மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -5


இப்படி எதிர்பாராத ஒரு தாக்கம் ஏற்பட்டதால் தான் அர்ச்சுனனின் வீரமும் விவேகமும் சுணங்கிப்போய்ப் பாசவலைப்பட்டு தாக்குண்டு குழம்பிப் போய்விட்டான். எல்லோரையும் பார்த்ததும் அவன் தைரியமிழந்து கோழையைப்போல் மனம் வருந்திப் பேசத் துவங்கினான்.

“கிருஷ்ணா! என் நெருங்கிய உற்றார், உறவினர்களைப் போர் புரியும் நிலையில் எதிரில் பார்த்ததும் என் அங்கங்கள் தளர்ந்து போகின்றன. முகம் வாடுகிறது. உடல் நடுங்குகின்றது. என் கையிலிருந்து காண்டீப வில் நழுவி விழுகின்றது. மனம் தத்தளித்துத் தடுமாறுகிறது. என்னால் நிற்கக் கூட முடியவில்லை!”

அர்ச்சுனனின் நிலை புரிந்த கிருஷ்ணரின் உதட்டிலே விஷமப்புன்னகை. ஆனால் அவர் மௌனமாக  அர்ச்சுனனைப் பார்த்தாரே தவிர ஒன்றும் பேசவில்லை. அர்ச்சுனனே மீண்டும் பேசினான்.

“கேசவா! தீய சகுனங்கள் என் கண்களுக்குத் தெரிகின்றன. இந்த உறவினர்களையெல்லாம் கொன்றுவிட்டு நாங்கள் பெறப்போகின்ற ராச்சியத்தாலோ, சுகபோக வாழ்க்கையாலோ என்ன பயன் கிட்டப்போகிறது? என் குலப் பெரியோர்களைக் கொல்வதால் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுமா? எங்களைக் கொல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நிற்கும் இந்த அநியாயக்காரர்களைக் கொல்வதால் எங்களுக்குப் பாவம் தான் ஏற்படும். என் பெரியப்பாவின் குடும்பத்தாரை அழித்துவிட்டு நாங்கள் சுகமாக வாழ முடியுமா?”

(இந்த வார்த்தை அவன் வாயிலிருந்து திடீரென்று வெளிப்படத் திருதராட்டிரனின் சூழ்ச்சி பின் நிற்பது தெரிகிறது அல்லவா)

மேலும் அவன், “பெருமானே! பேராசை காரணமாக இவர்களது பகுத்தறிவு பாழடைந்து விட்டது. இதனால் குல நாசம், மித்திர துரோகம் போன்றவை ஏற்பட்டுவிடும். குலம் அழிந்தால் குலதர்மம் கெட்டுவிடும். அதனால் அதர்மம் பரவி, நல்லொழுக்கம் நசித்துக் குலப்பெண்கள் கெட்டுப் போவார்கள். சாதிக் கலப்பு ஏற்பட்டுவிடும்!” என்று ஏதேதோ புலம்பலானான்.

இதற்குக் காரணம் இருக்கிறது. அன்றைய பாரதத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் கலாச்சாரமும், மரபும், நாட்டின் ஒட்டுமொத்த கலாச்சார மரபின் அடித்தளமாக இருந்தது. அதனால்தான் அர்ச்சுனன் சாதிக்கலப்பு பற்றிப் பேசுகிறான். சாதி என்பது இன்றைய சமுதாய சீர்கேடுகளுக்குக் காரணமாய் அமைந்த சாதி அமைப்பு அல்ல. பழைய காலத்தில் சாதிப்பகுப்பு என்பது அறிவார்ந்த ஓர் உயர்ந்த முறையில் தொழில்முறை அடிப்படையில் மட்டுமே வடிவமைக்கப்பட்டு, அது அன்றைய சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. மனிதசக்தி அறிவுபூர்வமாகப் பிரிக்கப்பட்டதே சாதி என்று ஆனது. இதில் உயர்வு, தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

