மனிதன் என்பவன் தெய்வமாகலாம் -2

வேதங்களின் சாரமாகத் தொகுக்கப்பட்டவை உபநிடதங்கள். இந்த உபநிடதங்களாகிய பாற்கடலிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட அமுதம் தான் பகவத்கீதை.

மாமுனிவரான வேத வியாசர், வேத சாஸ்திர தர்ம நுணுக்கங்களை மிக விரிவாக உலகிற்கு எடுத்துரைக்க விரும்பினார். அதன் விளைவாக மகாபாரதம் என்னும் புண்ணிய நூலை வருங்கால மக்களின் நன்மை கருதி இயற்றினார். அந்த மாபெரும் இதிகாசத்தில் மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தர்மநெறிகளையும் அதர்மமாகச் செயல்படுவதால் உண்டாகக்கூடிய தீய விளைவுகள் பற்றியும் மிக அழகாக, சுவை கூடிய பாத்திரங்கள் மூலம் எடுத்துரைத்தார்.

எத்தனையோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்ப்பட்ட இக்காவியம் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் நின்று நிலைத்திருப்பதே இதன் உயரிய பெருமைக்குச் சான்று.

மகாபாரதத்தின் மூலம் தான் பண்டைய பாரதத்தின் வரலாறு, அதன் மேன்மைமிக்கப் பாரம்பரிய வாழ்க்கை முறை, தர்மநெறி முறைகள் எவ்வாறு வாழ்க்கையோடு ஒன்றுகலந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன போன்ற பலப்பல அரிய உண்மைகள் வெளிப்பட்டு இன்றுவரை ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன.

இந்த மகாபாரதக் கதை தெரியாத தமிழர்களே இல்லை என்று கூறலாம். இருந்தாலும் ஒன்றைத் துவங்குவதற்கு முன்பு நாம் ஒரு பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டுத் துவங்குவதைப்போல பகவத்கீதைக்கு அடித்தளமாய் அமைந்த மகாபாரதக்கதையை இங்கு சுருக்கமாகத் தெரிவிக்கின்றேன். கதை தெரிந்த மூத்தவர்கள் நினைவுப்படுத்திக் கொள்ளவும், கதை தெரியாத இளைய தலைமுறையினர் சற்றே தெரிந்துகொள்ளவும் இது உதவும்.

பண்டைய பாரததேசத்திலே அஸ்தினாபுரம் என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டின் அரச வாரிசுகளாகத் திருதராட்டிரன், பாண்டு என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர். இவர்களில் மூத்தவரான திருதராட்டிரன் பிறவிக் குருடனாக இருந்தபடியால் முறைப்படி மூத்தவன் தான் நாட்டை ஆள வேண்டும் என்ற நெறிமுறையை மாற்றி, நாட்டின் நலத்தைக் கருத்திற்கொண்ட பெரியோர், அவனது தம்பியான பாண்டுவிற்கு முடிசூட்டினர்.

ஆனால் அவர்களது இந்த நியாயம், திருதராட்டிரனின் மனதில் அடிபட்ட காயமாக, மாறாத வடுவாகி நிலைத்து விட்டது. பட்டத்திற்கு உரியவன் என்ற முறையில் மூத்தவனான தான் உயிரோடு இருக்கையில் தனது உரிமை மறுக்கப்பட்டு, தனது தம்பி அந்த உரிமையைப் பெற நேர்ந்ததை அவனால் சாதாரணமாக நியாயமான ஒன்றாக ஏற்க முடியவில்லை.

இந்நிலையில் திருதராட்டிரனுக்கு நுாறு புதல்வர்களும், பாண்டுவிற்கு ஐந்து புதல்வர்களும் பிறந்தனர். திருதராட்டிரனின் பிள்ளைகளான கௌரவர்கள் துர்க்குணங்கள் நிரம்பியவர்களாகவும், அகந்தையால் அறிவிழந்தவர்களாகவும் திகழ்ந்தனர். இதற்கு மாறாக பாண்டுவின் புத்திரர்களான பஞ்ச பாண்டவர்கள் நற்பண்புகளும், பணிவும், மரியாதையும் மிக்கவர்களாக விளங்கினர்.

அஸ்தினாபுரத்தின் மன்னனாக முடிசூட்டப்பட்ட பாண்டு இளம் வயதிலேயே மரணத்தைத் தழுவ நேரிட்டது. அப்போது பாண்டுவின் மைந்தர்கள் சிறுவர்கள் என்ற காரணத்தால் முன்பு இழந்த மன்னர் பதவி மீண்டும் திருதராட்டிரனுக்குப் கிடைத்தது. பெரு விருப்பத்துடன் மகுடத்தை அணிந்தான் திருதராட்டிரன்.

