்குக் கர்மா ஏறாது.

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்பது கர்மயோகத்தில் கண்ணனின் வாக்கு. நமக்கு முன்னால் தற்போது நடப்பவற்றை நாம் சரியாகப் பயன்படுத்திக் கையாளத் தெரிந்துகொண்டால் அது தருகின்ற பலனைச் சரியாகத் தரும். நம்முடைய செயல் என்னவென்றால் கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துக்கொண்டு நிகழ்காலத்தை வீணாக்காமல் முழுப் பொறுப்புடன் நமது கடமைகளைச் சரியாகச் செய்துவிட வேண்டியதுதான். இதைச் செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று கனவு கண்டு பலனை எதிர்பார்த்துச் செயல்படக்கூடாது.

செய்வதை சரியாகச் செய்துவிட்டு, வருவதை எப்படி என்றாலும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதாவது செய்பவற்றை ஈஸ்வர அர்ப்பணமாகச் செய்து வருபவற்றை ஈஸ்வரப் பிரசாதமாக ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். ஆணவம் அழிந்தால் தான் இந்த நிலை ஏற்படும்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் குடும்பங்களில் தமக்குரிய கடமைகளைச் சிரத்தையாகச் செய்யத் தான் வேண்டும். ஞானிகளும் கடமையாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமுதாய நன்மை கருதி உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்துகொண்டு தியானத்தின் மூலம் அமைதி அலைகளைப் பரவச் செய்து அஞ்ஞானத்தை அகற்றுகின்ற அரும் பணி ஆற்றிக்கொண்டு இறையுணர்வில் இருந்துகொண்டே அவர்கள் தம் கடமைகளில் ஈடுபடுகின்றார்கள்.

துறவிகள் விவகாரங்களில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பதையும், சம்சாரிகள் அவர்களை ஆதரித்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்துகொடுப்பதையும் பார்க்கின்ற ஞானமில்லாத சோம்பேறிகள் தாங்களும் எதிலும் ஈடுபடாமல் சும்மா இருக்கப்போவதாகச் சொல்லிப் பொழுதை வீணாக்குவது பிழையான செயல்பாடு ஆகும். பிறவி எடுத்தால் செயல்படத்தான் வேண்டும். தனக்குரிய கடமைகளைச் செய்யத்தான் வேண்டும்.

அவதார புருஷனாகிய கிருஷ்ணரே ஒரு நிமிடம் கூட சும்மா இருக்கவில்லை. பிறந்த அன்றைக்கே அவர் தன் பயணத்தைத் துவங்கி விட்டார். குழந்தை கண்ணன் பிறந்தவுடனேயே தந்தையாகிய வசுதேவர் அவரைச் சிறையிலிருந்து யசோதையின் வீட்டிற்குக் கூடையில் வைத்துத் தூக்கிக்கொண்டு போனார். அதன் பிறகு ஏகப்பட்ட அசுரவதம். கிருஷ்ண லீலைகள். இப்படி அவர் ஓயாமல் செயல் புரிந்தார். மகா பாரதத்தில் கிருஷ்ணரின் வாழ்க்கை கர்மயோகத்திற்கு மிகச் சரியான எடுத்துக்காட்டு.

தெய்வாம்சமான ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு நொடியில் எல்லாவற்றையும் மாற்றி அமைத்திருக்க முடியும். ஆனால் அவர் ஞானத்தை வைத்துக்கொண்டு, தமது தெய்வீகத்தை மறைத்துக்கொண்டு, கர்ம மார்க்கத்தில் செயல்பட்டுத் தேரோட்டியாக அர்ச்சுனனுக்கு சேவை செய்தார். அந்நிலையில் தேரின் சாரதி செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் அவர் குறைவறச் செய்தார். குதிரைகளைக் குளிப்பாட்டி, அலங்கரித்து, தேவையான உணவைக் காலம் தவறாமல் அவற்றிற்கு அளித்து, நீர் அருந்தச் செய்து உடலை வருடிவிட்டு என ஒரு சாரதி செய்ய வேண்டிய அனைத்தையும் ஓய்வின்றி ஒன்றுவிடாமல் செய்தார் என்றால் அதன் பொருள் என்ன? பிறவி எடுத்த ஒவ்வொருவரும் தமக்கு உரிய கர்மாவைச் சலிப்பின்றிச் செய்தே ஆக வேண்டும். இப்படிச் செய்வதன் மூலமே கர்ம வினைகள் அழியும். தெய்வமே என்றாலும் அவதாரம் எடுத்துவிட்டால் எடுத்த பிறவிக்கேற்ப நடந்துகொள்ளத்தான் வேண்டும் என்பதை அவரே நிரூபித்துக் காட்டியுள்ளார்.

