மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -3


மகாபாரதக் கதையில் வருகின்ற குருஷேத்திர பூமி என்பது நமது மனமே ஆகும். கௌரவர்கள் நூறு பேர். அவர்களின் பெயர்களில் துர் என்னும் சொல்லே முதலாவதாக இருக்கும். துர் என்றால் கெட்ட என்பது பொருள். துர்நாற்றம், துர்க்குணம், தரதிஷ்டம் என்ற சொற்கள் எதிர்மறைப் பொருளைக் கொண்டவை. நூறு என்பது நம் மனதில் குடிகொண்டிருக்கும் நூறு விதமான கெட்ட எண்ணங்களையே குறிப்பது ஆகும்.

பெரும்பாலும் கெட்ட எண்ணங்கள் தான் அதிக அளவில் இருக்கும். நல்ல எண்ணங்கள் குறைந்த அளவில் தான் ஏற்படும் என்பதால் தான் பாண்டவர்கள் ஐவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அதிக எண்ணிக்கையிலான கெட்ட எண்ணங்களை, இறையருளால் நற்சிந்தனை கொண்டு போராடி வெல்ல வேண்டும். இந்த மனப்போர் தான் அறப்போரான குருஷேத்த்திரப் போராக சித்தரிக்கப்படுகின்றது. இதைத்தான் கௌரவர்களைப் பாண்டவர்கள் எதிர்த்து நின்று கிருஷ்ணரின் உதவியால் செயல்பட்டுப் போரிட்டு வென்றனர் என்று கதையாக நீதியை எடுத்துரைக்கிறார் வியாசர்.

தவறான கெட்ட போக்கிலேயே சதா சிந்தித்துச் செயல்படுபவர்களுக்கு இறையருளின் உயர்வு தெரியாது. அறியாமையுடன் அகங்காரமும் சேர்ந்த நிலையிலேயே அவர்கள் செயல்படுவர். இறையருளில் தோய்ந்திருப்பவர் இயல்பானவராக, தர்மநெறி தெரிந்து செயல்படுவர். தன்னுள் ஆழ்ந்து, தன் உணர்வில் தோய்ந்து இருப்பவனுக்குத் தர்மவழி சரியாகப் புலப்படும். எதைத் தேர்ந்தெடுப்பது என்று நன்றாகத் தெரியும்.

மிருகங்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. மனிதனுக்கு ஆறாவது அறிவு தரப்பட்டிருப்பதால் தேர்ந்தெடுக்கும் உரிமை அவனுக்குத் தரப்பட்டிருக்கிறது. பசி, தாகம், தூக்கம், இன உணர்ச்சி போன்றவை மிருகங்களுக்கும் மனிதனுக்கும் ஒன்றென்றாலும், பகுத்தறிவு மனிதனுக்கு மட்டுமே உண்டு. மிருகங்களுக்கு இல்லை. எனவே நல்லது கெட்டதுகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்குத் தரப்பட்டிருக்கிறது.

வாழ்க்கையில் ஒரு பிரச்னை ஏற்பட்டால், அதைக் கண்டு பயந்து ஓடக்கூடாது. நேருக்கு நேராக நின்று அதை ஏற்று, அக்கு வேறு ஆணி வேறாக அலசிப்பார்த்து உணர்ந்து அதைத் தீர்க்க வேண்டும். என்ன செய்வது? என்ற தடுமாற்றம் ஏற்படுகின்றபோது, நீ வழிகாட்டு! என்று அவனிடம் சரணாகதி அடைந்துவிட்டால், நடக்க வேண்டியது நன்றாக நடக்கும். கலங்காத நிலையில் பேசாமல் இருந்தால் கட்டாயம் உதவி கிடைக்கும். எது நல்லது அல்லது எது கெட்டது என்பது முக்கியமில்லை. எது சரியானது என்பது தான் முக்கியம். நீ எதைத் தேர்ந்தெடுக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்! என்கிறது பகவத்கீதை.

இந்த இடத்தில் மகாபாரதக் கதையில் போர் என்ற முடிவிற்குப்பின் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நடைபெற இருக்கும் யுத்தத்தில் கிருஷ்ணனின் உதவியை வேண்டிப் பெறுவதற்காக துவாரகைக்கு துரியோதனனும் அர்ச்சுனனும் வந்தனர். மாளிகையில் துயில் கொண்டிருந்த கண்ணன் கண்விழிப்பதற்காக அவனது அறையில் காத்திருந்தனர். கண்ணனின் தலைப்பக்கத்தில் துரியோதனுனம், அவனது காலடியில் அர்ச்சுனனும் அமர்ந்திருந்தனர்.

