யாம் பெற்ற இன்பம் – 16

எதையும் சரியாகவும், முறையாகவும் செய்வதற்குச் சக்தி தேவை. செயல்படும்போது எண்ணங்கள் எழுந்தாலும் மீண்டும் எண்ணமற்ற நிலைக்குப் போகப் பழகினால், வெற்றிட நிலைக்குப் போனால், சக்தி பெருகும். எல்லாச் சக்திகளின் இருப்பிடமாக எனக்குள் உள்ள ஆற்றலை வெற்றிடமாக நான் உணரத் துவங்கினால், அதுவே நான் என்று அறிந்துகொண்டால், தெய்வீகம் அதுதான். தொடர்ந்து நிகழ்காலத்திலேயே நிலைத்து நிற்கின்ற இந்த விழிப்புணர்வு நிலையில் நாம் ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்கலாம்.

இந்த ஆற்றல் நிறைந்த நிலையை நடைமுறை வாழ்க்கையிலேயே நாம் பலமுறை அனுபவித்திருக்கிறோம். ஆனால் நாம் அதைக் கவனிப்பதில்லை. அவ்வளவுதான்! இரண்டு வேலைகள் செய்து முடித்துவிட்டுப், படுத்தால் போதும்! வேறு எதுவுமே இனி செய்ய இயலாது! என்ற மனநிலையில் வீட்டிற்கு வந்தபோது, மனதிற்கு மிகவும் பிடித்த நண்பர், ஒரு சினிமா பார்க்கத் தன்னிடம் டிக்கட் இருக்கிறது, தயாராக இரு! வந்து கூட்டிக்கொண்டு போகிறேன்! என்று போன் செய்தால், இருந்த களைப்பெல்லாம் எங்கோ பறந்தோடிப் போய்விடுகின்றது. உடனே டக்கென்று புறப்பட்டு விடுகிறோம்.

தலைவலி மண்டையைப் பிளக்கிறது! சமையல் செய்ய முடியாது! என்று படுத்திருப்பவர், மகளும், மருமகனும் திடீரென்று வந்துவிட்டால், உடனடியாக எழுந்து பரபரவென்று எல்லாம் செய்வார். அப்போது தலைவலி எங்கே போயிற்று என்று தெரியாது.

என்னதான் பலவீனமாக உணர்ந்தாலும், படுக்கையில் பாம்பு வந்துவிட்டது என்றால் பாய்ந்து அடித்து எழுந்து ஓடாமல் யாராவது இருப்பார்களா? இந்தச் சக்தி எங்கிருந்து வருகின்றது? அது முதலில் எங்கே இருந்தது? எல்லாம் எனக்குள்ளேயே தான் இருக்கிறது. மனம் அதை உணரவிடாமல், தனக்கு ஏற்றபடி இயங்கி, உடலையும் அப்படி உணரச் செய்கிறது.

மனம் தான் நமது எல்லா இயக்கங்களுக்கும், உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் காரணம். அதை இல்லாமற் செய்துவிட்டால், நாம் முழு ஆற்றலுடன் இருப்பது தெரியும். வலியோ, துன்பமோ, சலிப்போ, சோர்வோ எதுவும் நமக்குத் தெரியாது. அப்படியே இருந்தாலும் இருப்பதை உணரமாட்டோம். களைத்துச் சலித்து வந்தாலும், களைப்பாக உணராமல் உடனே குளித்து, உடை மாற்றி, உற்சாகமாகச் செயல்பட்டால் களைப்;புத் தெரியாது. மறைந்து விடும். எனவே எல்லாமே உள்ளத்துடன் தொடர்பு கொண்டவை என்பதை நன்றாகப் புரிந்துகொண்டால், எதுவுமே நம்மைப் பாதிக்காது. இதை உணர்வதற்கு விழிப்புணர்வுதான் தேவை.

தியானத்தின் மூலமும், பெறுகின்ற ஞானத்தின் மூலமும் நம்மைப் பற்றி அறிகின்ற தெளிந்த அறிவின் அளவு கூடக்கூட, நம்மில் இருந்த மிருகக்குணங்கள், மனித இயல்புகள் எல்லாம் போய் தெய்வீகப் பண்புகள் மலரும். மனித உடலமைப்பில் வலது பக்க மூளை அன்பாகப் பெண்களுக்கும், இடது பக்க மூளை அறிவாக ஆண்களுக்கும் செயல்படுகின்றன. தியானம் செய்கின்றவர்களுக்கு அன்பும், அறிவும் இணைந்து, அதாவது மூளையின் இரண்டு பகுதிகளும் ஒன்றுபட்டு, மிகவும் சக்தி வாய்ந்த விதத்தில் இயங்கும். இதுவரை நீங்கள் செயல்பட்டு வந்த விதத்தில், மனம் போன போக்கில், இனி உங்களால் செயல்பட முடியாது. தியானமும், ஞானமும் உங்களை அந்த அளவிற்கு உயர்த்தும்.

