யாம் பெற்ற இன்பம் – 23

வாழ்க்கையில் அமைதியாக, ஆனந்தமாக வாழவேண்டும், மனப்போராட்டங்களில் சிக்கிக் கொள்ளாமல் நிம்மதியாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் எல்லாம் முதலில் அன்பைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னை ஆராய முற்பட்டு உண்மையை உணர்ந்தவர்கள் எல்லோரும் இந்த அன்பைப்பற்றி மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். அன்பே சிவம்! என்பது நாம் அறிந்த ஒன்று. அன்பே கடவுள் என்பதன் உருவமாற்றம் தான் அன்பே சிவம். சிவம் என்பது அன்பே என நாம் முன்பே அறிந்துள்ளோம். அன்புதான் இன்ப ஊற்று; அன்பு தான் உலக மகா சக்தி என்று அன்பைப் பற்றி புத்தர் பல அரிய கருத்துக்களைக் கூறியுள்ளார்.

ஆனால் இந்த அன்பின் முழுப்பொருளை நாம் அறிந்திருக்கிறோமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். எங்கும் பரவி நிறைந்திருக்கின்ற பரப்பிரம்மத்தின் வெளிப்பாடு கருணை. இறைப்பெருங்கருணையால்தான் பிரபஞ்சம் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்தக்கருணைதான் அன்பாகக் கசிந்து ஒன்றையொன்று ஈர்த்து, இழுத்துப்பிடித்துச் சரியாக இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது. நம்மைச் சுற்றி நிகழ்கின்ற எல்லாமே அன்பின் அடிப்படையில்தான் நிகழ்கின்றன. இயற்கை, அன்பின் பின்னணியில் தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

நாம் முன்பே இதைப்பற்றி ஆராய்ந்திருக்கின்றோம். அன்புவயப்பட்ட சூழ்நிலையில் அமைதியும், ஆனந்தமும், சுமுகமான செயல்பாடும் காணப்படும். அன்பு முரண்பட்ட நிலையிலோ மன வேறுபாடும், கொந்தளிப்பும் கோபமும், பகைமையும், வெறுப்பும் வெளிப்பட்டு அந்தச் சூழ்நிலையையே விஷமாக மாறச் செய்துவிடும். மனித மனக் கொந்தளிப்புதான் இயற்கையின் சீற்றம் என்பது மறுக்க முடியாத உண்மை! ஏனெனில் இறைவன் தனது படைப்புக்களை மிக அரிய திட்டத்துடன், ஒன்றுக்கொன்று அன்பின் அடிப்படையில் தொடர்பு கொண்டு இயங்கக் கூடியதாய் படைத்திருக்கின்றான். அந்த அன்பு வெளிப்படும் வரையில் ஆக்கமும், அமைதியும் என்றும், அன்பு மாறுகின்ற நிலையில் அழிவும், ஆபத்தும் என்றவரையறையையும் அவன் வகுத்து வைத்திருக்கிறான். இதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையென மறுக்கின்றீர்களா?

அன்பால் நிரம்பியிருக்கின்ற மனதால் இந்த உடல் இயக்கப்படுகின்ற வரை நமக்கு வியாதியில்லை. கொதிப்பு, தலைவலி, காய்ச்சல் போன்ற எதுவும் வராது. ஆனால் அதே மனம் பிழையாகச் சிந்தித்து அன்பு திரிகின்றபோது, பிறர் மீது குற்றம் காண்கின்றபோது மன நலம் கெடுகின்றது. உடல் நலம் குறைகின்றது. சூழ்நிலையே இறுக்கமாகி விடுகின்றது. ஆனால் இது ஒருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட விடயமல்ல. ஒருவர் மட்டுமே அன்பு மயமாக இயங்கிக் கொண்டிருந்தால் மன நிம்மதி கிடைக்காது.

நான் நல்லவன்; அன்பு மயமானவன்; அயலாரை நேசிப்பவன்; ஆனால் எனக்கு ஒரு சிறிதும் நிம்மதியோ, நிறைவோ இருக்கவில்லையே! என்று அங்கலாய்ப்பவர் தான் ஆயிரம் பேர் இருக்கின்றோம். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அன்பு செலுத்துவது என்பது ஒருவர் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. குடும்பம் சம்பந்தப்பட்டது. உறவுகள் சம்பந்தப்பட்டது. சமுதாயம் சம்பந்தப்பட்டது. அன்பின் அலைகள் இப்படி விரிந்து கொண்டே போக வேண்டியது. ஆனால், இறைவனின் திட்டமோ இங்குதான் தன் விளையாட்டை நிகழ்த்துவதாக வெளிப்படுகின்றது. எப்படி என்கிறீர்களா?

