யாம் பெற்ற இன்பம் – 12

தன்னை அறிதலாகிய ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபடுகின்ற சாதகர்களுக்கு அவர்களது பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றபடி தான் குரு கிடைப்பார். உங்கள் பதிவுகளிலேயே (blue print)குரு இருப்பார். தொடர்ந்து தேடலின் விளைவாக அந்த வேளை வந்து அமையும்போது அந்த குருவை நீங்கள் சந்திப்பீர்கள். யாருடைய உபதேசத்தின் வாயிலாக நீங்கள் உண்மையை அறிகின்றீர்களோ, அதன் மூலம் அமைதியையும், சாந்தியையும் பெறுகின்றீர்களோ அவர் தான் உங்கள் குரு.

கப்பலுக்கு மாலுமி எவ்வளவு அவசியமோ, அவ்வாறு ஓர் ஆன்ம சாதகருக்குக் கட்டாயம் ஒரு குரு தேவை. குரு பரம்பரை இன்று வரை தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் எத்தனையோ விதங்களில் வழி காட்டியாகவோ, அறிவை ஊட்டுபவராகவோ, திசை திருப்புபவராகவோ அமைந்த எத்தனையோ பேரை குருவாக எண்ணி நாம் ஏற்றிருக்கலாம். ஆனால் வெளியில் சுற்றித் திரிந்த என்னை உள் முகமாகத் திருப்பி, என்னை நானே பார்க்க வைத்தவர் தான் எனது குரு.

எந்த குருவும் தன்னைப் பார்க்கவும், தன்னைப் பின்பற்றவும், தன்னை வழிபடவும் சொல்லக்கூடாது. உனக்குள் இருக்கின்ற உனது குருவைப் பார்! என்று தான் காட்டித் தரவேண்டும். தனி மனித வழிபாடு, குழு வழிபாடு போன்றவை இருக்கக்கூடாது. அனைத்துமே ஆத்மா என்ற பரந்த மன நிலை ஏற்படுவது தான் ஒருவரின் சிறந்த ஆன்மீக முன்னேற்றம்.

இந்தக் குழு வழிபாட்டு முறைகள் எதுவும் கனடா யோக வேதாந்த நிறுவனத்தில், எமது குருவின் உபதேச ஞான வேள்வியில் ஒரு நாளும் இல்லை. இந் நிறுவனத்தில் பாட்டு, பஜனை, மணி, கற்பூரம், சுண்டல் என்று எதுவுமே கிடையாது. இங்கு ஞான உயர்விற்கான பயிற்சி மட்டும் தான் அளிக்கப்படுகின்றதே தவிர, வேறு எந்த விதக் கட்டுப்பாடுகளோ, வழிபாட்டு முறைகளோ எதுவுமில்லை. என்னை நான் அடைதல் என்ற குறிக்கோளை நோக்கிய பயிற்சியே இங்கு அறிவு பூர்வமாக வழங்கப் படுகின்றது.

குருவின் முதற் பணியாகவும், கடினமான பணியாகவும் இருப்பது. சீடனின் ஈகோவை உடைத்து இல்லாமற் செய்வது தான். ஏனெனில், சாதாரண நிலையில் மனித மனம் ஏற்றி வைத்திருப்பது ஏராளம்! பிறர் விதைத்த மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்களும், பொய்யான எண்ணங்களும், போலித்தனமான நம்பிக்கைகளும், குடும்பப் பழக்கப் பாதிப்புகளும், அறியாமையும் இலேசில் விலகாது. இவை இருக்கும்வரை ஞானம் ஏறாது. எனவே தான், வியாபித்திருக்கும் ஈகோவை உடைத்து, குரு, சீடனை அதன் பிடியிலிருந்து விடுவிக்கிறார். அவரது அயராத, தொடர்ந்த முயற்சியால் சீடனின் ஆன்மீகப் பார்வையின் அளவு உயர உயர, ஈகோவின் ஆதிக்கம் குறைந்து கொண்டே போகும். ஈகோ இல்லாமற் போனால் தான் ஞான உணர்வு அதிகரிக்கும், பரிணாம முன்னேற்றம் ஏற்படும்.

