மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -8

அர்ச்சுனன், உறவினரின் உடல் அழியுமே. அவர்களைக் கொன்ற பாவத்திற்கு நான் ஆளாகி விடுவேனே! என்று கலங்குகிறான். நீ அழிக்காவிட்டாலும் கூட அவர்கள் இறக்கத்தான் போகிறார்கள். உடல் என்பது அழியக்கூடியதே என்று எவையெல்லாம் உண்மையான நானல்லாதவை என்று விளக்குகின்றார் கிருஷ்ணர்.

இந்த உடலை, என்னால் வேறாகப் பார்க்க முடியும். நான் உடல் என்று நாம் சொல்வதில்லை. எனது உடல் என்றுதான் சொல்கிறோம். எனது என்றாலே என்னிலிருந்து வேறானது என்றுதான் அர்த்தம். எனவே உடல் நானல்ல. ஐம்புலன்கள் நானல்ல. அவை வெறும் கருவிகள் மட்டுமே. மனம் செயல்பட்டால் தான் கருவிகள் செயல்படும். மனதை நாம் எங்கேயோ செலுத்தினால் கண்கள் விழித்திருந்தாலும் எதிரிலிருக்கும் பொருள் தெரியாது. மேலும் நான் கண் என்று சொல்வதில்லை. என்னுடைய கண் என்று தான் சொல்கிறோம். எனது ஐம்புலன்கள் இயங்காமல் இருக்கின்றபோதும் நான் இருக்கிறேன். ஆகவே ஐம்புலன்கள் நானல்ல.

விழித்திருக்கும் நிலையில் செயல்படுகின்ற மனம், கனவு நிலையிலும் இயங்குகின்ற மனம் ஆழ்ந்த உறக்க நிலையில் காணாமற் போய் விடுகின்றது. அப்பொழுது உடலோ, மனமோ, புத்தியோ எதுவுமே தட்டுப்படுவதில்லை. ஆனால் நான் என்ற உணர்வு மட்டும் நம்முள் இருக்கிறது. அடித்துப் போட்டதுபோல நன்றாக ஆழ்ந்து தூங்கினேன்! ஒன்றுமே தெரியாத நிலையில் ஒரு நல்ல தூக்கம்! என்று சொல்கிறோமே! அப்படி நன்றாகத் தூங்கியதை அறிந்தது யார்? அது தான் உண்மையான நான்.

எனவே இதுவரை நான் என்று எண்ணியிருந்த எதுவுமே நான் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிலபேர் நாம் விடுகின்ற மூச்சுதான் நான் என்பார்கள். ஏனெனில் மூச்சு நின்றுவிட்டால் உடல் கீழே விழுந்து விடுகிறது. இறந்து விட்டதாகச் சொல்லிவிடுகின்றனர். ஆனால் மூச்சு நிற்பதால் உடல் மரணிப்பதில்லை. அப்படியென்றால் அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்ற போது மூச்சை மாற்றி நிறுத்திப் பிறகு மீண்டும் உடலில் செலுத்துகிறார்களே! அப்போது உடலை மரணித்துவிட்டதாக யாரும் சொல்வதில்லையே! சில யோகிகள் மூச்சடக்கி யோக சாதனைகள் புரிகின்றார்களே! எனவே பிராணன் நானல்ல.

நான் என்பது இவை அனைத்தையும் கடந்த ஒன்று. அது இந்த உடலுக்குள் உயிர்சக்தியாய், ஒளியாய், ஒலியாய் உறைந்திருக்கிறது. அதனை இந்து சமயம் சைதன்யம், ஆத்மா, பரம்பொருள், கடவுள் என்றெல்லாம் குறிப்பிடுகின்றது. எங்கும் நிறைந்திருக்கின்ற பரம்பொருள் நமக்குள் ஆத்மாவாய் உள்ளது. அது தான் உண்மையான நான். உடல் உறை. அது நீங்கினால் வெளி. எல்லாம் ஒன்று. எல்லாமாக இருக்கின்ற இந்த ஒன்றினை நமக்குள்ளேயே வைத்துக்கொண்டு, அதைப்பற்றித் தெரிந்து கொள்ளாமல், வெளியிடங்களில் கோவில், கோவிலாகத் தேடித் திரிந்துகொண்டு இருக்கிறோம். இப்படித் தேடித்தேடியே வாழ்க்கை முடிந்து போகிறது. சிந்திக்க வேண்டும்.

