நுால் வெளியீட்டு விழா நிகழ்வு

எனது பார்வையில் 3.10.09 அன்று நடைபெற்ற ‘ அன்பெனும் மலர் ஏந்தி’ திருமதி விஜயாராமன் அவர்களின் நுால் வெளியீடு பற்றிய விமர்சனம்

தொகுப்பு: சங்கர்


எழுத்தாளன் என்பவன் எந்தச் சூழ்நிலையிலும் உண்மைகளை வெளியிட வேண்டும் என்று அவைத்தலைவர் கவிஞர் கந்தவனம் அவர்கள் கூறிய கருத்துடன் ஆரம்பிக்கின்றேன். ஒரு அரச சபையில் அமைச்சனின் கடமையானது, நீதியை எடுத்துக்கூறி அரசனை வழி நடத்துதலே. அது அரசனுக்குப் பிடித்தமானதோ இல்லையோ என்பது முக்கியம் அல்ல. அநீதி இழைக்கப்படுகின்றபோது அரசனுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக முகஸ்துதி பாடுதலோ அல்லது நீதிக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறுபவனோ உண்மையான அமைச்சராக இருக்க முடியாது. அவ்வாறே  ‘விமர்சனம்’ என்பது ஒரு ஆய்வில் உள்ள சரி பிழையை எடுத்துக்கூறி அதை முன்னோக்கி வளர்த்தெடுத்துச் செல்வதற்கேயன்றி, அதை அடித்து வீழ்த்துவதற்கு அல்ல என்பதைக் கூறிக்கொண்டு தொடர்கிறேன்.

விஜயாராமனின் இந்த நுால் வெளியீட்டு நிகழ்வில், கனடாவில் வெளிவருகின்ற பெரிய பத்திரிகை ஆசிரியர்களும், ஆன்மீக அன்பர்களும், எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும், அறிஞர்களுமாய் அரங்கம் நிறைந்து இருந்தது. இயந்திரமாகிவிட்ட எமது மேற்குலக வாழ்க்கையில் நுால் வெளியிடுவதோ அல்லது அதை வாசிப்பது என்பதோ மிகவும் கடினமானதொன்றே! வாசிப்பு என்கின்ற பழக்கம் எல்லா வகையிலும் ( உலக அளவில்) அருகிக்கொண்டே வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில், இவ்வாறான நிகழ்வுகள் பெரிதும் பாராட்டப்படக் கூடியவையே.

ஆத்மார்த்தமாகச் செய்யப்படாத வெறும் சம்பிரதாயங்கள் எதையுமே சாதித்துவிடப் போவதில்லை. அதைச் செய்வதனால் நாம் என்ன லாபத்தைக் கண்டுவிடப்போகின்றோம்? எண்ணங்களே எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை. அவற்றிலிருந்தே எல்லாம் (உலக நன்மை, தீமைகள்) ஏற்படுகின்றன.

எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது என்பது மனதைக் கட்டுப்படுத்துவதாகும். ஆனால் மனத்தே எழுகின்ற எண்ணங்களை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? எனவே கண்களை மூடுகின்றபோது மனத்தையும் கட்டுப்பாடாக வைத்திருந்தால் மாத்திரமே அக, புறச் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை அல்லது ஒரு பாதிப்பை ஏற்படுத்த முடியும். அதை விடுத்து வெறும் சம்பிரதாயத்திற்காக என்று உலகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி என்பது எந்த வகையானது என்பதை நீங்களே தீர்மானியுங்கள்!

