அன்பெனும் மலர் ஏந்தி – ஆய்வுரை 2

ஆய்வுரை: கவிஞர். புகாரி

கவிஞர். புகாரி

*
கவிதைகளை வாசிப்பதும் கவிதைகளை நேசிப்பதும் கவிதைகளை விமரிசிப்பதுமாய் இருந்த என்னைக் கதைகளை வாசிக்கவும் விமரிசிக்கவும் அழைத்தார் திருமதி. விஜயா ராமன். அவர்களுக்கு என் நன்றி. 154 பக்கங்களும் நானுமாய் அமர்ந்தேன் .சும்மா சொல்லக்கூடாது… மலைச் சரிவுகளிலிருந்து தங்குதடை இல்லாமல் விழும் அருவியைப்போல சரளமான நடை வாசிக்கத்தொடங்கியதும் நிறுத்தமுடியாத ஒரு சுவாரசியத்தை முதல் கதை கொடுத்தது. விமரிசிக்கிறேன் என்று கதையை இங்கே கூறிவிடுவதில் எனக்குச் சம்மதம் இல்லை.ஆனால் கதை பற்றிய குறிப்புகளை இயன்றவரை தருவேன்.

பெண்மையைப் போற்றும் பெண் எழுத்தாளர் மூன்று கதையிலுமே பெண்ணையே மையமாக வைத்து சுவாரசியமாக எழுதி இருக்கிறார். முதல் கதை ஆகாய விமானமாய் உணர்வுகளை அள்ளிக்கொண்டு பறக்கிறது என்றால் அடுத்த கவிதை நம்மூர் பேருந்தைப் போலச் செல்கிறது. மூன்றாம் கதையோ ஒரு மாட்டு வண்டியைப் போல அசைந்தாடிச் செல்கிறது

*
டொராண்டோவில் உடல் குறையால் வாழ்வில் சவாலை ஏற்றிருக்கும் பயணிகளுக்கு டி.டி.சி ஓட்டுநர் தரும் அக்கறையைப் பற்றி விவரித்து என் பாராட்டைப் பெறுகிறார் விஜயா ராமன். ”இந்தாம்மா! சாவுகிராக்கி! முன்னால போயேன். ஏன் காலையிலே வந்து என் கழுத்த அறுக்கிற…!” என்று அன்பாகப் பேசுவார்கள் நம்ம ஊரில் நம்மூர் ஓட்டுனரோடும் நடத்துனரோடும் நமக்கு எப்போதும் வழக்குதான் ஆனால் இங்கே அவர் நம்மில் ஒருவர். உறவுக்காரரைவிட அதிக அக்கறையை அவர் நம் மீது வைத்திருப்பதாய் உணர்ந்து ஒவ்வொருவரும் அவருக்கு நன்றி சொல்லாமல் கீழிறங்குவதில்லை.

*
இந்த உறவுகளே வினோதங்கள்தாம். அதை மிகத் தெளிவாக தன் முதல் கதையில் சொல்லி இருக்கிறார் விஜயா ராமன். உறவு என்ற சொல் பொய் என்ற பொருளில் அல்லவா புழக்கத்தில் உள்ளது என்பதுபோல் அவர் சொல்லும்போது மனசு கனக்கிறது.
“கொண்டாடுங்கள்
உங்கள் வீட்டில் ஓராயிரம் நண்பர்கள்
கவலைப்படுங்கள்
உங்கள் வீட்டில் தூண்கள்கூட இல்லை
விருந்தளியுங்கள்
உங்கள் அறை அமர்க்களப்படுகிறது
கையேந்துங்கள்
எங்கும் மனிதர்களே தென்படமாட்டார்கள்”
– என்ற கவிதை வரிகளை ஞாபகப்படுத்திக்கொண்டேன்.

*
இந்தக் கதையின் கதாநாயகியைப்பற்றி ஒருவரியில் சொல்லவேண்டுமென்றால் காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்த ஒரு பெண் எப்படி இருப்பாள்? அதுதான். இக்கதையின் நாயகி கீதா. அன்புதான் கடல். அந்தக் கடலில் உப்பு இருக்கும், ஆனால் இந்தக் கடலில் பிறருக்காய் சிந்தும் கண்ணீராய் உப்பு வெளியேறிவிடுவதால் முழுவதும் தித்திப்புதான். அந்தக்கால ஸ்ரீதர் இயக்கத்தில் விஸ்வனாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசன் பாடல்களோடு பத்மினி நடித்த படம் பார்த்த உணர்வினைத் தருகிறது கதை. ஆனால் இவர் பேசுவதோ இந்தக் கால கனடா நாட்டில் ஓர் இந்தியப் பெண்ணின் கதையை. இந்த முரண்பாடே கதைக்கு மிகுந்த சுவாரசியம் தருகிறது. விருந்து வைக்கும்போது சிலர் ஆரம்பத்திலேயே பாயசம் என்ற இனிப்பைத் தந்துவிடுவார்கள். அதுபோலத்தான் இந்தக் கதையும். இந்த நூலில் இருக்கும் பாயசக் கதை.

