யாம் பெற்ற இன்பம் – 14

வாழ்க்கை என்பது பாலத்தினடியில் ஓடுகின்ற ஆற்று நீர் போன்றது. வருபவை ஆயிரம், செல்பவை ஆயிரம். ஆறோ ஓடிக்கொண்டே இருக்கின்றது. ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும், வந்து சேர்கின்ற உறவுகளும், பொருள்களும் நிலைத்து நிற்பதில்லை. ஒரு நாள் வரும், ஒரு நாள் எப்படியோ போய்விடும். இப்படி நிகழ்பவை அனைத்தும் நமக்குப் பலவித அனுபவங்களைத் தருகின்றன. ஆனால் இந்த அனுபவங்கள் நமக்குப் பாடமாக அமைந்து, மீண்டும் அவ்வாறு நிகழ்கின்றபோது அறிவுபூர்வமாகச் செயல்பட வைக்கின்றதா அல்லது அதே பழைய விதத்திலேயே மீண்டும் செயல்பட்டுப் புதிய பதிவுகளை ஏற்படுத்திக்கொள்ள வைக்கின்றதா?

கடந்த கால நிகழ்வுகளை மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டு வந்து பார்க்கின்றபோது கவலையும், துன்பமும் ஏற்படுகின்றது. எதிர்காலத்தைப் பற்றிக் கற்பனை செய்ய முற்படுகையில் எதிர்பார்ப்புகள் எழுகின்றன. ஆனால் நிகழ்காலத்தில் மட்டும் இருந்து செயல்படும்போது நிறைவு ஏற்படுகின்றது. விழிப்புணர்வுடன் செயல்படுவதால் முழு கவனமும், திறமையும் வெளிப்பட்டுச் செயல்பட முடிகின்றது. நிகழ்காலத்தில், ‘நான் இருக்கிறேன்’ என்ற உணர்வு மட்டுமே இருக்க வேண்டும். இந்த உணர்வுடன் செயல்படும்போது ஆத்மா தான் நானாகச் செயல்படுகின்றது என்ற உண்மை வெளிப்படும்.

மனதில் ஒரு துாண்டல் வரும்போது அதற்குப் பதிலளிக்கலாம், பதில் அளிக்காமல் இருக்கலாம், எதுவுமே செய்யாமல் அப்படியே விட்டுவிடலாம். உதாரணத்திற்கு ஒரு செயலைச் செய்வதற்கு உள்ளத் துாண்டலின் மூலம் முற்படவேண்டிய நிலையில், அதனைச் செய்யலாம், செய்யாமல் விடலாம், செயலையே மறந்து விடலாம்.

சும்மா இருப்பது என்பது சோம்பேறித் தனமல்ல. ஆத்மாவைச் செயல்பட அனுமதிக்கின்ற நிலை. என்ன செய்கிறோம் என்று யோசிக்காமலேயே ஏதோ ஒன்றைச் செய்து கொண்டிருப்பவர்கள் பலர். அவர்கள் இப்படிச் செய்யத் துவங்கிப் பிறகு, பிழைவிட்டு விட்டேனே என்று தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். ஆன்மீக சாதகர்கள் இன்னமும் இந்த நிலையிலேயே இருக்கக்கூடாது. எங்கும் நிறைந்திருக்கின்ற அந்த மாபெரும் சக்தி எனக்குள்ளாக இருந்துகொண்டு இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, அதுவாகச் செயல்படப் பழகிக்கொள்ள வேண்டும்.

கர்மா தான் மனத்துாண்டலாக நம்மைச் செயல்படத் துாண்டுகின்றது. அவற்றைச் செய்யலாம், செய்யாமல் விடலாம், மறக்கலாம். இந்நிலையில் நிகழ்காலத்தில் நிற்கின்ற நமது நிலை, என்னவாக இருக்க வேண்டும் என்பது தான் இங்கு எழுகின்ற கேள்வி.

அனுபவங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே ஏற்படுகின்றன. அனுபவங்களின் தொகுப்புத் தான் வாழ்க்கை. மாற்றம் என்பது எனக்குள் எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது என்ற உண்மை நமக்குத் தெரியும். இந்த மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பது என்னுள் இருக்கின்ற மாறாத ஒன்று.