நம்மிடம் அழிக்க வேண்டியது ஒன்று இருக்கிறது. அதுதான் ஈகோ எனப்படும் அகங்காரம். நான் அறிவாளி, எனக்கு எல்லாம் தெரியும். நான் பலவான். நான் பணக்காரன். நான் பட்டம் பதவியால், குடும்பப் பின்னணியால் உயர்நதவன் போன்ற பலவிதமான அகங்காரம் எல்லோருக்கும் இருக்கிறது. இதை நீக்கிவிட்டால், எளிமையாக எம்மை மாற்றிக்கொண்டு விட்டால் தெய்வீகப்பண்புகள் நம்மிலிருந்து வெளிப்படும். ஈகோ இல்லாவிட்டால் உள்ளம் மலரும். உயரும். உலகம் இருந்தபடிதான் இருக்கிறது. நமது ஈகோவினால் அதைச் சீண்டிப்பார்க்கின்றபோது தான் உலகம் துன்பமயமாகவும், பிரச்னையானதாகவும், வேறுபாடுகள் நிறைந்ததாகவும் காட்சியளிக்கின்றது.

அர்ச்சுனன் இப்படிப்பட்ட தனது ஈகோவால்தான், எனது உறவினர்களை நான் கொல்வதா? என்று பிழையாக சிந்தித்துக் கலங்கினான். அதர்ம வழியில் செயல்பட்டவர்களை அழிக்க வேண்டியது என் கடமை என்று அவன் அமைதியான மனநிலையில் போர் செய்ய முற்பட்டிருந்தால் அவனிடம் ஈகோ இல்லை, ஞானத்துடன் செயல்பட்டான் என்று போயிருக்கும். ஆனால் அவன் தன் வலிமையைப் பெரிதாக நினைத்து என் வீரத்தை என் உறவினர்களைக் கொல்வதிலா காட்டுவது? இவர்களைக் கொன்று பெறப்போகும் ராச்சியத்தால், இவர்களை வென்று பெறுகின்ற வெற்றியால் என்ன பயன்? என்று பிழையான கோணத்தில் ஈகோவால் பார்த்துப் போரிட மறுத்தான். இங்கு அகங்காரம், போலியான பணிவாக வெளிப்படுகின்றது.

இராமாயணத்தில் கூனி மந்தரையின் துர்போதனையால் கைகேயியின் மனம் மாறாமல் ஒரே நிலையில் நின்று ராமனுக்குத் தான் முடி சூட்ட வேண்டும் என்று பிடிவாதமாகச் சொல்லியிருந்தால் இராமாயணமே திசை திரும்பியிருக்கும். ராமரின் பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்து ராமரும், சீதையும் நலமாக அயோத்தியில் வாழ்ந்திருப்பார்கள். தசரதரும் உயிர் பிழைத்திருப்பார். அங்கு கைகேயியின் மனம் மாறியதால் தான் இராமாயணத்தின் போக்கும் மாறியது.

இங்கு மகாபாரதத்தில் போரிட ஆயத்தமான நிலையில் அர்ச்சுனனின் மனம் மாறி, நடக்க வேண்டிய போர் நடக்காமற் போய்விடுமோ என்ற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அர்ச்சுனனின் இந்த மனமாற்றத்தால் தான் நமக்கு பகவத்கீதை கிடைத்தது. கைகேயியின் மனமாற்றம் இராவண வதத்திற்கு வித்தூன்றியது. அர்ச்சுனனின் மனமாற்றம் பகவத்கீதை பிறக்க வழிவகுத்தது.

இனி நாம் குருஷேத்திரப் போர்க்களத்திற்கு வருவோம்.

ஸ்ரீ கிருஷ்ணர் முதலில் அர்ச்சுனனிடம் உடல் வேறு, ஆத்மா வேறு என்ற உண்மையை எடுத்து விளக்குகிறார். மனிதன் தன்னை எதுவாக நினைத்திருக்கிறானோ அது அவனல்ல. எனவே அவன் விருப்பு வெறுப்பு இல்லாமல் வருவதை ஏற்றுக் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். இது தான் ஒரு மனிதன் செய்ய வேண்டியது, என்கிறார் கிருஷ்ணர்.

அதன்பின் ஆத்மாவின் தன்மைகளைக் கூறுகிறார். “அர்ச்சுனா! அழிகின்ற உடலுக்குள்ளே உறைவதான சக்தியை, ஆத்மாவை எந்த ஆயுதமும் அழிக்க முடியாது. தீயால் எரிக்க முடியாது. தண்ணீரில் இது கரைந்துவிடாது. இதைக் காய வைக்கவோ, சிதறடிக்கவோ முடியாது”.

