மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -10

“புலன் வழி செல்லாதே! புலன்களைக் கட்டுப்படுத்தி ஆத்மாவை நோக்கி நீ உள்முகமாக உன்னைச் செலுத்துகின்ற போது பேரின்பப் பாதை உனக்குள் விரிகின்றது!” என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

ஐம்புலன்களின் வழியே மனம் வெளியில் பாய்ந்தால் பிளவுபடுகின்றது. புலன்கள் வழியாக மனம் சிதறுகின்றது. ஆழ்ந்த கவனத்துடன் ஒன்றைச் செய்யவேண்டுமென்றால் மனம் ஒன்றுபட வேண்டும். பராக்குப் பார்த்துக் கொண்டு பாடம் படித்தால் அது மண்டையில் ஏறாது. உலகத்தையே மறந்த நிலையில் ஈடுபடும் ஆராய்ச்சிகளால் தான் விஞ்ஞானிகள் பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிய முடிந்தது. மனம் புலன்களின் வழியே விரிந்து வெளியில் செல்லாமல் ஒன்று குவிந்து அறிவுடன் சேர்கின்றபோது அது நன்மையைத் தருகின்றது என்பது புரிகின்றதா?

அறிவின்பால் மனம் செல்கின்றபோது உலக இன்பங்களை அனுபவிக்க அந்த மனம் விரும்பாது. அறிவு புதிய வழி ஒன்றை மனதிற்குக் காட்டுகின்றது. இதுவரை புலன் வழி சென்று பழகிய மனதை ஆன்மீக அறிவின் மூலம் அறிவுடன் சேர்க்கின்றபோது புலன்களின் ஈர்ப்பு அந்த மனதை ஒன்றும் செய்யாது. அப்படிப் புலன் வழி செல்லாமல் முயல்கின்ற மனம் அறிவின் வழி நின்று உலக இன்ப துன்பங்களைப் பெரிதாகப் பொருட்படுத்தாமல் அவற்றை மாயை என்று ஒதுக்கிவிடும். முன்பு அனுபவித்த இன்ப அனுபவங்கள் இந்நிலையில் ஆன்மீக சாதகர்களைத் தூண்டுவதில்லை. ஏனெனில் மனதிற்குரிய புதிய வழியை அறிவு காட்டுகிறது. கீதையை அறிய முற்படுபவர்களுக்கு, சாதாரண இன்பங்கள் இனி கவர்வதில்லை.

புலன் வழி செல்கின்ற மனம் ஒரு பொருளைப்பற்றி அல்லது ஏதேனும் ஒரு விருப்பத்தைப்பற்றி தொடர்ந்து சிந்திக்கின்றபோது, அதில் ஒரு வேட்கை ஏற்படும். அந்த வேட்கை அதனை அடையவும் அனுபவிக்கவும் தூண்டும். அப்படி அடையவும் அனுபவிக்கவும் தடையாக இருக்கும் ஒன்றின்மீது கோபம் வரும். அந்தக் கோபம் மருட்சியைத் தரும். அந்த மருட்சி அல்லது மயக்கம் விவேகத்தை இழக்கச் செய்யும். அந்த விவேக இழப்பு அழிவை நோக்கிச் செலுத்தி அழிவைத் தரும். இதற்குச் சரியான உதாரணம், துரியோதனன்.

நடைமுறை வாழ்க்கையில் குடும்பங்களில் ஏற்படும் போராட்டங்களுக்கும், அழிவுகளுக்கும் இந்தப் புலன் வழி செல்லல் தான் முக்கிய காரணம்;. காதல் பிரச்னைகளை எடுத்து ஆராய்ந்தால் இந்த உண்மை தெளிவாகப் புலப்படும்.
‘புலன்வழி மனதைச் செலுத்தாமல் அறிவு வழி செலுத்தினால் நீ அமைதி காண்பாய். புலன் வழி சென்றால் நீ அழிவாய்!’ என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். கடோபநிஷத்திலும் இது எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆத்மாவைப் பற்றி அறியும் நோக்கத்தில் கேள்விகள் கேட்கும் நசிகேதனிடம் யமன் “ஒரு ஜீவனின் வாழ்க்கைக்கு முன்னால் இரண்டு பாதைகள் இருக்கின்றன. ஒன்று அறியாமையுடன் வாழ்க்கைச் சுகங்களுக்காகப் புலன் வழி செல்கின்ற சிற்றின்பப்பாதை. மற்ற பாதை நல்லதை மட்டும் செய்துகொண்டு நல்லதையே நாடிச் செல்கின்ற பேரின்பப்பாதை. முதல் பாதை அறியாமையும், சந்தோஷமும் நிறைந்தது. இரண்டாவது பாதை அறிவுடைமையும் நன்மையும் நிறைந்த ஆன்மீகப்பாதை” என்று கூறுகின்றான்.

