யாம் பெற்ற இன்பம் – 8

கடந்த சில வாரங்களாக எம் குருவின் மூலம் யாம் பெற்ற இன்பத்தைத் தான், அகவாழ்வின் அரிய உண்மைகளாக உங்களுக்கெல்லாம் எடுத்துரைத்து வருகின்றேன். இதில் பல முதியவர்கள் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இக்கட்டுரை தங்களுக்கு மன நிறைவையும், திருப்தியையும் தருவதாகக் கூறி வாழ்த்துகின்றபோது எல்லாம் எம் குருநாதருக்கே! என்று விழிகளை மூடி அவருக்கு மானசீகமாக நன்றியைத் தெரிவிக்கின்றேன். ஏனெனில் தாயினும் சாலப்பரிந்து அவர் என்னைப் போன்ற அவரடி சேர்ந்த சாதகர்களுக்கெல்லாம் உய்த்து உணர்ந்து உரைப்பவற்றைத்தான் நான் இங்கு திருப்பி எழுதிக்கொண்டிருக்கி;ன்றேன். எமது ஆத்ம முன்னேற்றத்தை அவர் விரும்பி எங்களைக் கடைத்தேற்றப் போட்டுப் போட்டு உருட்டுவதைத்தான், யாம் பெற்ற பெரும் பேறாக மட்டும் இல்லாமல், நீங்களெல்லாம் இங்கு வந்து கேட்டுப் பயன் பெற இயலாவிடினும், எனது கட்டுரையைப் படித்தேனும் சற்று சிந்திக்கட்டுமே என்று தான், குருவின் ஆசியுடன் இந்த முயற்சியை எடுத்தேன்.

இதன் உள்ளே உள்ள சிறு வேண்டுகோள் என்னவென்றால், ஆன்மீக அறிவென்பது, வயது முதிர்ந்து ஓய்ந்து வீட்டில் இருப்பவர்கள், பொழுது போகாமல் மென்று கொண்டிருப்பதற்காக மட்டுமல்ல! இந்தச் சுய அறிவு, இன்றைய இளைய சமுதாயத்தையும் சென்று சேர வேண்டும். அவர்கள் தெளிந்த அறிவால் தங்கள் வாழ்க்கையைப் பார்ப்பதற்கு இக்கட்டுரைகள் உதவ வேண்டும் என்பது தான் எமது குருவின் குறிக்கோளும், விருப்பமும். எனவே இவற்றைப் படிப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் இருப்பவர்களையும் படித்துப் பார்க்கும்படி பழக்க வேண்டும். தமிழ்ச் சமுதாயம் தன்னை உணர வேண்டும். தனது உண்மையான கலாச்சாரத்தின் உள் சாரம் என்ன என்பதைப் புரிந்து வாழ வேண்டும். இதைப் புரிந்துகொண்டுவிட்டால் போலித்தனங்கள் போய், உண்மையான தர்ம நெறி புரிந்து, வாழ்க்கை சிறக்கும் என்பதற்காகவே இந்த ஆன்மீக நீரோட்டத்தில் இளைஞர்களைப் பிடித்திழுக்க விரும்புவது. ஆன்மீகத்திற்கு வயது ஒரு தடையல்ல என்பதை இளைஞர்களும் புரிந்துகொண்டால் தான் அவர்களது கவனம் இதன்பால் திரும்பும். ஒரு நடு வயது வாசகர் என்னுடன் போனில் பேசியபோது எங்களுக்கு எதற்கு ஆன்மீகம்? 60 – 70 வயதுக்குத்தானே அது தேவை? என்றார். இது தான் நமது அறியாமையின் உச்ச கட்டம். நம்மைப் பற்றி அறிதலாக இந்த அறிவு தான், நாம் உண்மையாகப் பெற்றிருக்க வேண்டிய அறிவு. மற்ற விஞ்ஞானம், கணிதம், பொறியியல், பொருளாதாரம், etc. etc… போன்ற அறிவெல்லாம் வெளி உலக வாழ்வின் கௌரவத்திற்காகவும், வயிற்றை நிரப்புவதற்காகவும் மட்டுமே. தன்னைப் பற்றியும், தனது வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பது பற்றியும் அறிந்து வாழ்பவர்களால் தான் இந்தச் சமுதாயமே சிறக்கின்றது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

இனி எம் குருவின் உபதேசத்தின் உட்பொருள் கட்டுரையாகத் தொடர்கிறது.

ஜான் மில்டன் என்ற ஆங்கிலக் கவிஞர், தான் நிகழ்காலத்திலேயே தங்கி மகிழ்ச்சியாக வாழ்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் தனது வாழ்க்கையில் பெற்ற கசப்பான அனுபவங்கள் காரணமாக, ‘எனது கடந்த காலத்தைப் பற்றிய துயர நினைவுகளை என்னிலிருந்து நீக்கவும், வருங்காலத்தைப் பற்றிய பயத்தைத் தவிர்க்கவும், நான் எப்பொழுதும் நிகழ்காலத்திலேயே இருக்க விரும்பினேன்!” என்று ஒரு முறை கூறினார்.

