ராதா கல்யாண வைபோகமே!

இந்த உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. எல்லா மதங்களுமே மனித வாழ்க்கைக்கு   ஆதாரம் இறை நம்பிக்கையும், பிரார்த்தனையும் தான் என்று சொல்கின்றன.  ஆனால் எல்லா மதங்களும் இறைவனை ஒரு மாபெரும் சக்தியாக, தம்மை ஆள்பவனாகத் தன்னிலிருந்து வேறாக, எங்கேயோ இருப்பதாகத்தான் சித்தரிக்கின்றன.

சகல மதங்களின் தாயாகிய, சனாதன தர்மம் என்றழைக்கப்படுகின்ற நமது இந்து மதமோ இறைவனைத் தம் இதயத்தில் உறைபவனாக உணர்ந்து, கொண்டாடுகின்றது. தாயாகவும், தந்தையாகவும், தோழனாகவும், காதலனாகவும், நாதனாகவும், குழந்தையாகவும் பல உருவில் இறைவனைத் தம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இதயத்திற்கு நெருக்கமாக வைத்துப் பக்தி; செலுத்தச் சொல்லித்தருகின்றது.

இறைவன் தன்னுடையவன் என்று நினைக்கின்ற மனதில் பயம் இருப்பதில்லை. இவன் என் நம்பிக்கைக்கு உரியவனா, இல்லையா என்ற சந்தேகம் எழுவதில்லை. எல்லாம் அவன் செயல் என்று இருக்கின்ற மனதில் கவலை ஒருபோதும் தோன்றுவதில்லை. கவலையும், சந்தேகமும், பயமும் நீங்கிய மனதில் பக்தி மட்டுமே பொங்கி எழுகின்றது. இந்த மனப்பூர்வமான பக்தியால் தான் ஓர் இந்து காலையில் கண் விழித்து எழும்போதே, தன் இதய தெய்வத்தைக் கரங்கூப்பி வணங்கிக்கொண்டு எழுகின்றான். தனது ஒவ்வொரு செயலையும் இறைவனுக்கு அர்ப்பணித்த பிறகே செய்யத் துவங்குகிறான்.

எதைச் செய்தாலும் ஒரு பூஜை! எதைத் துவங்கினாலும் அதற்கு ஒரு வழிபாடு! என ஓர் இந்துவின் வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சமுமே ஒரு பண்டிகையாக, ஒரு பூஜையாக இறைவனோடு சம்பந்தப்படுத்தியே செய்யப்படுகின்றது. இந்தியாவில் வசிக்கும் இந்து வீட்டில் தான் இந்த பக்தி சூழ்ந்த வாழ்க்கை என்பதல்ல. உலகத்தின் எந்த மூலையில் ஓர் இந்து வசித்தாலும் அந்த வீடு ஒரு கோவிலாகிவிடுகிறது. அந்த வீட்டில் தெய்வ வழிபாடும், தீபம் ஏற்றுதலும், பக்திபூர்வமான பூஜை முறைகளும் அழகாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.

அவ்வகையில் இந்த கனடா நாட்டில் எஜாக்ஸில் வசிக்கும் மஹாஸ்ரீ ராகவன், ஸ்ரீமதி சுசீலா ராகவன் தம்பதியினர் கிருஷ்ணபக்தியில் திளைத்தவர்களாக பரனுhர் ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின்
(ஸ்ரீஸ்ரீ அண்ணா) அருளாசியுடன் கூடிய சிஷ்யகோடிகளாகத் தம் வாழ்க்கையை ஸ்ரீ ராதாகிருஷ்ணரின் திருவடித் தாமரைகளில் சமர்ப்பித்து, கிருஷ்ணநாம ஜபமே நித்யானுபவமாக நிறை வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

கலியுகத்தில் பகவானை மிகச் சுலபமாக அடைவதற்கு நாம சங்கீத்தனமே மிகச் சிறந்த வழியாகும் என்பதற்கிணங்க இவர்கள் கிருஷ்ணபக்தியில் ஊறித் திளைத்துப் பழமைப் பழக்க வழக்கங்களும், சம்பிரதாய முறைகளும் மாறாமல், ராதே கிருஷ்ணா! என்ற ஒரே சொல்லே உயிர் மூச்சாக ஒவ்வொரு கணத்தையும் கழிக்கின்றனர்.

