மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -9

“நடுநிலை மனப்பாங்குடன் செயல்படுகின்றபோது சமபுத்தியால் நீ எல்லா கர்ம பந்தங்களிலிருந்தும் விடுபடுவாய்.
சமபுத்திக்குத் துளியும் அழிவு ஏற்படாது.
சமபுத்தியுடன் செயல்படும்போது எதிரிடையான விளைவு எதுவும் ஏற்படாது.
இதைச் சிறிதளவு மேற்கொண்டாலும் பிறப்பு இறப்பு சார்ந்த அச்சத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.”

கிருஷ்ணரின் மேற்குறித்த உறுதிமொழிகள் இந்தக் காலத்தில் வாழ்கின்ற நமக்குமே எல்லா விதத்திலும் பொருத்தமாகத் தெரிவதைக் கவனிக்க வேண்டும். ஆசாபாசங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு எல்லோரையுமே சமமாக நினைத்துப் பார்த்துப் பழக முற்படும்போது அதில் கிடைக்கும் ஆனந்தமும் நிறைவும் மிக அலாதியான ஒரு சுகம் தான்.

இந்நிலையை அடைவதற்கு ஆத்ம தத்துவத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளை மனதில் உறுதியான லட்சியமாக மேற்கொள்ள வேண்டும். நான் வரையறைகளுக்கு உட்படாத பரப்பிரம்மத்தின் ஒரு சிறு துளி என்பதை மிக உறுதியாக நம்மில் நாம் பதிய வைக்க வேண்டும். நம்மை நாம் இந்த உடல் என்று நினைத்தால் நம்மால் சமநிலை புத்தியுடன் செயல்பட முடியாது.

ஆத்மாவின் சாரம் அன்பும் ஆனந்தமும். நாம் அன்பு செலுத்துகின்றபோது அடுத்த ஆத்மாவுடன் தொடர்பு கொள்கிறோம். அன்பால் இப்படி அடுத்தவருடன் ஒன்றுபடும்போது முழுமை ஏற்படுகின்றது. அன்பால் அனைத்தும் ஒன்றுபட முடியும். உலகம் அன்பைத்தான் விரும்புகிறது. வெறுப்பையும் விரோதத்தையும் அல்ல. நம் ஆன்ம உணர்வு மற்ற ஆன்மாக்களுடன் கலந்து ஒன்றாகிப் பரம்பொருள் உணர்வாக மாறுகின்றது. இது வெளிப்பட வெளிப்படப் பிறரை நேசித்தல், பிறரையும் நம்மைப்போல் பாவித்தல் என வளரும்போது அந்தச்சூழ்நிலை அமைதி மயமாகிறது. வேற்றுமைகள் மறைந்து மனங்கள் ஒன்றுபடுகின்றன. வாழ்க்கை சுமுகமாகச் செல்கின்றது.

இன்றைய சமுதாயத்தில் திருமண வாழ்க்கை பலருக்கும் சரியாக அமைவதில்லை. பலரது திருமண வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் மனக்கசப்பும், வெறுப்பும், பிரிவினையும் ஏன் ஏற்படுகிறது? முரண்பாடுகள் ஏன் தொடர்கின்றன? இந்த வாழ்க்கையை உண்மை என்று நினைப்பதாலும், இந்த உடலை நான் என்று நினைத்திருப்பதாலும், இவள் என்னுடைய மனைவி, இவர் எனது கணவர் என்று உரிமை கொண்டாடுவதாலும் தான் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

இப்படி இல்லாமல் அதுவும் ஓர் ஆத்மா, தனது கர்மாவை என்னுடன் கழிப்பதற்காக இந்த உறவு ஏற்பட்டிருக்கிறது என்று அடுத்தவரை ஆத்மாவாகப் பார்க்க முற்படும்போது மட்டும் தான் உறவால் ஏற்படுகின்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்ற சகிப்புத்தன்மை, பொறுமை நம்மிடம் ஏற்பட முடியும். செய்கின்ற பிழைகளைப் பொறுத்து, மன்னித்து அன்பால் தொடர்ந்து பழகுகின்றபோது அவர்களிடமும் என்றாவது ஒருநாள் மாற்றம் ஏற்படும்.

