மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -4

பகவத் கீதையில் மொத்தம் 18 அத்தியாயங்கள் உள்ளன. இவை மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு, முதல் ஆறு அத்தியாயங்கள் மனிதராகிய நம்மைப் பற்றியும், அடுத்த ஆறு அத்தியாயங்கள் இறைவனைப் பற்றியும், கடைசி ஆறு அத்தியாயங்கள் மனிதராகிய நாம் எப்படி தெய்வமாக மாற முடியும் என்பது பற்றியும் விளக்குகின்றன. வேதங்களால் உரைக்கப்பட்ட மகா வாக்கியங்களில் ஒன்று தத்வமஸி;. ‘அது நீயாக இருக்கிறது’ என்பது இதன் நேரடி விளக்கம். நீ தான் அது! என்று இந்த உண்மையைப் புரிய வைக்கின்றது கீதை. நான் யார் என்ற நம்மைப் பற்றிய உண்மைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல் வாழ்வதால் இன்ப துன்பங்கள் நம்மைப் பாடாய்ப் படுத்துகின்றன. இந்த உண்மையைப் புரிந்துகொள்வதற்காகத் தான் மனிதப்பிறவி தரப்பட்டிருக்கிறது. ஆனால் அறியாமையில் மூழ்கித் தவிக்கின்ற நமக்கு எப்படி நம்மைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள முடியும்?

அதற்காகத்தான் இந்த பகவத்கீதை இறைவனாலேயே மனிதனுக்கு உபதேசிக்கப்பட்டிருக்கிறது.  கீதையின் முதல் ஆறு அத்தியாயங்களிலே மனிதனின் இயல்புகள், உண்மையில் நான் யார்? உண்மையான என்னுடைய தன்மை என்ன? போன்றவை விளக்கப்படுகின்றன. அடுத்த ஆறு அத்தியாயங்களிலே பரம்பொருளின் இலட்சணங்களும் மகிமைகளும் விளக்கப்படுகின்றன. அதற்கடுத்த ஆறு அத்தியாயங்களிலே தன்னைப்பற்றிப் புரிந்துகொண்டவன் இறைத்தன்மையை அடைய செய்ய வேண்டியது என்ன? என்பது பற்றிக் கூறியிருக்கின்றது.  எனவே ஆத்ம விசாரணையில் இறங்கி ஆன்மீக வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் கட்டாயம் அறிய வேண்டிய ஓர் ஞான நுhல் இந்த பகவத்கீதை.

கீதையின் முதல் அத்தியாயம் அர்ச்சுன விஷாத யோகம். விஷாதம் என்றால் சஞ்சலம், கவலை என்று பொருள். அர்ச்சுனனின் கவலை முதல் அத்தியாயத்தில் விவரிக்கப்படுகிறது. மிகச் சிறந்த வீரனும், கிருஷ்ணனையே தன் உயிர்த் தோழனாகக் கொண்டிருப்பவனுமாகிய அர்ச்சுனனுக்கு என்ன கவலை?

குருஷேத்திரத்திலே கௌரவர்கள் தம் சேனையுடன்  பீஷ்மரைப் படைத்தலைவராகக் கொண்டு ஒரு புறம் அணி வகுத்து நிற்கின்றனர். திரௌபதியின் உடன் பிறந்தவரான த்ருடத்யும்னன் தலைமையில் பாண்டவர் சேனை ஒரு புறம் அணி வகுத்து நிற்கின்றது. இந்நிலையில் ஏதோ ஓர் உந்துதலில், மனச் சஞ்சலத்தின் வெளிப்பாடாக அர்ச்சுனன் தனது தேரைச் செலுத்தி வந்து நிறுத்திய கிருஷ்ணரிடம், ஒரு வேண்டுகோளை வைக்கின்றான்.

‘கிருஷ்ணா! இந்த ரதத்தை இரண்டு சேனைகளுக்கும் நடுவில் கொண்டு போய் நிறுத்துங்கள். இங்குப் போரிட வந்திருக்கும் பெரியவர்களை முதலில் நான் பார்த்து யாரிடம் போர் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’.