இத்தகைய உயரிய தம்பதியரான இவர்கள், தங்களது 50வது திருமண ஆண்டு நிறைவினைத் தம் அளவில் அமைந்த விழாவாக்கிக்கொள்ளாமல், பிரேமையின் ஸ்வரூபமாகத் திகழும் ராதாவிற்குக் கல்யாணம் செய்து ஒரு தெய்வீகத் தன்மையான நன்னாளாக மாற்றி அமைத்தார்கள்.

ஸ்ரீ ராகவன் மாமாவிற்கு 78 வயது. சுசீலா மாமிக்கு 70 வயது. 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் நாள் இவர்களுக்குக் கல்யாணம் நடந்து 50 ஆண்டுகள் நிறைவுற்றது. இந்த நன்னாளை இவர்கள் தங்கள் மகன் ஹரி, மருமகள் விஜயாஹரி, பேத்தி ஸ்வேதா, பேரன் லஷ்மண் ஆகியோருடன், சம்பிரதாய முறைப்படி ராதாகல்யாண வைபவமாகக் கொண்டாடினார்கள்.

அன்று அதிகாலை வாசலில் கோலமிட்டு, மாவிலை மலர்த்தோரணம் கட்டி, மணமேடை அமைத்து, அதில் கிருஷ்ணரையும், ராதையையும் அழகுற அலங்கரித்து அமர்த்திக் கோலமும், குத்துவிளக்குகளுமாகக் கூடத்தைப் பொலிவுற ஆக்கினர், இவர்களின் மகனான ஹரியும், மருமகள் விஜயாவும்.  சுசீலாமாமியின் மேற்பார்வையில் பருப்புத் தேங்காய், பட்சண வகைகள், பூஜைக்குரிய சாமான்கள் என எல்லா ஏற்பாடுகளும் அழகாகச் செய்யப்பட்டன.

அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். முகம் மலர்ந்த, மனம் நிறைந்த வரவேற்பு. ராகவன் மாமாவும், சுசீலா மாமியும் மிகுந்த தேஜஸூடன், சாட்சாத் நாராயணனும் லட்சுமி தேவியும் போல, பார்க்கும்போதே மனதில் ஒரு நிறைவு ஏற்படுகின்ற வகையில் காட்சி அளித்தனர்.
கணபதிபூஜையுடன் இந்த மங்கள வைபவம் ஆரம்பித்து, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தை வந்திருந்த அனைவரும் கூட்டாகச் சொல்லத் தொடர்ந்தது. பிறகு பரனுhர் ஸ்ரீஸ்ரீ அண்ணாவின் சம்பிரதாய முறைப்படி கூடத்தின் நடுவில் ஒரு ஸ்டூலில் குத்துவிளக்கினை ஐந்து முகங்களுடன் ஒளிரச்செய்து, அதனைச் சுற்றி திவ்ய நாம பஜனையும், அஷ்டபதி பாடல்களையும் பாடியபடி ஆண்களும் பிறகு பெண்களும் பக்திமேலிடப் பரவசத்துடன் குதித்து ஆடினர். பெண்மணிகள் கும்மியடித்து விளக்கைச் சுற்றி வந்து அபிநயித்தனர்.

இப்படி ஆடவரும் பெண்டிருமாக மாறி மாறி ஆடிய நிலையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரே பக்திப் பரவசமும், முகங்கொள்ளாத சிரிப்புமாக அந்த இடமே கலகலப்பான தெய்வீகத்தில் திளைத்தது.
மன இறுக்கம் தளர்ந்து, தான் என்ற நினைப்பும் கழன்று எல்லோருமே தாம் விரும்பிய வண்ணம் கிருஷ்ண உணர்வில் தோய்ந்து ஆடிப்பாடினர். அங்கு எந்தவிதப் பயிற்சியோ, கட்டுப்பாடுகளோ இல்லை. பக்தி வெளிப்பாடு மட்டுமே இருந்தது. சுசீலா மாமி மலர்ந்த முகத்துடன், ஆட வரத் தயங்கியவர்களின் கைகளைப் பிடித்து, ஆடியபடியே அழைத்து வந்து, விளக்கைச் சுற்றிவரச் செய்தது நன்றாக இருந்தது.