இதற்கு நான் வரையறைகளுக்கு உட்படாத பரப்பிரம்மத்தின் ஒரு சிறு துளி என்பதை மிக உறுதியாக நாம் நம்மில் பதிய வைக்க வேண்டும். நம்மை நாம் உடல் என்று நினைத்தால் நமக்குள் ஊறுகின்ற ஆனந்தத்தை நம்மால் அனுபவிக்க முடியாது. அன்பை வெளிப்படுத்த முடியாது. அன்பைச் செலுத்துகின்ற போதுதான் நாம் அடுத்த ஆன்மாவுடன் தொடர்பு கொள்கின்றோம். அன்பால் இப்படி அடுத்தவருடன் ஒன்றுபடும்போது முழுமை ஏற்படுகின்றது.

நான் ஆத்மா என்ற உணர்வில் தொடர்ந்து இருக்க நாம் முயல்கின்றபோது அனேக முரண்பாடுகள் ஏற்படும். சந்தேகங்களும், குழப்பங்களும், எதிர்மறை சிந்தனைகளும் உண்டாகும், மேலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நமது மனச்சமநிலையைக் குலைக்கின்ற விதத்தில் தான் நடந்துகொள்வார்கள். வேறு கொள்கைகளைக் கொண்ட பிற மதவாதிகள் கேட்கின்ற கேள்விகளின் தாக்கத்தால் அல்லது விளக்கத்தால் பின்னடைவு மனப்பான்மை ஏற்படும். ஆனால் பகவத்கீதையை உபதேசமாகப் பெற்றும், குருவின் அருகாமையில் இருந்து பெறும் தெளிந்த ஞானத்தாலும் தான், நான் ஆத்மா என்ற உண்மைத் தத்துவம் நம்முள் நிலைபெற முடியும். முழுமையான ஞானத்தால் மட்டுமே இந்நிலை சித்திக்கும். இதற்கு இறையருளும் குருவருளும் கட்;டாயம் தேவை.

நமக்குள் இருக்கும் அறியாமை முற்றாக அழிந்தால்தான் ஞானம் ஏற்படும். இருண்டு கிடக்கும் ஓர் அறையின் உள்ளே ஒரு விளக்கை எடுத்து வந்தவுடன் எப்படி அங்கிருக்கும் இருட்டு இல்லாமற் போய் அறை ஒளிபெற்று விடுமோ அதுபோல ஞானஒளி ஏற்பட்டவுடன் அறியாமை அகன்றுவிடும். சூரியனுக்கு எப்படி இருட்டைப்பற்றித் தெரியாதோ அதுபோல ஞானிகளுக்கு அறியாமை பற்றித் தெரிவதில்லை. எனவே தான் அவர்கள் தங்களின் அகஒளியினால் இந்த அகிலத்தையே காண்கின்றனர்.

ஞானத்தைப் பெறுவது என்பது தற்செயலான ஒன்றல்ல. அதற்குத் தெய்வ அனுக்கிரகம் வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் கூறுகின்றார். தெய்வ அருள் இருந்தால்தான் குருவைத் தேட முடியும் இதை நாம் பூர்வஜென்ம புண்ணியம் என்று சொல்கின்றோம். ஜீவன் தன்னைப் பிறப்பு இறப்பிலிருந்து அல்லது தொடர்ந்த துன்பங்களிலிருந்து விடுவிக்கும்படி எப்பொழுது முழூமையாகப் பிரம்மத்திடம் சரணடைகின்றதோ அதன் பிறகே இந்த தெய்வ அனுக்கிரகம் கிடைக்கின்றது. இதற்கு முதலில் அசுர குணங்கள் அல்லது நமக்குள் இருக்கும் கெட்ட குணங்கள் எல்லாம் நீங்க வேண்டும். நற்பண்புகள்  நிறைந்த உள்ளத்தில் தான் உண்மையான பேதமற்ற அன்பு மலரும்.

தனக்கு சரியான வழிகாட்டும்படி, துன்பத்திலிருந்து தன்னை விடுவிக்கும்படி அர்ச்சுனன் கண்ணீர் மல்கக் கரம் குவித்துக் கேட்ட பிறகு, சரணடைந்த பிறகுதான் கிருஷ்ணரிடமிருந்து கீதை மலர்ந்தது என்ற உண்மையை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்.

