அன்பெனும் மலர் ஏந்தி – ஆய்வுரை

ஆய்வுரை: கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்

kausalya

இந்தத் தொகுப்பிலே மூன்று நெடுங்கதைகள் இடம்பெற்றுள்ளன. சிறுகதை, குறுநாவல், நெடுங்கதை, நாவல் இவையனைத்தும் ‘புனைகதை’ (Fiction) என்ற பொது வகைமைக்குள் அமைவதால் இம்மூன்று படைப்புகளையும் ‘புனைகதை’ எனக் கொள்வது சிறப்புடையதாகும் எனக்கருதுகிறேன். இவை வெவ்வேறுபட்ட களங்களில் உருவான கதைகள். தமிழகத்தின் பிரபல மாதஇதழான கலைமகள் போட்டியில் பரிசுபெற்ற அன்பெனும் மலர் ஏந்தி என்ற கதையின் பெயரே நூலின் பெயராகவும் அமைகிறது. இக்கதை கனடியச்சூழலைக் களமாகக் கொண்டது. துன்பம் யாவுமே இன்பமாகுமே, கங்கா ஒரு காவியம் ஆகிய இரண்டும் தென்னிந்தியச் சூழலில் வெவ்வேறு தளங்கள் சார்ந்து உருவானவை.

அன்பெனும் மலர்ஏந்தி என்ற கதை அன்புணர்வின் வெளிப்பாட்டால் உலகம் முழுவதையும் வென்றெடுக்க முடியும் என்ற செய்தியை உள்ளிருத்திப் புனையப்பட்டது. துன்பம் யாவுமே இன்பமாகுமே என்ற குறுநாவல் வாழ்வியலில் ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் சோர்ந்து விடக்கூடாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் கதைப் பொருள் கொண்டது. வறுமையென்றநோய் ஒருவரைத் தற்கொலைவரை கொண்டுசெல்லக்கூடியது என்பதே இக்கதையில் உணர்த்தப்படுகிறது. அதிலிருந்து மீள்வதற்குரிய மனத்தைரியத்தைக் கொடுக்கும் வழிவகைகளையும் எடுத்துக்கூறுவதாக கதை அமைகிறது. கங்கா ஒரு காவியம் என்ற குறுநாவல் (இதை நாவல், முழு நாவல், நெடியகதை, பெருங்கதை எனப்பல பெயர்களில் ஆசிரியர் கருதினாலும் என்னுடைய பார்வையில் இது குறுநாவலாகவே கொள்ளத்தக்கது) குடும்பவாழ்க்கையின் அச்சாணியாக இருக்கும் ஒரு பெண்ணை மையப்படுத்தியது. அவளது வாழ்க்கை எவ்வாறு ஒரு காவியமாக அமைந்தது என்பதை ஆசிரியர் இக்கதையில் எடுத்துப் பேசியுள்ளார்.

தொகுத்து நோக்கினால் இம்மூன்று குறுநாவல்களும் பெண்களை மையப்படுத்தியவை. குடும்பங்களின் அமைதிக்கும் நல்வாழ்வுக்கும் பெண்கள் எவ்வாறெல்லாம் பங்களிப்புச் செய்ய முடியும் என்பதை எடுத்துக்காட்டும் உதாரணக்கதைகளாக இவை இங்கே உங்கள் முன் வைக்கப்படுகின்றன. கீதா, சங்கீதா, கங்கா ஆகிய மூன்று பெண்பாத்திரங்கள் முறையே இம்மூன்று கதைகளிலும் ஆசிரியருடைய அதாவது ஸ்ரீமதி விஜயாராமன் அவர்களுடைய ஆத்மாவின் குரலாக வெளிப்படுகிறார்கள். இம்மூன்னு முக்கிய கதாபாத்திரங்களினூடாகவும் ஆசிரியர் நம்மோடு உரையாடுகின்றார். புதிய புதிய சூழல்களின் வாழ்வியல்களை நமது காட்சிக்கு இட்டு வருகிறார். முதலிரு கதைகளும் நமது தலைமுறைசார்ந்தவையாகும்.