அர்ச்சுனனன் இவ்வாறு கூறியதும் ஸ்ரீ கிருஷ்ணர் ரதத்தை இரண்டு படைகளுக்கும் நடுவில் போய் நிறுத்தினார். எதிர் அணியில் குழுமி நிற்கும் குரு வம்சத்து வீரர்களைப் பார்க்கும்படி அர்ச்சுனனிடம் அவர் கூறினார். அர்ச்சுனன் எதிரிப்படையணியினராக அவர்களைப் பார்க்காமல் உறவு, பாசம் என்ற உணர்ச்சிகளால் தாக்கப்பட்டு தனது தாத்தா, தன் குரு, தன் குல ஆச்சார்யர், சகோதரர்கள், மாமா, அண்ணன், தம்பி, உறவினர்கள், நண்பர்கள் என்ற கண்ணோட்டத்தில் அவர்களைப் பார்த்தான். அப்படி அவர்களைப் பார்த்ததும், இவர்களை நான் கொன்று குவிக்க வேண்டுமா? என்ற கேள்வி அவனுள் எழுந்தது. இப்படி என் குருவையும், அன்பிற்குரிய தாத்தாவையும், அண்ணன் தம்பிகளையும் போரிட்டு வென்று அதன் பிறகு கிடைக்கின்ற ராச்சியம் எமக்குத் தேவையா? என்று அவனுக்குள் அடுத்த கேள்வி உதித்தது.

குடும்பப் பாசத்திற்கு முன் கௌரவமும் வீரமும் தேவை தானா? என்ற பிழையான சிந்தனை அவனுள் மூண்டுவிட்டது. மனப்பிளவு நோயால் பாதிக்கப்பட்டு மனப்பதட்டத்தால், பாசமும், உறவும் ஏற்படுத்திய மனக்குழப்பத்தால் வெறும் வார்த்தைகளைக் கொட்டத் துவங்குகின்றான் அவன்.

அர்ச்சுனன் ஒரு சாதாரண ஆள் இல்லை. பெரிய அரசகுமாரன். வில்லாதி வீரன். தெய்வீக அஸ்திரங்களைத் தவம் செய்து வேண்டிப்பெற்றவன். சகல சாஸ்திரங்களையும் அறிந்தவன். சகலகலா வல்லவன். இருந்தபோதிலும் தான் போரிட முற்பட்டது சரியா? பிழையா?  என்ற மனத்தடுமாற்றம் அவனை நிலைகுலையச் செய்துவிட்டது. பயத்தினால் அவன் கிருஷ்ணனிடம்  மனம் குழம்பிh; பேசவில்லை. வீரனான அவனுக்குப் பயம் என்பது இல்லை. பந்த பாசத்தின் பாதிப்பு இது.

அர்ச்சுனனின் கவலை உண்மையானதோ, நியாயமானதோ அல்ல. காட்டக்கூடாத இடத்தில், தவறான சந்தர்ப்பத்தில் தப்பானவர்களிடத்தில் அர்ச்சுனன் கருணையையும், தயையும் காட்டினான். யுத்தபூமியில் இவற்றிற்குச் சிறிதும் இடமில்லை. யுத்தகளத்திற்கு வருவதற்கு முன்பாக இந்த இரக்கம் வந்திருந்தால் கூடப் பரவாயில்லை. யுத்தம் செய்வதற்காக முடிவு செய்து, தீமையை அழிக்க முன் வந்தபின் வரும் கருணை பிழையானது.

தர்மத்தைக் கைவிட்டு அதர்மமாக நடப்பவர்களைத் தண்டிக்கத்தான் வேண்டும். நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்தால் தான் அவன் பிழைக்க முடியும் என்ற நிலையில் எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டு, மருத்துவர் கத்தியைக் கையில் எடுக்கின்ற நேரத்தில், ஐயோ! இவனைக் கத்தியால் வெட்டுவதற்கு  என் கருணை மனம் இடம் கொடுக்கவில்லையே! இந்த ஆபஷேனைச் செய்ய என்னால் முடியாது. என்று அந்த மருத்துவர் சொன்னால் அது தர்மமாகுமா? அவரது கடமை அறுவை சிகிச்சையைப் பொறுப்பாக, வெற்றிகரமாகச் செய்து முடித்து நோயாளியைக் காப்பாற்றுவது தான்.

தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ: என்பது கீதையின் புகழ்பெற்ற வாக்கியம். தர்மத்தை நீ காப்பாற்றினால், தர்மம் உன்னைக் காப்பாற்றும்! என்பது இதன் பொருள். தர்மம் என்பது என்ன? எல்லாவற்றையும் எனது என்று எண்ணிச் செருக்குடன் இயங்காமல், இவை எனக்குத் தரப்பட்டவை. இதை வைத்து வாழலாமே தவிர, அனுபவிக்கலாமே தவிர, எதையும் கொண்டு போக முடியாது. எல்லாமே இங்கு  ஏற்கனவே இருப்பவை. நான் இடையில் வந்து இடையில் போய்விடுவேன் என்ற உண்மையை புரிந்துகொண்டு, எதற்கும் ஆசைப்படாமல், ஒட்டாமல் வாழ்ந்து போய்விட வேண்டும் என்பது தான் உண்மையான தர்மம்.