ஆசிரமங்களில் கூட சென்று பார்த்தால் அங்குள்ள துறவிகளின் அன்றாட அலுவல்களில் காலை 11மணிக்குக் கர்மயோகம் என்று போட்டிருக்கும். அதன் பொருள் ஆசிரமத்திலுள்ள மாணவர்கள் ஆசிரமத்திற்குரிய அத்தனை வேலைகளையும் செய்ய வேண்டும் என்பது. ஆசிரமம் முழுவதையும் அதன் சுற்றுப் புறத்தையும் தூய்மை செய்தல், தோட்டத்தைப் பராமரித்தல், கால்நடைகளைக் குளிப்பாட்டி உணவிடுதல், காய்கறி, பூக்களைப் பறித்தல், பாத்த்pரங்களைச் சுத்தம் செய்தல் போன்றவை கர்மயோகம் என்ற பெயரில் அங்கு செய்யப்படும் என்று குரு சொல்வார்.

நாம் ஒன்றைச் செய்கின்றபோதே வரக்கூடிய பலனை எதிர்பார்த்துச் செய்யக்கூடாது. இதைச் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே என்ற மன நிறைவோடு செய்வதோடு என்ன பலன் கிடைத்தாலும் அவனருளால் கிடைத்தது என்று நினைத்தே அதை ஏற்க வேண்டும் என்பது தான் கர்மயோகம். இதைத் தான் கிருஷ்ணர் ‘கடமையைச் செய்! பலனை எதிர்பார்க்காதே!’ என்றார். இதன் ஆழ்ந்த உட்பொருளை நன்கு சிந்தித்துப் புரிந்துகொள்ள வேண்டும். இது புரியாததால் தான் அர்ச்சுனன் கிருஷ்ணரிடம், என்னை நீங்கள் குழப்புகிறீர்களே! என்கிறான்.

krishna advices arjuna
“நான் கடவுள்! நான் ஆத்மா! என்று நீங்கள் கூறினீர்கள். அதை உணர்வதற்கும், எனக்குள் இருக்கிற ஆத்மாவை வெளிக்கொணரவும் தனிமையில் மலைச்சாரலில் இருந்து தியானமும், தவமும் செய் என்று சொல்லாமல் செயல்படு! என்று சொல்கிறீர்களே, இது முரண்பாடாக இருக்கிறதே! ஞானம் பெறுபவனுக்குச் செயல் எதற்கு?” என்று அவன் கேட்டான். எனக்கேற்றது துறவறமா? இல்லறமா? ஞானத்தில் ஈடுபடும்போது செயல்பட வேண்டுமா? என்பது அர்ச்சுனனின் கேள்வி.

மேலும் அவன், “செயலில் என்னை ஈடுபடச் சொல்கிறீர்கள். செயல்படும்போது பலன் வரும். அந்தப் பலனில் வெற்றி அல்லது தோல்வி கிடைக்கும். இவற்றில் சுய மதிப்பீடு இருக்கும். சுய மதிப்பீடு செய்கின்றபோது எனக்குள் ஒரு பெருமிதம் ஏற்படும். அந்தத் தன்மதிப்பில் அகங்காரம் வெளிப்படும். அகங்காரத்தால் அழிவு ஏற்படும். செயல்படுவதால் இப்படித் தொடர் விளைவுகள் ஏற்படும். எனது கர்மா அதிகரிக்கும். இது எனக்குத் தேவையா? என்னை வீழ்த்துவதற்குத் தான் இப்படியெல்லாம் சொல்கிறீர்களா?” என்று வினவுகின்றான்.

