மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -7

வாழ்க்கையில் எல்லாமே மாறிக்கொண்டே தான் இருக்கின்றன. எதுவுமே நிலையாக நிலைத்திருப்பதில்லை. இன்பமோ, துன்பமோ, உயர்வோ தாழ்வோ இப்படி எல்லாமே மாறும் தன்மையையே கொண்டிருக்கின்றன. ஏன்? குழந்தையாகப் பிறக்கின்ற நாம் குழந்தையாகவே இருந்து விடுகின்றோமா? தினந்தோறும் கணந்தோறும் இந்த உடலும் உள்ளமும் மாறுதலைடைந்து கொண்டே போகிறது. குழந்தை சிறுவனாகி, சிறுவன் வாலிபனாகி, வாலிபன் பல நிலைகளை அடைந்து இறுதியில் வயோதிகனாகி அங்கங்கள் தளர்ந்து உடல் மரணித்து விடுவதே வாழ்க்கை.

உடல், மனம் எல்லாமே அநித்யம். அழியாதது ஆத்மா மட்டுமே! அது தான் என்னுள் உயிராக இருந்து சக்தியாக வெளிப்பட்டு செயல்படுகின்றது. அது நித்தியமானது. அழிவில்லாதது. இதைப்பற்றி நாம் முதலில் அறிய வேண்டும். இந்த அறிகின்ற தேவையைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி தான் சாங்கிய யோகம். அதாவது உண்மையான நான் என்பது எது என்ற ஞானத்தை உணர்த்துவது.

தன்னைப் பற்றிய உண்மைகளைச் சரியாக நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனெனில் ஒன்றைப் பற்றிய உண்மையை நாம் அறிந்துகொண்டால் தான் நமக்குள் ஒரு தெளிவு ஏற்படும். நம்மைப்பற்றி நாம் உண்மையாகத் தெரிந்துகொண்டு விட்டால் பிறகு நம் மனம் அமைதி அடைந்துவிடும். பிறகு இந்த வாழ்க்கை ஒரு போர்க்களமாக இருக்காது. விளையாட்டுத் தளமாக மாறிவிடும்.

இதைப்புரிந்து கொள்ளாமல் மனித மனத்தின் இயற்கையான அடிப்படைத் தேவையான ஆன்மீகத்தை ஏதோ புதிரான ஒன்றாக நினைத்துக்கொண்டு இந்த வயதில் ஆன்மீகம் தேவையா? அந்த வயதில் பார்த்துக் கொள்ளலாம் என்று பெரும்பாலும் நினைக்கின்றனர். ஆனால் இளம் வயதில் ஆன்மீகக் கல்வியைப் பெறும் வாய்ப்புப் பெறுபவர்கள் தான் பாக்யசாலிகள். ஏனெனில் தன்னைப்பற்றிய மெய்யறிவைப் பெற்றவர்கள் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்கின்றனர். மேலும் அவர்கள் தம்மையும் தம் சுற்றுப்புறத்தையும் அமைதியடையச் செய்து விடுகின்றனர். அவர்களிடம் நிதானம், ஆராய்ந்து பார்க்கும் திறன், நடுநிலையில் நின்று செயல்படுதல், பிறரையும் தன்னைப் போல் நினைத்துச் செயல்படும் தன்மை போன்ற பல உயரிய பண்புகள் நிறைந்திருக்கும்.

60 வயதுக்கு மேல் ஆன்மீகத்தை அறிய முயலும்போது உடலும் உள்ளமும் ஒத்துழைப்பு தராது. முதுமையின் சகல குறைபாடுகளுடன் எப்படி ஞானம் பெறுகின்ற பயிற்சியில் தொடர்ந்து அயராமல் ஈடுபட முடியும்? மரணத்திற்கு நெருக்கமான முதுமை நிலையில் பொறிகள் சரியா இயங்கா நிலையில், விளக்கம் மண்டையில் ஏறாது, மனதில் பதியாது. ஆகவே அறுபது வயதிற்குப் பின்பு தான் ஆன்மீகம் என்பது புற இன்பங்களில் தணியாத தாகம் கொண்ட யாரோ சொல்லி வைத்த பிழையான கருத்து ஆகும். ஆன்மீகத்தை அறிவதற்கு மனப்பக்குவம் தான் தேவை. மனப்பக்குவப் பட்டவர்களுக்கு வயது ஒரு தடையல்ல.

