யாம் பெற்ற இன்பம் – 9

உலகப் பார்வை நமக்கு மெய்யறிவாகிய ஞானத்தைத் தரவில்லை. உலகத்தில் பொருள்களின் மேல்தோற்றத்தைப் பார்ப்பதும், உறவுத் தொடர்புகளை உணர்ச்சி அடிப்படையில் பார்ப்பதும், பிறர் சொல்லித் தந்தவற்றைப் பின்பற்றி வாழ்வதுமாகத்தான் வாழ்க்கை போகின்றதேயன்றி, நமது எண்ணமாகச் சிந்தித்துப் பார்த்து எதையும் செய்யப் பழகவில்லை என்பது புரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை.

தன்னைப்பற்றி அறிதலாகிய இந்த ஆத்ம வித்தையைப் பழகத் துவங்கியபின், நம்மைச் சுற்றி இருக்கி;ன்ற அனைத்தையும், நிகழ்கி;ற அனைத்தையும் நன்றாக உற்று நோக்கத் தெரிய வேண்டும். எதைப் பற்றி என்றாலும் ஆராய்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு பிரச்னையை ஒரு பக்கமாக மட்டும் பார்க்காமல் பலப்பல கோணங்களிலும் பார்க்கின்ற திறமை ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் அப்பிரச்னையின் உண்மைத் தன்மை வெளிப்படும். ஒவ்வொன்றையும் ஆழமாக உற்றுப் பார்த்து அறிய முற்படும்போது எல்லாம் இறைக் கருணை என்பது புலப்படும்.

ஒரு வேடிக்கையான கதை நினைவிற்கு வருகி;ன்றது. சர் ஐசக்நியூட்டன் என்ற விஞ்ஞானி புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்தவர். இவர் ஒரு நாள் ஒரு பூங்காவில் ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்தபோது¸ திடீரென்று ஓர் ஆப்பிள் அவர் தலையில் விழுந்து பூமியில் உருண்டோடியது.

மரத்தை நிமிர்ந்து பார்த்த அவர் மனதில், மரத்தில் ஒட்டியிருந்த ஆப்பிள் பழம் எப்படித் தானாகவே கீழே வந்துவிழுந்தது? என்ற கேள்வி எழுந்;தது. உடனே இந்தக் கேள்வியின் அடிப்படையில் தன் ஆராய்ச்சியைத் துவங்கினார். புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது வரலாறு. இது விஞ்ஞானப் பார்வை. இயற்கையாக நிகழ்ந்த ஒரு செயல் அவரது கவனத்தை இழுத்துச் சிந்திக்கச் செய்து ஒரு பெரிய உண்மையை வெளிப்படுத்த உதவியது.

இதுவே அவர் விஞ்ஞானப் பார்வையற்ற சாதாரணப் பார்வை மட்டும் கொண்டிருந்த மனிதராய் இருந்தால், அடடே! என் பசி நேரத்திற்கு இந்த ஆப்பிள் சாப்பிடக் கிடைத்ததே! என்று கடித்துத் தின்றுவிட்டுப் போயிருப்பார்.

அவர் எதிர்மறை எண்ணம் கொண்டவராய் இருந்தால், நல்லவேளை! இது ஆப்பிளாக இருந்ததால் நான் பிழைத்தேன்! இதுவே ஒரு தேங்காயாக இருந்திருந்தால்! என் தலை பிளந்து உயிர் போயிருக்குமே! என்று நினைத்திருப்பார்.

அவரே ஆன்மிகப் பார்வை கொண்டவராய் இருந்தால், இந்த ஆப்பிளைப் படைத்து இப்போது என் தலையில் விழ வைத்தது யார்? இதை எடுத்துப் பார்க்கின்ற நான் யார்? படைப்பின் ஒவ்வொரு அம்சமும் எத்தனை வியப்புற்குரியதாக இருக்கிறது! என்னே, இறை ஆற்றல்! என்ற விதத்தில் சிந்தனை சென்றிருக்கும்.

சாதாரணப் பார்வை, விஞ்ஞானப் பார்வை இரண்டும் இருக்க வேண்டும். இரண்டு விதமாகவும் பார்க்கத் தெரிய வேண்டும். அதோடு அதன் உள் இறைத்தன்மையைப் புரிந்துகொள்கின்ற ஆன்மீகப் பார்வையும் கட்டாயம் இருக்க வேண்டும். இப்படிப் பார்க்கின்ற போதுதான் இறைவனின் கருணை முழுமையாகத் தெரிய வரும்.

