யாம் பெற்ற இன்பம் – 10

இன்பமும், துன்பமும் வாழ்க்கையின் விதிகளல்ல. இவை இரண்டையும் உள்ளடக்கியதுதான் வாழ்க்கை. துன்பம் என்பது ஒரு மனோ நிலையே! இந்தத் துன்பம்தான் நம்மைப் படிப்படியாகப் பண்பட்ட நிலைக்கு உயர்த்திக்கொண்டு போகிறது. துன்ப நிலையில் தான் நாம் நம்மைப்பற்றிச் சிந்தித்து ஆராய்கிறோம். இன்பத்திலோ நமது மனம் எல்லோரிலுமாகக் கலந்து விடுகின்றது. நம்மிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், நம் மனதில் ஞாபகப் பதிவுகளாகி விட்ட இன்ப துன்பங்களை அடிக்கடி எடுத்து மீண்டும் புதிதாகப் பார்ப்பதுபோல் நினைத்துப் பார்த்து மனநிலையைக் கெடுத்துக் கொள்வது தான். இப்படிச் செய்து கொண்டிருந்தால் ஆத்ம சக்தியை உணர்ந்து அனுபவிக்க முடியாது.

துன்பத்தை அழி! என்று இறை சக்தியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோமே தவிர, துன்பத்தை நீக்க என்ன வழி என்று யோசித்து அதைத் தீர்க்க நாம் முயற்சிப்பதில்லை. துன்பம் என்பது நமது இயலாமையை உணர்த்துவது. தனிமையில் தான் துன்பம் ஒருவனை வருத்துமே தவிர, ஒரு பொது நிகழ்ச்சியில், கூட்டமான ஒரு சூழ்நிலையில், ஒரு செயலில் ஆழ்ந்து ஈடுபட்டிருக்கும்போது அந்தத் துன்பம் இருக்காது. மறைந்து போய்விடும். எனவே துன்பம் என்பது ஒரு மனநிலையே தவிர உண்மையில் துன்பம் என்பது இல்லை! இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

எனக்குள் இருக்கின்ற ஆத்மாவை நான் உணர்வதற்காக, ஆத்மாவை உணர்ந்தவர்கள், உள்ளத்தின் உள்ளே செல்கின்ற வழியை யோகம் என்ற பெயரில் உருவாக்கினார்கள். இணைதல் என்பது யோகத்தின் பொருள். உள்ளத்தின் வழியே சென்று என்னுள் இணைவதற்குச் சில செயல்முறைகளை அவர்கள் வகுத்துத் தந்தனர். இந்த யோக முறையைப் பாதுகாப்பதற்காக ஒரு பெட்டகமாக சமயம் உருவாயிற்று. இந்த யோகத்திற்கான வழிமுறைகளை சமயமாக அமைத்துத் தந்தபோது வடிவங்கள், சடங்குகள் போன்றவற்றையும் உருவாக்கினர்;. ஆனால் நாளடைவில், இணைவதற்காக உருவாக்கித் தந்தவை அமைதியைத் தராததோடு, வெறும் சுமைகளாக, துன்பம் தருவனவாக அமைந்துவிட்டன.

ஒரு கடவுள்! பல சமயங்கள்! பல்வேறு கோட்பாடுகள்! வழிமுறைகள்! இவை மதங்களுக்கிடையே வேறுபாடுகளை உருவாக்கின. இதனால் மதச் சண்டைகள் உருவாயின. வுரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் பெரும்பாலான பெரும் போர்கள் மதத்தின் காரணமாக ஏற்பட்டவையாகவே இருப்பது தெரிய வரும்.

இந்நிலையில் மாற்றமான ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்திருக்கிறது. இந்தியாவில் உத்திர பிரதேசத்தில், இந்த ஆண்டு மகா சிவராத்திரி தினத்தன்று ஏராளமான முஸ்லிம்கள் திரண்டு சிவன் ஆலயத்திற்குச் சென்று, மலர்களைச் சமர்ப்பித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். கடவுள் ஒன்றுதான்! நாம் ஏன் இதனை வேறு வேறாகக் கருதிச் சண்டை போட வேண்டும்? என்று அந்த முஸ்லிம்களின் குழுத் தலைவர் சொல்லியிருக்கின்றார்.

இப்படியான மாற்றங்கள் உலகம் முழுவதிலும் சிறிது சிறிதாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஓர் இலங்கைத் தமிழனின் துயரம் ஓர் உகாண்டா நாட்டு மனிதனை உலுக்கிப் பகிர்ந்துகொள்ள வைத்திருக்கிறது. இதுதான் கருத்தியல் மாற்றம். நாடுகள் எல்லாமே ஒன்றுதான் என்று ஏற்பட்டுள்ள உணர்வு இது.

