யாம் பெற்ற இன்பம் – 22

எண்ணமும், உணர்வும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பது தான் வாழ்க்கை. எண்ணங்களின் எழுச்சி அதிகரிக்கின்ற அளவிற்கு உணர்வுகளும் அதிகரிக்கும். ஒரு சுழ்நிலையில் சரியென்று படுகின்ற ஓர் எண்ணம், மற்றொரு தருணத்தில் சரியான பிழையாக உணரப்பட்டு மற்றொரு எண்ணத்தை ஏற்படுத்தி வருத்தும். மனதின் போக்கும், அறிவின் தெளிவும் எண்ணங்களை மாற்றி மாற்றித் தந்துகொண்டே போவதுதான் இந்த வாழ்க்கையாகப் போய்க் கொண்டிருக்கின்றது. மன எழுச்சியால் செயல்படும்போது உணர்ச்சிகளால் ஆளப்பட்டு இயங்குவதும், அறிவின் துாண்டலால் செயல்படும் போது சற்றே நின்று நிதானித்து, சரி பிழை பார்த்துச் செயல்படுவதும் மனித இயல்பு.

நமக்கு முன் ஒரு சூழ்நிலை உருவாகின்றபோது, அப்பொழுது நம் மனம் பழைய நிகழ்ச்சிகளை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவந்து அந்த பாதிப்புக்களின் பின்னணியில் இந்த நிகழ்வையும் ஒப்பிட்டு, எண்ணங்களை வளர்க்கின்ற போது, உணர்ச்சிகள் நம்மை ஆட்டிப் படைக்கின்றன. எண்ணமும், உணர்ச்சியும் ஒன்று சேர்ந்து சூழ்நிலையைச் சரியாகக் கையாள வகையின்றிப் பாழ்படுத்தி விடுகின்றன. உறவாகவும், நட்பாகவும் இருந்த மனநிலை மாறிப் பகையை உருவாக்குகின்ற விதத்தில் வார்த்தைகளைத் தவறாகப் பயன்படுத்த வைக்கின்றன. அதனால் அங்கு சம்பந்தப்படும் இரு மனங்களும் பாதிக்கப்படுகின்றன. ஈகோ அடி வாங்கிச் சுருண்டு போய் விடுகின்றது. பிறகு அங்குக் குற்ற உணர்வும், மனவேதனையும்தான் மிஞ்சுகின்றது. மீண்டும் அந்த உறவு நிலை சீர்ப்பட மிக நீண்ட நாட்களாகி விடுகின்றன. அல்லது பகையும் வெறுப்பும். வளர்ந்து கொண்டே போக இந்த நிகழ்வும் ஒருகாரணமாகி விடுகின்றது.

இதற்கு மாறாக விழிப்புணர்வுடன் அந்தச் சூழ்நிலையைக் கையாளுகின்ற போது, அங்குச் சூழ்நிலை பாழ்படுவது தடுக்கப்படுகின்றது. நிகழ்ச்சிக்கு எதிரொலிக்காமல் அறிவு வழி சென்று நிதானித்துச் செயல்படுவதால் சரியான விதத்தில் நடந்து கொள்ளக் கூடிய தன்மை நம்மில் ஏற்படுகின்றது. வார்த்தைகளைக் கொதித்துக் கொட்டாமல் நிறுத்தி நிதானமாகப் பேச முடிகின்றது. விழிப்புணர்வு என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு தேவையான ஒன்று என்பது பூரிகின்றதா இப்போது?

ஆன்மாவை அடைகின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆன்மீக சாதகர்கள் இப்படி ஒவ்வொரு கணமும் தம்மை உற்றுநோக்கிக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்போது நம்மை நாமே ஒரு சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வோம்.

நீங்கள் தினந்தோறும் காலையில் எழுந்ததிலிருந்து, மீண்டும் இரவு படுக்கைக்குப் போகின்றவரை செய்கின்ற ஒவ்வொரு செயலையும் மிகக் கவனமாக உற்று நோக்கி, எல்லாம் முறைப்படி சரியாகச் செய்கின்றீர்களா என்று சிந்தித்துப் பாருங்கள்! மிகச் சாதாரணமாக இதற்கு ஆம்! என்று பதில் சொல்லக்கூடாது. படுக்கையிலிருந்து எழும் நொடியிலிருந்து ஒவ்வொரு சின்னச் செயலையும் ஆராய வேண்டும். உடலில் உணர்வு ஏற்பட்டுக் கண் விழித்ததும் எத்தனை பேர் உடனே சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்துவிடுவீர்கள்? இன்னும் சற்று நேரம் துாங்கலாமே என்று எழ மனமின்றிப் புரள்பவர்கள் எத்தனை பேர்? எழுந்ததுமே பலவித எண்ணங்கள் வந்து சூழ்ந்து கொள்ளப் போர்வையை மடித்து வைக்கக்கூடத் தோன்றாமல் பாய்ந்து ஓடுபவர்கள் எத்தனை பேர்? எழுந்து அமர்ந்து கண்களை மூடி ஒரு சில நிமிடங்கள் இறைசக்தியை அல்லது ஆத்மாவை வணங்கி எழுந்து படுக்கையைச் சரி செய்துவிட்டுப் பல்துலக்கச் செல்பவர்கள் யார் யார்?

