யாம் பெற்ற இன்பம் – 11

இதுவரை நாம் வாழ்ந்த வாழ்க்கை நாம் உணர்ந்து வாழ்ந்ததல்ல. ஏதோ எல்லோரும் வாழ்கிறார்கள், நானும் வாழ்கிறேன் என்ற விதத்தில் வாழ்ந்தது தான்; இந்த வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் நமது உணர்ச்சிகளின் வழியாக, ஈகோவை அடிப்படையாக வைத்துத் தான் வாழ்ந்திருக்கிறோம். நான் என்றும், எனது என்றும், எனக்கு என்றும், என்னுடையது என்றும், என்னைச் சேர்ந்தது என்றும் நம்மை முன்னிலைப் படுத்திச் சுயநலத்துடன் அனைத்தையும் பார்த்து வாழ்ந்து வந்தோம்.

இப்பொழுது வாழ்க்கை நம்மை சிந்திக்கத் துாண்டியிருக்கிறது. நம்மைச் சுற்றி நடப்பவை நம் விருப்பத்திற் கேற்றவையாக இல்லை. எதைச் செய்தாலும் மனம் ஒன்றிச் செய்ய முடியவில்லை. பிறருடன் ஏற்படும் கருத்து மோதல்களை, பிறரின் குண வேறுபாடுகளால் நாம் பாதிக்கப்படுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் நாம் பெறுகின்ற ஞானம் தான் நம்மை அமைதியடையச் செய்ய முடியும்.

தனக்குத் தானே முயன்று தன்னை அறிய வேண்டும். எனது உள்ளேயிருந்து கொண்டு என்னை வழி நடத்திக் கொண்டிருக்கும் ஆத்மாவாகிய விழிப்புணர்வுடன் எப்பொழுதும் தொடர்பு கொண்ட நிலையில் நான் எனது வாழ்க்கையைக் கொண்டு செல்ல வேண்டும். இப்படி வெட்ட வெளியாக, வௌ்ளை ஒளியாக என்னுள் திகழ்கின்ற உள்ளுணர்வுடன் தொடர்ந்து தொடர்பு கொண்ட நிலையில் நான் இருக்கின்றபோது, நானல்லாத எனது உறவுகளான இந்த உடல், எனது மனம், புத்தி என்ற எல்லாம் மெல்ல மெல்லத் தம் வலிமையை இழந்து தமது முக்கியத்துவத்தை இழந்து, அமைதியடைகின்றன.

அவற்றின் துாண்டுதல்களிலிருந்து விடுபட்ட நிலைக்கு நான் வந்துவிடும்போது, எனது பரிணாம வளர்ச்சி மேலும் உயர்கிறது. எனது ஆத்மாவின் முனை மேலும் வெளிப்பட்டு, அதிகரித்து ஒளியைப் பெருக்குகின்றது. சடப் பொருள்கள் மங்கி ஆத்ம ஒளி வெளிப்படுகின்றது. யோசித்துப் பாருங்கள்! எத்தனையோ மனிதர்களின் முகத்தில் அருள் ஒளி வெளிப்படுவதை நாம் கவனித்திருக்கின்றோம். வயதான பல முதியவர்களின் முகங்களில் அழகு வெளிப்படுவதை நாம் பார்த்திருக்கின்றோம். அந்த தேஜஸிற்கு அவர்களின் உள்ளொளி தான் காரணம். புற அழகு போய்விட்ட பின்பும் அவர்களது மனப்பக்குவம், ஆத்மாவில் ஒன்றிய நிலை இப்படி வெளிப்படுகின்றது. குழந்தைகளிடமும் இந்தத் தெய்வீகத் தன்மை வெளிப்படும். குறிப்பாக மகான்களின் கண்களைப் பார்த்தால் அதில் கருணையும், பற்றின்மையும், ஒரு தெய்வீக ஒளியும் சுடர் விடும். இந்த ஒளி நமக்குள்ளேயும் இருக்கின்றது. அது வெளிப்பட நமது குறுகிய சிந்தனையும், நமது முறையற்ற செயல்களும் தடைகளாக இருக்கிpன்றன.

