யாம் பெற்ற இன்பம் – 17

வெட்டவெளியை ஆதிசங்கரர் சூன்யம் என்று குறிப்பிடுகின்றார். சூன்யம் என்பது வெறுமை அல்ல. சூன்யமாய் இருக்கின்ற, ஒன்றுமில்லாத இந்த வெட்டவெளி தான் ஆன்மா நிலைத்திருக்கின்ற இடம். இது படைப்பிற்கு முந்தைய அவ்யக்த நிலை. படைப்பு நடத்துவதற்கான காரணம் உள்ள இடமே இந்த வெற்றிடம். சாதாரண நிலையில் பார்ப்பவர்களுக்கு இந்த வெட்டவெளித் தன்மை தெரியாது. ஆன்மீகத் தளத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு வெற்றிடம், வெற்றிடமல்ல – அது முழுமையான சக்தி நிரம்பிய இடம் என்பது தெரியும். சக்தி என்றால் அருள். எனவே நம்மைப் பொறுத்தவரை வெற்றிடம் என்பது அருள் நிறைந்தது. ஆற்றல் மிகுந்தது. இந்த அருளும், அமைதியும் ஆன்மீகப் பயிற்சி வாயிலாக நமக்குள்ளும் நிறைந்துள்ளது.

வெளி உலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டு, ஈகோவாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த அமைதி கிடைக்காது. ஈகோ இல்லாமல், அந்த வெட்டவெளியில் இருக்கும் ஆத்மாவே நான்! என்பதை அறிந்த நிலையில் கடமைகளுக்காகவென்று மட்டும் செயல்பட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த சாந்தி நிலை பூரணமாக நிறைந்திருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு வெளி உலகத் துாண்டல்கள் எதுவும் பிடித்து இழுக்காது. கவர்ச்சி நிறைந்த இந்த உலக விவகாரங்கள் எதுவும் இவர்களைப் பாதிக்காது. தான் உண்டு, தன் பாடு உண்டு என்று இருப்பார்கள். சின்னச் சின்ன பிரச்சினைகள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் வரும், போகும். அவ்வளவுதான்! எப்பொழுதும் வெட்டவெளி ஆத்மாவை உணர்ந்து, அதிலேயே லயித்து இருக்கின்ற தன்மை இப்போது நம்மில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

எந்தச் செயலை எவ்விதக் கடுமையான சூழலில் செய்தாலும், உள்ளே உள்ள வெட்டவெளி நிலைக்குப் போய்ப் போய்த் தங்கி, வெளிப்பட்டுச் செயல்படப் பழகினால், எப்பொழுதும் சாந்தி நம்மைச் சூழ்ந்திருக்கும். நாம் செயல்படும் விதத்திலும் இந்த சாந்தி முன்னும் பின்னுமாக வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் இந்நிலையில் பழைய கதைகளை இழுத்து வைத்துப் பார்க்காத தன்மையும், வருங்காலத்தைப் பற்றிய கனவு காணாத தன்மையும் இருக்க வேண்டும்.

மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறப்பெடுப்பதற்கு நமது இந்த ஆசைகளும், எண்ணங்களும் தான் காரணம். வெட்டவெளி நிலையில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு ஆசைகளோ, எண்ணங்களோ எழாது. நிகழ்காலத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுகின்ற விதத்தில், இருக்கின்ற கர்மாவும் அழிந்து போகும். மேலும் புதிதாகக் கர்மா சேராது.

இந்த உலகத்தில் அனுபவிக்க இன்னும் இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு மீண்டும் பிறவி இருக்கிறது. இந்த வாழ்க்கையில் அனுபவிக்க இனி என்ன இருக்கிறது? எல்லாவற்றின் உள்ளேயும் என்ன இருக்கிறது என்பது தெரிந்தபின், இன்னும் அனுபவிக்க ஏதும் இருக்கிறதா? என்று நினைப்பவர்களுக்குப் பிறவி இருக்காது. ஏனெனில் அவர்களிடம் துாண்டுதல் இல்லை. பார்த்து அனுபவித்த பக்குவத்தால் ஏற்பட்ட சாந்தி தான் அவர்களிடம் இருக்கின்றது.