தன் படைப்புக்கள் அனைத்திலும் கருணையை உயிராக வைத்து, அன்பை உயிரோட்டமாக வைத்த இறைவன், கருணையான தன்னை ஒளித்துக் கொண்டு, அன்பென்ற ஜீவனை அறியாமையுடன் கலந்து இயங்கச் செய்கின்றான். தான் கருணை மயமானவன், தன் இயல்பு அன்பு என்பதை அறியாத படைப்பாகிய நாம், கர்மா என்று சொல்லப்படுகின்ற பதிவுகளை அடிப்படைச் சொத்தாக நம்முள் வைத்துக்கொண்டு அதற்கேற்றபடி சுயநலமாக அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்று பிரித்துப் பிரித்துப் பார்க்கப் பழகிக்கொண்டு அதற்கேற்றாற்போல் நடப்பதே வாழ்க்கை என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

அன்பு, காதல் போன்ற வார்த்தைகள் எல்லாமே பிழையாகப் புரிந்துகொண்டு கையாளப் படுகின்றன. அன்பு என்பது இறைச்சக்தி என்று நாம் மேலே பார்த்தோம். ஆனால் இந்த அன்பைப் பற்றி போதிப்பவர்களே எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பார்த்தால், அங்குச் சுயநலமும், குறுகியமனப் போக்கும் பெருமளவில் வெளிப்படுவதைக் காண முடியும். தன்னைச் சுற்றியுள்ள அனைத்து மனிதர்களையும் கருணை என்ற ஒரே பார்வையால் பார்க்கக் கூடியவர்கள் மட்டுமே மகான்கள் அல்லது தெய்வப் பிறவிகள் ஆகின்றார்கள். அன்பின் முழுவடிவம் தாய் என்று சொல்கின்றோம். ஆனால் அந்தத்தாய் கூடத் தன் குழந்தை, பிறர் குழந்தை என்று பாகுபடுத்திப்பார்க்கின்ற நிலையை நாம் கண் கூடாகக் காண்கின்றோமே!

நாம் அன்றாடம் செய்கின்ற எல்லாச் செயல்களிலுமே பின் புலமாக இருந்து செயல்படுவது அன்புதான் என்பதை நம்மில் எத்தனைபேர் புரிந்து வைத்திருக்கின்றோம்? காலையில் சூரியன் உதித்து ஒளிதந்து நம்மை இயக்கத்தில் ஆழ்த்தி வாழ வைப்பதும், இரவில் சந்திரன் வந்து ஒளி தந்து நம்மை உறக்கத்தில் ஆழ்த்தி ஓய்வு பெற வைப்பதும் அன்பின் அடிப்படையில் நடப்பவையே. காற்று வந்து நம்மை வருடி சுகத்தைத் தருவதும் கூட அன்பினாலேயே. அதனால் தான் இயங்குவதும் உறங்குவதும், சுகத்தை அனுபவிப்பதும் நமக்கு இன்பத்தைத் தருகின்றன.

இந்த அன்பு நம்மிடமிருந்தும் வௌ்ளமாகப் பெருக்கெடுக்க வேண்டும். எனது என்ற சுயநலமாக வெளிப்படும் வரை இந்த அன்பு முழுமை பெறாது. சுய நலம் துறந்து பொதுவான ஒரு பெருமிதமாக இந்த அன்பு வரையறையின்றித் தொடர்ந்து வெளிப்படவேண்டும். யாரென்றால் என்ன, அல்லது எதுவென்றால் என்ன? அன்பெனும் உணர்வால் அணுகுகின்றபோது, அந்த அன்பைப் புரிந்து கொண்ட பிறகு அங்கிருந்து தங்குதடையற்று அது பெருகும். இது உண்மை.

