யாம் பெற்ற இன்பம் – 19

உலக நடைமுறையில் வாழ்க்கை என்பது ஏதோ ஒன்றை அடைவது என்ற பொருளில் தான் கருதப்படுகிறது. ஆனால் ஏதோ ஒன்றை அடைவதற்காகச் செய்கின்ற முயற்சிதான் இந்த வாழ்க்கையா? ஒன்றை அடைவதுதான் வாழ்க்கை என்று பார்த்தால் திருப்தி ஏற்படுமா? ஒன்றை அடைந்தபின், மனம் மற்றொன்றை நாடி ஓடாதா? எதை அடைய முயற்சித்தாலும், அதைப் பெற்றதும் நாம் அடைவது மகிழ்ச்சியையும், திருப்தியையும் தான். ஆனால் சற்று நேரத்தில் அந்த மகிழ்ச்சியும், திருப்தியும் மறைந்து பிறகு மனம் வேறு ஒரு இலக்கை நாடுகிறது. எதை நாடினாலும் அதன் மூலம் நாம் அடைய விரும்புவது மீண்டும் இந்த மகிழ்ச்சியையும், திருப்தியையுமே. இவை ஏற்கனவே நம்மிடம் தான் உள்ளன என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டுவிட்டால், பிறகு இந்தத் தேடல் தொடருமா? மேலும் எதுவும் நாம் விரும்பியபடி அப்படியே கிடைத்துவிடாது. அந்நிலையில் நம் மனம் அடையும் துன்பமும் சோர்வும் நம்மைப் பலவீனப்படுத்தும்.

அனுமானத்தின் அடிப்படையில் தேடிக் கிடைத்த அறிவால் ஆத்மா எனக்குள் இருக்கிறது என்ற உண்மை நமக்குக் கிடைத்ததா? அல்லது ஆத்மா எனக்குள் இருக்கிறது என்பது நம்மால் உணர்ந்துகொள்ளப்பட்ட அனுபவமா? என்று சிறிது ஆராய்வோம்.

ஓர் இடத்தில் புகை வந்தால் அங்கு நெருப்பு இருக்கிறது என்று கூறுவது அனுமானம். அதுபோல், இந்த உலகத்தையும் இதில் உள்ள ஜீவராசிகளையும் இயங்கச் செய்வது, இவையெல்லாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கின்ற ஒரு மாபெரும் சக்தியாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில் இவை இப்படி இயங்குவதற்கு ஒரு சக்தி தேவை. எனவே படைத்தவன் இருக்கவேண்டும் என்பது அனுமானத்தால் ஏற்படும் அறிவு. ஆனால் இந்த அறிவு மட்டத்தில் தான் சிக்கல் ஏற்படும். ஏனெனில் இது கண்ணுக்குத் தெரியாதது. கண்ணுக்குத் தெரிந்ததை வைத்துக்கொண்டு, கண்ணுக்குத் தெரியாததை நாம் அறிகின்றோமா? அல்லது அனைத்துப் படைப்புக்களுக்கும் காரணமானவன் தான் எனக்குள் ஆத்மாவாக இருக்கின்றான் என அனுபவப்பூர்வமாக உணர்கின்றோமா?

நமது தேடலுக்கான வழியைச் சமயங்கள் நமக்குக் காட்டித்தந்திருக்கின்றன. அந்த அடிப்படையில் மகான்கள், ஞானிகள் காட்டித்தந்த வழியில் நாம் இதைத் தேடி முயன்றாலும், நமது இந்த அறிவால் பெற்ற அனுபவம் தான் ஆத்மாவை நமக்கு உணர்த்தியிருக்கின்றது.

உள் தான் வெளியை நிர்ணயிப்பது என்று உங்களால் சொல்ல முடியுமா? எனது உள் உணர்வு தான் வெளியை வடிவமைக்கின்றது. ஆனால் அப்படி உள்ளம் காட்டுகின்ற விதத்தில் நாம் வாழ்கின்றோமா? வெளி வாழ்க்கையின் பகட்டையும், சமுதாயப்பார்வைக்கு ஈடுகொடுக்க விரும்பும் ஈகோவையும் இன்னும் நாம் வைத்துக்கொண்டிருந்தால், உள் உணர்வு காட்டும் வழியில் வாழவில்லை; வெளி உலகம் விரும்புகின்ற விதத்தில்தான் இன்னும் வாழ்ந்துகொண்டு, எதிர்மறைக் குணங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். இதுபொய்யான வாழ்க்கை.

