மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -6

பகவத்கீதையின் முதல் அத்தியாயம் அர்ச்சுன விஷாதயோகம் என்ற பெயரில், அர்ச்சுனனுக்கு ஏற்பட்ட மனநோய் பல கோணங்களில், அவனது விவாதமாகவும், புலம்பலாகவும், எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றது. நோயின் தன்மையையும், நோயின் தீவிரம் பற்றியும் தெரிந்து கொண்டால் தான் மருத்துவரால் சரியான சிகிச்சை தர முடியும். எனவே தான் நோயாளியான அர்ச்சுனனின் பலவீனமான வாதங்களைக் கிருஷ்ணர் அமைதியாகக் கேட்டார்.

பகவத்கீதையின் 2வது அத்தியாயம் சாங்கிய யோகம். உண்மையை ஆராய்ந்து பார்க்கின்ற ஓர் அத்தியாயமாகவும், கீதையின் மணி மகுடமாகவும் இதைக் கூறலாம். உபநிஷத்துகளில் ஆத்மாவைப் பற்றியும், பரமாத்மாவைப் பற்றியும், அண்ட சராசரங்களின் படைப்பு, இருப்பு, பிரளயம் பற்றியும் என்னென்ன சொல்லப்பட்டிருக்கின்றனவோ அத்தனையும் பகவத்கீதையின் இரண்டாம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று உபநிஷத் ஆலமரம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரு நண்பர்களிடையே நிகழ்ந்த மனம் திறந்த உரையாடலாகக் கீதையை அமைத்ததன் மூலம் வியாசர், வேதத் தத்துவங்களை மிக எளிமையாக்கித் தந்திருக்கிறார். துவண்டு போன மனம், ஞானம் பெற்ற ஓர் அறிவார்ந்த மனதினால் வழி காட்டப்பட்டுச் சஞ்சலம் நீங்கித் தானும் அந்த உயர் நிலையை அடைவதாக வியாசர் கீதையை வடிவமைத்திருக்கிறார்.

சாங்கியம் என்றால் ஞானம் என்று பொருள். சாங்கிய யோகம் என்னும் இந்த அத்தியாயத்தில் அறிவு சார்ந்த ஞான ஆராய்ச்சிதான் செய்யப் பட்டிருக்கின்றது.

சூழ்நிலை நம்மை ஆளும்படி விட்டு விட்டால் வாழ்க்கையில் படுதோல்வியை வேண்டி விரும்பிப் பெற்றதாக ஆகிவிடும். தெளிவு, சமநிலைப்பட்ட மனம் ஆகியவை இருந்தால் சூழ்நிலைக்கு இரையாவதில்லை. அறிவு பூர்வமாகப் பிரச்னையை அணுகினால் சரியான தீர்வைக் காணமுடியும். உணர்ச்சி பூர்வமாக அணுகினால் பிரச்னை மேலும் சிக்கலாகி விடும். அர்ச்சுனன் மிகப் பெரிய வில்லாளியாக, கூர்த்த மதி பெற்றவனாக இருந்தும் அவன் உணர்ச்சிவசப்பட்டதால் தான், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு இரையாகிவிட்டதால் தான் அறிவு குழம்பி மனநோயாளிபோல் அழுது, பிதற்றி, நியாயம் பேசிக் காண்டீபத்தை வீசி எறிந்துவிட்டுக் கோழையைப்போல் வருந்தினான்.

அறிவுத் தெளிவுடன் அவன் செயல்பட்டிருந்தால் சங்கு முழங்கப்பட்டதும் போர் துவங்கியிருக்கும். நடக்க வேண்டியவை முறையாக நடந்திருக்கும். அறம் சார்ந்த அர்ச்சுனனின் மனப் போராட்டத்தால் தர்ம நியாயம் நிறைந்த போர் அதர்மமாக அநியாயமானதாக அவனுக்குத் தோன்றியது. அவனது இந்த மனத்தடுமாற்றத்தை நடுநிலையில் நின்ற கிருஷ்ணன் சரியாகப் புரிந்துகொண்டார்.

அதனால் அவர் அர்ச்சுனனைப் பார்த்து, “அர்ச்சுனா! தகாத வேளையில் உனக்கு எப்படி இந்தக் கோழைத்தனம் ஏற்பட்டது? இது சிறந்த ஆண்மகனுக்கு அழகல்ல. இது ஒருவனுக்கு மேல்நிலையையோ, புகழையோ அளிக்காது. ஆகவே இதயத்தை வலுவிழக்கச்செய்யும் இந்த அற்பப் பலவீனத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போர் புரிய எழுந்திரு! போரைத் தொடங்கு!” என்றார்.