அன்பு மயமாக வாழ்பவர்களைப்பற்றி பிறருக்கு எதுவுமே ஆரம்பத்தில் சரியாகப் புரியாது. பயமும், சந்தேகமும், நடிக்கிறாரோ என்ற எண்ணமும்தான் அவர்களுக்கு முதலில் ஏற்படும். ஆனால் தொடர்ந்த அன்பின் வெளிப்பாடும், சுயநலமற்ற செயல்பாடும் தானாகவே அவர்களின் பயத்தையும் சந்தேகத்தையும் போக்கும். அவர்களைச் சொல்லிக்குற்றமில்லை. துhயகாற்றையோ, துhய தண்ணீரையோ, கலப்படமற்ற உணவுப் பொருள்களையோ அறியாமல் வாழ்கின்றவர்கள் துhய்மையான அன்பைப்பற்றி மட்டும் எங்கே அறிந்திருக்கப்போகிறார்கள்?

சின்னக் குழந்தையாக இருக்கும்போதே, “இந்தா! அவனுக்குக் கொடுக்காதே! நீ மட்டும் சாப்பிடு!” என்று சொல்லித்தானே வளர்க்கின்றனர். எனக்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை! அடுத்த வீட்டுக்காரனுக்கு ஒரு கண் அவிந்தால் சாp! என்று பிரார்த்தித்த கதை உங்களுக்குத் தொpயும் தானே!

இவையெல்லாம் அறியாமையால் தான் ஏற்படுகின்றன. எதை அறியாததால் என்று கேட்பீர்கள். நம்மைப்பற்றி அறியாததால், நம் வாழ்க்கையின் உண்மை பற்றி அறியாததால், உண்மையான உண்மையைப்பற்றி அறியாததால்தான் முழுமையான அன்பின் உயர்வைப் பற்றியும் நாம் அறியவில்லை. அது என்ன, உண்மையான உண்மை? என்று கேட்கிறீர்களா? இந்த உலகத்தில் உள்ள எல்லாமே வெவ்வேறாகத் தொpந்தாலும், உண்மையில் எல்லாமே ஒன்றுதான். ஒன்றுதான் பத்தாக, நுhறாகப் பலகோடிப் பிரிவுகளாகக் காட்சியளிக்கிறது. உருவங்களும், பெயர்களும், செயல்களும், மனப்பான்மைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும், உண்மையில் எல்லாமே ஒன்றின் பலவாறான தோற்றங்களே.

படைப்பின் விசித்திரத்தால் பலவிதமான வேறுபட்ட குணங்களுடன் மனிதர்கள் நடந்து கொண்டாலும், மனிதரின் அடித்தளமான ஆத்மா என்பது ஒன்றுதான். உலகில் உள்ள எல்லாவற்றையும் படைத்து இயக்கிக்கொண்டிருக்கின்ற சொல்லுதற்காpய மாபெரும் சக்தி தான் ஆத்மாவாக, உயிராக நம் ஒவ்வொருவாpன் உள்ளேயும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அந்த ஆத்மாவின் தன்மை கருணை. அதன் கருணைதான் நம்மிலிருந்து அன்பாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த அன்பு எல்லோரிடமும் இருந்தாலும், அது வெளிப்படுகின்றவிதம் தான் மாறுபட்டு விடுகின்றது.

பொய்யான வாழ்க்கையை உண்மை என்று நினைத்து, இதில் ஏற்படும் நிகழ்ச்சிகளில் சிக்கி அவற்றில் நம் விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்திக்கொண்டு வாழ்வது தான் சரி என்று பிழையாகப் புரிந்து கொண்டதால்தான் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, உறவுகள் முரண்படுகின்ற நிலை உண்டாகின்றது. ஆனால் எழுதும் போதும், படிக்கும் போதும் சாpதான் என்று தொpகின்ற இது இறைவனின் குறும்புத்தனமான விளையாட்டினால் உடனே மறந்துபோய் விடுகின்றது. பிறகு எழுதுகின்ற நானே சூழ்நிலையில் சிக்கிக் கோப, தாபங்களிலோ, பிணக்குகளிலோ பிறரின் செயல்களில் குற்றம் கண்டு வருந்துவதோ ஏற்பட்டு விடுகின்றது. இதுதான் இந்தவாழ்க்கையின் வினோதம்.