கண் மலர்ந்த கண்ணபிரான் முதலில் அர்ச்சுனனைப் பார்த்தார். வா அர்ச்சுனா! என்ன இந்தப் பக்கம்? என்று முதலில் அவனிடம் பேசினார். அடடா! முதல் வாய்ப்பை நழுவ விட்டுவிட்டேனே! என்று துரியோதனன் பதைத்தான். தான் கேட்க விரும்பி வந்த படைபலத்தையெல்லாம் முதலில் அர்ச்சுனன் கேட்டுவிட்டால் என்ன செய்வது? என்று அவன் உள்ளம் துடித்தது.

கண்ணனை வணங்கிய அர்ச்சுனனோ, கண்ணா! தாங்கள் எங்கள் பக்கம்; வந்து துணையாக இருக்க வேண்டும். அது போதும். இதைக்கேட்டுப் பெறவே நான் இங்கு வந்தேன்! என்றான் பணிவாக. துரியோதனனுக்கு வியப்பு! இவ்வளவு முட்டாளாக இருக்கிறானே! நல்ல வேளை! நான் பெற வேண்டும் என்று நினைத்திருந்த படை பட்டாளம், போர் அணி, பெருவீரர் எல்லாம் எனக்குக் கிடைத்துவிட்டன. வெறும் கிருஷ்ணன் மட்டும், அதுவும் ஆயுதம் எதுவும் ஏந்தமாட்டேன்! என்ற சபதத்துடன் இருக்கின்ற கிருஷ்ணன் மட்டும் பாண்டவர்களுக்கு வேண்டும் என்றால் அதில் எனக்கு என்ன நஷ்டம்? என்று அவன் மனம் எண்ணியது.

இதில் நமக்குத் தெரிவது என்ன? இக்காட்சி அவர்களின் மனப்போக்கைக் காட்டுகின்றது அல்லவா? அர்ச்சுனன் கண்ணனைத் தன் பக்க துணையாக அழைப்பதன் மூலம் இறையருளை, தர்மத்தின் துணையை வேண்டுகின்றான். துரியோதனனோ கண நேரத்தில் அழியக்கூடிய படைபலத்தைக் கேட்கிறான். அர்ச்சுனன் தேர்ந்தெடுத்தது தர்மநெறியைக் காட்டக்கூடிய பரந்தாமனை. எதை நாம் தோ;ந்தெடுக்கிறோமோ அதற்குரிய பலன் கிடைக்கும் என்பதற்குத் துரியோதனன் தோ;ந்தெடுத்த போர்ப்படையே சான்று.

இன்னும் ஒரு கோணத்தில் இதை நாம் பார்ப்போம். குருஷேத்திரப் போர்க்களத்தில் இரு தரப்பு சேனைகளும் அணிவகுத்து விட்டன. கௌரவ சேனை 11 அக்ரோணி அளவில் இருந்தது என்றும், பாண்டவர் சேனை 7 அக்ரோணி அளவில் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. உண்மை இப்படி இருந்தும் தன் தரப்பிலிருந்து படையைப் பார்வையிட்ட துரியோதனனின் கண்களுக்கு அளவிட முடியாத தனது படை மிகச்சிறியதாக இருப்பதாகவும், எதிரில் தெரிகின்ற பாண்டவர் படை மிகப் பெரியதாக, பூரணமாக நிறைந்திருப்பதாகவும் தெரிகிறது. எத்தனையோ தீராதி தீரர்கள் தன் படையிலிருந்தும் எதிரிப் படையில் தென்பட்ட நிறைவு தன்னிடம் இல்லாதது போல, ஏதோ குறைவதைப் போலத் தோன்றுவதாக துரியோதனன் கூறுகிறான். இப்படி துரியோதனன் சொல்வதற்கு என்ன காரணம்?

