யாம் பெற்ற இன்பம் – 18

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் “அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்!” என இளங்கோ அடிகள் வலியுறுத்தினார். குடிமக்களைக் காப்பாற்றி, நீதி காக்க வேண்டிய பாண்டிய மன்னன் அவசரப்பட்டதால், ஒரு மா நகரமே தீக்கிரையாக நேரிட்டது.

தர்மத்தைக் கடைப்பிடித்துச் செயல்படுபவர்களைத் தர்மம் காப்பாற்றும்! என ஸ்ரீகிருஷ்ணர், பகவத்கீதையில் தெளிவாகக் கூறினார். அஹிம்சை முறையில் அறப்போரைத் தொடர்ந்து நடத்தியதால் தான், இன்று உலக அளவில் மகாத்மா காந்தியும், நெல்சன் மண்டேலாவும் மதித்துப் போற்றப்படுகின்றனர். அவர்கள் மக்கள் மனதில் இடம் பிடித்தது போல, யாசர் அராபத்தையோ, சதாம் ஹூசேனையோ மக்கள் போற்றிக் கொண்டாடவில்லை. அவர்களும் வெற்றியும் பெற வில்லை. இதற்குக் காரணம், இவர்கள், வன்முறையால் தர்மத்தை வளைக்க முயன்றவர்கள். தர்மம் வன்முறையாளருக்கு வளைந்து கொடுப்பதுபோல் தோன்றினாலும், அது மீண்டும் நிமிரும்போது, நேராகும்போது, ஏதாவது ஒரு தருணத்தில் திருப்பி அடிக்கும். அது கொடுக்கும் அடியைத் தாங்க இயலாது.

இந்த உண்மையைப் புரிந்ததால் தான் சனாதன தர்மம், தர்மத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் அளித்து வந்திருக்கிறது. வழி, வழியாகக் காலம் காலமாக இந்த சனாதன தர்மம் வகுத்துத் தந்த வாழ்க்கை நெறியில் வாழ்ந்து வந்த இந்துக்கள், தர்மத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தர்மநெறி பிறழாமல் வாழ்ந்து வந்தனர். இல்லற தர்மம், யுத்த தர்மம், சந்நியாச தர்மம், சமுதாய தர்மம் எனப் பலவிதமாக மனிதன் நடந்துகொள்ள வேண்டிய விதத்தை வகைப்படுத்தி, அப்படியே வாழப் பழக்கினர்.

இந்திய நாட்டில், ஆங்கிலேயர் ஆண்டு வந்த காலத்தில், நடைபெற்ற பல வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், தாங்கள் எழுதிய நுால்களில் ஓர் இந்தியனின் தர்மநெறிக் கோட்பாட்டை, எந்த நிலையிலும் நெறி வழுவாத அவனது தர்மப் பண்பை மிக வியந்து, பல நிகழ்ச்சிகளைக் கூறி அவற்றை விவரித்து எழுதி வைத்திருக்கின்றனர்.

அடி மட்டத்தில் வாழும் எளிய பாமரனிலிருந்து, அதி உயர்மட்ட நிலையில் வாழும் அரசன் வரை இந்தத் தர்மநெறி வாழ்க்கை, வற்புறுத்தப் படாமலேயே கடைப் பிடிக்கப்பட்டது. இந்து சமயம் இதற்கென்றே யம தர்ம ராஜன் என்னும் ஒரு தெய்வத்தை உருவாக்கி வைத்திருக்கின்றது. அந்த யமன், தர்மராஜன், காலதேவன், மரண தேவதை என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். தர்மத்தின் தலைவன் யமதர்மன். யமனின் வாகனமாக எருமை மாட்டை நமது இந்து மதம் குறியீடாக்கியிருக்கிறது. எருமை மாடு எதற்கும் அசைந்து கொடுக்காது, எதனாலும் அதன் போக்கை மாற்ற இயலாது. காலத்தின் அடையாளம் எருமை மாடு. காலமும் இப்படித்தான். யாராலும், எதனாலும், எப்பொழுதும் பாதிப்படையாது. தன் போக்கிற்குச் செயல்படும். யமனின் கையிலிருக்கும் பாசக் கயிறானது எத்தனை விதமான பந்தங்களில் சிக்கிக் கிடப்பவரையும் எவ்விதத் தயக்கமுமின்றிப் பற்றிப் பிரித்து எடுத்துக்கொண்டு சென்று விடும்.

யாருக்குமே தெரியாது என்று ஓர் அதர்மச் செயலை ஒருவர் செய்தாலும் கூட, அதையும் உள்ளுணர்வாக அவருக்குள்ளேயே இருந்து கவனித்துப் பதிவேட்டில் அதனை எழுதி வைப்பதற்கு எம ராஜனின் பதிவாளராகச் சித்திரகுப்தன் என்ற தேவதையை உருவாக்கி, அவருடைய பணி பற்றியும் எழுதி வைத்திருக்கின்றனர், ரிஷிகள்!