முதலில் ஆசியுரை வழங்கிய சிவஸ்ரீ டாக்டர் சோமாஸ்கந்தக் குருக்கள் அவர்கள் ‘அன்பெனும் மலர் ஏந்தி’ என்ற நுாலின் பெயருக்கு மிகவும் அற்புதமான தத்துவார்த்த விளக்கத்தை அளித்தார். இந்து மதத்தில், அன்பு என்பதைக் குறியீடாகக் கொள்வதற்குப் பெண் கடவுள்களைப் படைத்தார்கள், அப்பெண் தெய்வங்கள் கரங்களில்  மலரை ஏந்தியவாறு காட்சி தருகின்றன. இன்னும் ஒருபடி மேலே போனால், அத்தெய்வங்கள் தாமரை மலரையே பீடமாகக் கொண்டிருக்கின்றன என்றும், அதுமட்டுமல்ல மனிதனை எடுத்து நோக்கினால் அவனது இதயமே முக்கியமான பகுதி. அதில் தான் தெய்வம் உறைவதாகப் பேசப்படுகிறது. இதயத்தின் மலர்ச்சியே முகத்தில், இதழில், புன்னகையாக விரிகிறது. அதையே ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பார்கள். அதுமட்டுமல்ல, முகத்தை முகமலர் என்றும், அதில் மஹாலட்சுமி உறைவதாகவும், கரங்களைக் கரமலர் என்றும், தோள்களை புஜமலர் என்றும் அதையே வீரலட்சுமிக்கு உதாரணமாகக் கருதுவதாகவும், இவ்வாறு அஷ்ட லட்சுமிகளும் மனிதனின் ஒவ்வோரிடத்திலும் உள்ளார்கள் எனவும் விளக்கமளித்தார்.  மேலும் இறைவனை வழிபடக் காலநேரம் தேவையில்லை என்பதையும், அதற்கு உதாரணமாக முருகனுடன் காட்சி தரும் வள்ளி சூரியனைக் கண்டு மலரும் தாமரையையும், தேவயானை சந்திரனைக் கண்டு மலரும் அல்லியையும் கைகளில் வைத்திருப்பதாக அருமையானதொரு தத்துவ விளக்கம் அளித்து சபைக்குப் புதியதொரு பரிமாணத்தைத் தொடுத்தார்.

தொடர்ந்து நுால் வெளியீட்டுரை வழங்கிய திருமதி மீனா தவரட்னம் அவர்கள்  தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ அவன் உயர்த்தப்படுவான்  என்ற யேசுநாதரின் கூற்றை மெய்ப்பிப்பதாக மேற்கோள்காட்டி,  ஆன்மீக நுால்களை இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாது, ஆனால் திருமதி விஜயாராமன் சுவாமி பரமாத்மானந்தா அவர்களின் கருத்துக்களை மிக எளிய நடையில் கொண்டு வந்ததினாலேயே தன்னால் அவற்றை விளங்கிக்கொள்ள முடிந்தது என நுாலாசிரியரின் சிறப்பையும், பெருமையையும் மட்டுமே கூறி, தனது பெயரின் முன்னால் எந்தவிதப் பட்டப்பெயரும் இல்லை எனவும், ஆயினும் தன்னை ஒரு ஆய்வாளராக அழைத்ததற்கு நன்றி என்றும் கூறியதாவது, வெறும் பட்டமும் பதவியும் மட்டுமே கல்வியின் தகமையைத் தீர்மானிப்பதல்ல என்பதைப் பறை சாற்றியது போலிருந்தது. மேலும் அவர் ‘அன்பெனும் மலர் ஏந்தி’ என்ற நாவலை வாசிக்கும்போது கண்களில் கண்ணீர் பெருகியதாகவும் கூறினார். அன்பும், கருணையுமான இறைத்தன்மை இருக்கின்றபோது மட்டுமோ, அல்லது பாத்திரத்துடன் ஒன்றும்போதோ தான் கண்கள் நீரை இயல்பாகவே கசிக்கும்.

தொடர்ந்து ‘நுால் ஆய்வு’ என்ற விடயத்தை மேற்கொண்ட திருமதி கௌசல்யா சுப்ரமணியன் அவர்கள் ‘அன்பெனும் மலர் ஏந்தி’ என்ற நுாலை திருமதி விஜயாராமன் எந்தத் தளத்திலிருந்து  எழுதியிருக்க வேண்டும் என்று ஆய்ந்து அதற்குரிய விடையாக ஆன்ம தளத்தில் அத்வைதத்தை மூலமாகக் கொண்ட “சங்கர தத்துவம்“ (ஆதி சங்கரரின் கருத்துக்கள்) என்பதே அவரது தளம், எனவே அவரது நுால் இலக்கை நோக்கியது என்பதைக் கண்டுபிடித்து தமது திறமையையும் பசுமரத்தாணி போல் சபைக்கு வெளிக்கொணர்ந்தார்;. சொல்லும், செயலும் ஒன்றியிருக்கின்றபோது மட்டுமே, அச்செயல் களங்களைக் கடந்து நிற்கும் என்பதற்கு மூலத்தை – தளத்தை ஆய்வு செய்வது அவசியமே!