இந்த நிலையை அடைவதற்காகத்தான் வெட்ட வெளித்தன்மையில் தொடர்ந்து இருக்கப் பழக வேண்டும் என்பதைக் குரு அடிக்கடி வலியுறுத்துகின்றார். இந்த வெட்டவெளித் தன்மை என்பது எண்ணங்களற்ற மனவெளியில் தங்கியிருப்பது. இவ்வாறு மனதில் எண்ணங்களற்று வெறுமையாக்கி அதில் நிலைத்திருக்கும் போது முழுமையான ஆற்றல் நிறைகின்றது. சக்தியின் நிலைக்களனாகிய மனவெளியிலிருந்து தான் எல்லா இயக்கங்களும் வெளிப்படுகின்றன. இவை சீராக வெளியிடப்பட முடியாமல், அங்கு ஏற்படுகின்ற எண்ணங்களாகிய சக்தி முடிச்சுகள் தடுக்கின்றன. டேவிட் போஹூம்
(David Bohom)என்ற விஞ்ஞானி Reality is the projection of thought – உண்மை தான் எண்ணங்களாகப் பிரதிபலிப்பதாகக் கூறியுள்ளார்.

நமது வாழ்க்கையில் நாம் பெற்ற அறிவு, அனுபவம் எல்லாமே எண்ண முடிச்சுக்களாகத் தான் நமது மூளையில் புள்ளிகளாகத் தங்கியிருக்கின்றன. கணினியில் ஒரு சிறிய புள்;ளியைத் தொட்டு க்ளிக் பண்ணியவுடன், அது ஒரு பெரிய படமாகத் திரையில் விரிவதைப் போல, ஓர் எண்ணப் புள்ளியை நமது மனம் தொட்டவுடன், அந்த அனுபவம் ஒரு நிகழ்ச்சியாக மனத்திரையில் விரிகின்றது. நமது சக்தியால் எண்ணங்களை நாம் பிடித்து வைத்திருக்கின்றோம். இவற்றைத் தொடாமல், திருப்பித் திருப்பிப் பார்க்காமல், மனத்திரையை வெறுமையாக்கி வைத்திருக்கப் பழகிவிட்டால், சக்தி செலவழியாது. ஒரு செயலில் ஈடுபடுகின்றபோது அல்லது ஏதாவது ஒன்றைப்பற்றி நினைக்கின்றபோது, நமது சக்தி அதற்காகச் செலவழிக்கப்படுகின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் நாம் ஈடுபட்டுச், செய்ய வேண்டிய செயல்களை மட்டும் சரியாகச் செய்துவிட்டு, நமது உள் நிலையாகிய, சக்தி நிலையம் என்று சொல்லக்கூடிய வெட்டவெளிக்குத் திரும்பிவிடப் பழகுவது நல்லது. நம் உணர்வு செயலுக்காக வெளிப்பட்டு, செயல்பட்டு, உடனடியாக இருப்பு நிலைக்குத் திரும்புதல். இப்படித் தொடர்ந்து இருக்கின்றபோது, ஈகோ செயல்படுவதில்லை. ஈகோ எழும்பித் திரிவதற்குச் சக்தி தேவை. நாம் சக்தியைச் சேமிக்க முற்பட்டால், ஈகோவிற்குப் பிறகு வேலையில்லை. இந்நிலையில் இருப்பவர், நிகழும் சம்பவங்களுக்காகச் சிரித்து மகிழ்ந்து ஆடுவதுமில்லை: அழுது ஏங்கித் துவண்டு போவதுமில்லை. சளசளவென்று பேசுவதுமில்லை. கோபத்தால் கொதித்து வெடிப்பதுமில்லை. கோபப்படுவதால் அதிக சக்தி வீணாகின்றது. கோபம் வந்தால் அதை வெளிப்படுத்தவும் வேண்டாம், அடக்கவும் வேண்டாம், அப்படியே அமைதியாக இருந்துவிட்டால், அந்தக் கோபம் எண்ணமாக மாறித் தானாகவே மறைந்துவிடும். ஞானம் அதிகமாக இருந்தால் கோபம் வராது.

