யாம் பெற்ற இன்பம் – 15

புரோட்டோன், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகிய அணுத்துகள்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாத நிலையில் எங்கும் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள படைப்புக்கள் அனைத்திலிருந்தும் அவை ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. நான் தான் அவற்றைக் கவனிப்பதில்லை. இவை அடுத்த அணுத்துகள்களோடு இசைவு கொண்டவை. ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை அவை எங்கோ தொலை துாரத்தில் இருக்கும் தனது அடுத்த ஜோடித் துகள்களோடு, அது எந்தச் சூரிய மண்டலத்தில் இருக்குமென்றாலும் தொடர்பு கொள்கின்றன. இது குவாண்டம் தியரி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட விஞ்ஞான ரீதியான மிக முக்கியமான ஒரு உண்மை.

ஒளியை விட எண்ணம் அதிக விரைவுத்தன்மை கொண்டது. எனது உடல் உருவானது அன்பினால். அதாவது அணுக்களின் இசைந்த தன்மையினால் தான். எனவே என்னில் இருப்பவையும், இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவையும் ஒன்றுக்கொன்று அன்பால் இசைவும், இணக்கமும், தொடர்பும் கொண்டவை. படைப்பிற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. நோக்கமும், அன்பு ரீதியான சுழற்சியுமாகப் படைப்பு இருக்கின்றது.

எனது உடல் ஒரு தகவல் பரிமாற்ற நிலையம். பசிப்பது, வலிப்பது, பேசுவது எல்லாமே தகவல் பரிமாற்றமே. ஏன் அன்பைப் பிரபஞ்சம் வரையிலுமாக விரிக்கவேண்டும் என்று சொல்கிறோம்? நம் உடலிலுள்ள அணுக்கள் தான் எல்லா இடங்களிலும் பரவியிருப்பதால், தொடர்பு பட்டிருப்பதால், இணைந்திருப்பதால் அந்த அன்பு எல்லா இடங்களிலும் பரவும். இப்படி அன்பால் தொடர்பு கொள்கின்றபோது பிரபஞ்ச இயக்கம் அன்பு இயக்கமாக ஆகிவிடுகின்றது. நான் அன்பு மயமாகச் செயல்படுவதன் மூலம் பிரபஞ்சத்தையே அன்பு மயமாக ஆக்க முடியும். அன்பு அலைகள் அணுத் தொடர்பால் எல்லா இடங்களிலுமே பரவும்.

அன்றாட வாழ்வில் உங்கள் வீட்டில் நீங்கள் வெளிப்படுத்தும் தொடர்புகளின் பின்னால் இந்த அன்பென்னும் உணர்வு இருந்தால், அதே அன்பு மற்றவரிடமும் பிரதிபலிக்கும். எண்ணங்களாலும், ஆசைகளாலும், மற்ற ஆராய்ச்சிகளாலும் என்னைக் குறுக்கிக் கொண்ட நிலையில் பிறருடன் தொடர்பு கொள்கின்றபோது அங்கு அன்பு பிரதிபலிக்காது. இதே சுய நலம் தான் பிரதிபலிக்கும். விழிப்புணர்வோடு கூடிய மனதில் நின்று உணர்வால் செயல்படும்போது எல்லாம் அன்பு மயம். எதிலும் சேராத நிலை. இது மறைக்கப்படும்போது மற்றவை எல்லாம் கவனத்தை இழுக்கும். இதைத்தான் சிவமயம் என்று சொல்லியிருக்கின்றார்கள். இவை எல்லாம் அன்பு கலக்காத நிலையில்தான் எங்கும் எல்லாம் நடக்கின்றன.

எனவே தான் அந்நிலையில் கோவில், பஜனை, விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றெல்லாம் மனம் தேடி அலையும். அன்பு வயப்பட்ட நிலையில் அடங்கினால் இவை எதுவுமே தேவையில்லை. எதைச் செய்ய வேண்டிய சூழ்நிலை கர்மாவால் ஏற்பட்டாலும், அதைச் செய்யலாம், செய்யாமல் இருக்கலாம், மறந்தே போகலாம். ஒரு உடலில் உள்ள அணுக்கள் வெடித்தால் உலகம் தாங்காது. ஆனால் நாமோ அவரோடு பேசுவதில்லை; அந்த வீட்டிற்குப் போவதில்லை; அவர்களோடு சண்டை என்ற ரீதியில் ஒற்றுமையும் இசைவுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவற்றதாக நாம் கருதுகின்ற அணுக்களின் ஒத்திசைவு அறிவார்ந்த நம்மிடம் அன்பாக வெளிப்படுவதில்லை. மனிதன் மட்டுமே உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டு அன்பை மறக்கிறான். உணர்ச்சி வசப்பட்டால் கோபம்! பிறகு வெறி! அதனால் உடல் நிலை பாதிப்பு!

