குரு வந்தனம்

யார் சாத்திரங்களை நன்கு அறிந்தவரோ, யாருடைய மனம் எப்போதும் பிரம்மத்திலேயே சஞ்சரிக்கின்றதோ, செயல் புரிவது, சொர்க்கத்திற்குப் போவது போன்றவற்றைப்பற்றி யார் கவலைப்படுவதில்லையோ அவரே குரு.

எவர் பரம்பொருளாம் ஆகாயத்தில் மேகம் போல் விளங்கி, வேதாந்தம் என்னும் அமிர்தத்தை மழையாகப் பொழிந்து, மக்களின் தாபத்தைப் போக்குகின்றாரோ அத்தகைய குருநாதரை வணங்குகின்றேன்.
எவர் சைதன்யத்திலேயே மனம் ஒன்றியவராக உள்ளாரோ, எவருடைய பாதங்களின் பிரகாசமானது அவித்யை என்னும் ஆழ்ந்த இருளைப் போக்குமோ அப்படிப்பட்ட குருவிற்கு எனது நமஸ்காரங்கள்.

ஆத்ம தியானத்திலேயே எப்பொழுதும் மூழ்கி இருப்பவரும், புலன் விஷயங்களிலிருந்து விலகியிருப்பவரும், சாத்திரங்களில் மிகுந்த புலமை பெற்றவருமான குருநாதரைப் போற்றி வணங்குகின்றேன்.
தெய்வீகப் பேரின்பமே மனித உருவாக வந்தவரும், மிக உயர்ந்த ஞானத்தின் உருவமானவரும், மிகச் சிறந்த பேற்றை அளிப்பவருமான குருவை வணங்குகின்றேன்.
ஒளிமயமாய் அனைத்திலும் வியாபித்து, மூன்று உலகங்களையும் தாண்டி ஊடுருவி இருக்கின்ற “தத்” என்னும் சொல்லால் குறிக்கப்படுகின்ற, உண்மை அறிவைத் தரிசிக்க வைத்த குருவிற்கு வந்தனம்.

எத்தனையோ பிறவிகளின் தொடர்பால் ஏற்பட்ட கர்ம பந்தங்களை அறுபடச்செய்து, ஆத்மஞானத்தை முதன்மைப்படுத்தி அருளிய குருவிற்கு நமஸ்காரம்.
சம்சாரம் என்னும் காட்டினுள் புகுந்து சிக்கித் திசை தெரியாது மயங்கிய சித்தம் உள்ளவருக்கு எவரால் வழிகாட்டப்பட்டதோ அந்த குருவிற்கு நமஸ்காரம்.
வேத சூத்திரங்களையும், மகா பாரதத்தையும், பகவத்கீதையையும் எமக்கு அளித்த ஸ்ரீ வியாசரையும், அவற்றிற்குரிய பாஷ்யங்களைத்(விளக்கவுரை) தொகுத்து எமக்கு வழங்கிய ஆதி சங்கரரையும், அவர் வழி இன்று வரை தொடர்கின்ற குரு பரம்பரையையும் நான் நமஸ்கரிக்கின்றேன்.
அத்தகைய குருபரம்பரையின் வழியில் சுடர்விட்டுப் பிரகாசித்து பாரதத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதற்கும் ஆன்மீக அருள் வழியைக் காட்டித்தந்த பரமகுரு ஸ்வாமி சின்மயானந்தரின் திருவடிகளுக்கும், அவர் வழி வந்த அவரது சீடராய் மிளிர்ந்து எங்களது அஞ்ஞான இருளைப் போக்கி, இப்பிறவியிலேயே , பிறவியறுக்கும் வழி தன்னைத் தெளிவுபடுத்திக் காட்டிய எமது குரு ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதியின் திருவடிகளுக்கும் கோடி நமஸ்காரங்கள்.

தன்னுள்ளே தான் உணர்ந்த பிரம்மம் தன்னை
என்னுள்ளே நான் உணர ஒளியூட்டிய
எம் குருவே! அன்புருவே! உமக்கு நன்றி!

ஓம் தத் ஸத்

“மேலாம் உயர்நிலையில் நின்று – மானுடர்
மேலாம் உயர்நிலையைப் பெறவே – கண்ணன்
மேலாம் உயர் கீதை உரைக்கின்றார் – நாமும்
மேம்படுவோம், உயர்கீதை கற்றே!”

குருவிற்கு வணக்கம். தமிழ் சார்ந்த பெரியோர்க்கு வணக்கம். இறையருளும், குருவருளும் சேர்ந்து ஓர் அரும்பணியைச் செய்ய அடியேனைக் கருவியாக்கியிருக்கின்றன. வெறும் பக்தியும், வழிபாடும் மட்டும் ஒருவரைப் பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லாது. அந்த உயர்விற்கு  ஞானம் பெறுதல் அவசியம். அந்த ஞான முன்னேற்றத்தைப் பக்தியுடன் பெறுவதற்குக் கீதையை விட எளிதான ஒரு சிறந்த வழிகாட்டி வேறு இல்லை.