பரவெளியான அகண்டம், எண்ணத்திற்குள் அகப்படாது. மனவெளியைக் கடந்தது, பரவெளி. தொடர்ந்து எண்ணங்களை ஒதுக்கி, மனதை வெறுமையாக ஆக்குகின்ற முயற்சியில் விடாமல் ஈடுபட்டுக் கொண்டே இருப்பவருக்கு, இந்த ஒளிப் பரவெளி தெரியும். பரவெளியை உணர்ந்து அதிலேயே தொடர்ந்து இருப்பவர்கள், ஞானிகள். சித்தர்கள் எதிர்மறை எண்ணங்களே இல்லாத நிலையில் இருப்பவர்களிடம் ஈகோ இருக்காது. ஈகோ இல்லாதவர்களால் பரவெளியை எளிதாக அடைய முடியும்.

யாதும் ஊரே! யாவரும் கேளிர்! என்னும் பரந்த மனப்பான்மை உங்களிடம் இருக்கிறதா என்று ஆராய்ந்து பாருங்கள். யாராயிருந்தால் என்ன? எல்லோருமே நான் தான்! என்று எண்ணி, எளிமையாக, அன்பாகப் பழகிப் பாருங்கள். அவர்களிடமிருந்து அது பன்மடங்காகத் திரும்பி வரும். என்னுடையது, என் மக்கள், என் இனம் என்றெல்லாம் சிந்தனையைக் குறுக்கக் கூடாது. எல்லோரும் ஓர் இனம்! எல்லோரும் எம் மக்கள்! என்று பார்க்க வேண்டும்.

இப்போது உலக நாடுகளிடையே நடந்து கொண்டிருக்கின்ற அனர்த்தங்கள் எல்லாமே இந்தக் குறுகிய மனப்பான்மையினால் தான். விரிந்த மனதுடன் எல்லாவற்றையும் பார்க்க முற்படுபவர்களுக்குத் தான் இந்த உண்மை புரியும். ஒரு செயலைச் செய்ய முற்படுமுன், திட்டம் தீட்டுவதற்கு முன், நான் செய்வது சரியா? என்று பலமுறை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பல கோணங்களிலும் ஆராய வேண்டும். மன அமைதியுடன், தெளிந்த முடிவுடன் செயல்படத் துவங்க வேண்டும். இப்படிச் செயல்படத் துவங்கினால் அதன் முடிவு எதிர்பார்த்தபடி முடியும். மாறி வந்தாலும் இந்த அமைதிப்பட்ட மனதினால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆன்மீகவாதிகளால் தான் இப்படி அழகாகச் சிந்தித்துப் பார்க்க முடியும். அவர்கள் பெறுகின்ற ஞானத்தினால் ஏற்படுகின்ற வளர்ச்சி இது. ஆன்மீகம் என்பது ஆன்மாவோடு இணைந்து இருப்பது. ஆத்ம உணர்வுடன் வாழ்வது. இப்படி ஆன்ம உணர்வுடன் சிந்தித்துத் தர்ம முறையில் வாழ்கின்ற வாழ்க்கை சிறக்கும். நமது சனாதன தர்மத்தில் அளவிடமுடியாத பொக்கிஷங்கள் இருக்கின்றன. பாதியளவு மூட நம்பிக்கைகளும் இருக்கின்றன. தகுந்த முறையில் எல்லாவற்றையும் அறிந்து, அவற்றைப் புரிந்துகொண்டு, நீக்க வேண்டியவற்றை நீக்கி, இணைய வேண்டியவற்றோடு இணைந்து வாழ்வது தான் ஆன்மீக வாழ்க்கை.

ஒவ்வொரு செயலைச் செயகின்றபோதும் எனக்குள்ளிருந்து, இது சரி என்றோ அல்லது நீ செய்வது பிழை! என்றோ ஒரு மெல்லிய குரல் கேட்கும். அதைத் தொடர்ந்து கேட்டு, அதன் படி நடக்க முற்பட்டால். அது நம்மை வழி நடத்தும். நமது வாழ்க்கை. ஆ;ன்மீக வாழ்க்கை. என்னோடு என்னை நிலை நிறுத்திச் செயல்பட்டால், என்னோடு நான் இருக்கின்றேன். இந்த நிலையைப் பழகாவிட்டால் என்னை நான் இழக்கிறேன்.