அரண்மனையில் ஒன்றாக வளர்ந்து வந்த சிறுவர்களிடையே குண பேதமும், வேற்றுமையுணர்வும் ஏற்படக் கௌரவர்களின் போக்கு காரணமாயிற்று. திறமைசாலிகளான பஞ்சபாண்டவர்களை நஞ்சென வெறுத்தனர் கௌரவர்கள். அவர்களின் தவறான போக்கிற்குத் தந்தையான திருதராட்டிரனும், மாமனாகிய சகுனியும் ஆதரவாக இருந்தனர்.

குரு துரோணரிடம் கல்வி கற்கின்ற வயதில் சகோதரர்களிடையே போட்டியும், பொறாமையும், வெறுப்பும் அதிகரித்தன. கௌரவர்களின் சூதும், சூழ்ச்சிகளும் பாண்டவர்களைப் பாடாய்ப்படுத்தின. நல்லவர்களான பாண்டவர்கள் அவற்றைத் தக்க முறையில் எதிர்கொண்டு சமயோசிதமாகவும், ஒற்றுமையாகவும் செயல்பட்டு அவற்றில் வெற்றியும் பெற்ற நிலையில், அமைதியான விதத்தில் தங்களுக்கென ஒரு சிறு ராச்சியத்தையும் கேட்டுப் பெற்றுத் தாயான குந்திதேவியுடன் அத்தினாபுரத்தை விட்டே விலகிச் சென்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியாலும், நல்லோரின் ஆசிகளாலும் அவர்கள் மிகச் சிறந்த முறையில் நல்லாட்சி புரிந்தனர். அவர்களின் இந்த அற உயர்வும், சிறப்பும் கௌரவர்களில் மூத்தவனான துரியோதனனின் நெஞ்சை வாள் கொண்டு அறுத்தது. அதற்கேற்ப சூழ்நிலையும் பகையை வளர்த்தது. பொறாமையின் உச்சகட்டத்தில் பாண்டவர்களை வஞ்சகமாக சூதாட்ட விருந்திற்கு அழைத்தான் துரியோதனன். அங்குப் பிரச்னைகளும், பகையும் வளர்ந்து வளர்ந்து இறுதியில் பாண்டவர்கள் தங்களது உடமைகள் அனைத்தையும் இழந்து நாட்டைவிட்டுக் காட்டிற்குத் துரத்தப்பட்டனர்.

13 ஆண்டுகால வனவாசத்திற்குப் பிறகு திரும்பி வந்த பாண்டவர்கள் தமது தந்தையின் நாடான அஸ்தினாபுரத்தில் தாம் இருப்பதற்கு ஐந்து கிராமங்ளையாவது கொடுத்தால் கூடப் போதும் என்ற வேண்டுகோளுடன் தம் சார்பில் கிருஷ்ணரைத் துாதாக அனுப்பி வைத்தனர். துர்ச் சிந்தனையே துணையாகக் கொண்ட துரியோதனன் அரச சபையில் ஸ்ரீ கிருஷ்ணரை அவமானப்படுத்தி அனுப்பினான்.

இப்போது சகோதரர்களுடன் போர் என்னும் உணர்ச்சிகரமான சூழ்நிலை. தர்மத்தைத் துணையாகக் கொண்டிருந்த பாண்டவர்கள் ஒருபுறமும் பிழையான மனப்போக்குடன், அகங்காரத்தால் செருக்குற்றுத் தர்மநெறி தவறிய கௌரவர்கள் எதிர்ப்புறமும் அணிவகுத்து நின்றனர்.

இந்நிலையில் அறிவிலும் வீரத்திலும் நிகரற்றவனாகத் திகழ்ந்த அர்ச்சுனனின் உள்ளத்திலே திடீரென்று ஒரு கலக்கம், ஒரு சஞ்சலம் ஏற்பட்டது. பகவான் என்று சான்றோர்களால் வாழ்கின்ற காலத்திலேயே உணரப்பட்டவனான ஸ்ரீ கிருஷ்ணனே தனது உற்ற நண்பனாக, நட்பின் உயர் நிலையில் தனது தேரை ஓட்டுகின்ற தேரோட்டியாக அமர்ந்திருந்தும், அர்ச்சுனனால் தன் கலக்கத்திலிருந்து விடுபட முடியாத ஒரு மன நிலை உருவாகிவிட்டது.

நமக்கும் நம் வாழ்வில் இப்படிப்பட்ட செய்வதறியாத குழப்ப நிலை எத்தனையோ முறை ஏற்பட்டிருக்கின்றது. வாழ்க்கை சுகமாக, நன்றாகப் போகும்வரை நாம் எல்லோருமே நல்ல விதமாக நடந்துகொண்டு, மகிழ்ச்சியாக அனைத்தையும் அனுபவித்து வாழ்கின்றோம். ஆனால் எதிர்பாராத விதத்தில் ஏதேனும் பெரிய பிரச்னை அல்லது பயங்கரத் தோல்வி, இல்லாவிடில் வாழ்வில் ஏற்படும் சரிவு, நெருங்கிய உறவின் மூலம் அல்லது நட்பினால் ஏற்படும் அவமானம் அல்லது இழப்பு, திடீரென்று வெளிப்படும் கொடிய நோய் அல்லது நெருங்கிய உறவின் மரணம் போன்றவை நம்மை அதிர்ச்சியடைய வைத்து, நிலை குலையச் செய்துவிடுகின்றன. எதிர்பார்ப்பு ஏமாற்றமாகி விடுகின்றபோது அது நம்மை உறைய வைத்து விடுகின்றது. உறவே பகையானால் அது உள்ளத்தை உலுக்கிவிடுகின்றது.