இந்த உண்மையை அறிந்தபின் வாழ்க்கையின் நோக்கம் என்னவாகிறது? மாறுகின்ற நிலையிலிருந்து மாறாத ஒன்றை அடையச் செய்கின்ற முயற்சிகள் தான் வாழ்க்கை. எனவே வாழ்க்கை என்பது உண்மையை அறிவதற்காகவே. அனுபவங்கள் தேடல்களே. சும்மா இருந்தால்; தேடல் இருக்குமா? செயல்படுவது எதற்காக? உண்மையை அறிவதற்காக. அறிவென்பது ஞானம். ஞானம் பெற்ற பின்பு தான் தேடல் நிற்கும்.

உணர்வு என்பது அன்பு. என்னுடைய மனதில் பதிவுகளாக இருப்பவை உணர்வோடும், அறிவோடும் சேர்ந்து நான் முன்பு செய்தவை தான். ஆனால் அங்கு உண்மை அறியப்படாத நிலை இருந்தது. இன்று நான் ஞானம் பெற்ற பிறகு, அதாவது உண்மையான என்னைப்பற்றி அறிந்த பிறகு மீண்டும் சில நிகழ்வுகள் அதே போல என் வாழ்க்கையில் எதிர்படுகின்றபோது, நான் அந்தப் பழைய விதத்திலேயே செயல்படாமல், அறிவும் அன்பும் கலந்த உணர்வு நிலையில் இருந்து செயல்படும்போது, பழைய பதிவு அழிகின்றது. புதிய பதிவும் ஏற்படுவதி;ல்லை.

ஏனெனில் இப்பொழுது நான் ஈகோவினால், அறியாமையுடன் செயல்படவில்லை. மாறாகப் பரம்பொருளின் ஒரு பகுதியாக அன்பால், கருணையால், அறிவுபூர்வமாகச் செயல்படுகின்றேன். இப்படிச் செயல்படும் என்னில் அந்தப் பெரிய ‘நான்’ தான் செயல்படுகின்ற ஞானம் அடைந்த நிலை. இந்நிலையில் இருந்தால் எனது இதயமும், புத்தியும் திறந்திருக்கும். உணர்வும், அறிவும் கலந்த நிலையில் தான் இப்படி, எல்லாம் நானே என்று விரிவடைய முடியும்.

நம்மிடம் பதிக்கப்பட்டிருக்கின்ற கர்மப்பதிவுகள் உபதேசம் பெறு முன்னர் அப்போதிருந்த அறிவின், அப்போதிருந்த உணர்வின் அடிப்படையில் செயல்பட்டதால் ஏற்பட்டவை. இப்பொழுது ஞானம் அடைந்த நிலையில் வருகின்ற சூழ்நிலைகளில் ஆத்ம ஒளியில் அறிவு செயல்பட்டாலும், அதில் அன்பு என்னும் உணர்வைக் கலந்து செயல்பட்டால் தான் அந்தப் பழைய பதிவுகள் நீங்கிவிட்ட நிலையில் இனிப் புதிய பதிவுகள் ஏற்படாமல் போகும்.

இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காகவே பழைய நிலையில் இருந்துகொண்டே செயல்படுகிறீர்களா? அல்லது அறிவும், உணர்வும் கலந்து செயல்படுகிறீர்களா? அல்லது அறிவால் மட்டும் செயல்படுகிறீர்களா? அல்லது அன்பை மட்டும் வைத்துக்கொண்டு செயல்படுகிறீர்களா? என்றெல்லாம் குரு கேட்கின்றார்.

நமக்கு நாமே செய்துகொள்கின்ற ஆத்ம பரிசோதனைகளில் நம்மை நாமே நன்;றாக அலசிப் பார்க்க வேண்டும். பிறருடைய கருத்துக்கள் ஒரு உதவியாக, வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர, அவற்றை நம்முடையவையாக நாம் ஏற்றுக்கொண்டு அவற்றை மட்டுமே பின்பற்றினால், விடுதலை பெற முடியாது.