கோவில் தர்மகர்த்தா கோவில் சொத்துக்களை வைத்து நிர்வாகம் செய்து, பொறுப்பாளராக  மட்டும் செயல்படுவதைப்போலத் தர்மநெறிப்படி இந்த உடலைப் பயன்படுத்தி வாழ்ந்தால், இந்த தர்மம் நம்மைக் காப்பாற்றி வழி நடத்தும்! என்பது தான் கீதை தத்துவம். எனவே எந்த சந்தர்ப்பம் என்றாலும், உணர்ச்சிக்கு இடம் கொடாமல், அறிவுக்கு இடம் தந்து, தர்ம நியாயப்படி நடந்து அதனை எதிர்கொள்ள வேண்டும். தர்மப்படி நடப்பவனுக்கு மனப்பிளவு ஏற்படாது. சரியான விதத்தில் நடக்கின்ற தன்மை இயல்பாக ஏற்படும். ஒருமித்த மனதுடன் அவனது செயல்கள் நடைபெறுவதால், அச்செயல்களின் விளைவு எதுவும் அவனைப் பாதிக்காது.  எதைச் செய்தாலும் சரியாகச் செய்து, வருவதை ஆராய்ந்து பார்க்காமல் இது இறை விருப்பம் என்று அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும்  மனப்பக்குவம் அப்படிப்பட்டவருக்கு ஏற்பட்டு விடும். தர்மம் மன மயக்கங்களிலிருந்து ஒருவனை விடுவிக்கும். மாயையிலிருந்து விடுபடுவது தான் பிறப்பின் நோக்கம்.

அர்ச்சுனனின் மனம் குழம்பிய நிலையைக் கதையாகப் பார்க்கின்றபோது, எனக்கும் இப்படி ஏற்பட்டதே! என்ற உணர்வு நமக்குள் ஏற்படும். ஏனெனில் அன்றாட வாழ்க்கை ஓட்டத்தில் நமக்கும் ஏதேதோ பிரச்னைகள் எத்தனையோ விதங்களில் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. கீதை போன்ற நன்னூல்களைப் படிப்பதால் நமக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளின் தாக்கங்களை ஓரளவாவது சரியாக எதிர்கொள்ளக்கூடிய மனநிலை நமக்கு ஏற்படும். பிரச்னைகளை எதிர்த்து நின்று, உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, மேலும் சிக்கல் உண்டாக்காமல், மன அமைதியுடன், ஒன்றுபட்ட உள்ளத்துடனும் நிதானத்துடனும்  அவற்றை எதிர்கொண்டு, சரியான விதத்தில் பார்த்து முறையான முடிவை மேற்கொள்ளத் தெரிய வேண்டும். பிரச்னையைக் கண்டு ஓடக்கூடாது. முகங் கொடுக்க வேண்டும். பிரச்னையின்; எல்லாப் பக்கங்களையும் பார்க்கத் தெரிய வேண்டும்.

என்னுடைய பிரச்னை என்று வந்துவிட்டாலே உள்ளத்தில் ஓர் இறுக்கம் ஏற்பட்டுவிடும். என்னுடைய என்பதால் ஈகோ முன்வந்து நிற்கும். எனக்கு அல்லது எனக்கா? என்ற சிந்தனை நம்மைத் தாக்கி மனக்குழப்பத்தை ஏற்படுத்திவிடும். இங்கு தான் சமநிலையில் நிற்றல் என்ற ஞானத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் இங்கு மகாபாரதக் கதையில் ஈகோ சேர்ந்த மனப்பதட்டத்தால், மனக் குழப்பத்தால், இ;ந்த ஞானம் மறைந்து அர்ச்சுனன் கோழையாக மாறி நின்று விட்டான்.

ஒருவர் எவ்வளவு தான் தியானத்தில் ஈடுபட்டு, உயர்ந்த மனஉணர்வு நிலையில் இருந்தாலும், பந்த பாசங்களின் மூலமாகப் பிரச்னைகள் வந்து தாக்குகின்றபோது, கீழ் உணர்வு நிலைக்கு மனம் இறங்கிவிடும். இங்கு நியாயம், தர்மம் எடுபடாது. பாசமும் பந்தமும் மனதை உணர்ச்சியில் ஆழ்த்திப் பிழையாகச் சிந்திக்க வைத்துப் பிழையாக உணர்ச்சிபூர்வமாகத் தான் செயல்பட வைக்கும்.

பனிரெண்டு வருடங்கள் நாடு பறிக்கப்பட்டு, நாடோடிகளாய் நிற்க ஓர் இடமின்றிக் காட்டிலும், மேட்டிலும் அலைந்து திரிந்து சொல்லொணாத துயரங்களுக்கும், இடர்களுக்கும் ஆட்பட்டு, கௌரவர்களால் தொடர்ந்து துரத்தப்பட்டு, தலைமறைவான ஓராண்டு வாழ்க்கையையும் வெற்றிகரமாக முடித்துவிட்ட நிலையில்  தர்மத்தை முன்நிறுத்திக் கேட்ட போதும், நாட்டைத் திருப்பித் தர விரும்பாத தீயவனான துரியோதனனிடம் ஐந்து ஊர்களை மட்டுமாவது தரும்படி கேட்டும் மறுக்கப்பட்ட ஒரு கொதிப்பான சூழ்நிலை அது.