கடவுளின் இராஜ்ஜியம் உனக்குள், அம்மா போன்ற சிறந்த நுால்களால் மகாத்மா காந்தியின் சிந்தனையைத் துாண்டிய லியோ டால்ஸ்டாய்க்கு நோபல் இலக்கியப் பரிசு கொடுக்கப்படவில்லை. அமைதி வடிவில் அரசியல் மாற்றம் என்று அகிம்சை வழியில் போராடி வெற்றி கண்ட மகாத்மா காந்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. இவை எல்லாம் வரலாற்றில் இடம் பெற்ற மனித குலத் தவறுகள். ஏனெனில் மனிதகுலம் இன்னும் இந்தக் கருத்தியல் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபடவில்லை.

மகாத்மா காந்தியின் அணைத்துச் செல்கின்ற அகிம்சைப் போக்கினை இன்றைய அமெரிக்க ஜனாதிபதி திரு பராக் ஒபாமா தமது கொள்கையாக ஏற்றிருக்கின்றார். இந்தப் புதிய அளவுகோல்களைப் பார்க்கின்ற போது தான், நமது அறியாமை எந்த அளவிற்குப் பிழையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது விளங்குகின்றது.

பிறரது கருத்துக்கள் நமது கருத்துக்களோடு மோதுகின்றபோது நம்முள் எழுவது கோபம். ஆனால் இதற்கு மாறாக, அதுவும் ஆத்மா! நானும் ஆத்மா! அது தனது கர்மாவைக் கழிக்க வந்திருக்கிறது. எனக்குள் இருக்கின்ற சக்திதான் அங்கும் அதுவாக இருந்து, செயல் படுகின்றது! என்ற எண்ணம் எப்பொழுதும் நிலை பெற்றிருந்தால் என்னுள் மாறுபட்ட உணர்வு ஏற்படுமா? எவ்வளவு சிறியது என்றாலும் ஒவ்வொரு உயிருமே மதிப்பு வாய்ந்த ஒன்றே என்பது புரிய வேண்டும்.

குரு ரிஷிகேசத்தில் இருந்து ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில், அங்கு தவம் புரிந்துகொண்டிருக்கும் எத்தனையோ முனிவர்களைச் சந்தித்திருக்கிறேன். மலையின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நுளம்புகள் வண்டுகளைப் போலப் பெரிதாக இருக்கும். கடித்தால் சுரீரென்று வலிக்கும். ஒரு யோகி தியானத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் இப்படி ஒரு நுளம்பு அவரைக் கடித்தது. அவரது கரம் சட்டென்று உயர்ந்து பட்டென்று அதை அடித்து விட்டது. கொசு கடித்தால் அதனை உடனே அடிப்பது என்பது உடலின் அனிச்சைச் செயலாக நடைபெறுவது. அதே நொடியில் அவரது வாய், மோட்ச சலோ! என்று கூறியதைக் கவனித்த நான், வியந்தேன். கடிபட்டதால் கை அந்தக் கொசுவை அடித்தாலும், உள்ளத்தில் நிறைந்திருக்கும் கருணையால், மோட்சத்திற்குப் போ! என்று அதனை வாழ்த்தினார் அவர்.

ஓர் உயிரைக் கொல்கின்ற தருணத்தில் ஒரு பூச்சி என்றாலும் கூட, நம் மனம் அதனால் சற்றே சஞ்சலப்படுவது இயல்பு. அந்த நிமிடத்தில் நமது கருணை அதனைச் சென்று சேர்கின்றபோது, அது பரிணாமப்படும். நாமும் தவறுக்கு வருந்துவதால் குற்ற உணர்ச்சி ஏற்படுவதில்லை. மதர் தெராஸாவின் கருணை நம் எல்லோரது மனதிலும் இருக்கின்றது. ஆனால் அவர் வெளிப்படுத்தியதைப் போல அதனை நாம் வெளிப்படுத்தவில்லை. அவ்வளவுதான்! கருணையினால் செயல்படப் பழகுங்கள். உங்களில் மாற்றம் தானாக ஏற்படும். பிரம்மமே கருணையாக நம்மில் நிறைந்திருப்பதால். இவ்வுணர்வு உடனடியாகப் பிரதிபலிக்கின்றது.