சிறுவனான முருகன் தான் தந்தைக்கு ஞான உபதேசம் செய்தான். ஞானசம்பந்தர், பிரகலாதன், துருவன், விவேகானந்தர், பரமஹம்ச யோகாநந்தர், பகவான் ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளலார், ஷீர்டி சாயிபாபா, இப்படி எத்தனையோ மஹா புருஷர்கள் எல்லாம் மிகச் சிறிய வயதிலேயே ஞானத்தை அடைந்தவர்கள். ஆகவே ஆன்மீக அறிவைப் பெறுவதற்கு வயது முக்கியமல்ல. அதற்குத் தேடல் உணர்வும், பற்றற்ற மனப்பக்குவமும் தான் முக்கியம்.

இந்த ஞானத் தெளிவை அடையாததால் தான் அர்ச்சுனன் பல சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டிருக்கிறான். ஆவேசப்பட்டிருக்கிறான். அப்பொழுதெல்லாம் அவனைத் தடுத்து நிறுத்தி நெறிப்படுத்தி வழி காட்டியவர் ஸ்ரீ கிருஷ்ணர். எனவே தான் இப்பொழுதும் மனம் தடுமாறிய நிலையில், செய்ய வேண்டியது என்ன என்று புரிபடாத நிலையில், ‘கண்ணா! நீங்களே என் குரு! எனக்கு வழி காட்டுங்கள்!’ என்று அர்ச்சுனன் பணிவுடன் இறைஞ்சுகிறான்.

நான் யார்? என்ற மிகப்பெரிய வினாவிற்குரிய விடையைக் குரு சிஷ்ய உரையாடலின் மூலம் தான் விளங்கிக்கொள்ள முடியும். அறியாமையில் சிக்கி, நான் யார்? என்ற உண்மை தெரியாமல் மனம் போன போக்கிலும், பிறரால் தரப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து பார்க்காமல் தொடர்ந்து கடைப்பிடிப்பதாலுமே இந்த வாழ்க்கை அல்லல் நிறைந்ததாக இருக்கின்றது. இப்படி அல்லல்படும் ஜீவனை அந்தப் பரம்பொருள்தான் கருணை கூர்ந்து குருவாக வந்து ஆட்கொள்கின்றார். கொஞ்சம் கொஞ்சமாகத் தத்துவ விசாரணை முறையின் மூலம் சீடனின் ஐயங்களை அகற்றி, நான் யார்? என்ற உண்மையைப் புரிய வைக்கின்றார்.

இந்த முறையில் தான் தனக்கு வழி காட்டும்படி வேண்டிப் பணிந்த அர்ச்சுனனுக்கு, ஆத்மா வேறு, இந்த உடல் வேறு என்பதை எடுத்துரைப்பதோடு இந்த ஆத்மாவின் தன்மைகளையும் கிருஷ்ணர் எடுத்துரைக்கின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துரைத்த கருத்துக்கள், நமக்குத் தெளிந்த ஞானத்தைத் தருவதாக இருக்கின்றன.

அறிவுத் தெளிவினால் மட்டுமே, வாழ்க்கை என்பது ஒரு நாடகம் என்பது விளங்கும். நாம் ஏற்கின்ற பாத்திரங்கள் பொய்யானவை. நமக்கு வைக்கப்பட்டிருக்கும் பெயரும், தரப்பட்டிருக்கும் உடலும் மற்ற அனைத்துமே கர்மப் பயனால் வந்து சேர்ந்தவை. இந்தப் பிறவியோடு இவை முடிவடைந்து விடும். ஆனால் நான் என்னும் இந்த சைதன்யத்திற்கு அழிவே இல்லை. அது தான் வளர்ந்து, தேய்ந்து, மடிகின்ற இந்த உடலுக்குள் இருந்து வேறு உடலுக்கு மாறி மாறி எத்தனையோ பிறவிகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பிறவிகள் தோறும் உடல்கள் மாறுமே தவிர, உள்ளே குடியிருக்கும் ஆத்மாவிற்கு அழிவில்லை. மாற்றமும் இல்லை. இந்த உண்மையை அறிய முற்படுபவர்களுக்குத் தான் இந்த ஞானம் கிடைக்கும்.