ஆனால் மனம் தெளிவடையாத அர்ச்சுனன் மேலும் புலம்பலுற்றான். சந்நியாசத்தை மேற்கொள்ளப்படுவதாகவும், பிச்சை எடுத்தாவது வாழ்வேன் என்றும் ஏதேதோ கூறினான். பிறகு அவனது வாதங்களின் பலவீனம் அவனுக்கே புரிந்ததால் தடுமாறிய குரலில், “கிருஷ்ணா! எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. எனது வீரம் குறைந்து விட்டது. எது தர்மம் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகையால் எது எனக்கு நலன் தருமோ, எது என் கடமையோ அதை எடுத்துச் சொல்லுங்கள். நீங்களே என் குரு. நான் உங்கள் சீடன். நான் உங்களையே சரணடைந்திருக்கிறேன். எனக்கு அறிவுரை கூறுங்கள். வழிகாட்டி அருளுங்கள். ஆனால் யுத்தம் செய்யும்படி மட்டும் சொல்லாதீர்கள். அது என்னால் முடியாது!” என்று கரம் கூப்பி வேண்டினான்.

அர்ச்சுனனின் உயர்ந்த குணநலன்களையும் வீரத்தையும் நன்கறிந்த நண்பரான கிருஷ்ணருக்கு அவனது தற்போதய நிலை வியப்பை அளித்தது. அவன் கண்களில் பெருகிய நீர் அவனது மனநிலையை அவருக்குக் காட்டியது. என்னால் சமாளிக்கமுடியும் என்னும் ஈகோ இருக்கும்வரை அது பூரண சரணாகதி இல்லை. எனக்கு எல்லாம் நீயே! என்ற நிலை வர வேண்டும். நான் செய்கிறேன் என்ற ஆணவம் மாறி, எல்லாம் அவன் செயல்! என்ற பணிவு வரவேண்டும்.

முழுமையாக இறைவனிடம் சரணடைந்தவனிடம் நம்பிக்கையும், சரியாக நடந்துகொள்ளக்கூடிய தெளிவும் துணிவும் இருக்கும். நீயே சரணம்! என்று வாயால் மட்டும் சொல்லிவிட்டு அப்படியோ, இப்படியோ என்று மாற்றி மாற்றி யோசித்துக் குழம்பினால் அது தவறாகத் தான் போகும். கர்மா இருக்கும்வரை செயலின் விளைவுகள் அப்படியும் இப்படியுமாக இருக்கலாம். நாம் நினைத்தவை நிறைவேறாமல் போகலாம். எதிர்பாராதவை நடக்கலாம். ஆனால் முழுமையான சரணாகதி எப்பொழுதும் இறையருளாகவே நம்மிடம் காத்து நிற்கும்.

கர்மத்தால் எவ்வளவு புண்ணியத்தைப் பெற்றிருந்தாலும் ஞானத்தைப் பெற முடியாது. நாம் செய்கின்ற நல்ல செயல்கள் நமக்கு நல்ல கர்மப்பலனைத் தரும். அவ்வளவுதான். ஞானம் பெறுவதற்கு ஒரு குரு தேவை. ஞானம் தான் அறியாமையைப் போக்கும். மனிதன் பரிணாம உயர்வு பெற அவனுக்கு வேண்டியது ஞானம்.

தனக்கு இந்த விஷயத்தில் முடிவெடுக்கத் தெரியவில்லை என்பதைப் புரிந்துகொண்ட அர்ச்சுனன், நீ குருவாக இருந்து என்னை வழி நடத்துவாய்! என்று கிருஷ்ணரிடமே தஞ்சம் அடைகின்றான்.