இந்த மூன்று பார்வைகளைப் பற்றி முன்பே ஒருமுறை எழுதியிருக்கின்றேன். ஆப்பிள் பழத்தைப் பார்க்கின்ற ஒருவன் அதன் வடிவத்தையும், நிறத்தையும் ருசியையும், தன் தேவையையும் பற்றி மட்டுமே நினைப்பது சாதாரணப் பார்வை. பல நுாறு அணுக்கூட்டத்தின் தொகுதியே இந்த ஆப்பிள்! என்று பார்ப்பது விஞ்ஞானப் பார்வை. இந்தப் பழத்தைப் படைத்து எனக்கு உண்ணக் கிடைக்கச் செய்தது இறைக் கருணை அல்லவா! என்று எண்ணுவது ஆன்மீகப் பார்வை. இப்படிப் பார்க்கத் துவங்கும் போது தான் படைப்பு எல்லாமே இறைவன் கருணையே! என்பது விளங்கும்.

இத்தகைய ஆன்மீகப் பார்வை, நமக்குள் ஏற்பட்டுவிட்டால், நமது வாழும் தன்மையே மாறிவிடும். இப்பார்வையுடன் நம்மைச் சார்ந்த உறவுகளைப் பார்க்க முற்படும்போது அவர்களது குற்றங் குறைகள் நம்மை பாதிக்காது. பாவம்! இவர்கள்! இவர்களுக்குத் தெரிந்தது இவ்வளவுதான்! அறியாமையால் இப்படி நடந்துகொள்கிறார்கள்! போன்ற சிந்தனைகள் நம்முள் எழுந்து நம்மை அமைதிப்படுத்தும். தமது கர்மாவைக் கழிப்பதற்கும், எனது கர்மாவை இவர்களோடு சேர்ந்து நான் தொலைப்பதற்குமே இந்த உறவுத் தொடர்புகள் என்னும் உண்மை புரிந்து, நம்மைக் கருணையுடன் நடந்துகொள்ள வைக்கும்.

இப்படி இருக்கத் தெரிந்தால், கருணை கலந்த அன்புடன் நாம் பிறருடன் பழகத் துவங்குகின்ற போது அவர்களிடமும் மாற்றம் ஏற்படும். ஈகோவுடன் உணர்ச்சிகளையும், விருப்பு வெறுப்பு மனப்போக்கையும் கலந்து உரசல்களாக வெளிப்பட்டுக் கசந்த உறவுகள், எல்லாம் ஆத்மாவே! என்ற உணர்வுடன் பார்க்கத் துவங்கிய பின் இருவருக்குமிடையே சாந்தத்தையும், அமைதிப் போக்கையும் உண்டாக்கும். இப்படிப்பட்ட அணுகு முறையால் மன வேறுபாடு ஏற்படாது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உருவாகாது. ஈகோ நிலை, கெமிக்கல் நிலை, ஆத்ம நிலை என்று மூன்று நிலைகளிலும் ஒருவரை மற்றவர் புரிந்து வைத்திருந்தால், அங்கு வேற்றுமை இருக்காது. மாறாகப் புரிந்துணர்வுடன் வாழ்க்கை போகும்.

இந்த ஆராய்ச்சி சிந்தனையின் மூலம், இன்றைய உலகம் மகிழ்ச்சியைத் தரவில்லை. அறிவியலும் மகிழ்ச்சியைத் தரவில்லை. இவை நம்மை அழிவிற்கே இட்டுச் செல்கின்றன. ஆன்மீகம் தான் மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது என்பது புரிகிறதல்லவா! மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தான் இந்தப் பிறப்பு நமக்குத் தரப்பட்டிருக்கிறதே தவிர, துன்பத்தை அனுபவிப்பதற்காக இல்லை. நமது துன்பங்களுக்கு அப்பால், மன எல்லைக்கு அப்பால் நமக்குள்ளேயே ஆனந்த மயமாக இது இருக்கிறது. அதுவே எல்லாமாகவும் இருக்கிறது. இது கற்பனையல்ல. அனுபவித்துப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும்!