“இந்த சரீரி எனப்படும் ஜீவனை உடைக்கவோ, எரிக்கவோ, நனைக்கவோ, வற்றச்செய்யவோ இயலாது. காரணம் இது நித்தியமானது. பரிபூரணமானது. எல்லாக் காலங்களிலுமே சாஸ்வதமாக இருப்பது. இதனைப் புலன்களால் அறிய முடியாது. ஏனெனில் இது புலன்களுக்கு அப்பாற்பட்டது. இதை உள்ளுணர்வாலும் அறிய முடியாது. இத்தனை விதமாக விவரிக்கப் படுவதான ஆத்மா தான் நிரந்தரம், உடலல்ல என்ற உண்மையைப் புரிந்துகொண்டு இவர்களின் மேனியைக் கொல்வாய்!” என்றார்.

அர்ச்சுனனோ கிருஷ்ணர் சொல்கின்ற சத்தியத்தைப் புரிந்துகொள்ள முடியாதவனாய்த் திகைக்கிறான். “நீங்கள் ஆத்மாவிற்கு அழிவில்லை என்று விளக்கினாலும் எனக்கு எதிரில் நிற்பவர்கள் இறந்துவிடுவார்களே, அவர்களை இழந்துவிடுவோமே என்ற வருத்தமும் கவலையும் தான் திரும்பவும் ஏற்படுகின்றன. நான் என்ன செய்வேன், கண்ணா!” என்கிறான்.

“அர்ச்சுனா! அறியாமையால் தான் நீ இப்படிப் பேசுகிறாய். இந்த ஆத்ம தத்துவத்தைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியாது. அப்படியே கேட்டுத் தெரிந்துகொண்டாலும் பிரமை பிடித்த வியப்பாகத் தான் அது இருக்கும். நமக்கு நாமே தான் சிந்தித்து உணரவேண்டும். இதற்கு ஆழ்ந்த
சிந்தனை தேவை. மேலும் இதனை அறிந்தவர்கள் சொல்லக்கேட்டு, அவர்கள் சொல்வதை வைத்துத்தான் ஆத்ம விவரம் புரிய வரும்”.

கிருஷ்ணர் தொடர்கிறார். ‘‘ஆனால் இப்போது நீ புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லா உடல்களிலும் உள்ள உயிர் என்றும் உள்ளது. அழிவற்றது. அழிக்க இயலாதது. இந்தத் தத்துவத்தைத் திடமாக உணர்ந்து கொண்டபின் எந்தப் பிராணிக்காகவும் நீ வருத்தப்பட வேண்டாம்!’’

இந்த விளக்கத்தைக் கேட்ட அர்ச்சுனன், “நீங்கள் சொல்வது சரிதான்! ஆனால் நான் இவர்களைக் கொல்வதால் எனக்குப் பாபம் வந்து சேருமே. அந்தப் பாவத்தைச் செய்ய நான் பயப்படுகிறேன்!’ என்றான். ‘‘அர்ச்சுனா! வீரர் குலத்தவரான சத்திரியர்களுக்குப் போர் செய்வதுதான் குலதர்மம். போர் எதிர்ப்படும்போது, போரிட வேண்டிய கட்டாயம் நேரும்போது போரிடுவது தானே சத்திரிய தர்மம்? போரிடும் வாய்ப்பைப் பெறும் சத்திரியர்கள் பாக்கியசாலிகள்.

இந்த வாழ்க்கையில் எந்த சுகத்தை நாம் பெற்றாலும் அந்த சுகத்திற்குப் பின்னால் துன்பமும், துயரமும் கட்டாயம் ஏற்படும். சுமையும் கூடும். உண்மையான சுகத்திற்குத் துன்பமோ, துயரமோ இருக்காது. இப்படிப்பட்ட துன்பமும் துயரமும் தராத உண்மையான சுகம் என்பது, நமது சுயதர்மமான கடமையைச் செய்ய வாய்ப்பு கிடைக்கின்றபோது அதைச் செய்வதுதான். இந்த வாய்ப்பு உனக்குக் கிடைத்தும் அதைச் செய்ய மறுப்பது இழிவானது.”

மேலும் கிருஷ்ணர் அர்ச்சுனனிடம், “இந்த அறப்போரை நீ தவிர்த்துவிட்டு ஒதுங்கிப் போனால் உன் குலதர்மமும், நீ ஈட்டிய புகழும் அழியும். இவர்களைக் கொல்வதால் உனக்குப் பாவம் இல்லை. ஆனால் நீ உன் கடமையைச் செய்யாததால் தான் பாவம் வந்து சேரும். நீ போர் புரியாவிட்டால் எல்லோரும் உன்னை இகழ்வார்கள். கடமை தவறிய குற்றத்தைச் சொல்லிக்காட்டுவார்கள். இந்த அவப்பெயர் உன்னைப் போன்ற கௌரவமானவனுக்கு மரணத்தை விடத் துன்பத்தைத் தருவது ஆகும்.”