விஞ்ஞான ரீதியாக எனது உடலமைப்பை ஆராய்ந்தால் இந்த உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அன்பால் இசைந்து ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கின்றன என்பது தெரிய வரும். ஆனால் நானோ அந்த அன்பை மறந்த நிலையில் செயல்படுகின்றேன். இது அறிவுள்ள நிலையா? சிந்தித்துப் பாருங்கள்.

நமக்கு முன்னால் இருக்கின்ற வாழ்க்கையைத் தராதரப்படுத்திப் பார்க்கின்ற, பிரித்துப் பார்க்கின்ற தகுதி நமக்கு இல்லை. அறியாமையால் ஏற்படுகின்ற பயத்தால் செயல்படுகின்றோமேயன்றி, மனதை முன்னால் வைத்து ஆராய்ந்து பார்த்து அதன்படி சரியாகச் செய்ய முற்படுவதில்லை. இதனால் எல்லாமே முறையற்ற விதத்தில் போய்விடுகின்றன. ஆனால் சரியான வாழ்க்கைக்குச் சிந்தனை அவசியம் தேவை.

செயலுக்குப் பின்னால் உணர்வு இருக்க வேண்டும். உணர்வு இருந்தால் தான் அது என்னுடைய செயலாக இருக்க முடியும். உணர்வு என்பது அன்பாக, கருணையாக இருக்க வேண்டும். அறிவு என்பது நானும் அவனும் ஒன்று என்ற நிலை. அன்பான உணர்வும், நான் என்பது அவன் என்ற அறிவும் ஒன்று சேர்ந்து இரண்டுமாகச் செயல்பட வேண்டும். இது தான் கர்மாவைத் தீர்க்கச் சுலபமான வழி. உணர்வால் ஏற்பட்ட பதிவு அறிவுடன் கூடிய உணர்வால் சேர்த்துச் செய்வதன் மூலம் அழியும். எனவே எதைச் செய்தாலும் அன்பு என்ற உணர்வோடு செய்ய வேண்டும். இப்படி செய்தால், பதிவு நிச்சயம் அழியும். செயலைச் செய். பயனை எதிர்பார்க்காதே. அப்படிச் செய்கையில் அது அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்கட்டும். இதைப் புரிந்து கொண்டால் சரி!

சும்மா இருத்தல் என்பது, இடையில் சேர்த்துக்கொண்ட எதுவும் என்னிலேயே தங்கியிராமல், பிறக்கும்போது எப்படி எவ்விதத் தொடர்புமின்றி ஒன்றுமில்லாமல் பிறந்தேனோ, அதுபோலவே இப்பொழுதும் பற்றில்லாத, அகம் பிரம்மாஸ்மி என்ற மன நிலையில் சும்மா இருப்பது, என்னை நான் அறியும்போது, நான் அவனாகி விடுகின்றேன்.

உணர்வையும், அறிவையும் திறந்தால் தான், எல்லாம் நானே என்ற நிலையை அடைந்தால் தான், விடுபட முடியும். எல்லாம் நான் தான் என்றால் அது அங்கு ஈகோ. ஆனால் அறிவால் மட்டும் தான் நாம் அறிகிறோமே தவிர, உணர்வாக அந்த அறிவை மாற்றுவதில்லை. அங்கு தான் பிழை விடுகின்றோம். இவை இரண்டுமே திறக்கப்பட வேண்டும். குடும்பம், உறவு என்பன எல்லாம் சிறிய வட்டங்கள். இவ்வளவு பெரிய உலகத்தில் நீ எதைக் கொடுக்கிறாயோ அது உனக்கு இரண்டு மடங்காகத் திரும்பி வரும். நீ அன்பைக் கொடுத்தால், அது பிரபஞ்ச அன்பாகச் சுயநலமின்றி இருந்தால், அதனை இரண்டு மடங்காகப் பெறலாம். அறிவைத் திறந்தால் தான் அன்பு வெளிப்படும். ஆனால் அறிவோ இதயத்தைத் திறக்க விடாமல் தடுக்கின்றது. அறிவு தெளிவுபடின் அன்பு பெருக்கெடுக்கும்.