கங்கா ஒரு காவியம் என்ற கதை நூறாண்டுகளுக்கு முற்பட்ட பாலக்காடுப் பிரதேசச் சூழலுக்கு நம்மை இட்டுச்செல்வது. எனது தாய்வீடும் பாலக்காடு என்பதால் அக்கதையை மிகவும் இரசித்துப்படித்தேன். கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் நன்மை தீமைகள் பல பாத்திரங்களினூடாக அதில் சிறப்புற எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பால்யவிவாகம் பற்றிய செய்திகள் அவற்றின் முக்கியத்துவம் என்பன இக்கதையில் சிறப்புறச் சுட்டப்படுகின்றன. கனடா போன்ற நாட்டில் அவை நடைமுறைப்படுத்தின் பலபிரச்சனைகள் தீர்க்கப்படலாம் எனத்தோன்றுகிறது. சிறந்த மருத்துவ வசதி இல்லாமையால் ஒரு தாய் படும் கஷ்டங்கள் ஸ்ரீமதி விஜயாராமன்; அவர்களால் இக்கதையில் உணர்வுபு+ர்வமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக அமையும் இக்கதைகளின் தகுதிப்பாடுபற்றிய ஆய்வுநோக்கிலான சில குறிப்புக்களை இங்கு முன்வைப்பதற்கு முன் படைப்பு பற்றிய சில எண்ணக்கருக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

குறித்த ஒருவரது படைப்பு அல்லது சில படைப்புகள் பற்றிய பார்வையிலே நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய இரு அம்சங்களில் முதலாவது அம்சம் அப்படைப்பாளியின் உலகநோக்கு அதாவது தத்துவதளம் எத்தகையது என்பதும் அது அவரது படைப்புக்களில் எவ்வாறு எடுத்துப்பேசப்பட்டுள்ளது அல்லது உணர்த்தப்பட்டுள்ளது என்பதுமாகும்.
அடுத்து நமது கவனத்திற்குரிய அம்சம் அவரது படைப்பு அல்லது படைப்புக்கள் எந்த வகைமை சார்ந்தனவோ அவ்வகைமையின் கட்டமைப்புக்குள் அவை பொருந்துகிறதா என்பதாகும். இது படைப்பின் கட்டமைதிபற்றிய வரலாற்றுப்பார்வையாகும். இங்கு குறிப்பிட்ட கதைகளை நாம் புனைகதை வகைமைக்குள் அடக்கி ஆய்வுசெய்யலாம். புனைகதைகளினுடைய அடிப்படையான பண்பு சமூகயதார்த்தமாகும். யதார்த்தம் என்ற சொல் மெய்மை (reality) எனத் தூயதமிழில் வழங்கப்படும். நாம் அன்றாட வாழ்வில் நடைமுறையில் காண்கின்ற சமூக மாந்தரை அவர்களது இயல்பான உயிர்த்துடிப்பான உணர்வோட்டங்களோடும் உணர்ச்சி முனைப்புக்களோடும் பதிவு செய்ய வேண்டியது யதார்த்தப்படைப்பொன்றின் முக்கிய செயன்முறையாகும். இவ்வாறு உணர்வோட்டங்களையும் உணர்ச்சிமுனைப்புக்களையும் பதிவுசெய்வதோடு அமையாமல் அவற்றுக்கான சூழல்சார்ந்த அம்சங்களையும் இவ்வகைப்படைப்புக்கள் உணர்த்தவேண்டும். இன்னும் தெளிவாகக் கூறுவதாக இருந்தால் மேற்படி உணர்வு அல்லது உணர்ச்சி அம்சங்களுக்கான சமூகநிலைப்பட்ட அல்லது குடும்பநிலைப்பட்ட அம்சங்களை இனங்காட்டி விமர்சிக்கத்தக்க வகையில் அமையும் பொழுதுதான் யதார்த்தம் என்ற அம்சம் முழுமைபெறுகின்றது.
அவ்வாறு பார்க்கும் பொழுது புனைகதையில் யாருடைய கதை கூறப்படுகின்றது அல்லது எவ்வாறான கதையமைப்பு காணப்படுகின்றது என்பதைவிட என்ன பிரச்சனை எவ்வாறு சித்திரிக்கப்பட்டுள்ளது என்பதே விமர்சனத்தில் முக்கியமாகின்றது. சுருங்கக்கூறுவதானால் புனைகதைகளில் கதையின் இடம் இரண்டாமிடம்தான். முதலாம் இடம் அதில் எடுத்துக்கொள்ளப்படும்  பிரச்சினைக்கே உரியது. இப்பிரச்சினை எவ்வாறு சித்திரிக்கப்படுகிறது எவ்வாறு தீர்வுகாணப்படுகிறது என்பதை மையமாக வைத்தே புனைகதை விமர்சனச் செயற்பாடுகள்  அமைகின்றன.