“மரணம் ஒருவனுக்கு அவப்பெயர் தருவதில்லை. மரணம் எல்லா உடல்களுக்குமே உரியது. தன் கடமையிலிருந்து நழுவுவதாலும், தவறுவதாலும் தான் ஒருவருக்கு அவப்பெயரும், இழிவும்; ஏற்படுகின்றன. மேலும் மாபெரும் வீரனாக உன்னை மதித்துப் போற்றும் இவர்களே, நீ சாவிற்குப் பயந்து கோழையாகிப் போர் செய்யாமல் ஓடிவிட்டதாகக் கருதித் தூற்றுவார்கள். உன் வீரப் பிரதாபத்தை அவர்கள் எள்ளி நகையாடுவார்கள். இழி சொற்களால் உன்னை ஏசுவார்கள். இந்த அவமதிப்பை உன்னால் சகித்துக்கொள்ள முடியாது.” ஆனால் இதற்கு மாறாக அர்ச்சுனா! போர் செய்து நீ இறந்தால் உனக்கு அப்போது பெருமை. வென்றுவிட்டால் இந்த உலகையே ஆளலாம். எனவே நடுநிலை மனப்பாங்குடன் நீ உன் கடமையைச் செய்! வெற்றி, தோல்வி – லாபம், நஷ்டம் – இன்பம், துன்பம் ஆகிய இரட்டைகளில் சம புத்தியை ஏற்படுத்திக்கொள். இந்நிலையில் நீ போர் புரிந்து பகைவர்களை அழிப்பதால் உனக்குப் பாவம் ஏற்படாது!” என்று ஞான உபதேசம் செய்து அர்ச்சுனனுக்கு வலிமையை ஊட்டுகிறார் கிருஷ்ணர்.

நாம் நம் வாழ்க்கையில் புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான உபதேசம் இது. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனை எத்தனையோ இழப்புகள், தோல்விகள், தோல்வியால் பெறப்பட்ட அவமானங்கள் என்று ஏராளமான கசப்பு அனுபவங்கள் ஏற்பட்டு மனதில் மாறாத வடுவாகி இருக்கின்றன. எத்தனையோ பேர் இழிவாகவும், இடித்துரைத்தும் அவமதித்திருக்கலாம் எதிர்பாராத அதிர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கலாம். எல்லாவற்றிற்கும் நாம் உணர்ச்சிவசப்பட்டு எதிர்த்து ஆக்ரோஷப்படுவதால் பயனில்லை.

நிகழ்ந்தவற்றை ஏற்றுக்கொண்டு பொறுமையாக இருந்து நம் பலத்தை நாம் முன்னேறுவதில் காட்ட வேண்டும். ஜெயித்து நம் வலிமையைக் காட்ட முற்பட வேண்டும். குடும்பத்தில் மோதுவதால் பயனில்லை. அறிவால் செயல்பட்டு வெல்லுவதால் தான் நற்பயன் கிட்டும். இதைத்தான் சமநிலையில் நிற்க வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

அர்ச்சுனனுக்குப் போர்க்களத்தில் யுத்தம் செய்தல் குலதர்மம். ஆனால் எதற்கெடுத்தாலும் எல்லோரிடமும் சண்டை போடுவதோ, எதிர்த்து நிற்பதோ, வன்முறையைக் கையில் எடுப்பதோ சாமான்யனுக்குக் குலதர்மம் இல்லை. அமைதிப் போராட்டமே நமது தர்மமாகும்.

இந்தச் சமநிலை அறிவு பற்றிக் கிருஷ்ணர் என்ன உபதேசிக்கிறார் என்று பார்ப்போம். முதலில் அவர் அறிவுபூர்வமாக, “சுக துக்கங்களில் சமநிலையோடு இருப்பவர்களைப் புலன் சம்பந்தப்பட்ட உலகப்பொருள்களின் சேர்க்கை மகிழ்ச்சியோ, துன்பமோ கொள்ள வைப்பதில்லை. அப்படி விருப்பு வெறுப்பற்ற நிலையில் இருப்பவர்கள் தம்முள் பரமாத்மாவை உணர்கின்றனர். அவர்களுக்கு அழிவில்லை!” என்று சாங்கிய யோக முறையில் கூறினார்.

இப்போது மீண்டும் அதே சமநிலை அறிவு பற்றிக் கர்மயோக முறையிலும் எடுத்துரைக்கின்றார். அது ஞான நிலை. இது செயல் புரிகின்ற நிலை. நம்மைப் போன்றவர்களால் ஞானமுக்தி நிலையில் தொடர்ந்து இருக்க முடியாது என்பதால் செயல்படும் நிலையில் எப்படி சமநிலை புத்தியில் இருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s