வாழ்வியல் துன்ப துயரங்களிலிருந்தும், அவமானம், தோல்வி ஆகியவற்றிலிருந்தும் விடுபடத் தவிக்கும் மனம் அறியாமை மிகுந்திருந்தால் ஈகோவால் துhண்டப்பட்டு தற்கொலை செய்ய வைக்கும். மாறாக இறையருளை வேண்டிச் சரணடைந்தால் உபதேசம் கிடைக்கும். அல்லது வருகின்ற பிரச்னைகளை எதிர்த்து நின்று தவறாகச் செயல்பட்டு மேலும் சிக்கல்களுக்கு அவை வழி வகுக்கும்.

உண்மையான நான் என்னும் ஆத்ம ஒளியை அறியாமை எனும் இருள்தான் மூடி மறைத்திருக்கிறது. மாய அழுக்கு மனதை மறைத்திருக்கிறது. இருள் நீக்கப்பட்டால், அழுக்கு துடைக்கப்பட்டால் மனம் பளிச்சிடும். அதில் ஆத்மஒளி வெளிப்படும். இதற்கு நாம் செய்யவேண்டியதெல்லாம் சத் சங்கத்தைத் தேடி அதை நாடி அதில் தொடர்ந்து ஈடுபட்டுக் குருவின் உபதேசத்தைப் பெற்று ஆத்மஞான வேள்வியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டியது தான்.

இதற்கு நம்மை மாயை விடாது. தடைகளும், பிரச்னைகளும், சந்தேகங்களும் ஏற்படச்செய்யும். அவற்றில் மயங்கிவிடாமல் நன்றாகச் சிந்தித்து, ஈகோவை விலக்கி ஆத்மாவிலேயே ஒன்றியிருக்க நாம் முயலும்போது திருவருள் நம்மைத் தன்னுடன் சேர்க்கும்.

சொல்தான் இறைவனைக் காட்டுகிறது. வாக்கு என்பது இறைவனே! ஏனெனில் சொல்லற்கரியானாகிய இறைவனைப் பற்றிச் சொல்லித் தான் விளங்க வைக்க முடியும். சொல்வதும் அவன் தான். அதைக் கேட்டுப் பெறுவதும் அவன் தான். ஏனெனில் உயிராய் நம்முள் இருப்பது அவனே.

இப்படி அவனைப்பற்றிச் சொல்வதற்கும், அதைக் கேட்பதற்கும் ஐம்புலன்களும் எவ்விதக் குறைபாடுகள் இன்றி ஒழுங்காக இருந்தால் தான் சத் சங்கத்திற்கு வர முடியும். காது கேளாதவனுக்கு உபதேசத்தால் என்ன பயன்? வாய் பேசாதவனால் எதை எடுத்துச் சொல்ல முடியும்?

ஆத்ம விசாரணை செய்து ஞான வேள்வி வளர்ப்பது என்பது அசுவமேத யாகத்தை விட மிகப் பெரிய யாகமாகும். மனதை மாசில்லாமல் செய்து, அதை உயர்த்துவதென்பது மிகப் பெரிய காரியமாகும். உண்மையை உணர்ந்தவர்களான ஞானியர் தொகுத்துத் தந்தவற்றை குரு சிஷ்ய பரம்பரை வாயிலாக அறிந்து இப்படி அறிந்தவர் குருவாகி உணர்த்துவதை, அருகில் இருந்து கேட்டுப் பெற்று உள்ளதை உள்ளபடி அறிவதுதான் ஆத்ம விசாரணை என்னும் ஞான வேள்வி. இங்கு நாமாக நமக்குத் தெரிந்ததையும் தோன்றியதையும் சொல்லி விட முடியாது. குரு வார்த்தையே நம் விளக்கு. அதை ஏந்தித்தான் அந்தப் பாதையில் பயணிக்க முடியும். அவர் சொல்வதைத் தான் நாம் ஏற்க வேண்டும்.

இந்நிலையில் தான் அர்ச்சுனன் கண்ணனைத் தன் குருவாக ஏற்றுக்கொண்டு, அவர் அடி பணிந்து அவர் சொல் கேட்டுத் தன் சந்தேகங்களைக் கேள்விகளாகக் கேட்டுத் தெளிய முற்படுகின்றான். அப்பொழுது கிருஷ்ணர் கூறுகின்ற அறிவுரைகள் தான் சாங்கிய யோகம் என்ற பெயரில் ஞானமாக உபதேசிக்கப்படுகின்றன.