சடங்குகளையும், பிரார்த்தனைகளையும் எத்தனை எத்தனையோ காலமாக நாம் செய்தும், நாம் விரும்புகின்ற நன்மை கிடைத்ததா? தொடர்ந்து துன்பம் தானே வந்து கொண்டிருக்கின்றது? எத்தனை கோவில்களுக்குச் சென்று நேர்த்திக் கடன் செய்தாலும் நிம்மதி கிடைத்ததா? ஆனால் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவற்றையும் ஆன்மாவாக, இறைத் தன்மைகொண்ட தெய்வீகச் சக்தியாக, படைப்பெல்லாம் பிரம்மமே! என்ற விழிப்புணர்வுடன் பார்க்கத் தலைப்பட்டால், நமக்குள்ளும் சாந்தி! நம்மைச் சுற்றியுள்ளவற்றிற்கும் சாந்தி. அவர்களின் மன நிலை அலை பாய்ந்து கொண்டிருந்தாலும் அது நம்மைத் தொடாது. நம் மனத்தெளிவு நம்மில் அமைதியை நிலை நிறுத்தும்.

நம் ஊர்களில் உள்ள கோவில்களில் மார்கழி மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி ஆகியவற்றைப் பாடுவார்கள். இப்பாடல்களைப் பஜனையாகப் பாடிக்கொண்டு நகர சங்கீர்த்தனம் செய்வார்கள். பல கோவில்களில் சுப்ரபாதம் அதிகாலையில் ஒலி;க்கின்றது. சாதாரணப் பார்வையில், கோவில்களில் குடி கொண்டிருக்கும் இறைவனைத் துயிலெழுப்புவதற்காகப் பாடப்படுகின்ற பாடல்கள் இவை என்று தான் நாமும் பாடிக்கொண்டிருந்தோம். விஞ்ஞானப் பார்வையில் இப்படி அதிகாலையில் எழுந்து, குளிர் காற்றில் வீதிகளில் பாடிச் செல்வதால், உடலில் ஓசோன் காற்றுப் பட்டுப் புத்துணர்ச்சியும், ஆற்றலும், நோய் எதிர்ப்புச்; சக்தியும் பெருகுகின்றன என்று இவ்வழக்கத்திற்கு விளக்கமளித்துள்ளனர். ஆன்மீகப் பார்வையில் பார்க்கின்ற போது, உள்ளத்தின் உள்ளே உறங்கிக் கிடக்கும் இறை ஆற்றலை, ஆத்மாவின் நுனியாகிய விழிப்புணர்வைத் தட்டி எழுப்புவதற்காகவே இவைகள் பாடப்படுகின்றன என்னும் உண்மை வெளிப்படும். இதைத்தான் விவேகானந்தர் ‘விழிமின்! எழுமின்!’ என்று கூறினார்.

புற இன்பங்களை உண்மை என நினைத்து, ஐம்புலன்களால் அவற்றை அனுபவித்து அறியாமையால் இன்ப, துன்பங்களில் சிக்கி அவதிப்பட்டுக்கொண்டே வாழ்கின்ற நிலை மாறி, நம்மைப் பற்றிய உண்மைகளைப் புரிந்து வாழ்வதற்கு, உள்ளுணர்வு விழிப்படைய வேண்டும்! என்பதே நமது சனாதன தர்மத்தின் குறிக்கோள். பாவங்களைத்; தொலைக்க முயற்சிப்பதல்ல! தன்னை உணர்தலே, நமது தர்மம்!

அதற்காகத்தான், அதைப் புரிந்துகொள்ளத்தான், நடைமுறைச் செயல்களாக இவை போன்றவையெல்லாம் வைக்கப்பட்டிருக்கின்றன. நமது வாழ்வின் நோக்கம், விழிப்புறுதலே! இதைப் பழகுவதற்காகத்தான் வாழ்க்கையின் நெறிமுறைகள் வேதங்களாக வகுக்கப்பட்டன. ஆனால் இன்று அவை வெறும் சமயச் சடங்குகளாக ஆகிவிட்டன. காரணம் மறைந்து போய்க்; காரியம் மட்டுமே நடக்கின்ற நிலையாகப் போய் விட்டது. இதனை ஆராய்ந்து புரிந்துகொள்ள ஆன்மீகப் பார்வை பெற முயற்சிக்க வேண்டும். இதுதான் ஆன்மீகப் பார்வையின் உணர்வும், சிறப்பும்.

Click on here to view/print this article

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s