இந்த உடல் நமது வாழ்வின் உண்மையான நோக்கத்தை அடைவதற்காக அளிக்கப்பட்ட கருவி மட்டுமே! இந்த உடல் நான் அல்ல. இது எனக்குத் தரப்பட்ட வாகனம். இந்த வாகனம் எப்படிப் பயணப்பட்டு எங்கே சென்று சேர வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்குப் புத்தித் தெளிவும் இறையருளும் தேவை. இதைப் பயன்படுத்தி நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று சேர வேண்டுமே தவிர, அறியாமையால் வந்த இடத்தில் நின்று ஆடிக் கொண்டிருக்கக்கூடாது. அழியக்கூடிய இந்த உடம்பிற்காக எந்தவிதத் தீர்மானத்தையும் எடுக்கக்கூடாது. வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் பணம், புகழ், பட்டம், பதவி, வீடு, வாசல் என்று அலைந்து அலைந்து தேடக்கூடாது.

எதற்காகவும் ஆசைப்படாமல், ஏங்கித் தவிக்காமல், இருப்பதை நிறைவோடு ஏற்றுக்கொண்டு அமைதியாக, ஆனந்தமாக, திருப்தியாக வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. இன்னும் இன்னும் என்று வசதிக்காக ஏங்க, ஏங்க, இருக்கிற நிம்மதியும் போய்விடும். அறியாமை தான் எல்லாவற்றிற்கும் மூல காரணம். மெய்ஞானம் தான் போதும் என்ற திருப்தியையும் நிறைவையும் தரும்.

மரணம் பயத்தைத் தருவதாகவே பலருக்கும் இருக்கிறது. ஆனால் மரணம் என்பது இந்த உடலிலிருந்து விடுபடுவதே தவிர பயப்படத்தேவையில்லை.

“சோகம், அறியாமை, மரண பயம் இந்த மூன்றும் மாயையின் வெளிப்பாடுகளே தவிர, அவை உன்னுடையவை அல்ல.!” என்று ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனிடம் கூறுகிறார்.

மெய்ப்பொருளின் தளத்தில் நிற்பவருக்கு இவை மூன்றும் இருக்கவே இருக்காது. ஏனெனில் உண்மையான நான் என்னும் சைதன்யத்திற்குக் கவலையோ, துன்பமோ, அறியாமையோ, மரணமோ இல்லை. நான் என்பது எங்கும் நிலைத்திருப்பதான பரம்பொருளே என்பதைப் புரிந்து கொண்டவர்களுக்கு இவை இல்லை.

இந்த உடலையும், மனதையும், புத்தியையும் நான் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சோகம், அறியாமை, மரணபயம் இருக்கும். நான் பரம்பொருளின் அம்சமே என உணர்ந்தவருக்கு ஆனந்தமும் அன்பும் ஞானமும் தான் இருக்கும்.

உலகத்தில் உள்ள பொருள்கள் எல்லாமே அழியக்கூடியவை. நான் அழியாதவன். இந்த உலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்னவென்றால், எல்லாம் ஒரே சைதன்யத்தின் பல்வேறு தோற்றங்களே, சைதன்யமெனும் பெருங்கடலில் ஒரு சிறு அலையே நான். எனவே அவையும் நானும் எல்லாம் ஒன்று. இப்படி எண்ணத் துவங்கும்போது நாம் உலகக் குடிமகனாக ஆகிவிடுகின்றோம். நமக்குள் பேதமில்லை. அன்பு தான் எல்லாவற்றையும் இணைக்கின்றது.