நமது வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு நல்ல திருப்பத்திற்கும் அல்லது உயர்விற்கும் வழிகாட்டியவர்கள் எல்லாம் நமக்குக் குரு என்றே கூறலாம். ஆபத்தான சமயத்திலும், தவறான அணுகுமுறையிலும் நம் பக்கத்தில் நின்று நமக்கு அறிவுரை கூறி, தடுத்தி நிறுத்திச் சரியாகச் செயல்பட வைப்பவர்களும், நாம் அறியாத ஒன்றைக் கற்றுக் கொடுப்பவரும் நமக்குக் குரு தான். புதிய பாதையை நமக்குக் காட்டுபவர் குருவே. நமது மனமென்னும் பெட்டியைத் திறந்து உள்ளே ஆராய்ந்து பார்த்தால் தான் அதனுள்ளே மறைந்திருக்கும் ஆத்மா என்னும் பொக்கிஷம் நமக்குக் கிடைக்கும். இந்தப் பெட்டியைத் திறக்க உதவுபவர் குருவே. கோடிக்கணக்கான மக்கள் மனதைத் திறக்காமலேயே மாண்டு போகின்றனர் என்று கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார்.

“ஸர்வ தர்மான் பரித்தஸ்ய மாமேகம் சரணம் வ்ரஜ” என்கிறார் அவர். உன்னுடையதான எல்லாவற்றையும் என்னிடம் தந்து விடு. நீ அறிந்து வைத்திருக்கின்ற தர்மங்கள் அனைத்தையும் விலக்கி நீக்கிவிட்டு என்னையே முழுமையாகச் சரணடைந்து விடு! என்று கிருஷ்ணர் அர்ச்சுனனிடம்  கூறுகின்றார். இந்த இடத்தில் ஒன்றைக் கூற விரும்புகிறேன்.

“அன்யதா சரணம் நாஸ்தி
த்வமேவ சரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவனே
ரக்ஷ ரக்ஷ மஹேஸ்வர:”

என்னும் மந்திரம் எல்லோராலும் சொல்லப்பட வேண்டிய ஓர் உயரிய மந்திரம். உன் திருவடிகளைத் தவிர எனக்கு வேறு புகலிடம் கிடையாது. நான் உன்னையே சரணடைந்துவிட்டேன். அதனால் எல்லையற்ற கருணை உள்ளத்துடன் என்னை நீ காப்பாய்! காப்பாய்! என்பதே இதன் பொருள். இது தான் பூரண சரணாகதி. இத்தகைய பூரண சரணாகதிதான் வாழ்க்கைப் பிணியிலிருந்து நாம் விடுபட வழிவகுத்துத் தரும். பாதி தன்னிடம், மீதி அவனிடம் என்று பரம்பொருளிடம் விளையாட்டு காட்ட முடியாது. அனைத்தையும் அவனிடமே தந்துவிட்டுப் பணிந்துவிட வேண்டும். திரௌபதி அதைத்தான் செய்தாள். கௌரவர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள இயலாத கையறு நிலையில் தன் இரு கரங்களையும் தலைக்கு மேல் கூப்பி, இதயத்தில் இருப்பவனே! அபயம்! அபயம்! என்று அலறினாள்.

தன்பலம், தன்னைச் சேர்ந்தவர் பலம், சூழ்நிலை பலம் எல்லாம் பொய்த்துப்போன நிலையில் பரம்பொருளான கிருஷ்ணனை அழைத்து அவள் அடைக்கலம் கோரினாள். கிருஷ்ணர் அவளைக் காத்தார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. ஓர் அணு அளவு கூட அவனை அசைக்க முடியாது. ஏனெனில் அவன் பரிபூர்ணமானவன். எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்.

அப்படிப்பட்ட பரிபூரணனான கண்ணன் அர்ச்சுனனைப் பார்த்து, ‘அசோச்யான் அன்வ ஸோசஸ் த்வம்!’ அதாவது ‘நீ வருத்தப்பட வேண்டாம். வீணாக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய்! அர்ச்சுனா! புலமை மிக்க சான்றோர் போல் பெரிய தத்துவமெல்லாம் பேசுகிறாய். ஆனால் விவேகம் மிகுந்த சான்றோர்கள் இறந்து போனவர்களுக்காகவும், இனி இறக்கப் போகிறவர்களுக்காகவும் வருத்தப்பட மாட்டார்கள். இதை நீ முதலில் புரிந்துகொள்!’ என்றார் புன்சிரிப்புடன். மேலும் அவர் நான், நீ, இந்த அரசர்கள் எல்லோருமே முன்பும் இருந்தோம். பின்பும் இருக்கப்போகிறோம். இந்த உண்மையை உணர்ந்த சான்றோர்கள் பிறப்பு இறப்பு குறித்து வருந்துவது இல்லை என்றார்.

(தொடரும் ….)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s