இப்படிச் சூழ்நிலையால் பாதிப்படைகின்ற நேரங்களில் நிதானத்தைக் கடைப்பிடித்து, புத்தியால் ஆராய்ந்து யோசித்து, நடந்தவற்றை அப்படியே போக விட்டுவிட்டு, அதையே நினைத்து நினைத்துப் பகையை வளர்த்துக் கொள்ளாமல், அந்த நேரத்தில் அப்படித் தான் நடக்க வேண்டியிருந்தது. எனவே நான் அப்படி நடந்துகொண்டேன். அதோடு அது முடிந்தது. இனி அதை அப்படியே விட்டுவிட்டு, மீண்டும் இயல்பாக அதாவது பழைய அன்பு நிலையிலேயே தொடர்ந்து பழக வேண்டும் என்று முடிவெடுத்தால், அது ஆன்ம முன்னேற்றத்திற்கு நம்மைக் கொண்டு செல்லும்.

வந்து பிறந்து விட்டோம். வாழ்ந்தே ஆக வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு மிக மிகத்துன்பமயமான சூழ்நிலைகள் தான் வாழ்க்கையாகத் தரப்பட்டிருக்கிறது. உறவுகளால் சுமையும், துன்பமும், முரண்பாடுகளும் தான் அதிகமாக இருக்கின்றன. பொறுமையும், சகிப்புத்தன்மையும், இப்படிச் சில கட்டுரைகளைப் படிப்பதால் ஏற்படுகின்ற அறிவுத் தெளிவும், சூழ்நிலையைச் சரிக்கட்டிக்கொண்டு போகின்ற தன்மையைத் தந்திருக்கின்றன என்றாலும், உள்ளத்தில் மன அழுத்தமும், மன உளைச்சலும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. மூச்சுத் திணறுவது போல் நெருக்குகின்ற துயரச் சூழ்நிலையிலிருந்து விடுபடுவது எவ்வாறு? என்ற கேள்விதான் மிகப்பலாpடையே வெளியில் சொல்லப்படாமல் உள்ளே உறுத்துகின்ற கேள்வியாக இருக்கின்றது.

எனக்குள் இருக்கின்ற “நான்” என்பது அறியாமையுடன் செயல்படுகின்ற வரை இந்தப் போராட்டம் தொடரும். என் கையில் எதுவுமே இல்லை. எல்லாம் படைத்தவனின் திருவிளையாடல். என் பங்கு வாழ்வது மட்டுமே! என்பதைப் புரிந்துகொண்டு, வருவது வரட்டும்! போவது போகட்டும்! அவன் கருணையையும், என்னில் பெருகும் சுயநலமற்ற, அளவிடமுடியாத அன்பு என்னும் அமுதத்தையும் பாகுபாடில்லாமல் அனைவர்க்கும் வழங்குவேன்! பிறர் என்னிடம் எப்படி நடந்து கொண்டாலும் பரவாயில்லை நான் அவர்களை அன்பு என்னும் கண்ணோட்டத்திலேயே பார்ப்பேன்! என்ற நிலையில், பிறர் மனம் புண்படாமல் தக்க நெறிமுறையில், சரியான அறவழியில், கௌரவமாகவும், ஆசையின்றியும், அடக்கத்துடனும், செய்வதைச் சரி, பிழை பார்த்துச் செய்து கொண்டே போகின்றவர்களுக்கு இன்றைய வாழ்க்கை சகித்துக்கொள்ள முடியாத நிலையில் அமைந்திருந்தாலும், நாளைய வாழ்க்கை இறைவனின் கருணையால் உயர்ந்த தரத்தைக் கொண்டதாக மாறும். அந்நிலையில் ஞானிகள் அனுபவிக்கின்ற அமைதியையும், ஆனந்தத்தையும் சாதாரண மனிதராகிய நாமும் அனுபவிக்கலாம். அதுதான் இந்தப் பிறவி எடுத்து வாழ்கின்ற நமக்கு “யாம் பெற்ற இன்பமாக” வந்து சேரும்.

அன்பைப் பொதுவாக்கி, அனைவருக்கும் அள்ளி வழங்கி, அறநெறியில் அமைதியும் நிறைவுமாக வாழ்வோம். இதற்கு இறைவன் அருள் புரிவான்!

Click here to view this article in pdf

Advertisements

One thought on “யாம் பெற்ற இன்பம் – 23

  1. Read your ‘ yaam petra inbam’ . It is clarifying how to live joyfully and peasefully with love . It is to be read by everyone ro understand life.
    with regrds,
    M. Vaithilingan
    Kurinji Nagar, Pondicherry,
    INDIA.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s