மாற்றம் என்னில் ஏற்பட வேண்டுமென்றால் என்னை நானே சுயமாக ஆராய வேண்டும். கடந்த காலத்திலும் இப்போது உள்ள நிலையிலும் என்னில் ஏற்பட்டுள்ள அகமாற்றங்களை நான் கவனிக்க வேண்டும். இப்படிக் கவனித்து ஞானத்துடன் கூடிய விழிப்புணர்வுடன், நிகழ்காலத்திலேயே, நான் அவன் என்ற நிலையில், உணர்வும், அறிவுமாக எந்தவிதச் சார்புமின்றி உறுதியுடன் செயல்பட ஆரம்பிக்கின்றபோது தான் விடுதலை பெற முடியும். சமூகத்தால் சொல்லப்பட்ட அனைத்தையும் நாம் நம் அறிவினால் ஆராய்ந்து, அது சரி என்று பட்டால் தான் எனக்கு ஏற்றதாக மாற்றி ஏற்பது என்பதுதான் உண்மையான கல்வி.

வேதங்கள் மட்டும் தான் வாழ்வின் உண்மைகளை ஆணித்தரமாகச் சொல்லி வைத்திருக்கின்றன. மற்றவை எது என்றாலும் அவை எல்லாமே ஆகமங்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. வேதம் என்பது ஸ்ருதி. அது இறைவனால் ஒலியலைகளாக வெளிப்படுத்தப்பட்டு, அவை ரிஷிகளால் உள்ளுணர்வால் உணரப்பட்டவை. அப்படி உணர்ந்தவற்றை அவர்கள் வேதங்களாகத் தொகுத்து வைத்தனர். அந்த வேதங்களில் எந்தவித மாற்றங்களோ, இடைச்செருகல்களோ கிடையாது. ஆனால் ஆகமங்கள், இதிகாசங்கள், புராணங்கள் போன்ற எல்லாமே அவற்றை விளக்கவுரைகளாக (பாஷ்யங்களாக) அவற்றைத் தொகுத்தவர்களின் அறிவு மட்டத்திற்கேற்றபடி அமைந்திருக்கின்றன. இந்தக் கருத்துகளெல்லாம் ஒன்றுக்கொன்று முரண்படலாம். ஆனால் வேதங்களை யாராலும் மாற்ற முடியாது.

கர்மப்பதிவுகளை மாற்ற முடியாது, அனுபவித்துத்தான் தீர்க்க முடியும் என்பது சித்தாந்தம். அது வேதாந்தம் அல்ல. கர்மாவை அறிவால் மாற்ற முடியும். நாம் உண்மையைப் புரிந்துகொண்ட நிலையில் சரியாகச் செயல்படுவதின் மூலம் கர்மாவை மாற்றலாம். மேலும் அப்படிச் செய்வதன் மூலம் தான் விடுதலை பெற முடியும். கர்மாவைத் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டே இருந்தால் பிரயோசனமில்லை. கர்மா மேலும் தொடராமல் நிறுத்தப்பட வேண்டும். ஞானத்துடன், அறிவும் உணர்வும் கலந்து செயல்படும்போது தான் கர்மாவாக அவை மாறாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நிலையில் வேதாந்தத்தை அறிந்த பின்பு, இந்த உண்மையிலேயே மிகத் துணிவுடன் நிலைத்து நிற்க வேண்டும். மாறுபட்ட கருத்துக்களை எதிர்த்து வாதிடக்கூடிய தெளிவும், துணிச்சலும், வாதத்திறமையும், எடுத்துரைக்கும் திறனும் நமக்கு இருக்க வேண்டும். சமுதாயம் துாக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்ற பல கருத்துக்களை எதிர்க்க வேண்டிய அல்லது உண்மையை உணர்த்த வேண்டிய கடமை ஒரு வேதாந்திக்கு இருக்கின்றது. உண்மையின் மீது நின்று கொண்டிருக்கின்ற படியால், உண்மையை அஞ்சாது உரைக்கக்கூடிய துணிவு கட்டாயம் இருக்க வேண்டும். பிழையான கருத்துக்களைப் பிழையென்று சுட்டிக்காட்டி விளக்கம் கூற வேண்டும்.

உணர்வால் ஏற்பட்ட பதிவுகள் உணர்வால் அழிக்கப்பட வேண்டும். நம்பிக்கை இறுகிப்போயிருந்தால் தேடலும், வளர்ச்சியும் அங்கு ஏற்படாது. கண்மூடித்தனமான நம்பிக்கைகள் ஒருவரைக் குருடாக்கிவிடும்.