சனாதன தர்மத்தின் பெரும் சொத்தான ஸ்ரீமத் பகவத்கீதையைக் கண்ணன் விரும்பிய வண்ணம் எடுத்தெழுத முயன்றிருக்கின்றேன். இது அவன் விரும்பிய செயல். தன் செயல் அல்ல. இதனால் செய்யக்கூடிய செயலுமல்ல. பரமகுரு ஸ்வாமி சின்மயானந்த ஸரஸ்வதியின் சீடர்களில் ஒருவரான, ஈழத்து வேதாந்தியும் எமது குருவுமான ஸ்வாமி பரமாத்மானந்த ஸரஸ்வதியின் போதனையின் வலிமை என்னுள் நிலைகொண்டு பிரம்மத்தின் செயலாய் வெளிவருகின்றது. எம் குருவின் அறிவின் மணம் என்னுள் நிறைந்து, அவரது உபதேச மகிமையும், திருவருளும் ஒன்றுசேர்ந்து, சமுதாயத்திற்குப் பயன்படுவதற்காக இதனை எழுத வைக்கின்றதே தவிர, எனக்கு வேறு ஒன்றும் தெரியாது.

பேருண்மையை அனுபவித்த மா முனிவர்கள் குரு சிஷ்ய பரம்பரை வழியாகத் தாங்கள் பெற்று அனுபவித்த உண்மைகளைத் தங்களின் சீடர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். அந்த சீடர்கள் குருவினது அறிவுச் சிதறல்களைப் பெற்று தங்களது சுய அனுபவத்தால் உணர்ந்து மீண்டும்  விளக்கங்களைத் தந்துகொண்டிருக்கின்றனர். இதன் மூலம் சனாதன தர்மம் இன்றுவரை புதுமை குலையாமல் பொலிந்து கொண்டிருக்கிறது! என எம் குருநாதர் அடிக்கடி கூறுவார். அவ்வகையில் சாஸ்திர அறிவும், பூரண பிரம்மத் தொடர்பும் கொண்ட, பிரம்மத்தைத் தம்முள் முழுமையாக அனுபவித்துக் கொண்டிருக்கின்ற  எமது குரு, என்னைத் துhண்டி எழுத வைத்திருக்கின்றார்.

நல்ல சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட கிளியானது, எஜமானரின் தொடர்ந்த பயிற்சியினால், கேட்பவர் மனம் கவரும்படி இனிமையான நல்ல சொற்களைச் சொல்வதைப்போல் குருவின் அருளாசிகளையும் நுால் பயிற்சியினையும் பெற்று, இவ்வரிய செயலுக்கு முயல்கின்றேன். அண்டியவர்களை அரவணைத்து அருள்புரிகின்ற பார்த்தசாரதியாம் கண்ணனின் திருவடிகளைப் பணிந்து போற்றி, அவரது திருவாய்மொழியாம் அருளமுதத்தை, வழங்குகின்றேன். மனிதன் அயராது, அறவழியில் தொடர்ந்து முயன்றால், நிச்சயம் “மனிதன் என்பவன் தெய்வமாகலாம்”.

ஓர் இந்துவின் வாழ்வில் பக்தியும், பகவத்கீதையும் பின்னிப் பிணைந்தவை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அர்ச்சுனனுக்குச் சொல்லப்பட்டதான பகவத்கீதை, வாழ்க்கைப் போர்க்களத்தில் பல்வேறு உணர்ச்சிக் கொந்தளிப்புகளுடன் அன்றாடம் போராடி வெற்றி தோல்வி தெரியாமல் களைத்துப் போய்க்கொண்டிருக்கின்ற நமக்காகவே சொல்லப்பட்டது என்பது நாம் அறிய வேண்டிய உண்மை. பிறவிகளிலே மிக உயர்ந்த பிறவி மனிதப்பிறவி. இப்பிறவியை எடுத்தும் இதில் தாவர நிலையிலும், மிருக நிலையிலும், மனிதத் தன்மையில் நின்றும் வாழ்கின்ற போக்கு தெரியவரும். அறியாமையில் சிக்கித் தம் கர்ம வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களின் இடையே வாழ்கின்ற நம்மை தமோ குணமும், ரஜோ குணமும், சத்வ குணமும் மாறி மாறி வெளிப்பட்டு ஆட்டிப்படைக்கின்றன.

எனக்கு ஏன் இந்த நிலை? இதிலிருந்து விடுபட நான் என்ன செய்ய வேண்டும்? என்று சிந்திப்பவர்களுக்குச் சரியான வழிகாட்டியாகத் திகழ்வது தான் மகாபாரதத்தில், யுத்த களத்தில் நின்ற நிலையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு அருளிய பகவத்கீதை. உலகிலுள்ள அத்தனை மொழிகளிலும் பெரும்பான்மையாக மொழிபெயர்க்கப்பட்டு, உலக அளவில் பெரும் வரவேற்பினைப் பெற்று, பலரது ஆன்மீகத் தேடலுக்கு ஒளி விளக்காய் நின்று வழிகாட்டிக் கொண்டிருப்பது பகவத்கீதை.

வினோபாபாவே, பாலகங்காதர திலகர், மகாத்மா காந்தியடிகள் போன்ற பல இந்தியத் தலைவர்களின் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைத்த பெருமை படைத்தது பகவத்கீதை.

கீதையின் உட்பொருளை உணர்ந்து கொண்டதால் தான் அந்தப் பெரியோர்கள் பற்றின்றி எளிமையாக வாழ்ந்து, தியாக சீலர்களாகத் திகழ்ந்து சமுதாயத்தின் நன்மைக்காகவே செயல்பட்டார்கள். இந்தியாவின் அளவற்ற பெருமைக்குக் கங்கை நதியும், காயத்ரி மந்திரமும், பகவத்கீதையும் ஞானப் பொக்கிஷங்களாக விளங்குவதே காரணம் என்று ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியிருக்கின்றார். இப்படி எத்தனையோ உயர்வுகளைத் தன்னுள் கொண்டிருக்கின்ற பகவத்கீதையை இனித் தொடர்ந்து நாம் அனுபவிக்கலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s