தண்ணீரின் தர்மம் குளிர்ச்சி. அக்னியின் தர்மம் சூடு. மனிதனின் தர்மம் ஆன்மாவாக இருத்தல். தர்ம வழியில் செல்வது தான் ஆன்மாவை அடைவதற்கான பாதை. இயல்பான தர்மவழியில் சரியாகச் செல்வதை விட்டு ஒருவன் அதர்ம வழியில் செல்கின்றபோது, அவனது மன அமைதி கெடுகின்றது. நித்திரையும் வருவதில்லை. சரியான துாக்கம் இல்லாதவரிடம் ஒருமைப்பட்ட மனம் இருக்காது.

இப்படித் தினமும் நிம்மதியாக உறங்குவதற்குக்கூட யமனுடைய ஆசி தேவை. மரணத்தின் தேவதையான யமனே நமது அன்றாடத் துாக்கத்திற்கும் அதிபதியாக விளங்குகிறான். தர்மவழியில் நடப்பவர்கள்தான் நிம்மதியாக உறங்க முடியும். தர்மம் என்பது இறைவன் வகுத்த பாதை. தர்மப் பாதையில் நடப்பவர்களைக் கண்டு, யமனே அஞ்சுவான். இவையெல்லாம் கடோபநிஷத்தில் தர்மத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்.

இத்தனை உயர்வாகப் போற்றப்படுகின்ற தர்மம், அதர்மமாக மாறிவிடும்போது அது அழிவிற்கே வழி வகுப்பதாக மாறி விடுகின்றது. இதை உணராததால் தான், இன்று மதங்களெல்லாம் அடிப்படை தர்ம, நியாயங்களை மறந்த நிலையில், என் மதம், பிற மதம்! எனப் பலவிதமான பாகுபாடுகளை ஏற்படுத்தி அவற்றில் மக்களைப் பிணைத்தன. அதன் மூலம் மக்களைப் பிரித்தன. இந்த உலகத்தில் மதங்களின் பெயரால் நடைபெற்ற போர்கள் தான் மிக மிக அதிகம். மதங்களுக்கு அடுத்தபடியாக மனிதர்களைப் பிரித்தது, வன்முறைக்குத் துாண்டியது, மொழியாகும்.

தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே உதவ வேண்டிய மொழி என்பது, ஒரு பெரிய சுய கௌரவமாகக் கர்வத்தை வளர்ப்பதாக மாறிவிட்டது. எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்! என்றும், யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்றும் உயர் சிந்தனையைப் பாடி வைத்தவர்கள் தமிழர் தான். ஆனால் குறுக்காகச் சிந்தித்த சிலரின் அகந்தை, மதமென்றும், இனமென்றும். மொழியென்றும் பாகுபாடுகளையும், பிரிவினைகளையும் ஏற்படுத்தி ஒருமையைச் சிதைத்தது. மனித ஒற்றுமையைக் கூறு போட்டது. போர்கள் தொடர்கதைகள் ஆயின.

விவரிக்கத் தேவையில்லை. வரலாறு தெரிந்தவர்கள் தான் அனைவருமே! அன்பு தான் அகில மதம்! அன்பு தான் அகில மொழி! அன்பு தான் அகில உலக சாம்ராஜ்ஜியம்! என்பது தான் உலகிலுள்ள அனைத்து மதங்களின் அடிப்படைக் கோட்பாடாக அமைந்திருந்த போதிலும், அந்த அன்பையே மறந்துவிட்ட நிலையில், நான் பெரியவன்! என் மதம் உயர்ந்தது! என் மொழி சிறந்தது! எனப் போர்க்கொடி உயர்த்த முற்பட்டனர். அன்பினால் அரவணைக்கப்பட வேண்டிய மனித குலம், அகந்தையினால் எல்லைக் கோடுகளை வரைய முற்பட்டது தான், பிரிவினைக்கு வித்தாயிற்று. தர்மத்தை மறக்க வைத்த போதையாகி ஏறியது. விளைவு?

இன்று உச்ச கட்டத்தில் உலகம் வன்முறையின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அகந்தையாளர்கள் மனித மனங்களைக் குழப்பியதில், அவர்கள் அறிவு பூர்வமாகச் சிந்தித்துக் கூறுவதாகப் பிழையாகப் புரிந்துகொண்ட அறியாமையால் இருண்டு கிடந்த அவை, சிந்திக்காமல் செயல்பட்டன. அதன் விளைவாக மனக் கொந்தளிப்பு, மன அழுத்தம், வரட்டுக் கௌரவம், தான் என்னும் தன் முனைப்பு போன்றவை, சம நிலையில் இருந்த மனதில் உருவாகிக் கிளர்ந்தெழுந்து, அதன் அமைதித் தன்மையைச் சம நிலையைக் குலைத்தன. மனித மனங்களின் சீர்குலைவு, உலகில் வன்முறையாகப் பரவியது. இதற்குப் பலர் பல விதங்களில் துாண்டுதல்களை உருவாக்கினர்.