புரோட்டோன், நியுட்ரான், எலக்ட்ரான் ஆகிய அணுத்துகள்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாத நிலையில் எங்கும் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள படைப்புக்கள் அனைத்திலிருந்தும் அவை ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன. நான் தான் அவற்றைக் கவனிப்பதில்லை. இவை அடுத்த அணுத்துகள்களோடு இசைவு கொண்டவை. ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை அவை எங்கோ தொலை துாரத்தில் இருக்கும் தனது அடுத்த ஜோடித் துகள்களோடு, அது எந்தச் சூரிய மண்டலத்தில் இருக்குமென்றாலும் தொடர்பு கொள்கின்றன. இது குவாண்டம் தியரி (Quantum theory) கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட விஞ்ஞான ரீதியான மிக முக்கியமான ஒரு உண்மை.

ஒளியை விட எண்ணம் அதிக விரைவுத்தன்மை கொண்டது. எனது உடல் உருவானது அன்பினால். அதாவது அணுக்களின் இசைந்த தன்மையினால் தான். எனவே என்னில் இருப்பவையும், இந்தப் பிரபஞ்சத்தில் இருப்பவையும் ஒன்றுக்கொன்று அன்பால் இசைவும், இணக்கமும், தொடர்பும் கொண்டவை. படைப்பிற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. நோக்கமும், அன்பு ரீதியான சுழற்சியுமாகப் படைப்பு இருக்கின்றது.

எனது உடல் ஒரு தகவல் பரிமாற்ற நிலையம். பசிப்பது, வலிப்பது, பேசுவது எல்லாமே தகவல் பரிமாற்றமே. ஏன் அன்பைப் பிரபஞ்சம் வரையிலுமாக விரிக்கவேண்டும் என்று சொல்கிறோம்? நம் உடலிலுள்ள அணுக்கள் தான் எல்லா இடங்களிலும் பரவியிருப்பதால், தொடர்பு பட்டிருப்பதால், இணைந்திருப்பதால் அந்த அன்பு எல்லா இடங்களிலும் பரவும். இப்படி அன்பால் தொடர்பு கொள்கின்றபோது பிரபஞ்ச இயக்கம் அன்பு இயக்கமாக ஆகிவிடுகின்றது. நான் அன்பு மயமாகச் செயல்படுவதன் மூலம் பிரபஞ்சத்தையே அன்பு மயமாக ஆக்க முடியும். அன்பு அலைகள் அணுத் தொடர்பால் எல்லா இடங்களிலுமே பரவும்.

அன்றாட வாழ்வில் உங்கள் வீட்டில் நீங்கள் வெளிப்படுத்தும் தொடர்புகளின் பின்னால் இந்த அன்பென்னும் உணர்வு இருந்தால், அதே அன்பு மற்றவரிடமும் பிரதிபலிக்கும். எண்ணங்களாலும், ஆசைகளாலும், மற்ற ஆராய்ச்சிகளாலும் என்னைக் குறுக்கிக் கொண்ட நிலையில் பிறருடன் தொடர்பு கொள்கின்றபோது அங்கு அன்பு பிரதிபலிக்காது. இதே சுய நலம் தான் பிரதிபலிக்கும். விழிப்புணர்வோடு கூடிய மனதில் நின்று உணர்வால் செயல்படும்போது எல்லாம் அன்பு மயம். எதிலும் சேராத நிலை. இது மறைக்கப்படும்போது மற்றவை எல்லாம் கவனத்தை இழுக்கும். இதைத்தான் சிவமயம் என்று சொல்லியிருக்கின்றார்கள். இவை எல்லாம் அன்பு கலக்காத நிலையில்தான் எங்கும் எல்லாம் நடக்கின்றன.

எனவே தான் அந்நிலையில் கோவில், பஜனை, விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றெல்லாம் மனம் தேடி அலையும். அன்பு வயப்பட்ட நிலையில் அடங்கினால் இவை எதுவுமே தேவையில்லை. எதைச் செய்ய வேண்டிய சூழ்நிலை கர்மாவால் ஏற்பட்டாலும், அதைச் செய்யலாம், செய்யாமல் இருக்கலாம், மறந்தே போகலாம். ஒரு உடலில் உள்ள அணுக்கள் வெடித்தால் உலகம் தாங்காது. ஆனால் நாமோ அவரோடு பேசுவதில்லை, அந்த வீட்டிற்குப் போவதில்லை, அவர்களோடு சண்டை என்ற ரீதியில் ஒற்றுமையும் இசைவுமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவற்றதாக நாம் கருதுகின்ற அணுக்களின் ஒத்திசைவு அறிவார்ந்த நம்மிடம் அன்பாக வெளிப்படுவதில்லை. மனிதன் மட்டுமே உணர்ச்சிகளால் பாதிக்கப்பட்டு அன்பை மறக்கிறான். உணர்ச்சி வசப்பட்டால் கோபம்! பிறகு வெறி! அதனால் உடல் நிலை பாதிப்பு!

