யாம் பெற்ற இன்பம் – 24

இறைசக்தி நம்மைப் படைத்ததன் காரணம், தன்னை அறிவதற்காகத்தான். இப்படித் தன்னை அறிவதற்காகத்தான் படைப்புக்களுக்குத் தேடல் என்னும் உந்துதலைப் பிரம்மம் தந்திருக்கின்றது. ஒரு புழுவை உற்றுக்கவனியுங்கள். அது எதையோ நோக்கி நகர்ந்து கொண்டே போகும். ஆறுகள் உற்பத்தியான இடத்திலேயே தேங்கி நின்றுவிடுவதில்லை. ஓடிக்கொண்டே இருக்கின்றன. கடலிலே சங்கமமாகும் வரை இந்த ஓட்டம் தடைபடுவதில்லை. கடலில் கலந்துவிட்ட பிறகு ஆறு என்று தனியாக இருக்காது. கடலுக்குள்ளே போய் எந்த ஆற்றினைத் தனியாகப் பிரித்துப்பார்க்க முடியும்?

மனிதப்பிறவியும் இப்படித்தான். மனிதன் எதையோ தேடிக்கொண்டேதான் இருக்கிறான். தேடுவது எதுவாகவும் இருக்கலாம். அவரவரின் உள்துாண்டலுக்கு ஏற்ப அந்தத் தேடல் அமையலாம். ஆனால் எவருமே, தான் தேடுவது தன்னையே என்பதை உணரும்வரை தேடிக்கொண்டே தான் இருக்கினறனர். இந்தத் தேடலினால் விளைவது மனித சமுதாய வளர்ச்சி. புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் மனிதத் தேடலின் விளைவே.

அமெரிக்காவில் உள்ள நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், ‘கெப்ளர்’ என்னும் புதிய தொலைநோக்கு நுண்கருவியை உருவாக்கி, விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இந்த நுண்தொலை நோக்குக்கருவியான கெப்ளர், முன்பு உள்ள கருவியைக்காட்டிலும் பல நுாறு மடங்கு நுட்பமாக செயல்படக்கூடியது. விண்வெளியில் புதைந்துகிடக்கும் ரகசியங்களை மேலும் ஆராய வல்லது. விஞ்ஞானிகள் இக்கருவியின் துணைகொண்டு, விண்வெளியில் இன்னொரு புமி இருக்கின்றதா? என்பதைக் கண்டுபிடிக்க முற்பட்டுள்ளனர். பல்வேறு உயிரினங்களைத் தன்னகத்தே கொண்ட மற்றொரு பு+மி பிரபஞ்சத்தில் இருக்கக் கூடும் என்ற உள் துாண்டலே இந்த முயற்சிக்குக் காரணம். இன்னொரு பு+மியைக் கண்டுபிடித்தல் என்பது மனித முயற்சியாகக் கண்டறியப்பட்டாலும், இந்த முயற்சிக்குரிய உள் துாண்டல் இறை சக்தியே ஆகும்.

அளவிடமுடியாத அற்புதங்களை உள்ளடக்கிப் படைக்கப்பட்ட இந்தப் பிரஞ்ச ரகசியங்களை வெளிப்படுத்த அந்த இறைசக்தி, தானாகிய மனிதனைத் துாண்டி விட்டுத் தேடச் செய்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்றது. மீண்டும் ஒரு முறை இந்த வரிகளைப் படித்துப் பாருங்கள். அப்பொழுதுதான் நான் சொல்வது என்ன என்பது விளங்கும். இறைசக்திதான் உயிராக உள்ளிருந்து இந்த உடலை இயக்கிக்கொண்டிருக்கின்றது என்ற உண்மையைப் புரிந்து கொண்டவர்களுக்கு இந்த விஞ்ஞான முன்னேற்றங்கள் எல்லாமே அதன் துாண்டலின் விளைவே என்பது நிச்சயம் புரியும்.