அணுத்துகள்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன? அன்பால் ஏற்படுகின்ற தொடர்பையே அவை உணர்த்துகின்றன. எனக்கு முன்னால் தான் அணுத் தொடர்புகளாக உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனக்குள்ளும் இந்த அணுத் துகள்கள் தான் தொடர்பு பட்டிருக்கின்றன. உனக்குள்ளே தான் பிரபஞ்ச சக்தி உனக்கு உதவிக் கொண்டே இருக்கிறது. அது உட்குரலாக உனக்கு எல்லாம் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீதான் அது. எல்லாச் செயல்களிலும் அது நீயாகத் தானே இயங்குகின்றது. இதைப் புரிந்துகொண்டு அந்தப் பெரிய சக்தியே நான் என்று உணர்

இந்த உபதேச உரைகளைக் கேட்பதன் மூலம் உங்களை நீங்கள் வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும். இங்கு ரசனையாகக் கேட்டுவிட்டுப் பழைய வாழ்க்கையை வாழ்வதால் எவ்விதப் பயனுமில்லை. சமுதாய உறவுகளில் அன்பைச் செலுத்துகின்றபோது, அறிவோடு சேர்ந்த அன்பாக அது இருக்க வேண்டும். அன்போடு நான் செயல்படுகின்றபோது, இருப்பாகிய பிரம்மம் சக்தியாக என்னுள் பெருகி என்னைத் தளர்வின்றி இயங்கச் செய்கின்றது. வெறும் அன்பு மட்டும் வெளிப்பட்;டால் அது பிரச்னைகளாகவும் மாறக்கூடும். வீட்டில் அன்பு மட்டும் இருந்தால் பரவாயில்லை, ஆனால் வெளி உலகில் அறிவோடு சேர்ந்த அன்பாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உணர்வில்லாத அறிவு சரியில்லாதது. உணர்வு சேர்ந்த அறிவினால் நட்டம் ஏற்பட்டாலும், தோல்வி ஏற்பட்டாலும் அது பரவாயில்லை. பிறர் நம்மை ஏமாற்றுவது தெரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலை அன்பினால் மட்டுமே ஏற்படும். அங்கு செயல்படுவதில்லை.

எனவே வாழ்க்கையின் சூழ்நிலையில் எதை அனுபவித்தாலும், எந்தப் பிரச்னை என்றாலும் சரி, அன்பு மாறக்கூடாது. நன்றே வரினும், தீதே ஆயினும் அன்பே சிவம்! என்று இருங்கள். வாழ்க்கை இனி அன்பு என்ற நங்கூரத்தில் நிறுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். ( இங்கு சிவம் என்பது அன்பின் தெய்வீகத் தன்மையை விளக்குகின்ற ஒரு சொல்லே தவிர, கோவில்களில் வழிபடுகின்ற சிவன் அல்ல. அன்புக்கு மற்றொரு சொல் சிவம். அது பிரபஞ்சமயமான, எல்லாம் தானாக உணர்ந்து அனுபவித்திருக்கின்ற அன்பு).

சாதாரண உலகியலில் ஆன்மீகமென்பது, ஈகோவாகச் செயல்படுகின்ற நிலையாகத்தான் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. சாதாரணமாக ஆன்மீகம் என்பது கோயிலுக்குச் செல்வது, பக்தி செலுத்துவது, பிரார்த்தனை செய்வது, விரதங்கள் இருந்து உடலையும், உள்ளத்தையும் வருத்துவது என்ற அளவில் தான் இருக்கிறது. இவையெல்லாம் நானல்லாத இந்த உறைகளுக்காக, போலித்தனமாக அறியாமையில் நின்று செயல்படுகின்ற தன்மை. மாறாக, உண்மையான ஆன்மீகமென்பது, ஆன்மாவாகத் தன்னை அறிந்துகொண்டு, அமைதியையும், ஆனந்தத்தையும் இருந்த இடத்திலேயே அனுபவித்துக்கொண்டு இருப்பது. பக்குவப்பட்ட மனதுடன் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, ரசித்து வாழ்வதே சரியான ஆன்மீகம். இங்கு ஈகோ இருக்காது. வெறும் ஆன்ம உணர்வு மட்டுமே இருக்கும்.