அங்கு பாண்டவ சேனையின் நடுநாயகமாக, காண்டீப வில்லை ஏந்திய அர்ச்சுனனின் தேர்த்தட்டிலே சாரதியாக அமர்ந்திருந்ததை கிருஷ்ணனே இந்தப் பூரண நினைவிற்குக் காரணம். பொறுமையும் நேர்மையும் கொண்டு வாழ்ந்த நல்லவர்களுக்குத் தெய்வம் அங்கே துணை நிற்கிறது. அது துரியோதனன் கண்களுக்குப் பூரணமாகத் தெரிகின்றது.

இதிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான மிகப் பெரிய உண்மை நமக்குப் புலப்பட வேண்டும். இந்த வாழ்க்கையில் எதுவுமே இல்லாமற் போகின்ற நிலயிலும் கூட. இறையருள் நமக்கிருந்தால், அவன் கருணை நம்மை ரட்சிக்கிறது என்றால், நம் மனம் பூரணமாக நிறைந்திருக்கும். எது இல்லாவிட்டாலும் மனம் நிம்மதியாக, ஆனந்தமாக, எந்த விதக் குறையும் துன்பமும் இல்லாத பரிபூரண நிறைவில் ஆழ்ந்திருக்கும் இந்தப் பூரண வஸ்து யாரிடம் இல்லையோ, யார் விட்டுவிட்டார்களோ, அவர்களிடம் எவ்வளவு தான் செல்வமும், பொருளும் குவிந்திருந்தாலும், இந்தப் பூரண நிறைவு இருக்காது. ஏதாவது குறை இருந்து கொண்டே தான் இருக்கும். புரிய வேண்டிய ஒன்று இது.

மனித உடல் என்பது தேர். இந்த உடலாகிய தேரில் பயணம் செய்கின்ற பயணி ஜீவன். இந்தத் தேரில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள். இந்த ஐம்புலன்களாகிய குதிரைகளைக் கட்டியிருக்கின்ற கடிவாளமாகிய கயிறு மனம். இந்தத் தேரை ஓட்டவேண்டிய சாரதி (தேரோட்டி) ஒழுங்காகச் செயல்படுபவனாக இருக்க வேண்டும். சாரதி ஒழுங்கானவனாக இருந்தால் ரதம் சரியாகப் பயணப்படும்.

இங்கு அர்ச்சுனனுக்கு சாரதியாக இருப்பவர் ஸ்ரீ கிருஷ்ணர். இறைவன் வழி நடத்தினால் ஜீவன் சரியாகச் செயல்படும். அர்ச்சுனன் தடுமாறுகின்ற நேரங்களிலெல்லாம் சாரதியான கிருஷ்ணன் அவனைத் தடுத்து, சரியாக நடக்கச் சொல்லிக்கொடுத்து, ஆபத்து ஏற்படுகின்ற சமயங்களில் தானே அவனைக் காப்பாற்றி யுத்தம் செய்ய ஒத்துழைப்பு கொடுக்கிறார். கர்ணன் நாகாஸ்திரத்தை அர்ச்சுனனை நோக்கிச் செலுத்தியபோது கிருஷ்ணர் தன் கால் விரலால் ரதத்தை அழுத்த, குதிரை சற்றே கால் மடங்கி, ரதம் ஓரடி கீழே அழுந்திவிட்டது. அதனால் அர்ச்சுனன் தலைக்கு வந்த நாகாஸ்திரம் அவன் தலையிலிருந்த கீரிடத்தைத் துளைத்துக்கொண்டு போய் செயலிழந்தது.

இதற்கு மாறாக எதிர் அணியில் கர்ணனின் சாரதி யார்? சல்லியன். கர்ணன் எல்லாவிதத்திலும் அர்ச்சுனனுக்கு நிகரானவன். ஆனால் அவனுக்கு அமைந்த சாரதி சல்லியன். சல்லியன் என்றால் சலித்துக்கொண்டே, சஞ்சலங்களை ஏற்படுத்திக்கொண்டே இருப்பவன் என்று பொருள். இந்த சல்லியன் என்பவன், கர்ணனைத் தேரோட்டியின் மகன் என்ற கண்ணோட்டத்திலேயே பார்த்து, அவனிடம் அனுசரணையாக நடந்து கொள்ளாமல், இழித்துப் பேசி, இடித்துரைத்து, அவனுக்கு எந்தவித உதவியும் செய்யாமல், தேர்சக்கரம் பள்ளத்தில் சிக்கிக்கொண்டபோது, அவனைக் கைவிட்டு விட்டுப் பாதியில் சென்றவன் ஆவான்.