சாதாரண மக்கள் வீடு வாங்க வேண்டும்; கார் வாங்க வேணடும்; இந்த வீடு பிடிக்கவில்லை, வேறு பெரிய வீடாக வாங்கலாம்! என்றெல்லாம் செயல்படுவது, ‘மாற வேண்டும்” என்ற உந்தலினால் தான். வேலை மாற்றம், பதவி மாற்றம், இடமாற்றம், உணர்வு மாற்றம், என எல்லாமே உள் துாண்டலின் வெளிவிளைவே. மாற்றம் வேண்டும் என்ற உந்தல், இயற்கையின் நியதி.

ஆன்மாவை நான் என அறியாததால் தான் மேலை நாட்டினரிடையே இந்தத் தேடலும், உள் துாண்டலும், மாற்றத்தை மிக விரும்புகின்ற பரபரப்பான மனப்பான்மையும் அதிகமாக இருக்கின்றது. இவர்களிடம்தான் மன அழுத்தமும் கூடுதலாகக் காணப்படுகின்றது. மேலை நாட்டினரிடையே வெளி உலக இன்பங்களைத் தேடி ஓடுகின்ற தன்மை அதிகமாக இருப்பதன் காரணம் இப்போது விளங்குகின்றதா? உறவுகளிடம் ஒட்டாத தன்மையும், தன் சுகத்தையே பெரிதாக நினைத்துச் செயல்படும் விதமும் தான் இவர்களிடையே விவாகரத்துக்கள் அதிகம் நிகழ்வதற்கான உண்மையான காரணங்கள்.

தெற்காசிய நாடுகளின் வாழ்க்கை முறையே இறைசக்தியை முதன்மையாக வைத்து அமைக்கப்பட்டது ஆகும். அங்குள்ள மக்களுக்கு உடல் முக்கியமல்ல. உள்ளிருக்கும் இறைசக்தி வாழ்க்கை முறையிலேயே உணர்த்தப்படுவதால் அறநெறிகளாக வகுக்கப்பட்டவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அமைதி, நிதானம், சகிப்புத்தன்மை போன்றவற்றைத் தம் பண்புகளாக மேற் கொண்டு வாழ்ந்தனர். அது ஆன்மீக வாழ்க்கையாக அமைந்தது. எல்லாம் அவன் செயல்! என்னும் சொற்றொடரின் பொருளைப் புரிந்து நம் பெரியோர் வாழ்ந்தனர்.

ஆனால் அந்த நாடுகளின் இளைய தலைமுறைக்கு மேலை நாடுகளின் தாக்கம் அதிகரித்து விட்டதால், பழைய நெறி முறைகளை அறியத்தவறியதால், வாழ்க்கை முறை பெருமளவிற்கு உடல் சார்ந்ததாகவே ஆகிவிட்ட படியால், தற்போது உலக வாழ்க்கைத் தரமே வன்முறை சார்ந்ததாக மாறி விட்டது உண்மை. அகம் சார்ந்த அறநெறி வாழ்க்கை பின் தள்ளப்பட்டுப் புறம் சார்ந்த ஆடம்பர வாழ்க்கை, அவதி வாழ்க்கையாக மாறி அல்லற் படுத்துகின்றது. இதுவும் இறைசக்தியின் விளையாட்டே.

இந்நிலையில் மன அழுத்தத்தினால் உணர்ச்சிகளுக்கு ஆளாகி வாழ்க்கையைக் கொண்டு செல்லத் தெரியாமல் சிதைத்துக் கொள்பவர்களும் இருக்கின்றார்கள். தன் மன உளைச்சலுக்கு என்ன காரணம்? எனக்கு ஏன் இப்படி ஏற்படுகின்றது? நான் செய்த பிழை என்ன? இதிலிருந்து மீள்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு இப்போது என்ன தேவை? என்றெல்லாம் சிந்திக்கத் துவங்குபவர்கள் வெளி ஆரவாரங்களிலிருந்து விடுபட்டு முதலில் தனிமைப் படுகிறார்கள். சரியாகச் சிந்திப்பவர்கள் தனக்குத் தேவை அமைதியும், நிம்மதியுமே! என்பதை உணர்ந்து கொள்கின்றார்கள். ஆனால் பெரும்பாலோர் தனக்குள் தொலைந்து போய்விட்ட நிம்மதியைத் தன்னில் தேடாமல் வெளி உலகத்திலேயே தேடத் துவங்குகின்றபோது, தவறான பாதைகளைத் தேர்ந்தெடுத்து மேலும் துன்பங்களைத் துணையாக்கிக் கொண்டு விடுகின்றனர். அதன் விளைவுகன் விபரிதமாகி விடுகின்றன.