நிகழ்காலத்தில் வாழ்வதென்பது ஒரு சிறந்த யோகப் பயிற்சி. நிகழ்காலத்திலேயே வாழ்ந்தால் எண்ணங்கள் எதுவுமில்லை. மாறாக விழிப்புணர்வு இருக்கும். விழிப்புணர்வில் இரண்டு காலங்களும் எழாது. நிகழ்காலம் மட்டுமே இருக்கும். இப்படி நிகழ்காலத்தில் இருக்கின்றபோது, கர்மா செயல்படுவதை நாம் தடுக்கின்றோம். நினைவுகளும் எண்ணங்களும் எழும்பிச் செயலாக மாறுவது இந்நிலையில் தடுக்கப்படுகின்றது. மாறாகப் பழைய சம்பவங்களையும், பழைய கதைகளையும் மீண்டும் மீண்டும் நினைவு படுத்திப் பார்க்கின்றபோது அல்லது மனதில் அசை போடுகின்றபோது நம் மனம் அவ்வுணர்வுகளை மீண்டும் பெறுகின்றது. பயனற்ற இவ்வுணர்வுகளால் நிகழ்கால மகிழ்ச்சி கெடுகின்றது. மன நிலை கெடுவதால் செய்யும் செயலும் பாழாகின்றது. வெளிப்படும் உணர்வுகளால் உடல் நலமும் கெடுகின்றது.

பழைய சம்பவங்கள் இன்றைய நிலையை அடைவதற்காகப் போடப்பட்ட படிக்கட்டுக்கள் மட்டுமே. பழைய நிகழ்வுகளைப் பாடமாக மட்டுமே பார்க்கப் பழக வேண்டும். அவை நமது இன்றைய நிம்மதியைக் குலைப்பதாக இருக்கக்கூடாது. பழைய நினைவுகள் இன்றைய நிறைவைக் குலைக்க நாம் அனுமதிக்கலாமா? இதற்குப் பதிலாக நமது சக்தியை உள்ளொளியில் நிலை நிறுத்தப் பழக வேண்டும். இதைப் பழகுவதற்காகத் தான் தியானம் செய்கின்றோம். மனமும் பேசாத மௌனத்தில் ஆழ்ந்த நிலையில் தான் எனது விழிப்புணர்வை என்னால் நன்றாக உணர முடியும். என்னைச் சுற்றி மௌனம்: எனக்குள்ளும் மௌனம் என்ற நிலை ஏற்பட வேண்டும். இந்நிலையை அடையத் தான் ஆன்மீகவாதிகள் தனிமையை விரும்புகின்றனர்.

ஒரு தாங்க முடியாத பேரிழப்பு, நம்மில் பெரும்பாலோரை ஒரு வித விரக்தி நிலை அல்லது ஞானத்திற்குக் கொண்டு சென்று வந்திருக்கும். மிக நெருங்கிய உறவினர் இறந்து விட்டால், இனி என்ன இருக்கிறது என்ற விரக்தியால், இந்த வாழ்க்கையே பொய்! என்ற உண்மை மனதிற்கு நெருக்கமான விதத்தில் விளங்கும். ஆனால் இந்த ஞானம் பிறகு போய்விடும்.

மரணப்படுக்கையில் கிடப்பவருக்கு, வாழ்வின் உண்மை மிகத் தெளிவாகப் புலப்படும். தான் இதுவரை விரும்பிச் சேர்த்த எது ஒன்றையுமே இனி அனுபவிக்க முடியாது. செத்தால் கொண்டு போகவும் முடியாது என்பதும், ஆத்மாவைத் தவிர வேறு எதுவுமே உண்மையான சொந்தமில்லை என்பதும் அப்போது புரியும். தான் இதுவரை வாழ்ந்த விதத்தின் குறைபாடுகளும், தவறுகளும் மரணப்படுக்கையில் நன்கு விளங்கும்.

தன் உடலைத் தன்னால் இயக்க முடியாமல், தன் உணர்வை இழந்து கிடக்கின்றபோது தான், தனது இயலாமை தெரிய வரும். அந்நிலையில் வெறும் சதைப் பிண்டமாகக் கிடப்பவரைச் சந்திப்பவருக்கும் இந்த உண்மை பளாரென்று அறையும். வாழ்வின் நிலையாமை முழுமையாக வெளிப்படும். உறையாக, வடிவமாக இருக்கின்ற எதுவுமே நிலையானதல்ல! ஆனால் இந்த ஞானம் தொடர்ந்து நம்மில் தங்கி, நம்மிடத்தில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றதா? என்றால், இல்லை!