எந்த ஒரு செயலுக்கும் ஓர் எதிர் விளைவு நிச்சயம் உண்டு என்பது அறியப்பட்ட விதி. இந்த விதத்தில் இயற்கைச் சக்திகளால் உருவாகியுள்ள இந்தப் படைப்பு, மன பாதிப்பால் சஞ்சலமடைந்தவுடன், இது சார்ந்த இயற்கையையும் வலுவாகப் பாதிக்கத் துவங்கி விட்டது. பிரபஞ்ச விதிக்குக் கட்டுப்பட்டு, அன்பும், கருணையுமாகச் செயல்பட்டட இயற்கையும் சமநிலை தவறி, இயற்கைச் சீற்றங்களாகத் தாக்கத் துவங்கி விட்டது. மனித மன பாதிப்பு தான் சுற்றுச் சூழலைப் பாதித்து, கட்டுக்கோப்பைக் குலைக்கின்றது. என விஞ்ஞானிகள் தெளிவுபடக் கூறுகின்றனர்.

இப்போது கூறுங்கள்! நிலை குலைந்த இயற்கைத் தன்மைக்கும், கொந்தளித்துக் கொண்டு கிடக்கும் மனித மனங்களின் அமைதியின்மைக்கும், தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் வன்முறைக்கும் யார் காரணம்? பேராசையும், சுய நலமுமாக அலைந்து கொண்டிருப்பவர்களின் வக்கிரங்கள் தானே!

இந்நிலையில், இந்த நிலை மாற வேண்டும்! மாற வேண்டும்! என எல்லோரும் ஒன்று கூடிக் கத்திக் கூப்பாடு போட்டு, விரோத வார்த்தைகளைப் பயன்படுத்தி, உணர்ச்சிக் கொந்தளிப்பில் துடித்துக் கதறுவதை உடனடியாகக் கைவிட வேண்டும். இம்முறையால் எவ்விதப் பயனுமில்லை என்பதை நாம் அறிந்து விட்டோம். எங்கும் எல்லாமாக இருப்பது ஆத்மாவே! என்பதை முதலில் புரிந்து, அதனை ஏற்க வேண்டும். இப்படி இறை நிலையே எங்கும் நிறைந்திருக்கின்ற நிலையில், நிகழ்பவை எல்லாம் வெறும் நிகழ்ச்சிகளாக, நடைபெற வேண்டியவையாகவே தெரிய வேண்டுமே தவிர, அவை என் உணர்ச்சிகளைத் துாண்டவோ அறிவைக் குழப்பவோ கூடாது. மனமோ, அறிவோ இனி செயல்படக்கூடாது.

அன்பும், கருணையும் தான் நமது இயல்பு. இயற்கையில் நிறைந்திருப்பதும், இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமாக இருப்பதும் இந்த அன்பும், கருணையும் தான். நம்மில் நிறைந்திருக்கும் அன்பும், கருணையும், இயற்கையாக விரிந்திருக்கும் அன்பும், கருணையும் பெருகி, ஒன்று கலக்கின்ற போது தான், சாந்தி நிலை எங்கும் உருவாகும். நாம் நம்மை அமைதிப்படுத்தினால் தான் இந்த அமைதி அலை, இயற்கையோடு கலந்து, எங்கும் பரவி சாந்தியை ஏற்படுத்தும்.

இந்நிலையை எய்துவது மிக எளிதான ஒன்றல்ல. மிகுந்த முயற்சியும், பண்பட்ட மனமும், சரியாகச் சிந்தி;க்கின்ற தெளிந்த அறிவும் இதற்கு அடிப்படைத் தேவைகள். அதற்கும் மேலாக எல்லாம் ஒன்றே! என்ற பேருண்மை நமக்குப் புலப்பட்டிருக்க வேண்டும். இப்படி ஆழமான சாந்தியை இயல்பாகப் பெறுகின்ற நிலை ஏற்பட்டவர்களின் தியானம் தான், அமைதி அலைகளை உருவாக்கும். வன்முறையும், போராட்டமும், அதர்மத்தின் அழிவுத் தன்மையும், தியான அலைகளின் சக்தியால் தான் அழிந்து இல்லாமற் போகும். எனவே சாந்தியையும், சமாதானத்தையும் விரும்புவர்கள் முதலில் அமைதியடையுங்கள். பிறகு அமைதியைப் பிறரிடத்தும் பரவச் செய்யுங்கள். தர்மவழியில் செயல்பட முற்படுங்கள். தர்மத்தை நாம் காப்பாற்றினால், தர்மம் நம்மைக் காப்பாற்றும்! என்ற கண்ணனின் கீதையைப் படிப்பதற்கு மட்டும்! என்று ஒதுக்கி விடாமல், படித்தவற்றைப் பயன்படுத்தவும் செய்தால், ஒரு பெரிய மாற்றத்திற்கு இது வழிவகுத்துத் தரும்! சொல்வது விளங்குமா? மாற்றி யோசிக்கச் செய்யுமா? மாற்றம் ஏற்படின், வன்முறை ஒழியும். மனங்கள் சாந்தத் தன்மைக்குத் திரும்பும்! இயற்கையும் சாந்தமடையும்! அன்பும், கருணையும் வாழ்க்கையாகும்.

Click here to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s