ஆன்மீகப் பாதையில் நடந்து அமைதி அடைந்துவிட்ட மனம் அலைபாயாமல் அடங்குகின்றது. முழுமையான அமைதி அடைய, அடையக் கர்மா கழிகின்றது. தொடர்ந்து அமைதி நிலையிலேயே இருக்கின்றபோது கர்மா கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இல்லாமற் போய்விடும். மேலும் நாம் அமைதி அடைய அடைய நமது சுற்றுச்சூழலும், இயற்கையும் அமைதி அடையும். தனி மனிதனின் மனக் கொதிப்பும் கொந்தளிப்பும் தான் இயற்கையில் எதிரொலிக்கின்றது. எனவே புலன்கள் இருக்கிறபடி இருக்கட்டும். மனதை அவற்றில் கொண்டு சேர்க்க வேண்டாம்.

ஐம்புலன்களை அந்தந்த இடத்தில் வைத்துப் பழகுவதற்குத் தியானம் உதவுகின்றது. ஐம்புலன்கள் வெளியில் செல்ல முயன்றாலும் தியானம் பழகுகின்ற மனம் தானாகவே அடங்கி அமைதியில் மூழ்கி, அறிவு வழியில் செல்கின்றது. ஆகையால் தான் ஆன்ம சாதகர்கள் ஒரு நாளில் இரண்டு முறையாவது தியானம் செய்கின்றனர். தியானப் பயிற்சியால் உடலும் மனமும் அடங்குகின்றன.

புலன்கள் சிதறி நிற்கின்றபோது அறிவு சரியாகச் செயல்படுவதில்லை. அறிவு செயல்படாததால் மன சஞ்சலம் ஏற்படும். மன சஞ்சலத்தால் நிலை குலைந்த தன்மை ஏற்படுகின்றது. நிலை குலைவதால் உயர்ந்த தியானப் பயிற்சியில் இருக்கின்ற ஆத்ம சாதகர் கூடத் திரும்பவும் கீழ் நிலைக்குப் போய் விடுவார். உயர் உணர்வு நிலைக்குப் போனவர்கள் கூட எனக்கு எல்லா சாதனைகளும் வந்து விட்டன என்னும் அகங்காரத்திற்கு ஆட்பட்டு, கர்வம் கொண்டு, கீழ் நிலைக்குப் போய்விடுவர். அங்கே தியானக் குலைவு ஏற்பட்டுவிடும். கர்வமும், அகங்காரமும், மனக்குழப்பமும், தொடர்பு விட்டுப்போவதும் எப்படிப்பட்டவர்களையும் கீழே இறக்கிப் பழைய நிலைக்கே கொண்டு வந்து விடும்.

புலன் வழி செல்லக்கூடாது என்ற விவேகம் துணைக்கு வராவிட்டால் எவ்வளவுதான் ஆன்மீகத்தில் முன்னேறிச் சென்றாலும் வீழ்த்திவிடும் என்று இந்த சாங்கிய யோகத்தில் கிருஷ்ணர் உபதேசித்தார். ‘பிரம்ம ஸ்திதியை அடைகின்றவரை உன்னைப் புலன்கள் வீழ்த்திவிடாமல், பெற்ற விவேகத்தால் நீ உன்னைக் காத்துக்கொள். ஏனெனில் எத்தனையோ பேர் தமது மெல்லிய ஆன்மீகக் கர்வத்தால் இத்தகைய வீழ்ச்சியை அடைந்திருக்கிறார்கள்!’ என்கிறார் அவர்.

அறியாமை இருக்கின்ற வரை சாந்தநிலை, செயல்புரிகின்ற நிலை, செயல் புரிய விரும்பாத சோம்பல் நிலை ஆகிய மூன்று நிலைகள், ஆன்மீகத்திற்குத் தடையாக இருக்கும். நான் ஆன்மீகத்தில் இருப்பதால் எதையும் செய்யாமல் இருப்பேன் என்று சொல்லக்கூடாது. படபடப்பாகச் செயல்பட்டுக்கொண்டே இருக்கவும் கூடாது. அமைதியாகப் பற்றின்றிக் கடமையைச் செய்துகொண்டே இறைநிலையில் தொடர்ந்து இருப்பது தான் உண்மையான ஆன்மீக நிலை.