நல்லவர்களாக இருந்து இறைசக்தியைத் துணையாகக்கொண்டு, தர்ம வழியில் வாழ்பவர்கள் நிலை குலைந்த இந்த மனநிலையில் மன உறுதி பெற்று, வலிமையுடன் செயலாற்றி இத்துயரச் சூழ்நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகத் தான் நிலை குலைந்த காண்டீபனுக்குத் தக்க நேரத்தில், குருஷேத்திர யுத்த களத்தில், தகுந்த அறிவுரைகளை எடுத்துரைத்தான், பார்த்தசாரதியாகப் பக்கத்திலிருந்த பரந்தாமன்.

கீதை அர்ச்சுனனுக்கு மட்டும் உபதேசிக்கப்பட்டதல்ல. மனித குல தர்மத்திற்கே இது ஓர் அஸ்திவார உயர் கோட்பாடு. மனித உயிரின் உள் தத்துவத்தை, மனிதப் பிறவியின் உன்னதத்தைக் கீதை உணர்த்துகின்றது. வாழ்வின் உண்மை புரியாமல், சூழ்நிலையால் கலங்கித் தவிக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் தன்னை உணர்த்துவது கீதை.

குருசேத்திர யுத்தகளத்தில “தர்ம சேஷத்ரே குரு சேஷத்ரே!” என்று தர்மத்தின் நாயகனான ஸ்ரீ கிருஷ்ணன் தனது மதுர இதழை அசைத்துத் துவங்கிய வாழ்வியல் தத்துவ கீதமே பகவத்கீதை.

இந்த பகவத்கீதை என்னும் புதையல் வேத வியாசரால் மகா பாரதத்தில் பீஷ்ம பருவத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரை 18- அத்தியாயங்களாக இந்து தர்மத்தின் சாரமாக வைக்கப்பட்டிருக்கின்றது. இது “தர்ம” என்று ஆரம்பித்து “மம” என்று முடிகின்றது. “எனது தர்மம்” என்பது இதன் பொருள். கிருஷ்ணர் தனது தர்மமாகவே இந்த கீதையைக் குறிப்பிடுகின்றார். இந்த தர்மத்தை அறிந்து, கடைப்பிடித்து அறவழியில் வாழ்பவர்கள் தன்னையே வந்து சேர்வதாகவும் அவர் கூறுகின்றார்;

தர்மம் என்றால் பிச்சைக்காரர்களுக்குக் காசு போடுவது அல்ல. இங்கு தர்மம் என்றால் இயல்பு, நெறி, மனப்பாங்கு. தண்ணீரின் தர்மம் குளிர்ச்சி. சூரியனின் தர்மம் வெப்பம். பு+மியின் தர்மம் தாங்குதல். எனவே தர்மம் என்பது நமது இயல்பாக இருக்க வேண்டும். படைப்பின் தன்மையாக அது அமைய வேண்டும். மனிதப் படைப்பின் தர்மம் என்ன என்பதையே கீதை விளக்குகின்றது.

தர்மப்படி வாழ்கின்றவனுக்கு மனப் போராட்டம் இருக்காது. தர்மப்படி வாழப் புத்தி தான் வழிகாட்டுகிறது. ஆனால் தர்மப்படி வாழாமல் மன உணர்ச்சிகளுக்கும், சூழ்நிலைக்கும் அடிமையாகி மனம் போன போக்கில் வாழ்ந்தால், நமது இயல்பாகிய அமைதி போய்விடுகிறது. மாறாக மனப்பிளவு ஏற்படுகிறது. அதாவது நீ செய்வது தவறு என்று நமக்குள்ளேயே ஒரு மனம் நம்மைக் குத்திக் காட்டத் துவங்கி விடுகின்றது. ஆனால் அதை நாம் கவனிப்பதில்லை அல்லது அலட்சியப்படுத்துகிறோம். இந்நிலையில் பிழையாகச் செயல்படுகின்ற ஒரு மனமும், அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கின்ற ஒரு மனமும் ஆக நமது மனம் பிளவுபட்டுவிடுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மனக்குரலை மதித்து தர்மநெறிப்படி வாழ்கின்ற மனம் ஒன்றுபட்டு இருக்கின்றது. அந்த மனதின் அமைதி குலைவதில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s