நல்லது என்று ஒன்று இருப்பதால் தான் பொல்லாதது என்பது வந்தது. அறிவு இருப்பதால் தான் அறியாமை என்ற ஒன்று ஏற்பட்டது. அறியாமை படைப்போடு தொடர்புடையது. படைப்பு என்பது தோற்றம். தோற்றத்திற்குத் தான் அறியாமை. மூலத்தில் அறியாமை இல்லை. அறியாமை தான் மாயை எனப்படுகின்றது. தோற்ற மயக்கம் உண்மையுடன் தொடர்புகொண்ட ஒன்று. பிரம்மம் உண்மை. பிரம்மத்தின் அசைவு மாயை. இந்த மாயையைத்தான் நமது மதம் சக்தி என்றும் அம்பாள் என்றும் சொல்லி வழிபடுகின்றது. “உண்மையின் பிரதிபலிப்பு சக்தி. பிரம்மத்தின் பிரதிபலிப்பு மாயை” காஞ்சி காமகோடி சங்கர மடாதிபதியாய் விளங்கிய பரமாச்சார்யரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

மோட்டார் சுற்றவில்லையென்றால் மின்சாரம் வெளிப்படாது. மோட்டார் சுற்றினால்தான் கரண்ட் வெளிவரும். பிரம்மமும் சக்தியும் இப்படித்தான் செயல்படுகின்றன. இவை எல்லாம் அழியக்கூடிய மாயை தான். செயல் படாமல் இருந்தால் அந்தந்த புலன் அந்தந்த இடத்தில் அமைதியாக இருக்கும். அடங்கிய நிலையில் ஆசையுமில்லை. தேவையுமில்லை. இந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் தெய்வீகத்தை உணரலாம். தோற்றம் மாயை. ஆசையும் தேவையும் ஆத்மாவிற்கு இல்லை என்பதைத் தான் கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறார்.

தர்ம, அர்த்த, காம, மோட்ச என்ற கிருஷ்ணரின் கூற்றில் தர்மம் தான் முதலில் இருக்கிறது. மனிதனுக்கு மனிதன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிவது தர்மம். இந்தத் தர்மத்தைப் பற்றிச் சரியாக அறிந்துகொண்டு கடைப்பிடிப்பது தான் ஞானம். இந்த ஞானம் தான் கீதா உபதேசம்.

குற்ற உணர்வும், இழப்பு உணர்வும் இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். குழந்தைத் தன்மையை, வாலிபத்தை எல்லோரும் இழக்கின்றோம். மிக விருப்பமான பொருளை, உறவை எல்லோரும் இழந்திருக்கின்றோம். செய்த பிழைகளால் குற்ற உணர்வை அனுபவிக்காதவர்கள் இல்லை. ஆனால் இவையெல்லாம் மனித நிலைக்கு மட்டுமே உரியவை. உடலோடு கூடிய சிந்தனைகள் இவை.

அழிவற்ற தன்மைக்கு நம்மை நாம் உயர்த்துகின்ற ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டபிறகு இவை இரண்டும் நம்மிடம் இனி இருக்கக்கூடாது. தோற்றத்தோடு கூடிய மனித உருவிற்குத் தான் இவை தொடர்புடையவை. ஆன்மாவாக என்னை நான் உணர்கின்ற நிலையில் இவற்றிற்கு இடமில்லை. ஏனெனில் ஆன்மாவிற்குக் குற்றமோ இழப்போ எதுவுமில்லை. இவை இரண்டும் தான் கவலைகளுக்குக் காரணம்.

போகட்டும் கண்ணனுக்கே! என்று என்னை சுழற்றி அடிக்கும் இவை இரண்டையும் அறவே ஒதுக்கித்தள்ளி விட வேண்டும். இது தான் நமக்குள் நிகழ வேண்டிய ரசவாதம். என்னை நான் இறைநிலைக்கு உயர்த்த வேண்டும் என்றால் அதற்குத் தடையாக என்னுள் இருப்பது கவலையே. இந்தக் கவலை என்பது மேற்குறித்த குற்ற உணர்வால், இழப்பு உணர்வால் ஏற்படுவது. இவை நீங்கினால் கவலை இல்லை. கவலையற்ற நிலை இறை நிலை. அதுவே ஞானத்தால் அடைகின்ற நிலை.