பொறாமை கொள்வதும், பகை உணர்ச்சியும் கூட இப்படித்தான். சுயக் கட்டுப்பாடு இருந்தால், இவற்றைப் பெரிதுபடுத்தாமல் வந்த விதத்திலேயே இல்லாமற் போக வைக்க முடியும். இதனால் நமது ஆற்றலும் வீணாகாது. இம்முறையில் தொடர்ந்து இருக்கின்றவர்களுக்குப் பிறரிடம் மனஸ்தாபங்களோ, பகையோ எழாது. வாழ்க்கையும் சுமுகமாக இருக்கும்.

இந்த அமைதித் தன்மை நம்மில் எப்பொழுதும் இருக்கிறது. இந்த அமைதி நிலை தான் நமது இயல்பான தன்மை. ஆனால் ஆத்மாவை நான் என்று அறியாத நிலையில் கர்மா எம்மை வைத்திருந்தபடியால், நாம் வாழ்க்கை ஓடிய விதத்தில் ஓடிக்கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது ஞானம் பெறுகின்ற நிலையில் சிந்திக்கத் துவங்கிவிட்டோம். ஆத்மாவைப் பற்றிய அறிவு தெளிந்துவிட்டது. எண்ணங்களற்ற, துhண்டுதலற்ற வெட்டவெளியில் இருப்பதே சுகம்! என்பதும் புரிந்துவிட்டது. இனியும் பழைய பதற்ற நிலைக்குப் போகலாமா? என்பது தான் கேள்வி.

இனி பொருள்களோடும், உறவுகளோடும் நாம் கொள்கின்ற தொடர்புகளை, இந்த வெட்டவெளியில் நின்று பழகிய நிலையில் கையாண்டால், வாழ்க்கை பிரச்னையின்றிப் போகுமே! ஏனெனில், உள் நிலைதான் வெளி விவகாரங்களைத் தீர்மானிக்கின்றது. நாம் ஏன் அனாவசியமாகப் பிறரைச் சீண்டுவதில்லை? சீண்டினால் சண்டை வரும் என்பது நமக்குத் தெரிந்திருக்கிறது. இதே தான் ஒவ்வொரு விடயத்திற்கும்! அந்தச் சிறுபிள்ளைத்தனம் இப்போது நம்மிடமிருந்து விலகிவிட்டது. இது தான் உயர் மன நிலை.

உயர் உணர்வு நிலையில் நாம் தொடர்ந்து இருக்கின்றபோது, நமக்குத் தேவையானவை அனைத்தும் தானாகவே நிறைவேறுவது தெரிய வரும். வெட்டவெளித் தன்மையில் நாம் இருப்பதைப் பொருத்துத் தான் இந்த நிலை ஏற்படும். இப்படி என்னுடனேயே நான் தங்கி இருக்கின்றபோது, உள் அமைதியான சாந்தி ஏற்படும். இந்த சாந்தியிலேயே தொடர்ந்து இருந்தால், ஆனந்தம் பெருகுமல்லவா? எது நடந்தாலும் பதறாமல், சிதறாமல், நிதானத்துடன் செயல்பட இந்த அமைதித் தன்மை பெரிதும் உதவும். எல்லாம் அது பார்த்துக் கொள்ளும்! என்ற இந்த மன அமைதி நிலையைத்தான் நமது பெரியோர் ‘தெய்வ சங்கல்பம்’ என்று கூறுகின்றனர்.

பதறாத காரியம் சிதறாது! என்ற பழமொழிக்கு உண்மையான பொருள், அன்றாட வாழ்வில் எந்தவித எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும், ஏக்கங்களுமின்றி, வெட்டவெளி உணர்வில், சாந்தி நிலையில் நமது செயல்களைச் செய்து பழகினால், கிடைக்க வேண்டியது, கிடைக்க வேண்டிய விதத்தில், கிடைக்க வேண்டிய நேரத்தில், தானாகக் கடைக்கும் என்பது தான்.

Click here to view the article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s