விஞ்ஞான ரீதியாக எனது உடலமைப்பை ஆராய்ந்தால் இந்த உடலில் உள்ள அணுக்கள் எல்லாம் அன்பால் இசைந்து ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கின்றன என்பது தெரிய வரும். ஆனால் நானோ அந்த அன்பை மறந்த நிலையில் செயல்படுகின்றேன். இது அறிவுள்ள நிலையா? சிந்தித்துப் பாருங்கள்.

நமக்கு முன்னால் இருக்கின்ற வாழ்க்கையைத் தராதரப்படுத்திப் பார்க்கின்ற, பிரித்துப் பார்க்கின்ற தகுதி நமக்கு இல்லை. அறியாமையால் ஏற்படுகின்ற பயத்தால் செயல்படுகின்றோமேயன்றி, மனதை முன்னால் வைத்து ஆராய்ந்து பார்த்து அதன்படி சரியாகச் செய்ய முற்படுவதில்லை. இதனால் எல்லாமே முறையற்ற விதத்தில் போய்விடுகின்றன. ஆனால் சரியான வாழ்க்கைக்குச் சிந்தனை அவசியம் தேவை.

செயலுக்குப் பின்னால் உணர்வு இருக்க வேண்டும். உணர்வு இருந்தால் தான் அது என்னுடைய செயலாக இருக்க முடியும். உணர்வு என்பது அன்பாக, கருணையாக இருக்க வேண்டும். அறிவு என்பது நானும் அவனும் ஒன்று என்ற நிலை. அன்பான உணர்வும், நான் என்பது அவன் என்ற அறிவும் ஒன்று சேர்ந்து இரண்டுமாகச் செயல்பட வேண்டும். இது தான் கர்மாவைத் தீர்க்கச் சுலபமான வழி. உணர்வால் ஏற்பட்ட பதிவு அறிவுடன் கூடிய உணர்வால் சேர்த்துச் செய்வதன் மூலம் அழியும். எனவே எதைச் செய்தாலும் அன்பு என்ற உணர்வோடு செய்ய வேண்டும். இப்படி செய்தால், பதிவு நிச்சயம் அழியும். செயலைச் செய். பயனை எதிர்பார்க்காதே. அப்படிச் செய்கையில் அது அன்பை அடிப்படையாகக் கொண்டிருக்கட்டும். இதைப் புரிந்து கொண்டால் சரி!

சும்மா இருத்தல் என்பது, இடையில் சேர்த்துக்கொண்ட எதுவும் என்னிலேயே தங்கியிராமல், பிறக்கும்போது எப்படி எவ்விதத் தொடர்புமின்றி ஒன்றுமில்லாமல் பிறந்தேனோ, அதுபோலவே இப்பொழுதும் பற்றில்லாத, அகம் பிரம்மாஸ்மி என்ற மன நிலையில் சும்மா இருப்பது, என்னை நான் அறியும்போது, நான் அவனாகி விடுகின்றேன்.

உணர்வையும், அறிவையும் திறந்தால் தான், எல்லாம் நானே என்ற நிலையை அடைந்தால் தான், விடுபட முடியும். எல்லாம் நான் தான் என்றால் அது அங்கு ஈகோ. ஆனால் அறிவால் மட்டும் தான் நாம் அறிகிறோமே தவிர, உணர்வாக அந்த அறிவை மாற்றுவதில்லை. அங்கு தான் பிழை விடுகின்றோம். இவை இரண்டுமே திறக்கப்பட வேண்டும். குடும்பம், உறவு என்பன எல்லாம் சிறிய வட்டங்கள். இவ்வளவு பெரிய உலகத்தில் நீ எதைக் கொடுக்கிறாயோ அது உனக்கு இரண்டு மடங்காகத் திரும்பி வரும். நீ அன்பைக் கொடுத்தால், அது பிரபஞ்ச அன்பாகச் சுயநலமின்றி இருந்தால், அதனை இரண்டு மடங்காகப் பெறலாம். அறிவைத் திறந்தால் தான் அன்பு வெளிப்படும். ஆனால் அறிவோ இதயத்தைத் திறக்க விடாமல் தடுக்கின்றது. அறிவு தெளிவுபடின் அன்பு பெருக்கெடுக்கும்.