பாண்டவரின் நலம் கருதும் நல்லவர்கள் அனைவருமே அதர்மத்தைப் பொறுக்க முடியாமல் போருக்குத் துடித்துக்கொண்டிருந்த நேரம் அது. தர்ம சாஸ்திரம் அறிந்த விதுரர் அதர்மத்தை ஏற்க இயலாமல் ராச்சியத்தை விட்டே வெளியேறினார். பலராமன் போரைப் புறக்கணித்தார். இப்படிப்பட்ட தருணத்தில் மாவீரனான அர்ச்சுனனுக்கு, அவமானங்களை நெஞ்சில் சுமந்து போரில் அவற்றிற்கான பதிலைப் பெறக்கூடிய நேரத்தில் இந்தத் திடீர்; குழப்பமும், உறவினர் மீது திடீர்ப் பற்றும் ஏன் ஏற்பட்டது?

இந்த சூட்சுமமான திடீர்த் திருப்பம் ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து பார்த்தால் இதன் பின்னணியில் ஓர் நிகழ்ச்சி நடந்திருப்பது தெரிய வரும். எவ்வளவோ சூழ்ச்சிகளுக்கும் தவறான செயல்களுக்கும் துணையாக இருந்த தன் புதல்வர்களுக்கு வாரிசு உரிமையைப் பெற்றுவிட வேண்டும் என்று எண்ணிச் செயல்பட்ட திருதராட்டினனுக்கு இந்தப் போர் அதிர்ச்சியைத் தந்துவிட்டது. போரில் தன் பிள்ளைகள் நிச்சயம் கொல்லப்பட்டு விடுவார்கள் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அரச போகத்தை இழக்க விரும்பாத மோகத்தின் வசப்பட்டு திருதராட்டிரன் சூழ்ச்சியான சுயநலப்போக்கால் எப்படியாவது போரைத் தடுத்து நிறுத்த விரும்பினான். எனவே யுத்தம் துவங்குவதற்கு முதல் நாள் ரகசியமாக ஒரு துhதுவனை அர்ச்சுனனிடம் அனுப்பினான்.

‘அர்ச்சுனா! என்னதான் தாங்க முடியாத அவமானங்களையும், துன்ப துயரங்களையும் நீங்கள் அனுபவித்திருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்து, தன் உரிமைக்குரிய பதவி பறிக்கப்பட்டு, வாரிசு உரிமையை இழந்த, கண் தெரியாத பெரியப்பாவான என் மீதும் அறிவற்றவர்களான, உனது சகோதரா;களான கௌரவர்கள் மீதும் கருணையும், இரக்கமும் காட்டி மன்னித்து இந்தப் போரை எப்படியாவது நிறுத்த மாட்டாயா? என்று நயவஞ்சகமாக, பாசப்பூச்சு பூசிய கபட வார்த்தைகளால் நிரம்பிய வேண்டுகோளை, தூதாக அனுப்பி அர்ச்சுனனின் உணர்ச்சிகளைத் திசை திருப்பிவிட்ட, கண்களற்ற திருதராட்டிரனின் திருகு தாளம் தான் அர்ச்சுனனின் இந்தத் திடீர் மனக்குழப்பத்திற்குக் காரணமாயிற்று. அவன் உள்ளத்தில் ஒரு பாசப்புயலை உருவாக்கி, அவனை நிலைகுலையச் செய்தது. இதுவும் கண்ணனின் திருவிளையாடலே’!

(தொடரும் …….)

Advertisements

3 thoughts on “மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -4

 1. ”மனிதனும் தெய்வமாகலாம்” மிகவும் நல்ல தரமான கட்டுரைகள். தொடரட்டும் தங்கள் எழுத்து, சிந்தனைச் சேவை. ஒரு சிறிய திருத்தம்
  ///தர்மோ ரக்ஷதி ரக்ஷது! என்பது கீதையின் புகழ்பெற்ற வாக்கியம்///
  இது மனுஸ்மிருதியில் வரும் வாக்கியம். முழு ஸ்லோகம்
  धर्म-एव हतो हन्ती, धर्मो रक्षति रक्षिता: ।
  तस्माधर्मॊ न हन्तभ्यो, मा नॊ धर्मॊ हतोवधीत ॥
  இதை மாற்றிவிடவும்.
  வாழ்த்துகள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s