மரணப் படுக்கையும், மரணமும் நம்மில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றதா? பொருள்களின், உறவுகளின் நிலையற்ற தன்மையைப் புரிந்துகொண்டு அவற்றின் மீது கொண்ட பற்றுக்களை விலக்கி, என்றுமே நிலைத்திருப்பதான ஆத்மாவின் உண்மைத் தன்மையை உணர்ந்து அதனோடு சேரப் பழக வேண்டும். அப்படிச் செய்கிறோமா? மயான வைராக்கியம் என்று ஒரு பெயரை வைத்து, அதை மறக்கத்தான் மனித மனம் தவறாக விரும்புகின்றது. “பற்றற்றவன் வாழ்க்கை, தாமரை இலை மேல் நீர் போல” என்று கூறுகிறார், சங்கரர்.

‘நான் செத்தால் சொர்க்கம்’ என்று பெரியவர்கள் கூறுவார்கள். நான் என்ற ஈகோ செத்து, அதன் பின் உண்மையான நானாக, ஆத்மாவை நான் என்று உணர்ந்தவனாக வாழ்கின்ற வாழ்க்கை, சொர்க்கத்தைப் போல சுகமாக இருக்கும் என்பதே இதன் பொருள்! உடல் செத்த பிறகு சொர்க்கம் இல்லை! நான் இன்னார்! நான் படித்தவன்! நான் பணக்காரன்! போன்ற, இந்த உடலை நானாக எண்ணிச் செயல்படுகின்ற ஈகோ செத்த பிறகு வாழ்கின்ற வாழ்க்கை சொர்க்கம்! என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்!

உயிரோடு இருக்கும்போதே சாகுங்கள்! விழித்துக்கொண்டு இருக்கும்போதே சாகுங்கள்! இப்படி யாராவது சொன்னால், இதன் உட்பொருள் விளங்குவதில்லை. மாறாகப் பயம் தான் ஏற்படுகின்றது. வாழ்கின்ற என்னைச் சாகச் சொல்கிறாரே என்று துாக்கிவாரிப் போடுகின்றது. துாக்கம் என்பதே சின்னச் சாவு தான்! தினம் செத்துச் செத்துப் பிழைக்கின்ற வாழ்க்கை இது. பிறக்கின்ற பொழுது குழந்தையாகப் பிறக்கின்ற நாம் அதே குழந்தையாகவே தொடர்ந்து இருந்து வாழ்கிறோமா? இல்லையே!

குழந்தை வளர்ந்து சிறுவனாகிச், சிறுவன் இளைஞனாகி, இளைஞன் கணவனாகிக், கணவன் தந்தையாக மாறித், தந்தை தாத்தாவாகி முடிகின்ற வாழ்க்கையல்லவா இது! ஒரு பருவம் போய் மறு பருவம் வரும்போது முந்தின உருவம் எங்கே? புகைப்படத்தில் தெரிகின்ற குழந்தைதான் நான்! என்று தாத்தா சொன்னால், அதைப் பேரன் நம்புகிறானே! அந்தக் குழந்தை எங்கே தாத்தா? என்று கேட்டால் அதற்குப் பதில் என்ன? அது தான் நான்! என்றால், அந்த நான் என்ற சொல் யாரைக் குறிக்கின்றது?; மாறிக்கொண்டே வருகின்ற இந்த உடலையா? அல்லது உடல் மாறி மாறிக் கிழப்பருவம் எய்தினாலும், மாறாமல் உள்ளே இருக்கின்ற உயிராகிய ஆத்மாவையா?

இப்படித் தோற்றமே நிலையற்றதான இந்த வாழ்க்கையில், மற்ற எதுதான் நிலையான இன்பத்தைத் தரமுடியும்? அப்படி நிலையற்றதான பொன் மீதும், பொருள் மீதும், வீடு, கார் போன்ற சொத்துக்கள் மீதும், வீண் பெருமை, வரட்டுக் கௌரவம் போன்ற போலித் தனங்கள் மீதும் ஆசை கொண்டு மனம் அலை மோதி நிம்மதி இழக்கின்ற உண்மை நமக்குப் புரியுமா?

இப்படிச் சிந்தித்து வாழ்ந்தால், வாழ்க்கையைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொண்டு வாழ்ந்தால், மரணத்தைப் பற்றிய பயம் ஏற்படுமா? சொத்து, சுகம் பற்றிய கவலை ஏற்படுமா? காலனைக் காலால் உதைக்கின்ற துணிவு நமக்கும் ஏற்பட்டு விடாதா?

Click here to view/print this article in pdf

Advertisements

2 thoughts on “யாம் பெற்ற இன்பம் – 8

  1. நிஜமாகவே உங்கள் கட்டுரை என் மனதுக்கு ஒரு மருந்தே…என் ஆன்மிக தேடலுக்கும் ஒரு விடை…மனம் அமைதி பெறுகிறது…

    • உங்கள் ஆர்வத்திறக்கும், ஈடுபாட்டிற்கும் மிக்க நன்றி. மேலும் படித்து தெளிவு பெறுங்கள். மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.
      அன்புடன்
      விஜயா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s