வாழ்ந்து வந்த வாழ்க்கையில் ஒவ்வொரு பருவத்திலும் எத்தனை எத்தனையோ ஆசைகள் நமக்குள் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றில் எத்தனையோ ஆசைகள் நிறைவேறாமல் போயிருக்கின்றன. நான் யார்? இந்தப் பிறவி எதனால் ஏற்பட்டது? இந்தப் பிறவியின் நோக்கம் என்ன? போன்றவற்றைப் பற்றியெல்லாம் நன்றாக அறிந்து தெளிந்த பிறகு, நிறைவேறாத ஆசைகள் பற்றிய ஏக்கம் இருக்குமா? இனியும் புதிய ஆசைகள் ஏதும் தோன்றுமா?

ஆசை ஏன் வருகிறது? நான் இருக்கின்ற நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாற வேண்டும் என்ற எண்ணம் தான் ஆசை ஏற்படக் காரணம். எந்த அளவிற்கு ஆத்ம உயர்வு அமைகின்றதோ, அந்த அளவிற்கு ஆசைகளின் அளவும் இருக்கும். நமக்கு என்ன நடக்க வேண்டும் என்று இருக்கிறதோ, அதுதான் நியதிப்படி நடக்குமே தவிர, நாம் ஆசைப்படுவதால், துடிப்பதால், தவிப்பதால், ஏங்குவதால் எதுவும் நடந்துவிடாது என்ற உண்மையைப் புரிந்தவர்களுக்கு ஆசை எழாது.

இதைப் புரியாதவர்கள் தான் கடவுளிடம், எனக்கு இதை நிறைவேற்றித் தா! அதை நடத்திக் கொடு! என்றெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். நமது புளுபிரிண்ட் (Blueprint) எனப்படும் கர்மப்பதிவில் என்ன இருக்கிறதோ அதுதான் கிடைக்கும். ஆனால் தன்னைத் தேடித், தன்னை நோக்கி, வருகின்றவர்களுக்கு இறைவன் அவர்களுக்கு மிக அவசியத் தேவைகளை நிச்சயம் அருள்வான். அதுவும் அவர்களது ஆன்ம முன்னேற்றத்திற்காக, அல்லது ஆன்ம வளர்ச்சியின் அளவிற்கேற்பத் தான் அமையுமே தவிர, நாம் கேட்பதால் எல்லாம் கிடைத்துவிடாது.

இப்படி இந்த ஞான உபதேசத்தின் மூலம் குரு நமது அகக்கண்களுக்கு காட்டரக்ட் (Cataract) அறுவை சிகிச்சை செய்கிறார். நமக்குள்ளேயே இருக்கின்ற ஆத்மாவை நம்மால் பார்க்க முடியாமல் ஏதோ ஒன்று நம் அகக்கண்களை மறைத்துக் கொண்டிருக்கிறது. அந்தப் படலத்தை அறுவை சிகிச்சையான அவரின் உபதேசம், உரித்து எடுக்கின்றது. அறுவை சிகிச்சைக்குப் பிறகுக் கண் பளிச்சென்று தெரிவதைப்போல குருவின் உபதேசத்தால் ஆத்மாவின் நுனி பளிச்சென்று புலப்படுகின்றது.

உள்ளத்திற்கு மிக அருகில் இருக்கின்ற ஆத்மாவை நமது உள்ளம் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் அந்த உள்ளம் எப்பொழுதும் வெளிப்புறமாகவே திரிந்துகொண்டு இருப்பதால்! குரு நமது பார்வையை அகமுகமாகத் திருப்பிவிட்டு உள்ளே பார்க்கின்ற பயிற்சியை அளிப்பதுடன், பார்வையை மறைக்கும் அறியாமை அல்லது ஆசை என்னும் படலத்தையும் அகற்றுகின்றார். பார்த்தால் ஆத்மா அகப்படாது. திரும்பினால் தான் கிடைக்கும்! ஆனால் பெரிய பெரிய ஆச்சார்யர்கள் கூட வெளிப்புற யோகப் பயிற்சிகளைத் தான் தந்துகொண்டிருக்கிறார்களே தவிர, உள்ளத்தை அகமுகமாகத் திருப்பி ஆத்மாவைப் பார்க்கின்ற விதத்தைக் கற்றுத் தருவதில்லை என்பதே உண்மை.