உலகம் கணிக்கின்ற சாதாரண் மனித நிலையில் ஓர் ஆன்மீக சாதகன் இருப்பதில்லை. அவனது நோக்கம் ஆத்மாவை நோக்கிய பாதையில் தங்கியிருக்கின்றது. ஆத்மாவின் ஒரு பகுதியே ஜீவன். உறையோடு (உடல் இங்கு உறை என்று குறிப்பிடப்படுகின்றது.) இருக்கின்றபடியால் அது ஜீவாத்மா என்று சுட்டப்படுகின்றதே தவிர, ஆத்மா தான் தன்னை அறியாத வரையில், ஜீவாத்மா என்று பெயரிட்டுக்கொண்டும், பிறகு தன்னைப் பற்றி அறிந்தவுடன் அதுவே ஆத்மாவாகவும் ஆகிவிடுகின்றது. உறையோடு கூடிய ஆத்மா ஜீவாத்மா. உறைகளை விலக்கித் தானாக மட்டும் உணரக்கூடிய நிலை ஆத்மா.

இந்த ஆத்மாவும் பரவெளியில் ஒரு பகுதியே தவிர, ஆத்மா என்ற ஒன்றில்லை. பரமாத்மாவாக, அண்டமாக, விரிந்திருக்கின்ற சக்தி தான், எனக்குள் உயிராக உள்ளே இருந்துகொண்டு இந்த உடலை இயக்கிக்கொண்டிருக்கிறது. பிரம்மம் உறைகளின் வழியே, நமது கர்மப்பதிவிற்கேற்றபடி செயல்பட்டு வாழகின்றது. இந்த உறைகள் “நானல்ல!” என்ற ஞானம் ஏற்பட்டவுடன், ஆத்மாதான் நான் என்பது புரிந்துவிடும். இந்த உண்மைகளைத் தான் நம் புராணங்களில் பொதிந்து வைத்திருக்கின்றனர். வியாசர் இந்த ஆத்ம வித்தை பற்றிய உண்மைகளை புராணங்களில் வடிவங்களின் வாயிலாகப் பதிந்துள்ளார். யம தர்மராஜன் உயிர்களைக் கவர்ந்து சென்று, அவரவர் கர்மப் பலன்களுக்கேற்பப் பிறவிகளைத் தந்து பிறக்க வைக்கின்ற பதவியில் இருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. யமனுக்கு இரண்டு வேலைகள். ஒன்று ஜனன-மரணங்களுக்குப் பொறுப்பு. அடுத்து தர்மத்தை நிர்வகித்தல். தர்ம நியாயப்படி ஜீவனின் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்ற பொறுப்பு இருப்பதால் அவனை, யமதர்மராஜன் என்று குறிப்பிடுகின்றனர்.

தர்மம் என்பது என்ன? மனிதப் பார்வையில் தர்மம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. அவை நமக்குத் தேவையில்லை. ஆன்மீகப் பார்வையில் தர்மம் என்பது தெய்வீகத் தன்மை அல்லது ஆத்மாவாக உணர்ந்து வாழ்தல். மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கம், ஞானம் பெற்று, அந்நிலையில் தன்னையும் மற்ற படைப்புக்களையும் ஒன்றாகப் பார்த்து, அன்பாக நடப்பதுதான்.

இதை உணர்ந்ததால் தான் ஞானிகள், மகான்கள் எல்லாம் இந்தத் தெய்வீகத் தன்மையிலேயே தோய்ந்த நிலையில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு மனிதர்கள், மிருகங்கள், மரம், செடி, மலை, நதி எல்லாமே ஒன்றுதான் சர்வமும் பிரம்மமே! பேதமற்ற, எண்ணங்களற்ற, வெட்டவெளியான சக்தி நிலை. போலித்தன்மைகளை உதறித் தள்ளிவிட்டு இந்த பேதமற்ற அன்பு நிலையை அடையத்தான் நாமும் முயற்சி செய்ய வேண்டும்.

Click here to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s