பொதுவாக நிம்மதியையும், அமைதியையும் தேட முற்படுபவர்கள் தற்காலிக வழிகளையே தேர்ந்தெடுக்கின்றனர். கோவிலுக்குச் சென்று தெய்வத்திடம் முறையிடுவது, பிரார்த்தனை செய்வது, கண்ணீர் விட்டு அழுது புலம்புவது, விரதம் இருப்பது. தனிமையில் அமர்ந்து தன் நிலையை நினைத்துத் துன்பத்தில் கரைந்து போவது என்றெல்லாம் செய்வார்கள். அல்லது கண்டவரிடம் புலம்பி அவர்கள் காட்டுகின்ற வழிகளிலெல்லாம் செயல்பட்டுப் பணத்தையும் செலவழித்து நிம்மதியையும் பெற முடியாமல் அவதிப்படுவார்கள். இந்நிலையில் அழிவுப்பாதைக்கான ஆயிரம் வழிகள் அவர்களுக்காகத் திறக்கப்படுகின்றன.

இந்த நிலையில்தான் தேடலின் முக்கியத்துவம் ஒருவருக்குத் தெளிவாக விளங்க வேண்டும். அங்கும் இங்கும் ஓடி எவ்விதப் பயனுமில்லை. ”இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே! அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே!” என்ற பாடல் தெரியும்தானே? முதலில் தொலைத்த இடத்தில் பொருளைத்தேட வேண்டும் என் நிம்மதி தொலைந்தது எங்கே? என் உள்ளே தான். அங்கே இருந்த நிம்மதி தான் இப்போது தொலைந்துவிட்டது. அதை உள்ளேயே தேடினால் தான் கிடைக்கும்! அப்படித் தேடுவதற்கு ஞானம் தேவை. அந்த ஞானத்தை அடைவதற்கு ஒரு குரு வழிகாட்ட வேண்டும். கண்ணில் படுபவர்களெல்லாம் நமக்குக் குருவல்ல.

என்னை எனக்கு உணர்த்த, எனக்கு ஞான வழிகாட்ட எனக்கு ஒரு குரு தேவை. எனக்குரிய குருவால்தான் எனக்கு வழிகாட்ட முடியும். அதற்கு நாம் உள் நோக்கி நம் பிரார்த்தனையை ஆழமாகச் செலுத்த வேண்டும். என்னை நோக்கி எனக்குள் நான் அழுது அழுது கேட்கின்ற போது, அது ஆழமுள்ளதாகவும் உண்மையான பிரார்த்தனையாகவும் அமைகின்றபோது, குரு கிடைத்து சரியான பாதையில் நமது தேடல் துவங்கப் படுகின்றது. அதற்கு நம்முள் இருக்கின்ற இறைசக்தியே கட்டாயம் சரியான பாதையை அமைத்துக் கொடுத்துக் கொண்டு செல்லும். ஆனால் இதற்கு உள் முகத் தேடலும், முழுமையான நம்பிக்கையும் தேவை. நிம்மதியையும், அமைதியையும் வெளியில் தேடிக்கொண்டிருப்பதை நிறுத்தி, இருக்கும் இடத்திலேயே உள் முகமாகத் தனக்குள் தேடுபவர்கள், தன்னை அறிகிறார்க்ள். தன்னை அறிந்தவர்கள் அமைதியையும் ஆனந்தத்தையும் பெறுகிறார்கள். நதி, கடலைச் சேர்ந்து விட்டால், பிறகு நதி வேறு, கடல் வேறு அல்ல!

Click here to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s