“ அர்ச்சுனா! நீ செயல்படாமல் இருக்க முடியாது. செயல்படுவதற்குத் தான் இந்த உடல் கொடுக்கப்பட்டிருக்கிறது. செயல்படாத உடல் நோயுற்று அழிவடையும். சரீரம் அழுகிப்போகும் தன்மையுடையது. செயல்பட்டுத்தான் அதைக் காப்பாற்ற முடியும், உடல் நலத்தைக் காப்பதற்கே நீ இயங்கித்தான் ஆக வேண்டும். ஞானம் பெற்ற பிறகு கூட சும்மா இருந்துவிட முடியாது. மனதில் சாந்தி ஏற்பட்டாலும் உடல் தேவைகளுக்காகச் செயல்படவே வேண்டும்!” என்று கிருஷ்ணர் பதிலுரைத்தார்.

“கர்மம் செய்கின்றவர்களுக்கு விருப்பு வெறுப்பு ஏற்படும். நுட்பமான ரசனை உள்ளவர்களுக்கு நுட்பமான பிரச்னைகள் ஏற்படும். நீ உலகத்தை உள்ளது உள்ளபடி பார்க்கவில்லை. விருப்பு வெறுப்பு உணர்வின் வாயிலாகப் பார்க்கிறாய். ஒவ்வொருவரின் பார்வையும் அவரவர் அனுபவங்களுக்கேற்ப, பெற்ற அறிவிற்கேற்ப, கொண்டுள்ள விருப்பு வெறுப்பிற்கேற்ப ஒரு குறுகிய வட்டத்திற்குள் தான் அமைந்திருக்கிறது” என்ற கண்ணனிடம், சரியான பார்வை எது? என்று அர்ச்சுனன் கேட்கிறான்.

என்ன நடந்தாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதன் மூலம் பிரச்னைகளை வெல்ல முடியும். விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்ய முடியும். ”எது நடந்தாலும் அதை அப்படியே ஏற்றல்” என்ற ஒரு கோட்பாட்டைக் கடைப்பிடிக்க முயற்சித்துப் பார்ப்பவர்களுக்குக் கர்மாவின் காரணமாக வாழ்க்கையில் தாங்க முடியாத துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும், அவை இந்த மனப்பான்மையுடன் எதிர்கொள்ளப்படுவதால் நாளடைவில் சிறிது சிறிதாகக் குறைந்து பிறகு எல்லாம் சரியாக வந்துவிடும். இப்படி ஏற்றுக்கொள்வதைத் தான் பிரசாத புத்தி என்று கீதை சொல்கின்றது.

இப்படி இருக்கலாம், அப்படி நடந்திருக்கலாம் என்றெல்லாம் விருப்பு வெறுப்போடு சம்பந்தப்படுத்தி, இருப்பதை மாற்றிப் பார்க்காமல் எப்படி இருக்கிறதோ அப்படியே அதனை ஏற்றுக் கொள்கின்ற மனப்பக்குவம் ஏற்பட்டுவிட்டால் பிறகு சஞ்சலமில்லை. இந்நிலை நமக்கு ஏற்பட்டுவிட்டால் பிறகு விருப்பமானவை நிகழ்கின்றபோது துள்ளவும் மாட்டோம் விரும்பாதவை நிகழ்கின்றபோது துவளவும் மாட்டோம். அதோடு கூட, வருகின்றவற்றை என் கர்மாவிற்கேற்றபடி இறைவனால் அது எனக்கு அருளப்பட்டது என்ற உணர்வுடன் எது வந்தாலும் அதைப் பிரசாதமாக ஏற்கின்ற மனநிலை ஏற்பட்டுவிடும்.