அறிவுத்திறனும், கல்வித் திறனும், ஆராய்ச்சியும் கொண்டிருந்தவர்கள் பிராமணர் எனப்பட்டனர். வேதம் ஓதுவதும், ஓதுவித்தலும், அவர்களின் கடமையாக இருந்தது. தலைமைப் பணியும், நிர்வாகத் திறனும், போரிடும் ஆற்றலும் மிகுந்தவர்கள் சத்திரியர் எனப்பட்டனர். நாட்டின் அமைதியையும், வளத்தையும் காப்பாற்ற, அந்நியரிடம் போரிடும் திறம் பெற்ற இவர்கள் நாட்டை ஆட்சி செய்தனர்.  விவசாயத்தின் மூலமும், வாணிபத்தின் மூலமும் பசுக்களைப் பராமரித்தும் நாட்டின் வளத்தைப் பெருக்கியவர்கள் வைசியர் எனப்பட்டனர். இவை அல்லாத மற்ற அனைத்துப் பிரிவினரும் சூத்திரர்கள் எனப்பட்டனர். அவர்கள் கடமை தொண்டும், உழைப்பும் ஆகும். இவை இனமல்ல. பிரிவுகள் மட்டுமே. சமூகசேவையாளர். அதிகாரிகள், தொழிலாளர்கள் ஆகியோர் இந்தப் பிரிவில் அடங்குவர். சாதிப் பாகுபாட்டைப் பரந்த அறிவார்ந்த நிலையில் பார்க்கின்றபோது தான் இது வகுக்கப்பட்டதன்  உட்பொருளும் உயர்வும் விளங்கும்.

அவரவர் திறமை, ஆற்றலுக்கும், அறிவு மேம்பாட்டிற்கும், உடல் வலிமைக்கும் ஏற்ற தொழில் அடிப்படையில் சாதிகளை அமைத்ததால் அன்றைய சமுதாய இயக்கம் சிறப்பாக அமைந்தது. ஒரு சமுதாயத்தின் கட்டமைப்பு ஏதோ காரணங்களால் குலைகின்றபோது அந்த சமுதாயமே சீர்குலைந்து போகின்றது. நம் மூதாதையர்கள் தாம் வாழ்ந்த காலத்தில் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்த கலாச்சார மரபுகளைப் பழக்க வழக்கங்களைத் தம் பிள்ளைகளுக்கும் அவர்கள் சார்ந்த குடும்ப அங்கத்தவருக்கும் சொல்லிக் கொடுத்ததன் மூலமாகத் தான் நமது பரம்பரைக்குரிய உயரிய கலாச்சாரப் பெருமை இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அவற்றைக் கடைப்பிடிப்பதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொண்டால் தான் நாமும் அவற்றை ஏற்றுச் செய்து தொடர முடியும்.

தலைமுறை தலைமுறையாகக் காக்கப்பட்டு வந்த இந்தக் கலாச்சார மரபுகள் சீரழிக்கப்படுவது நமது மூதாதையரின் உழைப்பையும், அவர்கள் கண்காணித்துப் பேணிக்காத்து வந்த வாழ்க்கை முறையையும் அவமானப்படுத்துவது ஆகும். ஒவ்வொரு தலைமுறையினரும் நமது கலாச்சார ஒளிவிளக்கைத் தம் சந்ததியின் அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். இந்த ஒளிவிளக்கைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்துத் தமக்குப் பின்வரும் தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டியது நம் கடமையாகும். அவ்வாறு ஒப்படைக்கின்றபோது அந்த ஒளிவிளக்கை அதிகப் பிரகாசத்துடன் கூடிய வகையில் கொடுக்க முடியாவிட்டாலும் மங்கிப் போன நிலையில் கொடுக்காவிட்டால் சரி.

உலகிற்கே வழிகாட்டிக் கொண்டிருக்கின்ற ஆன்மீகக் கலாச்சாரத்தை உருவாக்கிப் பாரதநாட்டுத் தவ முனிவர்கள் இந்த ஆன்மீகத்தை மதச்செயல்பாடுகள் மூலம் பாதுகாத்து வந்தனர். ஆன்மீகத்தைப் பாதுகாப்பதற்கான செயல்முறைகளே இந்து மதமே தவிர, மற்ற மதங்களைப்போல் ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல. இதிலிருந்து சமயம் முக்கியமல்ல. அது பாதுகாத்து வைத்திருக்கும் ஆன்மீக வழிமுறைகளே முக்கியம் என்பதும் அதைத்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் விளங்குகிறதல்லவா?

ஒவ்வொரு குடும்பத்திலும் கடைப்பிடிக்கப்படும் சமயச் சடங்கு முறைகள் எல்லாம். ஆன்மீக வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை என்பது புரியாமலேயே இன்றுவரை அவற்றைச் செய்து வருகின்றோம். இப்படி இந்த உண்மை புரியாததால் தான் இளம் தலைமுறையினர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூற முடியாமல் தடுமாற வேண்டியிருகக்கிறது.