வீட்டைவிட, வேலை செய்யும் இடத்தில் துன்பப் படும் அளவு அதிகம். ஒருவருக்கு வேலை மிகவும் கடினமாக இருக்கிறது என்றால், அவருக்குக் கர்மா அதிகம் என்று பொருள். வேலை மிக இலகுவாக, மகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்தால், அவருக்குக் கர்மா குறைவு. வேலையே இல்லை! ஆனால் வாழ்க்கை நன்றாக, சுகமாகப் போகிறது என்றால் கர்மாவே இல்;;லை. இது தான் அளவுகோல். நம் வீட்டில் நாம் மிக நன்றாக இருந்தாலும், வேலை செய்கின்ற இடத்தில் நமது நிலை எப்படி என்பதைக் கவனித்தால் நான் சொல்வது விளங்கும்.

ஜாதகக் குறிப்பில் பத்தாம் இடம் கர்ம ஸ்தானம். அது அமைந்துள்ள விதத்தில் தான் நமது வேலை அமையும். நமது கர்மத் தொழிற்சாலை நாம் வேலை செய்யும் இடம் தான். அங்கு நாம் செயல்படும் விதத்தில் நமது கர்மாவின் அளவும், அதன் வீச்சும் நமக்குப் புரியும். கர்மாவை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதையும், நமது ஆன்மீகப் பயிற்சியின் அளவும் கூட அங்கு செயல்படும் விதத்தால் நன்கு விளங்கும்.

நாம் நம்மை உற்றுப் பார்த்தால் சின்னச் சின்ன விடயங்களில் உள்ள சுவாரசியங்கள் எல்லாம் தெரிய வரும். வெளி உலகை உற்றுப் பார்ப்பவன் விஞ்ஞானி. தன்னையே தான்
உற்றுப் பார்ப்பவன் மெய்ஞானி. உனக்குள் என்ன நடக்கிறது என்பதை நீ உன்னைப் பார்க்கத் துவங்கினால் தான் தெரியும். உன்னையே நீ அறிவாய்! என்று சாக்ரடீஸ் கூறியதன் பொருள் இது தான். இதைத் தான் காலம் காலமாக எல்லா ஞானிகளும், அறிஞர்களும் தொடர்ந்து சொல்லிக்கொண்டே வந்தனர். உன்னை நீ அறிந்தால், உலக வாழ்க்கையின் உண்மைத் தன்மை உனக்கு விளங்கும்.

அப்போது தான் உலகில் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் புரியும். பொருளியல் பார்வை, அரசியல் பார்வை இவற்றை விட, ஆன்மீகப் பார்வையால் தான் இதை அறிய முடியும். தற்போதய உலகம் நீயா நானா என்ற விதத்தில் போட்டிகள் நிறைந்து, போராட்டமாக இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலைமை மாறி, மனிதத் தன்மை நிறைந்த, நீயும் நானும் ஒன்று என்று அனுசரித்துப் போகின்ற நிலை விரைவில் வந்து சேரும். அந்த நிலைக்கு உலகம் மெது மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது.

உண்மையான என்னைத் தேடுகின்ற முயற்சியில் அடிக்கடி நாம் நம்மை இவ்வாறு அகமுகமாக ஆராய்ந்து கொண்டே இருந்தால் தான் அதில் முன்னேற்றம் ஏற்படும். குருவின் வாயிலாகப் பெறுகின்ற ஞானத்தை அப்படியே வெறும் அறிவாக மட்டும் வைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் முன்பிருந்த தன்மையிலேயே இருந்தால், அது முன்னேற்றமாகாது. ஞானத்தைப் பெறுவதும், இரண்டு வேளை தியானம் செய்வதும் மட்டும் போதாது. ஞானத்தின் அளவும், தியானத்தின் தன்மையும் நம்மை மேம்படுத்துகின்றதா என்பதைக் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். தினமும் நாம் செயல்படுகின்ற விதத்தை இடைவிடாமல் தொடர்ந்து கவனித்தால் தான் உயர்வு இருக்கிறதா என்பது தெரியும். இதற்கு நிகழ்காலத்தில் இருப்பதும்;, விழிப்புணர்வோடு செயல்படுவதும் அவசியத் தேவையாகும்.