எனவே புத்தியாகிய சாரதி தெளிவாக, ஆத்ம ஒளியுடன் திகழ்ந்தால், வரக்கூடிய சூழ்நிலை எவ்வளவு துன்பமயமாக இருந்தாலும் அதைச் சரியாகக் கவனிக்க முடியும். தெளிந்த அறிவும், கூர்மையான கவனமும் உடைய ஜீவனால் தான் வாழ்க்கைப் போராட்டங்களைச் சரியாகக் கையாள முடியும். சஞ்சலப்படுகின்ற மனதால் செயல்பட்டால் புலன்கள் கட்டுப்படாமல் உணர்ச்சிகள் தாறுமாறாக வெளிப்படும்.

இதை அடிப்படையாக வைத்துத்தான் உறவுகளையும், சூழ்நிலையையும் கண்டு கலங்காதே. உன் கடமை என்ன என்பதை உணர்ந்து தெளிந்த அறிவுடன் தர்மவழியில் தொடர்ந்து செயல்படு. கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே, வருவது வரட்டும்! பிரசாதமாக அவற்றை ஏற்றுக்கொள்! என்று கூறுகிறார், கிருஷ்ணர்.

கடமையை மட்டும் நாம் சரியாகச் செய்துவிட வேண்டும். பலன் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்கப் பழக வேண்டும். நாமோ ஒன்றைச் செய்யும்போதே அதன் பலன் என்ன என்பதில் தான் நம் கவனத்தை வைத்து எதிர்பார்ப்புடன் துவங்குகின்றோம். எதிர்பார்ப்பு ஏமாற்றத்தைத் தான் தரும்.

முயற்சி, காலம், தெய்வஅருள் இவை மூன்றும் தான் நம் செயலுக்கு ஒரு பலனைத் தரக்கூடியவை. ஆகவே முயற்சியுடன் தகுந்த காலம் அறிந்து செயல்பட்டால், அதற்கு நம் கர்மாவிற்கு ஏற்பத் தெய்வ அருள் பலனைத் தரும். ஒன்றை இழக்காமல் ஒன்றைப் பெற முடியாது. கடும் உழைப்பு, கடின முயற்சியுடன் செயல்படுவதுடன், உரிய நேரத்தில் அதைச் செய்து முடிக்க வேண்டும். ஆகவே நடைமுறை வாழ்க்கையில் கலங்கித் தவிப்பவர்களெல்லாம் அர்ச்சுனன். கலங்காதே! துணிந்து தர்மநெறியில் நின்று செயல்படு! என்று அறிவுரை சொல்பவர்களெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணரே! பிரம்மம், படைப்பிற்கு உரைத்த உபதேசம் இது. காலம் காலமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கின்ற கீதம் இது.

கீதையை முறைப்படி கற்று ஒழுங்காகப் புரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும். அதர்மத்தை அழித்தால் தான் தர்மத்தைக் காப்பாற்ற முடியும். கீதை ஒரு கொலை நூல் அல்ல. மேனியைக் கொல்வாய்! என்றால் அகந்தையைத் தான் அழிக்கச் சொல்வதே தவிர, கொலை நூல்லல்ல. நான் என்பது உண்மையில் இந்த உடலைக் குறிப்பது அல்ல. உடல் அழியக்கூடியது. அழிகின்ற உடலைக் கொல்ல வேண்டிய நிலமை ஏற்பட்டால் கொல்லத்தான் வேண்டும். அக்கிரமத்தை அழிக்கப் போர் செய்யத்தான் வேண்டும். சூரன் போர் இதைத்தான் விளக்குகிறது. அகந்தையினால் தன் நிலை மறந்து தருக்கித் திரிந்த சூரபத்மனைக் கந்தன் போரிட்டு ஞானவேல் என்னும் அறிவாயுதத்தால் வென்றார். உடலுடன் கூடிய அகந்தை அழிந்து விட்டால் பிறகு நாமும் அவனும் ஒன்று. சூரனை அழித்தவுடன் அவன் சேவலாகவும் மயிலாகவும் மாறினான் என்ற கதையின் உட்பொருள் இப்போது விளங்கியிருக்குமே! மானிடர் ஆன்மா மரணமெய்தாது என்பதைத்தான் கீதை எடுத்துரைக்கின்றது.

(தொடரும் …….)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s