அடுத்து, நுால் ஆய்வை மேற்கொண்ட கவிஞர் திரு புகாரி அவர்கள், கவிதைத் தளத்திலிருந்து தன்னை, சிறுகதை, நாவல் என்ற தரத்திற்கு உயர்த்துவதற்கு இந்நுாலே காரணமாக இருந்தது எனவும், இந்நுாலின் நடை மிகவும் துல்லியமாகவும், நேர்த்தியாகவும்  இருப்பதாகவும், அதன் 154 பக்கங்களையும் சோர்வின்றி ஆவலுடன் தொடர்ந்து படிக்கத் துாண்டியதாகவும் கூறினார். மேலும் அவர் உரையாற்றும்போது காந்தி பிறந்த மண்ணிலிருந்து வந்த ஒரு பெண் எவ்வாறு இருப்பாள் என்பதை அறிவதற்கு இதில் உள்ள கதைகள் உதவுகின்றன என இந்தியப் பெண்களின் சிறப்பினை எடுத்துரைத்தார்.

மேலும் இந்நுால் அன்பு என்பதன் புதிய கோணத்தையும், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்யவேண்டும் என்பதையும், தற்கொலை செய்வது கோழைத்தனம் என்பதைப் பற்றியும் சற்றே சிந்தியுங்கள் என ஒரு பெண் அதற்காகப் போராடுவதாகவும் சித்தரிக்கின்ற இந்நுாலைப்பற்றி ஆய்வுரை வழங்கியவர், சபையோரின் சிரிப்பொலிக்காகக் கூறிய மாமி – மருமகன் கதை அன்பின் உயர்வை மாற்றிக் கூறுவதாக அமைந்து விட்டது வருந்தத்தக்கது.

உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர்.என்.லோகேந்திரலிங்கம் அவர்களின் வாழ்த்துரையுடன் இக்கூட்டம் முடிவடையும் முன்பாக திருமதி விஜயாராமன் அவர்கள் எனது மகள் சியாமாவும், மகன் பிரசன்னாவும் எனது கண்களானால், எனது கணவர் புதுவை இராமன் அவர்களோ எனக்குத் தலையில் சூட்டப்பட்ட கிரீடம் எனக் கூறினார். திரு புதுவை இராமன் அவர்கள் இந்நுாலை வெளியிட எடுத்த அரும்பெரும் முயற்சியும்,  முழுமூச்சாக எல்லாச் சுமைகளையும் தனது தோள்களில் சுமந்த பிரசன்னாவின் பண்பும், எல்லாவற்றிற்கும் மேலாக, தமது இனிய குரலால் சபையைப் பிரமிக்கச் செய்த சியாமாவின் தமிழ்த்தாய் வாழ்த்தும், அவர் கூற்றை நிரூபித்தன. மேலும் இவ்விழா சிறப்பாக நடைபெற அனைத்து வகையிலும் உதவி புரிந்த அனைவருக்கும் அவர் மனப்பூர்வமான தனது நன்றியைத் தெரிவித்தார்.

காலத்தால் அழியாத எழுத்துக்களைத் தாங்கி வரும் திருமதி விஜயாராமனின் நுால்கள் எழுத்துலகிற்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்றும், அதை வெளியிடும் முயற்சியில் அவர் ஈடுபட அவருக்குத் துணை நின்று, இங்கு வெளிவரும் பல்வேறு ஊடகங்களில் தனது எழுத்தாற்றலினால் நம் அனைவரின் பாராட்டுதல்களையும், நல் ஆதரவினையும் பெற்று வரும் அவரது கணவரின் அரும் பணி என்பது மிகவும் அளப்பரியதாகும்.
வாழ்க இக்குடும்பம் ஆற்றும் கலை இலக்கியப் பணி!

நன்றியுடன் வாழ்த்தும் உள்ளம்
சங்கர்

05.10.2009

click here to print this

Advertisements

One thought on “நுால் வெளியீட்டு விழா நிகழ்வு

 1. Dear Mrs.Vijaya,

  I am so happy about your book release of “Anbenum Malar Yendi”. Everybody has challenges in their life. Facing our life challenges is a great thing.

  Ever since I met you, you’ve been a very good friend to me.I feel that you remind me of my mom sometimes.

  Good luck to your published book.

  All the best to your book and future creations.

  Best regards,

  Kanchana & Family

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s