நம்மிடம் இருக்கின்ற எதிர்மறைக் குணங்கள் தான் நமது ஈகோவின் அளவுகோல் எனலாம். எந்த அளவிற்கு அவை நம்மிடம் இருக்கின்றன, அல்லது இல்லாமல் போய்விட்டன என்றெல்லாம் உற்று நோக்கத் தெரிய வேண்டும். நம்மோடு நெருங்கிப் பழகுகின்றவர்களிடம் நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம்? நமது முந்தைய செயல் பாடுகளுக்கும், ஞானம் பெற்ற நிலையில் தற்போதய செயல்பாடுகளுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? இந்த மாற்றத்தை நம்மோடு பழகுகின்றவர்கள் புரிந்துகொள்கிறார்களா? அவர்கள் நமது மாற்றத்தை உணர்ந்ததோடு, பாராட்டவும் துவங்கிவிட்டார்களா? என்றெல்லாம் பார்க்க வேண்டும்.

ஏனெனில் சமுதாயத்தில் அன்பு, அகிம்சை, விட்டுக் கொடுத்தல், பதறாத தன்மை போன்ற ஆன்மீகக் குணங்கள் எல்லாம் பார்ப்பவர்களுக்கு நடிப்பது போலவும், முட்டாள் தனமாகவும், கேலிக்குரிய நடத்தையாகவும் கணிக்கப்படும். அமைதியாக இருப்பதும், தனிமையை நாடுவதும், தியானம் செய்வதும் முதலில் பிறர் கண்களுக்கு அர்த்தமற்றவையாக, வெறுப்பை அளிக்கக்கூடியதாகத் தோற்றமளிக்கும். காலத்தை வீணாக்கித் தேக்க நிலையில் பின்தங்கியிருப்பதாகப் பிறர் நினைக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் போகப் போக நமது நிலை குலையாத தன்மை, கொள்கைப் பிடிப்பு, பரபரப்பற்ற நிதானப் போக்கு, ஆடம்பர ஆரவாரங்களில் விருப்பமின்மை போன்றவை அவர்களால் கவனிக்கப்படும். அதன் பின் அவர்களே பாராட்டி மதிப்பளிக்கக்கூடிய தருணமும் வாய்க்கும். நமது ஆன்மீகத் தன்மையின் வளர்ச்சி அவர்களிடமும் பார்வை மாற்றத்தைக் கொண்டு வரும்.

நாம் ஈகோவைத் தாண்டி அப்பால் நிற்பதைப் பார்க்கின்ற அவர்களுக்கு வெறுப்பு ஏற்படும். நமது செயல்கள் அவர்களது பார்வையில் பொறாமையை ஏற்படுத்துவதாக இருக்கும். அதற்குக் காரணம் அவர்களது அமைதியற்ற தன்மையும் நிலை குலைவும் நம்மிடமும் காணப்படவில்லையே! என்ற ஆதங்கம் தான். அதைப்பற்றி நாம் சிறிதும் கவலைப்படாமல், அவர்களுக்காக என்று செயல்படாமல், எது சரியோ அதைச் செய்துகொண்டே போகின்றபோது முழு அமைதியை நாம் அனுபவிக்க முடியும்.

இதற்கு, நம்மோடு நாம் நட்பாக இருக்கப் பழக வேண்டும். நமக்கு நாம் முரண்பட்டவர்களாகச் செயல் பட்டால் மன நிம்மதி இருக்காது. மனம் நம்மைக் குறை சொல்ல ஆரம்பித்துவிடும். நமது செயல் நமக்கே பிடித்ததாக அமைகின்றபோது நமக்குள் தானாகவே ஒரு மகிழ்ச்சி ஏற்படும். நாம் நம்மோடு ஒத்துப் போவதால் ஏற்படுகின்ற நிறைவு அது. இதை உணர்ந்திருக்கிறீர்களா?

முன்பு பயமுறுத்திய தனிமை இப்பொழுது மிகவும் விருப்பமானதாக ஆகிவிட்டதல்லவா? முன்பு தனிமை போரடிப்பதாக இருக்கும். அதிலிருந்து தப்பிக்க வானொலி கேட்பது, தொலைக்காட்சி பார்ப்பது, தொலைபேசியில் யாருடனாவது அரட்டை அடிப்பது, கதைப் புத்தகம் படிப்பது, கணினியில் மூழ்கிப்போவது என்று எதையாவது செய்துத் தனிமையைத் தொலைக்க முயற்சி செய்வோம். ஆனால் இப்போது தனிமை இனிமையாக இருக்கிறது. என்னோடு நான் அமைதியாக இருக்க எனக்குக் கிடைத்த தனிமை உதவி செய்கின்றது. எதுவும் செய்யாமல் சும்மா இருக்கின்ற நிலையில் மனமும் சும்மா இருக்க வேண்டும். மனம் வெளிப்படாமல், எதைப்பற்றியும் யோசித்துக்கொண்டு இருக்காமல், வெட்டவெளியில் உணர்வு தங்கி மௌனமாய் இருக்க உங்களால் முடிகின்றதா?

Click this link to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s