*
துன்பம் யாவுமே இன்பம் ஆகுமே – இது அடுத்த கதை.
சன் தொலைக்காட்சியில் கதைத்தொடர் பார்ப்பதுபோல் இக்கதையை வாசிக்கும் போது நான் உணர்ந்தேன் இரண்டாவது கதை ஓர் உன்னத கருத்தைச் சொல்வதற்காக எழுதப்பட்டிருக்கிறது. தற்கொலை கூடாது என்பதுதான் அது திரைப்பட இயக்குனர் ரா. பார்த்திபன் சொன்ன ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகிறது.

”வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம்
செத்துத் தொலைக்கலாமே
செத்து என்ன செய்யப் போகிறோம்
வாழ்ந்து தொலைக்கலாமே”…

ஒரு மனிதன் தற்கொலை செய்யத் துணிந்துவிட்டான் என்றால் அவனுக்கு இந்த உலகில் எதுவுமே பிரச்சினையில்லை, யாருமே பிரச்சினையில்லை. அந்த நிலை வந்தவன் பயம் அற்றுப் போகிறான். பிறகென்ன. தன் விருப்பம்போல் எதைச் செய்தாவது வாழவேண்டியதுதானே? நதி எப்போதும் திரும்பிப் பார்த்து வருந்துவதில்லை. எத்தனை பாதை மாறிப் போனாலும் இறுதியில் அது மிகச் சரியாக கடலையே சேரும். மறுக்குமிடத்தில் மன்றாடுவதல்ல, வாழ்க்கை கொடுக்குமிடத்தில் கொண்டாடுவதுதான்.

*
மூன்றாவது கதை – கங்கா ஒரு காவியம் 18 பிள்ளைகள் பெற்றெடுத்த இரு தலைமுறைக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்மணிதான் கதையின் நாயகி யோசித்துப் பாருங்கள் வாழ்நாளெல்லாம் கங்கையைப் போலவே வற்றாத ஜீவநதியாகவே வயிறு தள்ளிக்கொண்டு நின்றிருப்பார் ஒரு இரண்டு வருசத்துக்கு ஒரு குழந்தை என்று யோசித்தாலும் ஆயுளில் பெரும்பகுதி இரட்டை உயிராகவே இருந்திருக்கிறார்.

*
காலம் மாறிவிட்டது பெண் முன்னேற்றம் அடைந்துவிட்டாள். பெரியார், பாரதி போன்றோர் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டார்கள். கங்கா அற்புதமான பெண்ணரசி. கங்காவை வர்ணிக்கும்போது விஜயா ராமன் அவர்கள் தன்னையே மறந்துவிடுகிறார். அந்த கதாபாத்திரத்தோடு அப்படியே ஒன்றிவிடுகிறார். முகம் நிறைய மஞ்சள், நெற்றி நிறைய குங்குமம், தலை நிறைய மல்லிகை, கழுத்து நிறைய பொன், இடை நிறைய பட்டுப் புடவை, கை நிறைய வளையல், மூக்கு நிறைய மூக்குத்தி, கால்விரல் நிறைய மெட்டி, இதழ் நிறைய புன்னகை, கன்னம் நிறைய நாணம் இதுதான் அன்றைய தமிழ்ப்பெண். அப்படியான ஒரு பெண்மணிதான் கங்கா.

*
விஜயாராமன் கதைசொல்லிப்போகும்போது, தேவையான இடங்களில் உவமைகள் வந்து அழகாகப் பொழிகின்றன

*
கதையில் இரு இடங்களில் கண்ணதாசனின் பாடல்வரிகளை இணைத்திருக்கிறார் விஜயாராமன்.
”வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது என்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை.”

இன்னொரு இடத்தில்,
”எங்கே வாழ்க்கை தொடங்கும்
அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறிவிடும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்துகொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்”

புதிய நடை, புதிய கருத்து, புதிய காட்சியமைப்பு என்று தமிழ் சிறுகதை மற்றும் நாவல்களின் அடுத்த நிலைக்குப் பெயர்ந்து மேலும் பல நல்ல கதைகளை விஜயாராமன் அவர்கள் எழுதவேண்டும்.

அன்புடன் புகாரி

 

http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s