அணுத்துகள்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன? அன்பால் ஏற்படுகின்ற தொடர்பையே அவை உணர்த்துகின்றன. எனக்கு முன்னால் தான் அணுத் தொடர்புகளாக உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனக்குள்ளும் இந்த அணுத் துகள்கள் தான் தொடர்பு பட்டிருக்கின்றன. உனக்குள்ளே தான் பிரபஞ்ச சக்தி உனக்கு உதவிக் கொண்டே இருக்கிறது. அது உட்குரலாக உனக்கு எல்லாம் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. நீதான் அது. எல்லாச் செயல்களிலும் அது நீயாகத் தானே இயங்குகின்றது. இதைப் புரிந்துகொண்டு அந்தப் பெரிய சக்தியே நான் என்று உணர்.

இந்த உபதேச உரைகளைக் கேட்பதன் மூலம் உங்களை நீங்கள் வெறுமையாக்கிக் கொள்ள வேண்டும். இங்கு ரசனையாகக் கேட்டுவிட்டுப் பழைய வாழ்க்கையை வாழ்வதால் எவ்விதப் பயனுமில்லை. சமுதாய உறவுகளில் அன்பைச் செலுத்துகின்றபோது, அறிவோடு சேர்ந்த அன்பாக அது இருக்க வேண்டும். அன்போடு நான் செயல்படுகின்றபோது, இருப்பாகிய பிரம்மம் சக்தியாக என்னுள் பெருகி என்னைத் தளர்வின்றி இயங்கச் செய்கின்றது. வெறும் அன்பு மட்டும் வெளிப்பட்டால் அது பிரச்னைகளாகவும் மாறக்கூடும். வீட்டில் அன்பு மட்டும் இருந்தால் பரவாயில்லை, ஆனால் வெளி உலகில் அறிவோடு சேர்ந்த அன்பாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உணர்வில்லாத அறிவு சரியில்லாதது. உணர்வு சேர்ந்த அறிவினால் நட்டம் ஏற்பட்டாலும், தோல்வி ஏற்பட்டாலும் அது பரவாயில்லை. பிறர் நம்மை ஏமாற்றுவது தெரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளும் நிலை அன்பினால் மட்டுமே ஏற்படும். அங்கு அறிவு செயல்படுவதில்லை.

எனவே வாழ்க்கையின் சூழ்நிலையில் எதை அனுபவித்தாலும், எந்தப் பிரச்னை என்றாலும் சரி, அன்பு மாறக்கூடாது. நன்றே வரினும், தீதே ஆயினும் அன்பே சிவம்! என்று இருங்கள். வாழ்க்கை இனி அன்பு என்ற நங்கூரத்தில் நிறுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். (இங்கு சிவம் என்பது அன்பின் தெய்வீகத் தன்மையை விளக்குகின்ற ஒரு சொல்லே தவிர, கோவில்களில் வழிபடுகின்ற சிவன் அல்ல. அன்புக்கு மற்றொரு சொல் சிவம். அது பிரபஞ்சமயமான, எல்லாம் தானாக உணர்ந்து அனுபவித்திருக்கின்ற அன்பு).

click here to view the article in pdf

Advertisements

One thought on “யாம் பெற்ற இன்பம் – 14

 1. ammah!
  I remembering guru’s lectures in every word of your writing.I read almost of your articals “YAM PETTA INPAM”.I realy enjoyed with every articals, specially part 18. So what I did, I send your articalls to whom I have contact with.
  When I was reading your articalls,I was surprized because what ever you wrote, the same meaning that I wrote in my 2 articalls,sofarI wrote to suthantiran,. Might be we are from the same school,or might be the truth is
  thankyou,ammah.
  Shankar,24thaug2009.

  OHM NAMASHIVAYA.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s