இத்தொடர்பிலே இன்னொரு அம்சத்தைச் சொல்ல வேண்டும். புனை கதை அமைப்பிலே இரண்டு வகை அணுகுமுறை உண்டு. ஒருவகை ஆசிரியரே கதையைக் கூறுவது. இன்னொருவகை பாத்திரங்களின் அநுபவங்களுக்கூடாக கதையம்சம் வளர்த்துச்செல்லப்படுவது. இந்த இரண்டாவது அணுகுமுறையே புனைகதைகளை அநுபவச் செறிவுடையன ஆக்கும்.

இந்தத்தளத்தில் நின்று கொண்டுதான் நாம் விஜயாராமன் அவர்களுடைய கதைகளை நோக்கவேண்டும். விஜயாராமன் அவர்கள் அடிப்படையிலே தென்னிந்திய பிராமணசமூகத்தின் பண்பாட்டுத்தளம் சார்ந்தவர் என்பது நீங்கள் அனைவரும் அறிந்திருக்கக்கூடிய செய்தி. தென்னிந்திய பிராமணசமூகத்தின் பொதுவான பண்பாட்டம்சங்களிலொன்று இறைநம்பிக்கையோடு கூடிய வாழ்வியல் முறைமை. இன்னொன்று சமயம் சார்ந்த வழிபாட்டுமுறைகள் பண்டிகைகள் பழக்கவழக்கங்கள் என்பவற்றை முறையாகப் பற்றுறுதியுடன் பேணிநிற்கும் பண்பு. இவ்வாறான மரபுசார் அம்சங்களுக்குள் ஆழமாக வேருன்றி நின்று அதன் தளத்தில் உலகின் பல்வேறு அம்சங்களையும் பரிவோடு  – அன்போடு – தரிசிக்கின்ற உலகு நோக்குக் கொண்டவர் ஸ்ரீமதி விஜயாராமன் அவர்கள்.

இறைநம்பிக்கை என்ற வகையிலே இவர் சங்கரவேதாந்த மரபுசார்ந்தவர். அம்மரபு சார்ந்து பலநூல்களையும் எழுதியவர் அவர். சங்கர வேதாந்தம் பரம்பொருளாகிய பிரமம் ஒன்றே உண்மையான பொருள் என்பதை வலியுறுத்துவது. அதே வேளை உலகின் அனைத்து உயிர்களிலும் அனைத்துப் பொருள்களிலும் அது பிரம்மத்தைத் தரிசிப்பது. இவ்வகையில் அனைத்துப்பொருள்களிலும் அன்பு செலுத்துவது. இந்த அன்பு தான் விஜயாராமன் அவர்களுடைய கதைகளில் உள் நின்று இயக்குகின்ற உணர்வுநிலையாகும்.

மற்றவர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது. துன்பங்கள் எவ்வளவு வந்தாலும் தாங்கிக்கொண்டு வாழவேண்டும். சூழவுள்ள குடும்பத்தினர்க்கும் சமூகத்தினர்க்கும் இயன்றவரை உதவிசெய்ய வேண்டும். இப்படியாக மேற்படி வேதாந்த மரபின் அன்பு என்ற உணர்வுநிலை விஜயாராமன் ஆக்கங்களில் கதை வடிவம் கொள்கின்றது. எனவே கீதாவின் கதையானாலும் சரி சங்கீதாவின் கதையானாலும் சரி கங்காவின் கதையானாலும் சரி இவையனைத்தும் மேற்படி வேதாந்த மரபுசார் அன்புணர்வின் வெவ்வேறு தளநிலை மற்றும் அனுபவநிலை என்பவற்றின் வெளிப்பாடுகளேயாம். படைப்பாளியின் தத்துவநிலைப்பாடு – தத்துவத்தளம் – இதுவேயாம். அடுத்து ஸ்ரீமதி விஜயாராமனுடைய படைப்பு பற்றி நோக்குவோம்.