கிருஷ்ணனாகிய குத்துவிளக்கிற்கு முறைப்படி பூஜை, நைவேத்ய உபசாரங்களைச் செய்த பிறகு ஹரி, ஆடிக்கொண்டே விளக்கினை எடுத்துச் சென்று யதாஸ்தானத்தில் பிரதிஷ்டை பண்ணினார். அடுத்ததாக ராதா கல்யாண உற்சவம் துவங்கியது. மாப்பிள்ளையையும், பெண்ணையும் வைத்து ஊஞ்சல் பாட்டுப்பாடி, பச்சைப்பிடி சுற்றிப் பாலும் பழமும் கொடுத்து, சுமங்கலிப் பெண்கள் திருஷ்டி சுற்றி என எல்லா சம்பிரதாயங்களும் முறைப்படி நடைபெற்றன. நிறைவாக ஸ்ரீ கிருஷ்ணர் ராதைக்குத் திருமாங்கல்யம் சூட்டிய காட்சி கண்களை நிறைத்தது. மலர்மாரி பொழிந்து அந்த மேடையே மூழ்கிவிட்டது போன்ற அழகிய தோற்றம். வந்திருந்த அத்தனை பேரும் மலர்களையும், அட்சதையையும் மனதார பக்தியுடன் சொரிந்து ஆனந்தக் கண்ணீரையும் காணிக்கையாக்கினர். விஜயாவும், ஸ்வேதாவும் பம்பரமாகச் சுழன்று விருந்தினர்களை உபசரித்தனர்.

ராதா கல்யாணம் பாங்குற முடிந்ததும், பேத்தி ஸ்வேதாவின் கணேச நடனம் மிகப்பிரமாதமாக நடைபெற்றது. பிறகென்ன? கல்யாண சாப்பாடு இலைபோட்டுப் பரிமாறப்பட்டது. அசல் கும்பகோணத்து நளபாகமாக சுவை இருந்தது. சுமங்கலிப் பெண்களுக்குத் தேங்காயுடன் மடித்தாம்பூலம் வழங்கி ஆசீர்வதித்தார், சசீலா மாமி.  வந்திருந்த இளைய தலைமுறையை மாமி தன் சம்பிரதாய முறைப்படியான செயல்களால் கவர்ந்தார் என்றால், ராகவன் மாமாவோ தன் தேன்மதுரப் பேச்சினால் எல்லோர் இதயத்திலும் குடியமர்ந்துவிட்டார். அவ்வளவு எளிமை! அவ்வளவு அனுபவம்! அவ்வளவு வாத்ஸல்யம்!

அன்னியோன்யமான இத்தம்பதியரின் குடும்பத்தினருடன் தெய்வீகச் சூழலில் அந்த அரை நாளைக் கழித்தது மனதிற்கு மிக நிறைவாக, இதமாக இருந்தது. சுசீலாமாமியிடம் விழாவின் சிறப்பைப் பற்றிப் பேசியபோது, நமது இந்து மத சம்பிரதாயங்கள் ஒவ்வொன்றுமே ஆழ்ந்த அர்த்தமுடையவை. பரம்பரை, பரம்பரையாக இந்துக் குடும்பங்களின் பழக்க, வழக்கங்களாக அனுசரிக்கப்படுபவை. காலப்போக்க்pல்
கொஞ்சம் கொஞ்சமாக இவையெல்லாம் அழிந்துபோக நாம் விடக்கூடாது. இந்தப் பாடல்களை எல்லாம் யாரும் கற்றுக்கொள்ள முன்வந்தால், நான் அவற்றை முறையாகக் கற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் யாருக்கு இங்கே நேரம் இருக்கிறது? என்று கூறினார். அடுத்து இந்த ராதா கல்யாண வைபவத்தை முடிந்தவர்கள் அவரவர் இல்லத்தில் செய்து மகிழ முன்வரவேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்பதை வேண்டுமானால் நான் சொல்லித்தருவேன் என்றும் ஆh;வத்துடன் அவர் கூறினார்.

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணபிரேமி ஸ்வாமிகளை அண்ணா என்று அன்போடு அழைத்து, குருமகராஜின் அருள் கிருபையில் தோய்ந்து இந்த அற்புதமான தம்பதியர் தங்களை முன்னிலைப்படுத்தி விழாவைத் தமதாக்கிக்கொள்ளாமல், ஸ்ரீ ராதாகிருஷ்ணரின் எல்லையற்ற கருணையினை வந்திருந்த அனைவருக்கும் பிரசாதமாக்கித் தந்து, எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்.

ராதே கிருஷ்ணா!

தொடர்புகளுக்கு: ஸ்ரீமதி சுசீலா ராகவன் 905 426 8675

நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள் 1

நிகழ்ச்சியிலிருந்து சில படங்கள் 2

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s