ஒரு சுனாமி ஏற்படுத்திய தாக்கத்தால் ஒரு கனேடிய சிறுவன், தான் சேமித்து வைத்த சிறு சேமிப்பை அப்படியே துாக்கிக் கொண்டு வந்து, நிவாரண நிதிக்கு அளித்து விட்டான். ஓர் உயிர் படும் துன்பத்தைத் தாங்காத கருணையின் வெளிப்பாடு அது. ஆனால் லாப நஷ்ட கணக்குப் பார்த்து இது புண்ணியம், அது பாவம் என்று சொல்லிக்கொண்டு, திரிவது தான் நமது இயல்பாக இருக்கின்றது. இன்னொரு உயிர் துடிக்கின்றபோது நான் இரங்கினால் அதுதான் கருணையின் இலக்கணம். இதற்கு வழிபாடு ஒன்றும் தேவையில்லை. பார்வை மாற்றம் மட்டும் தான் தேவை. கோவிலுக்குச் சென்று கும்பிட்டு வீடு திரும்புவது ஆன்மீகமல்ல. மனதில் பெருக்கெடுக்கின்ற கருணைதான் ஆன்மீகம். எதெல்லாம் நமக்குத் தேவையானவை என்று நினைத்தோமோ அவையெல்லாமே நிலையற்றவை என்ற உண்மை இன்று நம் கண்களுக்கு முன்னால் நிரூபணமாகிக் கொண்டு வருகின்றது. இழப்பு என்பதை நேரடியாக அனுபவிக்கின்ற நிலை இன்று.

கோடிகளில் புரண்டவர் சுரண்டலில் ஈடுபட்டு மோசடி வழக்கிற்காகக் கை விலங்கு பூட்டப்பட்ட நிலை சமீபத்தில் நிகழ்ந்தது. சத்யம் கம்யூட்டர் கதை இன்று ஆசைக்கோர் அளவில்லை என்பதை நிதர்சனமாக்கி விட்டது. ஓர் அனுபவத்திற்கு ஆசைப் பட்டால் மாயை அங்கு ஆரம்பமாகிறது என்று பொருள். விபரீதமான ஆசையின் துாண்டல் விபரீதமான விளைவுகளைத் தான் கொண்டு வரும். நாம் பெறும் அனுபவங்கள் தரும் திருப்தியெல்லாம் உண்மையான திருப்தியல்ல. திருப்தியைத் தருவதாக அவை தோன்றினாலும் பின்னால் அவை பிரச்னைகளாகத் தான் மாறி விடுகின்றன. ஆனால் ஆன்மீகம் அறிவதால் உள்ளத்தில் ஏற்படும் திருப்தி, ஞானத்தால் ஏற்படுவது. அது நிரந்தரமான ஒரு திருப்தி.

நமக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளை நாம் சேகரித்து வைத்துள்ள அனுபவ ஞாபகத்தால் தான் தீர்க்க முயல்கின்றோமே தவிர, விழிப்புணர்வுடன் நிகழ்காலத்தில் நின்று அவற்றின் உண்மை நிலையைப் பார்ப்பதில்லை. சிந்தித்துப் பார்த்து ஒரு பிரச்னையை அணுகினால்தான் அதனைத் தீர்க்க முடியும். ஒரு பிரச்னைக்கு எதிரொலிப்பது பிழையாகிப் போகும். எதிர்கொள்வது தான் தீர்வைக் கொண்டு வரும். உணர்வு பூர்வமாக பிரச்னையை அணுகவேண்டுமே தவிர, உணர்ச்சி பூர்வமாக அணுகக்கூடாது. உணர்வு வேறு, உணர்ச்சி வேறு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நம் உள்ளுக்குள் இருப்பது விழிப்புணர்வு. உணர்வு என்னைச் சிந்திக்கத் துாண்டும். உணர்ச்சி என்பதோ பிறரால் என்னுள் திணிக்கப்படுவது. வெறியைத் துாண்டுவது.

தமிழ் தமிழ் என்று உணர்ச்சி வசப்பட்டதால் தான், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் வருந்தத்தக்க நிலைக்கு இன்று தள்ளப்பட்டிருக்கிறார்கள். உணர்வுபூர்வமாக சிந்தித்து அன்றைய தலைவர்கள் அடுக்கு மொழிகளில் மயங்கிப் போகாமல், பின் விளைவுகளை எண்ணிப் பார்த்துச் செயல்பட்டிருந்தால் நாம் இன்று சம அந்தஸ்துடன் நம் இடத்திலேயே நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியும். இன்றைய தமிழனின் நிலை உணர்ச்சிக் கிளர்ச்சியால் விளைந்த விளைவு. இந்த உண்மை சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. துப்பாக்கிக் குண்டு, விளையாட்டுப் பந்து! என்பதன் உண்மைப் பொருள் இன்று நமக்கு விபரீதமாகப் புலப்பட்டுள்ளது. புரிய வைக்கப்பட்டிருக்கிறது.