கடையில் வாங்குகின்ற பூக்களுக்கு இல்லாத மரியாதை கோவிலில் இறைவன் பாதத்திலிருந்து எடுத்து அர்ச்சகரால் நமக்குத் தரப்பட்ட மலருக்கு ஏன் கிடைக்கிறது? அதனை பக்தியுடன் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொள்வது ஏன்? அது இறைவனிடமிருந்து நமக்குக் கிடைத்த பிரசாதம் என்று நினைப்பதால் தானே! இப்படித்தான் நமக்கு வருகின்ற அனைத்தையும் நாம் ஏற்க வேண்டும். நல்லது வந்தாலும், நல்லது அல்லாதன வந்தாலும் சமமாக ஏற்க வேண்டும். இப்படி நாம் ஏற்கின்றபோது நாளாவட்டத்தில் விருப்பு வெறுப்பு இல்லாமற் போய்விடும். யதார்த்தத்தை ஏற்கின்ற மனநிலை சிறந்தது.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். பகத்கீதையை ஸ்லோகம், ஸ்லோகமாக வாசித்துப் பொருள் விளக்கம் கொடுத்துக்கொண்டு போனால் அது ருசிக்காது. கீதை நமக்கு என்ன சொல்கிறது? என்பதைத் தான் பார்க்க வேண்டும். ஏனெனில் கீதை வாழ்க்கைத் தத்துவ விளக்கம். இறைவனே நமக்காக உரைத்தது. இதைச் சொல்வதும் இறைவன். நமக்குள் இருந்து அதைக் கேட்பதும் அவனே. இந்த அற்புத அமைப்பு – பிரம்மமே சொல்லி பிரம்மமே கேட்கிறது என்ற கருத்து, உலகில் வேறு எந்த நூலிலுமே பார்க்கமுடியாத ஓர் அற்புத விளக்கம்.

நம்மைப்பற்றியும், நமக்கு ஏற்படுகின்ற விவகாரங்களைப்பற்றியும் பேசுவது தான் கீதை. அர்ச்சுனன் என்ன கேட்டான்? அதற்குக் கிருஷ்ணர் என்ன பதில் சொன்னார்? என்பதை மட்டும் படித்தால் அது வெறும் கீதைப் பாடம் மட்டுமே. அது அறிவை மட்டும் அளிப்பது. அறிவை விட நாம் பெறுகின்ற அனுபவம் தான் நமக்கு உதவக்கூடியது. கண்ணன் கூறியவற்றை நமது வாழ்க்கைக்கு ஏற்றபடி போட்டுப் பார்த்து, சிந்தித்து நம்மைப் பாதிப்பவற்றையும் புரிந்துகொள்வதே கீதா உபதேசம். இ;ப்படி உபதேசத்தின் வாயிலாகத் தான் மனிதன் தன்னைத் தெய்வத்தன்மைக்கு உயர்த்திக்கொள்ள முடியும்.

இந்த விதத்தில் பகவத்கீதையை அறிவதால் மனம் விசாலமடையும். வாழ்க்கையை உள்ளது உள்ளபடி மனம் ஏற்கும். இப்படி ஏற்கின்ற போது நடுநிலைத் தன்மை ஏற்படும். எனது, உனது என்ற வேறுபாடுகளின்றி ஒற்றுமை ஏற்படும். வாழ்ந்துகொண்டு போகும்போதே வீழ்ச்சியற்ற, அமைதியான, மகிழ்ச்சியான மன நிலை ஏற்படும். இப்படி சிந்தித்துப் பார்த்து ஆராய்ந்து அறிகின்றபோது ஏற்படுவது தான் ஞானம்.

கீதையைப் படிப்பதோடு நின்றுவிடாமல், அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற பிரச்னைகளில் நான் அறிவுபூர்வமாக விருப்பு வெறுப்பின்றி சமநிலையில் நின்று செயல்படுகின்றேனா? அல்லது விருப்பு வெறுப்புகளில் சிக்கி, நடுநிலை தவறி, உணர்ச்சிபூர்வமாகச் செயல்படுகின்றேனா? என்பதைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டியது நம் கடமை.

Advertisements

2 thoughts on “மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -11

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s