எனக்குப் பிரச்னை தருவது பிறரல்ல. நான், நான் என்று துள்ளிக்கொண்டு நிற்கும் ஈகோவான நானேதான் எனது பிரச்னை. இந்த ஈகோவைப் புரிந்துகொண்டு. அதை நீக்கி, உண்மையான நான், எனது ஆத்மாவே! என்பதையும் புரிந்துகொண்டு தியானத்தின் மூலம் அதினிலேயே இருக்கப் பழகினால், அதுவே வெளிப்பட்டு இயங்கும். அந்த வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை.

ஒவ்வொன்றையும் நம்பி, நம்பித்தான் நாம் ஏமாந்து போகிறோம்.நமது தொழில், சொத்து, குடும்பம், கௌரவம் ஆகியவற்றில் நாம் வைக்கின்ற நம்பிக்கையை மாற்றி, ஆத்மாவாகிய being  மீது நம்பிக்கை வைத்தால், நாம் உயர முடியும். நாம் விரும்பியவற்றையெல்லாம் ஆத்ம வடிவில் பார்க்கப் பழகினால், ஆன்மீக முதிர்ச்சி தானாக ஏற்படும். அனைத்தும் ஆத்மாவே! என்று பார்த்துப் பழகுகின்றபோது அங்கு ரசவாதம் நிகழும்.

சிந்தாமணி என்று ஒரு கல். அது ஒரு இரும்பின் மீது பட்டால், அந்த இரும்பு தங்கமாக மாறும். அதுபோல் நாம் ஆத்ம உணர்வுடன் பிறரை அணுகுகின்றபோது, அவர்கள் நமக்கு ஏற்றவாறு, நம் விருப்பத்தின்படி நடப்பார்கள். நாம் நினைப்பது நடக்கும். நமக்குத் தேவையானவை தானே வந்து கிடைக்கும். எல்லாம் ஆத்ம வடிவம்! எல்லாம் ஒன்று! தமது பிறப்பால் மாறுபட்டு இருக்கின்றன. இந்த உணர்வு எழுவதற்கு ஆத்ம முதிர்ச்சி இருந்தால் போதுமே!

எனவே, பார்வை மாற்றம் தான் அக மாற்றம். எதைச் செய்தாலும் நான் மகிழ்வுடன் அதை அனுபவித்துச் செய்ய என்னுள் அமைதி ஏற்பட வேண்டும். மனதில் எண்ணமற்ற வெற்றிடம் ஏற்பட்டால் தான் அங்கு ஆனந்த நிலை ஏற்படும். எண்ணமே இல்லாத நிலையில் மனம் இருக்காது. அந்த வெட்டவெளியில் ஆத்ம சக்தி நிரம்பும். ஈகோ அற்ற நிலையில் தான் இது நிகழும்.

இனி நாம் எதைச் செய்தாலும், அது தர்மப்படி உள்ளதா, இல்லையா? என்பதை நன்கு ஆராய்ந்து செய்வோம். ஏனெனில் தர்மத்தை நீ காப்பாற்றினால். தர்மம் உன்னைக் காப்பாற்றும்! என்கிறது கீதை. எத்தனை கோடி நன்மை கிடைக்கும் என்றாலும் தர்மத்தைக் கைவி;ட்டு அதர்மத்தை நாடக் கூடாது. ஏனெனில் அதர்மத்தைச் செய்தால் மன நிம்மதி போய் விடும். தர்மப்படி நடப்பவனுக்கு மனம் அமைதியாய், ஆனந்தமாய் இருக்கும். படுத்தால் உடனே நித்திரை வந்துவிடும். அதர்மமாகச் செயல்படுபவனுக்கு மன உளைச்சல், நித்திரையின்மை, மன அழுத்தம், சோர்வு, தடுமாற்றம் போன்றவையெல்லாம் ஏற்படும். எதிர்மறைக் குணங்கள்; அதிகரிக்கும். தீய பழக்கங்கள் வந்து சேரும். பழகிவிட்டால் பிறகு நாம் விட முயன்றாலும் அவை நம்மை விடாது. இவையெல்லாம் ஒருவனைக் கீழ் நிலைக்குக் கொண்டு சென்று விடும். எனவே, அமைதியாக வாழத் தர்மமாகச் செயல்படுவதும், ஈகோ இல்லாமல் வாழப் பழகுவதும் தான் மிக எளிய வழிகளாகும்.

Click here to view the article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s