மகரிஷி மகேஷ்யோகி மேலை நாட்டு மக்களிடையே வெகு பிரசித்தம். ஆனால் அவரே கூட சில தாந்த்ரீக தியான, யோக முறைகளை வைத்துக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் தான், தம்மை நாடி வந்தவர்களுக்குப் பயிற்சி அளித்தார். அவர் தமது இறுதிக் காலத்தில், இப்போதுதான் வேதாந்தத்தைத் தான் அறிய முற்பட்டதாகவும், ஆத்மாவைப் பற்றி அறிந்ததாகவும், தானாகவே முன்வந்து வெளிப்படையாகக் கூறினார்.

எந்தெந்த முறைகளிலோ ஆன்மப் பயிற்சிகள் இருந்தாலும், தன்னைப் பற்றிய உண்மைகளை மிகத் தெளிவாக அறிதலாகிய ஆத்ம ஆனுபூதிப் பயிற்சிதான் வேதாந்த ஒளியில் நம்மை நாமே தரிசிக்கின்ற இறுதி நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லும்.

ஆழ்நிலைத் தியானப் பயிற்சியில் எத்தனையோ முறைகள் உள்ளன. மிக ஆழமான, துல்லியமான நீர் நிலையில் ஒரு கல்லைப் போட்டு, அது மெல்ல மெல்ல அசைந்து அசைந்து நீர்நிலையின் அடிமட்டத்தில் சென்று படிவதைப் பார்ப்பது போல், தியான நிலையில் அமர்ந்து உற்று நோக்கும் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்வார்கள். இது ஆத்மாவைப் பார்ப்பதல்ல! கவனத்தை ஒரு புள்ளியில் குவிக்கின்ற ஒரு பயிற்சியே இது.

மூக்கின் அடியில் உதட்டிற்கு மேற்புறத்தில் விரலை வைத்துப் பலமுறை தேய்க்கச் சொல்வார்கள். மூச்சைக் கவனிக்கச் செய்வதும் இவ்வகையைச் சேர்ந்ததுதான். இவையெல்லாம் சில டெக்னிக்குகள் தானே தவிர, ஞானத்தால் மட்டுமே நம்மை நாம் சென்றடைய முடியும். டெக்னிக்குகள் எல்லாம் ஒருவிதத் துாண்டல்கள் மட்டுமே!

ஞானத்தின் துணை கொண்டு, வெளி உலகப் பொய்த் தன்மையைப் புரிந்து கொண்டு, தனிமையில் உள்முகமாக உள்ளத்தைத் திருப்பி மிகவும் கவனத்துடனும், முழுப் பொறுப்புடனும் அதைத் தேடி நாம் செல்ல முற்படும்போது, கர்மாவின் பின்னணியில் நம்மைப் படைத்த அந்த இறைசக்தி, நமது ஈடுபாட்டின் அளவைப் புரிந்துகொண்டு, நமது உண்மையான, சின்சியரான அணுகுமுறை சரியானதாக இருந்தால் மட்டுமே, நம்மை நோக்கி அது வரும். நமது நோக்கம் என்ன என்பது இறையாற்றலுக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் நம்மைப் படைத்ததே அதுதானே! மிகுந்த அக்கறையுடன் நாம் அதை நோக்கிச் சென்றால், அதை விட அதிக அக்கறையுடன் அது நம்மை ஏற்றுக் கொள்ளும்.
தன்னை நோக்கி வரக்கூடிய பாதையை அது அமைத்துத் தரும். இந்நிலையில் எனது எல்லாச் செயல்களுமே வெற்றியைத் தரக்கூடியதாக, எனது விருப்பங்கள் எல்லாமே தானாக நிறைவேறக்கூடியதாக ஆகிவிடும். நாம் எதையுமே தேடத் தேவையில்லை. எல்லாம் தானாகவே நிறைவேறும்.

Click here to read this article in pdf

Advertisements

One thought on “யாம் பெற்ற இன்பம் – 17

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s