இப்படிப் பொய்யான வாழ்க்கையை வாழ்பவர்கள்; தன்னுடைய வாழ்க்கையை இந்தச்சமுதாயம் தான் தீர்மானிக்கின்றது என்ற பிழையான கருத்தில் வாழ்ந்து, தம் வாழ்க்கையில் பிழைவிட நேர்ந்தால், சமுதாய மதிப்பைப் பெரிதாக நினைத்துத் தற்கொலை செய்து விடுகின்றார்கள். சமுதாயம் பன்னெடுங்காலமாக ஏதேதோ சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றது. அது சொல்வதெல்லாம் நுாற்றுக்கு நுாறு சரி என்பதல்ல. அப்படிச் சொல்பவர் யாரென்று பார்த்தால், அவர்களே சொல்வது ஒன்று – செய்வது மற்றொன்று என இரட்டை வாழ்க்கை வாழ்வது தெரியவரும்.
சமுதாயம் சொல்லி வைத்தவை எல்லாம் காலத்திற்குக் காலம் மாறிக் கொண்டு வருகின்ற நிலையில், இன்னும் சமுதாயம் என்ன சொல்லும்? நாலு பேர் என்ன சொல்வார்கள்? என்றெல்லாம் நினைத்துக் குழம்பி, செயல்படத் தயங்குவது சரியல்ல. நாம் எதைச் செய்வதென்றாலும் நன்கு ஆராய்ந்து பார்த்துத் தர்ம வழி மீறாத விதத்தில், நம் மன நிம்மதி பாதிக்காத விதத்தில் செய்ய முயன்றால், அதில் பிறகுக் குழப்பம் இருக்காது. அதைப் பற்றிய பயமோ, சந்தேகமோ, பிறர் என்ன சொல்வார்கள்? என்ற கவலையோ ஏற்படாது.

நாம் இந்த பூமிக்கு வருவது இது முதல்தடவையல்ல. முன்பும் எத்தனையோ முறை பிறந்திருக்கின்றோம். இப்போதும் பிறந்திருக்கின்றோம். இனியும் பிறக்கக்கூடாது; மீண்டும் மீண்டும் இப்பிறவிச் சுழற்சியில் சிக்கக் கூடாது என்பதற்காகத்தான் இப்போது ஞான உபதேசத்தின் மூலம் ஆன்மாவைப் பற்றி, அதாவது நம்மைப் பற்றி அறிய முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஆதமாதான் நானாக இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு அதிலேயே தோய்ந்து வாழ்ந்தால், பிறகு மீண்டும் இங்கு வரத் தேவையில்லை. பிறவி முற்றுப்பெற்று விடும்.

ஆன்மாவை உணர்ந்தவனால் அதர்ம வழியில் இனி வாழ முடியாது. நமது தொடர்ந்த பலபிறவிகளின் முயற்சியால் தான் இப்பிறவியில் இதைப்பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடிந்தது. ஆன்மீக அடிப்படையில் அமைந்த இந்து தர்ம வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடித்து வந்தவர்களால் தான் இதனை நன்றாகப் புரிந்து கொள்ளமுடியும். இதற்குத் தர்மம் மட்டும்தான் அடிப்படை. மாறாக சமயம், வழிபாட்டு முறைகள், கண்மூடித்தனமான பழக்க வழக்கங்களிலேயே மூழ்கிக் கிடப்பவர்களால், பழங்கதை பேசிப் பொழுதைக் கழிப்பவர்களால் இதைக் கண்டுணர முடியாது.

ஒரு செயலைத் திட்டமிட்டு அதை நிறைவேற்ற முயற்சி செய்து, அதில் முழுமையாக ஈடுபட்டுக் கவனித்துச் செயல்படும்போது, ஆத்மா அதன் வழியாக வெளிப்பட்டு அச்செயலைச் சிறப்பாக நிறைவேற்றித்தருகின்றது. ஆனால் இது நமக்குப் புரிவதில்லை. ஏதோ நாம் செயல்பட்ட விதத்தால் தான் அந்த வெற்றி கிடைத்தது என்றே நினைக்கின்றோம். ஆனால் உணமையில் ஆத்மா தான் இச்செயலில் வெளிப்பட்டுப் பாய்ந்து, அதனை ஒளிபெறவைத்து, வெற்றியாக்குகின்றது.