நமது சமுதாயச் செயல்முறைகளில் பெரும்பாலும் பல விஷயங்கள ஆழ்ந்த கவனத்துடன் உருவாக்கப்பட்டவை தான். கவனமும், உய்த்துணரும், திறனும், பெரியவர்கள் தருகின்ற விளக்கங்களைக் கேட்டுப் பெற்று அவற்றை ஏற்று நடக்கின்ற மனப்பக்குவமும் குறைந்துகொண்டே போவதும், சமீப காலமாக ஏற்பட்டுள்ள மொழிப் பிரச்னையும் இளைஞர்களுக்கு நம் ஆன்மீகச் சிறப்பை அறிந்துகொள்வதற்குத் தடைக் கற்களாக அமைந்துவிட்டன. இத்தடைகளை மீறித் தேடலும், அறிவுத் துhண்டலும் மேம்பட்டவர்கள் யாராக இருந்தாலும் ஆன்மீகத்தைத் தேடி, எந்த விதத்திலாவது அந்த ஞானத்தைப் பெற உரிய முயற்சிகளை மேற்கொள்ளுகின்றனர் என்பது உண்மை.

சொல்லப் போனால் ஒரு வீட்டின் பூஜை அறையின் முக்கியத்துவமும், அங்கு வழிபடும் முறைகளாலுமே அக்குடும்பத்தினரின் ஆன்மீகச் சிறப்பின் உயர்வை அறிய முடியும். குடும்பம் முழுவதுமாக ஒன்று சேர்ந்து பூஜையறையில் பிரார்த்தனையும், பஜனையும், வழிபாட்டு முறைகளாக மேற்கொண்டு பூஜை செய்து, தியானமும் கூட்டாகச் செய்து வந்தால், அந்த உயரிய தியான அலைகள் வீடு முழுவதிலும் பரவி, அந்த வீட்டில் அமைதியையும் தெய்வீகத்தையும் உருவாக்கும். இந்து கலாச்சாரத்தில் இந்த வழிபாட்டு முறை மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  குடும்பத்தின் கலாச்சாரத் துhய்மையே குடும்ப தர்மம் ஆகும். அதுவே குல தர்மமுமாகும்.

மேலே நான் எழுதிய கருத்துக்கள் யாவும் நமது இந்து மதத்தின் சாதி அமைப்பு முறையின் சிறப்பு பற்றியும், குடும்ப கலாச்சாரத்தின் உயர்வு பற்றியும், சுவாமி சின்மயானந்தர் உரைத்த உன்னதமான கருத்துக்கள் ஆகும். இங்கு இதனை சேர்ப்பதன் மூலம் சாதி பற்றிய ஒரு தெளிவான கருத்து நமக்குள் உருவாக வேண்டும் உண்மையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

இப்படிப்பட்ட குலதர்மம், ஜாதி தர்மம் அழியக்கூடாது என்றுதான் அர்ச்சுனன் இவ்வாறு ஏதேதோ நியாயவாதம் புரிகின்றான். தனது சூழ்நிலையை எதிர்கொண்டு கட்டுப்படுத்தி ஆளத்தெரியாமல், சூழ்நிலைக்கு அடிமையாகிவிட்ட மனநிலையில் கோழையாக மாறிக் கிருஷ்ணரிடம் வாதாடுகிறான்.  நான் ஆயுதங்களைத் துறந்து யுத்தத்திலிருந்து விலகவே விரும்புகிறேன். நிராயுதபாணியான என்னைத் துரியோதனன் முதலானோர் கொன்றாலும் பரவாயில்லை! என்று கூறி, வில்லையும் அம்புகளையும் கீழே போட்டுவிட்டு ரதத்தின் நடுவில் சோர்ந்து அமர்ந்துவிட்டான்.

கலங்கிய மனதிற்குத் தத்துவங்கள் தான் கைகொடுக்கின்றன. நடைமுறையில் பார்த்தால் கூட வாழ்க்கையில் மிகவும் அடிபட்டவன் தான் நிறைய தத்துவம் பேசுவான். கீதையைப் புரிந்துகொள்வதற்கும், வாழ்க்கையில் அதைப் பயன்படுத்துவதற்கும் அர்ச்சுனனைப் போல, மனம் குழம்பிய துன்பச் சிந்தனையில் சிக்கித் தடுமாறுகின்ற நிலை நமக்கும் ஏற்பட்டிருக்க வேண்டும். அர்ச்சுனனின் விஷாதமே கிருஷ்ணரைக் கீதை உரைக்கச் செய்தது.

(தொடரும் …….)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s