அன்பென்னும் மலர் ஏந்தி என்னும் கதை உண்மை அன்பை எதிர்பார்க்கின்ற பரிதாபத்துக்குரிய(குறைபாடுடைய) பணக்காரப்பெண்ணின் கதை. அவளுடைய சொத்துக்காக மட்டுமே அவளுக்கு உதவிசெய்ய நெருங்கமுயலும் உறவினர்கள் ஒரு பக்கம். அவள்மீது உண்மையான பரிவுடன் துணைபுரிய நிற்கின்ற இன்னொரு பெண் கீதா மறுபுறம். கீதாவிற்குச் சொத்துக்களைக் கொடுக்க முயலும் பொழுது அதை அவள் மறுத்து உறவினர்களுக்கே கொடுக்கும் வண்ணம் தியாக உணர்வுடன் கூறுகின்றாள். இதுவே இக்கதையின் மையச்செய்தி. உண்மையன்பு வெற்றி பெறுவதாகக் கதை நிறைவடைகிறது. இங்கு வருகின்ற கீதாவின் தியாகம் ஒரு தனிமனித தியாகம். பொதுவான வகைமாதிரியான மாந்தரின் குணாம்சமாக இதைக் கொள்ள முடியாது. சராசரியாக எல்லாப்பெண்களும் இப்படிச் செய்யமாட்டார்கள்.

துன்பம் யாவுமே இன்பம் ஆகுமே என்ற அடுத்த கதையானது தற்கொலை எண்ணப்பாங்கிலிருந்து சமூகம் மீட்சியடையவேண்டும் என்ற கருத்தோட்டத்தை மையப்படுத்தி புனையப்பட்ட கதை. தென்னிந்திய சூழலில் பெண்கள் கல்விகற்பது, அலுவலகங்களில் பணிபுரிவது, குடும்ப உறவுகளைப்பேணுவது என்பவற்றில் எதிர்கொள்ளும் அநுபவங்களே கதையாக விரிகின்றது.

கங்கா ஒரு காவியம் என்ற நெடுங்கதையிலே கங்காவை மையப்படுத்திப் பண்பாட்டுக்கூறுகளை எவ்வாறு பேணிக்கொள்வது என்பதையே ஆசிரியர் கூறமுற்பட்டுள்ளார் என்பது தெரிகிறது. இன்னொரு வகையிலே சொன்னால் பண்பாட்டு அம்சங்கள் பற்றிய அநுபவங்கள் மற்றும் செய்திகள் என்பவற்றைக் கூறுவதற்காகக் கட்டமைக்கப்பட்ட ஒரு கதையாகத் அது தெரிகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு குடும்பக்கதையாக விரிவதால் அக்காலப்பழக்கவழக்கங்களைக் கூறுவதாகவே கதை விரிகிறது. இடையிடையே கண்ணதாசன் பாடல்கள், சங்கரர் கூற்றுக்கள், கோவில் விழாக்கள் பண்டிகைகள் பற்றிய வர்ணனைகள், ஆன்மீகக் கருத்துக்கள் என அமையும் பகுதிகள் ஆசிரியர் கூற்றாக அமைந்து கதையை மையப்பகுதியிலிருந்து அகலப்படுத்திச் செல்கின்றன.

பொதுவாக இந்த மூன்று கதைகளும் பிரச்சினைகளை மையப்படுத்தி அவற்றின் பன்முகப்பரிமாணங்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் என்ற வகையிலே உருப்பெற்றன அல்ல. ஆசிரியர் தாம் சந்தித்த சிலவகைமாந்தர்களின் கோழைத்தனங்கள், குறைபாடுகள், அநீதியான செயன்முறைகள் என்பவற்றைச் சீர்திருத்தவும் ஆசிரியருக்குப்பிடித்த சில சமூக பண்பாட்டம்சங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் அவை தொடர்பான அநுபவங்கள் என்பவற்றைக் கதை வடிவத்திற்குள் பதிவுசெய்யவும் முயன்றுள்ளார் என்பதே இக்கதைகள் வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வாகும். இக்கதைகள் இலட்சிய கதாமாந்தரை முன்நிறுத்துவன. கதைகளின் அனுபவங்களுக்கூடாகக் கூறப்படும் அறிவுரைகள் எம்மைத் தூய்மைப்படுத்துவன, கதைகளிற் கூறப்படும் பழமையான பண்பாட்டம்சங்களின் பெறுமதிமிக்க கூறுகள் எம்மைச்  சிந்திக்க வைப்பன.