இந்த உயர்நிலையை அடைந்தவர்கள், உயிர் அழிவற்றது, உடல் அழிவும், மாற்றமும் கொண்டது என்னும் திட உணர்வில் நிலை பெற்று, சமநிலை பெற்று மனதிலுள்ள விருப்பங்களையெல்லாம் ஒதுக்கி விடுவார்கள். தனக்குள் தான் மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் துன்பம், துயரம், சோதனை, விபத்து போன்ற கேடுகள் ஏற்படும்போது வருந்துவதில்லை. சுகம், சௌக்கியம், புகழ், செல்வம் போன்ற நன்மைகள் கிடைக்கும்போது மகிழ்ச்சி அடைவதில்லை.

அவர்கள் ஆசை, பயம், பாசம், பகை, சந்தேகம், வெறுப்பு போன்ற இயல்புகளைக் கடந்தவர்களாக இருப்பார்கள். திடமான அறிவோடு பரமாத்மாவோடு இணைய வேண்டும் என்ற தீர்மானத்தோடு, எப்படி ஆமை தனது நான்கு கால்களையும், கழுத்தையும், வாலையும் முதுகு ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உள்ளடக்கிக்கொண்டு கிடக்கிறதோ, அதைப்போல் ஞானியாகிய, கர்மயோகியாகிய சம புத்தி கொண்டவர்கள் தமது ஐம்புலன்களையும், மனதையும் உலக விஷயங்களிலிருந்து விலக்கி உள்ளுணர்வில் அடங்கி இருப்பார்கள்.

இந்த இடத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரிடம் சாதாரண மனிதருக்கும், புலன் அடக்கம் உள்ள, ஆன்மீக சாதகருக்கும் உள்ள வெளிப்படையான வித்தியாசம் என்ன? என்று கேட்கின்றான்.

அதற்குக் கிருஷ்ணர் இவ்வாறு பதிலுரைக்கின்றார். “அர்ச்சுனா! புலன் அனுபவங்களுக்கு இலக்காகி உழல்கின்ற சாதாரண மனிதர்கள் இரவில் பரமாத்மாவுடன் இணையும் சாதனையில் ஈடுபடாமல், மதிமயங்கி படுத்துத் தூங்கிவிடுவார்கள். மோக நித்திரையில் ஆழ்ந்துவிடும் அவர்களுக்கு அது இருள் சூழ்ந்த இரவு. அந்நேரத்தில் அடக்கம் மிகுந்த ஞானிகள் விழித்திருப்பார்கள். பரமாத்ம அனுபவத்தில் லயித்திருப்பார்கள். அதாவது தியானம் செய்வார்கள். சாதாரண மனிதர்கள் ஓடியாடிப் பொருள் சம்பாதித்தும், சுகபோகங்களை அனுபவித்தும் கழிக்கின்ற பகல் பொழுதில் ஞானிகள் ஆத்ம லயிப்பில் அமைதியுடன் மூழ்கியிருப்பார்கள். அதாவது சாதாரண மனிதர்களுக்கு வேறு வேறாகத் தெரியும் பகல் இரவு என்னும் இரண்டு பொழுதுகளிலும் ஞானிகள் ஆத்ம லயிப்பிலேயே ஒன்றியிருப்பார்கள். பகலில் ஆத்மாவுடன் ஒன்றிய நிலையிலேயே விழித்திருந்து, ஆத்ம சாதனைகளில் ஈடுபடுவார்கள், தியானிப்பார்கள்”;

மேலும் அவர் “எந்த மனிதன் எல்லா ஆசைகளையும், பாசங்களையும் விடுவதோடு, தான் – தனது என்னும் செருக்கையும் துறந்து வாழ்கிறானோ அவனுக்கு சாந்தி கிட்டுகிறது. அதோடு அவனது ஞானமும் செயலும் அவனைப் பிரம்மத்தில் நிலை நிறுத்தும். இதைத்தான் பிரம்ம நிலை என்று கூறுவர். இந்நிலையை அடைவதற்கு என்னை தியானித்து, என்னிடம் சரணடையவேண்டும். என்மீது நம்பிக்கை வைத்து வேறு சிந்தனை, கவலை இல்லாமல் இருக்க வேண்டும்!” என்று கூறுகிறார்.

இவ்வாறு அர்ச்சுனனுக்குத் தன்னைப்பற்றிய அறிவாகிய ஆத்மாவைப்பற்றியும் அதை அறிவதற்குரிய செயல்முறைகள் பற்றியும் ஸ்ரீ கிருஷ்ணர் உரைப்பதான சாங்கிய யோகம் முடிகின்றது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s