கவனத்தைக் குவித்து முழு கவனமாக அதில் தோய்ந்து ஆத்மாவை வெளிப்படச் செய்வதன் மூலம் எந்தச் செயலையும் வெற்றியடையச் செய்ய முடியும். உற்றுநோக்கிக் கவனத்தை முழுமையாகச் செலுத்தினால்தான் அது நிறைவேறும். அலட்சியமாக, அக்கறையின்றிச் செயல்பட்டால் ஆத்மா உதவி செய்யாது. வெற்றியும் கிடைக்காது. இதுதான் வெற்றியின் ரகசியம்.

இத்தனைகோடி மந்திரம் ஜெபித்தால் இந்தக் காரியம் சித்தி அடையும் என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம. இப்படிச் சொல்லப்படுவது ஏன்? ஓர் உணர்வாக, ஓர் முகமாக எனது சக்தியை ஒன்றுபடுத்தி, ஒரே குறிக்கோளாக அந்த மந்திரத்தைச் சொல்கின்றபோது, அதிர்வலைகளாகப் பரவி நிற்கின்ற சக்தி, எனது ஆத்ம சக்தியால் இழுக்கப்படுகின்றது. இந்தத் தொடர்பால் எனது எண்ணம் நிறைவேறுகின்றது. ஆத்ம சக்தி பிரபஞ்ச சக்தியுடன்; இணைகின்றபோது, எனக்குத் தேவையான விளைவு தானாகவே நிகழ்கின்றது. இதுதான் உண்மை. இப்படி உலகத்திலுள்ள சக்தியை என்னால் இழுத்து வசப்படுத்த முடியும். ஆனால் எதிர்பார்ப்புடன், கற்பனையுடன், பலனைக் கருதி ஒன்றைச் செய்தால், எனது கவனம் சிதறும். அதனால் காரியம் நிறைவேறாமல் போய்விடுகின்றது. எனது எதிர்பார்ப்பு திரண்டெழுகின்ற சக்தியைச் சிதற வைத்து ஏமாற்றமடையச் செய்து விடுகின்றது.

என்னை என்னிடம் என்னை நோக்கிக் தொடர்ந்து இழுக்கச் செய்கின்ற முயற்சிகள் தான் நான் தொடர்ந்து மனமுருகிச் செய்கின்ற பிரார்த்தனைகள, வழிபாடுகள், நேர்த்திக்கடன்கள், போன்றவை எல்லாம். முழுப்பெரும் ஆற்றலுடன் என்னை நான் இணைப்பதற்கு நமது சமயம் சொல்லித்தந்த வழிமுறைகள் இவை. இதையே அறிவியல் பூர்வமாக விளக்குகின்றபோது இப்படிக் கூறலாம்.

ஸாட்டிலைட் டிவிக்குக் (satellite tv) குவாலிட்டியும், ஸ்ட்ரென்த்தும் (Quality/strength) வேண்டும். என் இயக்கத்திற்கும் ஆத்ம பலமும், ஆத்மதரமும் தேவை. எனது ஆத்மதரம் என்பது கருணை. என்னிடம் ஈகோ என்னும் பலம் இருக்கிறதே தவிர, கருணை என்னும் ஆத்மபலம் இல்லை. இருக்கின்ற கருணையையும் அன்பாக மாற்றி, வேண்டியவர்களுக்கு மட்டும் தந்து கொணடிருக்கிறேனேயன்றி, அந்தக்கருணையை எல்லோருக்குமாக வெளிப்படுத்துவதே இல்லை. கருணை வெளிப்படாவிட்டால், வாழ்க்கை முற்றுப்பெறாது. எனது ஆன்மீக முயற்சி கருணைமயமாக நான் மாறும் வரை முழுமை அடையாது.

நமது கவனம் நம்மில் இருந்தால் எங்கும் நிறைந்திருக்கினற பிரம்மம் எனக்குள்ளிருந்து தன்னை வெளிப்படுத்தும். நான் செலுத்துகின்ற கவனத்தால் எந்த விஷயமும் கருப்பொருளிலிருந்து, துகள்களாகி, ஓன்று சேர்ந்து வடிவம் எடுக்கும். சிறிது சிறிதாக முழுமை பெறும். நாம் கவனம் செலுத்துகின்ற எந்தத் துறையாக இருந்தாலும் அது வெற்றியாக அமையும். கவனம் என்று நாம் செலுத்துவது சக்திக்குவிப்பு. எனது சக்தி ஒன்றின் மீது தொடர்ந்து குவிக்கப்படுகின்றபோது அது வசப்படுகின்றது. அது வெற்றியாக மாறுகின்றது.

Click here to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s