அன்றாடச் செயல்கள் ஒவ்வொன்றும் என்னால் அமைதியாகப் பதற்றமின்றிச் செய்யப்படுகின்றனவா? என்று நம்மை நாமே சோதித்துப் பார்க்க வேண்டும். எனக்குள் அமைதி இருந்தால் தான் வெளி அமைதியை என்னால் உணரவும், அனுபவிக்கவும் முடியும். உங்களுக்குள் இருக்கின்ற இந்த அமைதியைக் கண்டுபிடிப்பது ஆன்மீகம். இந்த அமைதியை வெளியிலிருந்து யாரும் தர முடியாது. ஐக்கிய நாடுகள் சபை கூடத் தர முடியாது. இந்த உள்ள அமைதிக்குத் தான் சாந்தி என்று பெயர். மனம் ஆத்மாவின் ஒரு வெளிப்பாடு. இந்த மனதில் எனது எண்ணங்களை, தேவைகளையெல்லாம் நான் அடுக்கி வைத்துக்கொண்டிருக்கிறேன். இவை மனதை அடைத்துக் கொண்டு, அதனைப் பிரச்னைக் குள்ளாக்கி, சஞ்சலப்படுத்துகின்றன. பலரிடமிருந்து பல்வேறு கருத்துக்களைப் பெற்று அடுக்கி வைத்துக்கொண்டு நான் துன்பப் படுகிறேன். இவற்றிலிருந்து விடுபட அறிவைப் பயன்படுத்துகின்றோமா? எனது மனத் துாண்டல்களை நான் ஒவ்வொன்றாக ஆராய முற்படுகின்ற போதுதான,; அறிவைப் பாவிக்கின்றபோது தான் அவற்றை எண்ண அளவிலேயே இல்லாமற் செய்துவிட முடியும். உலகம் முழுவதும் அலைகளாக நிரம்பியிருக்கின்றது. எனது மன அலைகள் அவற்றின் அடிப்படையில் ஏற்பட்டவைதான். இந்த அலைகளை அமைதியாக்க, இல்லாமற் செய்யவே தியானம் செய்ய வேண்டும்.

நான் ஆத்மா! ஆத்மாவின் உறை இந்த உடல். கண்ணுக்குத் தெரியாதது கண்ணுக்குத் தெரிகின்ற இந்த உடலின் மூலம் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றது. மனம் தான் அனுபவிக்கின்றது. உடல் அதற்கு உதவுகின்றது. உருவமற்றது., உருவத்தால் வெளிப்படுகின்றது. அனுபவிக்கின்றது.

இப்போதைய கால கட்டத்தில் பிரம்மம் உலகின் ஒரு அடுக்கின் தோலை உரித்துக் கொண்டிருக்கின்றது. பழைய கலாச்சாரமெல்லாம் உடைபடுகின்ற நிலை. உலகம் முழுவதும் நெருக்கடி நிலை. உலகம் ஒரு புதிய கருத்து நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. நீயா? நானா? என்றிருந்த நிலை மாறி, நீயும் நானும் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது. ஐம்பதுகளிலிருந்த முதலாளித்துவம் முடிந்தது. பொதுவுடமை அடிப்படையாக அமைந்த சகோதரத்துவம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. உலகம் முழுவதும் இறையருளாகப் பரவி நிற்கின்ற கருணை, எனக்குள்ளேயும் நிரம்பியிருப்பது, வெளிப்படும் நிலைக்கு என்னை நான் ஆன்மீக உணர்வால் தர்ம வழியில் நடக்கின்ற விதத்தில் மாற்றி அமைக்க வேண்டும். அதர்ம வழியில் நடப்பவனுக்கு பயம் அதிகம். தர்ம வழியில் வாழ்பவனுக்கு அச்சமென்பதே இல்லை. எனவே தர்மப்படி வாழுங்கள். எனக்குள் இருப்பதை நான் அடையாளம் கண்டு வாழ்வதால் எனது வாழ்க்கை சிறக்கும். தன்னை அறிந்து வாழ்பவனுக்குப் பிறப்பின் நோக்கம் முற்றுப்பெற்று விடுகின்றது. எல்லோருமே விரும்புவது இந்த விடுதலையைத் தான். எனவே உங்களை அன்பினால் நிறையுங்கள். உங்களை கருணையினால் முழுமைப்படுத்துங்கள். உங்கள் சுற்றுச்சூழலை அன்பு மயமாக்குங்கள். உங்களை உங்களிடமிருந்து ஞானத்தால் விடுவியுங்கள் ஆசையால் செயல்படுவதை விட்டுவிட்டு, அன்பினால், கருணையினால் செயல்படுங்கள். ஈகோவினால் செயல்படும் தன்மையிலிருந்து ஆன்ம நிலையிலிருந்து செயல்படும் நிலைக்கு மாறுங்கள். இத்தன்மையால் உயருங்கள்.

Click here to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s