மனிதர்கள் எல்லோரும் உலக விஷயங்களையே தியானிக்கிறார்கள். அழியக்கூடியவற்றின் மீதே ஆசை வைக்கிறார்கள். ஆனால் கீதையை அறிகின்ற நிலையில் இருக்கின்ற நாம், நமக்குள் இருக்கும் இறைவனையே தியானிக்க வேண்டும். என்னை நான் அடைய வேண்டும் என்ற ஓர் ஆசையை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

மாயை மயக்கத்தைத் தரும். அதாவது அறிவு வேலை செய்யாமல் மயங்கி விடும். அதனால் சரியாகச் செயல்பட முடியாமற் போய்விடும். அறிவு, ஞானத்துடன் கூடியதாகத் தெளிவாக இருந்தால் மயங்கிச் செயல்படாது. பிழையாகச் செயல்படாது. எது சரி, எது பிழை என்ற குழப்பம் வாழ்க்கையில் ஏற்படுகின்றபோது அறிவில் மயக்கம் ஏற்படும். இப்படி மனதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு ஏன், எப்படி என்று ஆராய்ந்தால் தான் அதை எப்படித் தீர்க்க வேண்டும்? ஏன் தீர்க்க வேண்டும்? என்பது விளங்கும். இப்படி ஆராயும்போதுதான் நமது பிழை, நமதுஅறியாமை புலப்படும்.

அர்ச்சுனன் கண்ணனிடம், என் உறவுகளையே நான் கொல்லவேண்டிய இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்வது? என்று கேட்டதால் தான் கீதையே பிறந்தது. அர்ச்சுனனின் பிரச்னை – எது தர்மம்? என்ன செய்ய வேண்டும்? என்ற குழப்பம். தர்மம் ஆத்மா சம்பந்தப்பட்டது, உடல் சம்பந்தமானது அல்ல! என்கிறது கண்ணனின் கீதை.

தாயின் கருவறையிலிருந்து வெளிப்பட்டுப் பிறந்து வளர்வது ஒரு பிறப்பு. இப்படிப் பிறந்த இந்தப் பிறப்பிலேயே அறியாமையென்னும் கருவறையிலிருந்து வெளிப்பட்டு ஞானம் அடைவதென்பது இரண்டாவது பிறப்பு. ஒரு பிறவியில் இரு பிறப்பு என்னும் பொருளில் இதனை ‘த்விஜ:’ என்று கீதை குறிப்பிடுகின்றது. சாதாரண அறிவினால் பிறப்பின் இரகசியத்தை அறிந்துகொள்ள முடியாது. குருவின் உபதேசத்தினால் பெறப்படுகின்ற ஞானத்தினாலேயே அதனை அறிய முடியும். அதைத்தான் உண்மையான அறிவு, மெய்யறிவு என்று கூறுகின்றனர். இரு பிறப்;பாளர் என்ற நிலையை ஆன்மீகவாதிகளால் தான் அடைய முடியும். அறிய வேண்டியதை அறிதலே ஞானம்.

“அர்ச்சுனா! உனக்கு வரும் துன்பங்களெல்லாம் உன்னை ஆன்மீக நிலைக்கு உயர்த்துவதற்காகவே வருகின்றன. இவற்றை ஞானத்தினால் வெல்வாய்!” என்கிறார், கிருஷ்ணர்.

உயர்ந்த நிலையை அடைய விரும்புபவர்கள் இன்பத்தில் துள்ளாமலும், துன்பத்தில் துவளாமலும் சமநிலையில் இருக்கப் பழக வேண்டும். உணர்ச்சிகளால் தூண்டப்படாமல் உணர்வு கடந்த நிலையில் இருக்கப் பழக வேண்டும். எனக்கு முன் எது வந்தாலும் அவற்றால் பாதிப்படையாமல் அவற்றை எதிர்கொள்ளவும், சரியான முறையில் அவற்றிற்குத் தீர்வு காணவும் ஞானம் உள் நின்று உதவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s