இந்த அன்பு என்னும் மனிதகுல தர்மத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகத்தான் கிருஷ்ணர் மகாபாரதக் கதையில் எத்தனையோ சூழ்ச்சிகளைக் கையாள்கின்றார். ஏனெனில் தர்மம் தான் வெல்ல வேண்டும். அநீதியும், அதர்மமும் ஒரு நாளும் வெற்றியடைய முடியாது. தர்மத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை வரும்போது, காலம், இடம், ஏவல், பொருள் ஆகியவற்றைக் கொண்டு அந்தத் தர்மத்தையே கூட வளைக்கலாம்.

இந்து சமயத்தில் செய், செய்யாதே என்ற கட்டுப்பாடுகள் என்றுமே கிடையாது. எதையும் செய்யலாம். ஆனால் எதைச் செய்கிறாயோ அதற்குரிய பலனையே நீ அடைவாய்! என்று அது எச்சரிக்கின்றது.
நீங்களே கவனித்திருக்கலாம்! பெரியவர்கள் அறிவுரை கூறி இளையவர்கள் அதைக் கேட்க விரும்பாமல் தம் மனம் போனப் போக்கில் நடக்கின்றபோது, அனுபவமிக்க அந்தப் பெரியவர்கள் அவர்களை மேலும் வளைத்துக் கட்டுப்படுத்தித் திருப்பாமல், போ! பட்டுத் தெளிந்து வா! என்று சொல்லி விட்டு விடுவார்கள். இதற்குக் காரணம் இந்த தர்மக் கோட்பாட்டை அவர்கள் அறிந்திருப்பது தான். எதைச் செய்கிறோமோ அதற்குரிய விளைவு தான் ஏற்படும்.

தர்ம வழியில் நடக்கப் பழகினால் விளைவு சரியாகவே அமையும். மாறி நடந்தால் விளைவும் அதற்கேற்றபடி மாறித் தான் அமையும். நமக்குரிய குறைபாடுகள் எல்லாமே இந்தப் பிறவிக்குரியவையே தவிர உண்மையான நான் என்பது இறை நிலை. குறைகளை நாமே உணர்ந்து அவற்றைத் திருத்தி மேல்நிலைக்கு உயர முயன்றால் அடுத்த பிறவி மேம்படும். சோகம், அறியாமை, மரணபயம் இவை மூன்றும் நம்மிடமிருந்து நீங்கி விட்டாலே இந்த இறைநிலை நமக்குள் தானாக ஏற்படும். நாம் யாராக இருந்து செயல்பட்டாலும் இது நானல்ல, நான் அழிவில்லாத ஆத்மா! என்பதை உணர்ந்து அந்த நிலையிலிருந்தே செயல்படப் பழக வேண்டும். மனமும் புத்தியும் இப்படி அமைதியடைந்து கொண்டே வந்தால் அன்பும் கருணையும் தானாகவே வெளிப்படும். இப்படி இறை உணர்வில் இருந்து செயல்படும்போது வாழ்க்கை எளிதாக மாறிவிடுமென்பது மற்றொரு நன்மை.

தங்கம் தங்கமாக இருக்கும் வரை அதற்கு மதிப்பும் அழகும் குறைவு. அந்தத் தங்கம் ஆபரணமாக மாறுகின்றபோது தான் அதற்கு மதிப்பு அதிகம். அதுபோல நம்மை யார் என அறிந்து தெய்வீகப் பண்புகளுக்கு நம்மை உயர்த்திக் கொண்டால் தான் இந்தப் பிறவி சிறப்படையும். பரிணாம உயர்வு ஏற்படும். இந்தத் தெய்வீக உணர்வில் நம்மை நிறுத்தி வாழ்கின்றபோது, பிறகு இந்த வாழ்க்கையை விரும்புவதுமில்லை. விலகுவதுமில்லை. உள்ளது உள்ளபடி அப்படியே வாழ்க்கையை ஏற்க முடியும். இந்த ஞானத்தை அர்ச்சுனன் பெற்று உயர வேண்டும் என்றுதான் கிருஷ்ணர் உண்மையை எடுத்துரைக்கின்றார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s