விஜயாராமன் அவர்களுடைய நோக்கம் வரவேற்கப்படவேண்டியது. பண்பாட்டை உறுதிப்படுத்துகிற ஒரு சமூக வழிகாட்டியாக அவர் இயங்க முற்படுவது தெரிகிறது. இந்தியப் பெண்கள் குடும்ப அமைப்பில் எவ்வாறு இயங்கவேண்டுமென்பதை கூறியுள்ள முறைமை பல பெண்களுக்கு குறிப்பாக வயதுவந்தோர்க்கு உவப்பானதாகும். 20ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதிவரையான காலகட்டத்தின் தமிழகச் சூழலிலே வீட்டிலிருக்கும் பெண்கள் வாசித்து மனநிறைவடைவதற்கு கலைமகள், கல்கி போன்ற சஞ்சிகைகளில் இம்மாதிரியான கதைகளே பெரும்பாலும் வருவதை அவதானித்துள்ளேன். அவற்றை வாசிக்கும் பொழுது ஏற்படுகின்ற திருப்தி இக்கதைகளை வாசிக்கும் பொழுது ஏற்படுகின்றது.

அண்மையில் 40 – 50 ஆண்டுகளாக தமிழ்ப்புனைகதைகளின் அமைப்பில் பல்வேறு வகையான வளர்ச்சிகளும் மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. பல்வேறு யுக்திமுறைமைகளில் இப்படைப்புகள் உருவாகி வருகின்றன. இவ்வாறான வளர்ச்சிகளின் முக்கிய அம்சம், கதைகள் நிகழ்வுகளினூடாக எடுத்துப்பேசப்படாமல் பாத்திரங்களின் உணர்வுகளுடாக வளர்த்துச்செல்லப்படும் முறைமையாகும். அதாவது ஆசிரியர் அல்லது கதாபாத்திரம் என்பவற்றின் மனஉலகம் அதில் ஏற்படுகின்ற சலனங்கள் என்பவற்றினூடாக கதைகள் வளர்த்துச்செல்லப்படும் முறைமையாகும். சுருக்கமாகச் சொல்வதாயிருந்தால் ஆசிரியர் தான் போதிக்கிறேன் அல்லது வழிகாட்டுகிறேன் என்ற உணர்வோடு கதை கூற முற்படாமல் தனது அனுபவ உலகை – பெருமூச்சுக்களை – ஏக்கங்களை – உள்ளக்கிளர்ச்சிகளைச் சிந்தாமல் சிதறாமல் எழுத்துக்குள் கொண்டுவரும் முறைமையே அது. இந்த முறைமையில் ஒரு ஆக்கம் அமையும் பொழுது வாசகன் அதோடு ஒரு சுவைஞனாக இணைந்து அந்தப்படைப்பு தரும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்தகைய அனுபவத்தை விஜயாராமனுடைய கதைகளில் பெற்றுக்கொள்ள முடிகிறதா என்பதை வாசகர்களாகிய நீங்கள் இந்நூலை வாங்கிப்படிக்கும் பொழுது நிச்சயமாக அறிந்து கொள்வீர்கள்.

பாத்திரங்களின் அனுபவத்தினூடு கதையம்சத்தை வளர்த்தெடுப்பதான வளர்ச்சிப்பாதையை நோக்கி வெற்றிநடை போடக்கூடிய நவீன கதைகளை உருவாக்கக்கூடிய ஆற்றலும் அறிவு வளமும் அவரிடம் நிரம்பவே இருக்கின்றன. அவரது வாழ்க்கைத்துணைவரும் மக்கட்செல்வங்களும் அனுசரணையாக இருக்கிறார்கள். ஸ்ரீமதி விஜயாராமன் அவர்கள் தொடர்ந்து பல கதைகள் எழுத அவருக்கு ஆரோக்கியமும் ஆண்டவன் அனுக்கிரகமும் கிட்டவேண்டும்.

(03-10-2009அன்று Donmills library-யில் நடைபெற்ற விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை)

 

Click here to print this

Advertisements

One thought on “அன்பெனும் மலர் ஏந்தி – ஆய்வுரை

 1. Omshanti !

  Dear Vijaya/Raman

  Greetings of love and peace.

  Excelant .Very much appreciated.Keep it up.
  Let “GOD” bless you.
  I wish you to continue,by the grace of”GOD”the LORD SHIVA.
  Omshanti !

  With lots of love Live like a Lotus flower and maintain.
  yours “PURITY”
  Brother–Manick

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s