பல் துலக்குகின்ற போது வேறு எந்தச் சிந்தனையுமின்றி முழு கவனைத்துடன் அச்செயலைச் செய்வீர்களா? உங்கள் குளியல் முழுமையாக நிகழ்கின்றதா? அல்லது மனம் எதையோ திட்டமிட்டுக் கொண்டிருக்க இயந்திரத்தனமாக நடைபெறுகின்றதா? நீங்கள் உண்ணும் உணவை அமைதியாக உட்கார்ந்து மனம் தோய்ந்து ரசித்துச் சாப்பிட முடிகின்றதா? தொலைக்காட்சியிலோ, ஏதோ ஒரு புத்தகத்திலோ தன்னைப் புதைத்துக் கொள்ளாமல் உணவும் தானுமாக இருந்து ருசியுணர்ந்து சாப்பிடுவர் எத்தனை பேர்?

விழிப்புணர்வுடன் முழுமையாக எல்லா அலுவலையும் முடித்துவிட்ட திருப்தியுடன் ஒரு நாளின் முடிவில் நிறைவான நிம்மதியுடன் எதையும் யோசிக்காமல் இரவு படுக்கைகுப் போக முடிகிறதா? அதைச் செய்யவில்லையே! இதை முடிக்கவில்லையே! இவையெல்லாம் முடிக்கப்படாமல் அரைகுறையாக நிற்கின்றதே! என்ற பரபரப்பும், ஆதங்கமும் படுக்கும்போது உங்களுக்கு ஏற்படுகின்றதா? படுத்தவுடனேயே பட்டென்று சில நிமிடங்களில் துாங்கி விடுபவர்கள் எத்தனை பேர்? ஏதோதோ எண்ணங்களும், கவலைகளும், நாளைய திட்டங்களும் சிந்தையைக் குழப்ப, உறக்கமின்றி நீண்ட நேரம் படுக்கையில் புரண்டுத் தவிப்பவர்கள் எத்தனை பேர்?

இப்படி ஒவ்வொன்றையும் நுட்பமாகக் கவனிக்கத் துவங்கும் போது தான் நம்மை நாமே சரியாக உற்று நோக்கத் துவங்குகின்றோம். இப்படித் தொடர்ந்து கவனிக்கின்ற போது தான் நாம் விடுகின்ற பிழைகள், செய்கின்ற தவறுகள், அரைகுறையாக விடப்படுகின்ற பல செயல்கள், எல்லாம் நமக்குப் புலப்படுகின்றன. முழு விழிப்புணர்வுடன் இக்குறைகளை நாம் திருத்த முற்படும்போது, நமது வாழ்க்கை சீர் பெறுகின்றது. நாமும் முன்னேறுகின்றோம்.

இதனை சொல்லும்போது கேட்பதற்குக் கடினமாகத் தோன்றும். ஆனால் முழு ஈடுபாட்டுடன் தொடர்ந்து ஒவ்வொரு செயலையும் முழுமையாகச் செய்யப் பழகத் துவங்கின்ற போது, எல்லாம் சிறப்பாக மாறுவதை நாமே கவனிக்கலாம். இப்படிச் சரியாகச் செய்யப்பழகுவதன் வாயிலாக ஒரு நிறைவும், தொடர்ந்த அமைதித்தன்மையும் நம்முள் ஏற்படுவதையும் உணரமுடியும். தொடர்ந்து நமது செயல்களை ஒவ்வொன்றாக மனித நிலையிலிருந்து, ஆன்மீக நிலைக்கு மாற்றுகின்றபோது நமது உணர்வுக்கும் எண்ணத்திற்கும் பின்னணியில் இருந்து நம்மை இயக்குவது உயிராகிய அந்த இறைசக்தியே என்பது புரிந்து, எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் நடக்கும். ஆத்மா இயக்குகிறது; நான் செயல்படுகின்றேன்! என்ற உணர்வு நம்மில் எப்போதும் இருக்க வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்த விழிப்புணர்வில் நாம் இருக்கின்றபோது, நான் உணர்வு பூர்வமானவன்; ஆத்மாவும் உணர்வு பூர்வமானது என்பதும், இரண்டுமே ஒன்றுதான், எவ்வித பேதமுமில்லை என்பதும் தொpயும். இப்படித்தன்னை ஆத்மாவாக உணர்ந்தவர்களுக்குப் பயம் என்பதே இருக்காது. எது வரினும் சரியே!

(தொடரும்)

click here to view/print this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s