யாம் பெற்ற இன்பம் -7

சாதாரணப் பார்வையுடன் வாழ்பவர்களை விட, விஞ்ஞானப் பார்வையுடன் எல்லாவற்றையும் பார்ப்பவர்களுக்கு, ஆன்மீகம் எளிதில் விளங்கும். ஏனெனில் சாதாரணப் பார்வையில், சிந்தனை இல்லை. விஞ்ஞானப் பார்வையில் ஆராய்ச்சியும், சிந்தனையும் இருக்கும். மேலோட்டமாகப் பார்க்காமல், என்ன, ஏன், எதற்கு, எப்படி என்ற வினாக்களுடன் கூடிய துருவி துருவிப் பார்க்கும் சிந்தனை இது. இதன் அடுத்த கட்டமாகிய ஆன்மீகப் பார்வை ஏற்பட்டவுடன், எல்லாமே அவன் கருணை என்பதும், இருப்பவை எல்லாம் வேறு வேறு போல் தெரிந்தாலும், எல்லாம் ஒன்றே என்பதும், எல்லாமே ஒளி மயம் என்பதும், எனக்குள் இருப்பதும் அதுதான்! என்பதும் புரிந்துவிடும் ஆன்மீகக் கண்ணோட்டத்தைப் பெற்ற பிறகு, சாதாரணப் பார்வையோ, விஞ்ஞானப் பார்வையோ, எந்தவிதமான ஆராய்ச்சியோ வந்து கலக்கக்கூடாது.

நம்பிக்கைக்குரிய, ஒரு சரியான, உண்மையான குருவை நாடிச் சென்று, அவர் உரைக்கின்ற உபதேசங்களின் வாயிலாக வேத உண்மைகளைப் புரிந்துகொண்டு, ஞானத்தைப் பெற வேண்டும். அப்படிப் பெற்றதை உணர்ந்து, பழகி, அனுபவிக்கத் துவங்கினால், ஏற்கனவே நமக்குள்ளேயே இருப்பதான அந்த ஞானம், குருவின் துாண்டுதலால் ஒளி பெற்று, பரிணாம முன்னேற்றமும், உள்ள உயர்வும் அதிகரிக்கும். தமக்குரிய உண்மையான குருவை அடைந்தவர்கள், இந்த நிலையை நிச்சயம்அடைவர்.

நாம் முன்னரே, நமக்குத் தெரியாமலேயே ஆன்மீகப் பாதையில் வாழ்ந்து வந்ததால்தான், இந்த ஞானத்தைப் பெறுகின்ற பேறு கிடைக்கின்றது. நாம் நமது முயற்சிகளை எப்பொழுதோ அதை நோக்கித் துவக்கியிருந்தால் தான், அதற்குரிய வழி நமக்குரியதாக அமைக்கப்படும். நாம் வெட்டவெளிப் பேரருளை நோக்கித் திரும்பினால், அது நம்மை ஆட்கொள்ளக் காத்திருக்கிறது. நுணாவத்தில் நின்று, ஆர்க்டிக் பகுதியைப் பார்க்கின்றபோது, நம் கண்களுக்கு வெறும் ஒளிமயமான, வௌ்ளை நிற வெட்ட வெளியாகத் தானே தெரியும்! படைப்புகளாக எதுவுமே இருந்துத் தடை செய்யாத ஒளிவெளியாக நம் கண்களுக்கு அது காட்சியளிக்கும். அதுதான் நமக்குள் இருக்கின்ற வௌ்ளை வெளி! பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் நின்று, ஆத்மாவாகத் தன்னைப் பார்க்கின்றவர்களுக்கு, இந்த வெளி வெட்ட வெளிச்சமாகப் புலப்படும். எண்ணங்களைத் தனக்குள் பின்னிவிட்டுக்கொண்டு, எண்ணங்களால் அடைபட்டுக் கிடப்பவர்களுக்கு இது புலப்படாது. இந்த ஒயிட் எனர்ஜியாகிய வௌ்ளை வெளியை உள்ளத்தில்,அகக்கண்ணால் பார்க்க முடியும். Space consiousness எனப்படும் வெட்டவெளிச் சக்தியின் ஒரு பகுதி அல்லது ஒரு துளிதான் எனக்குள் ஆத்மாவாக, உயிராற்றலாக, விழிப்புணர்வாக இருக்கிறது. இந்த வௌ்ளை வெளியை நாம் உள்ளத்தால், தியானத்தில் பார்க்க முடியும்.

ஆனால், இங்கு ஒன்றைக் கவனியுங்கள்! இது அந்தப் பெருவெளி அல்ல! அதன் முனை மட்டுமே! பேரருள் பெருவெளியான வெட்டவெளிச் சக்தியைநாம் பார்க்க முடியாது. உணரத்தான் முடியும். ஒவ்வொரு படைப்பின் உள்ளேயும் அந்தப் பெருவெளியின் நுனி உயிராக வெளியில் நிறைந்த ஒளியாக இருக்கிறது. நான் சொல்வதைக் கவனமாகச் சிந்தித்தால் விளங்கும். எங்கும் பரந்து எல்லாமாக இருப்பதன் ஒரு நுனி, படைப்புகளில் ஒன்றாகிய எனக்குள்ளும் ஒளியாக, வெளியாக, எனக்குள்ளேயே இருக்கிறது. படைப்பின் தராதரத்திற்கேற்பத்தான் இதுவெளிப்படும்! காட்சியளிக்கும்..!
இப்பொழுது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், வெட்ட வெளிப் பரம் பொருள் எங்கும் பரவி, நிறைந்திருக்கிறது. அதன் ஒவ்வொரு நுனிப்பகுதியாகப் படைப்பாகிய நாம் இருக்கிறோம். நமது பரிணாம வளர்ச்சித் தன்மைக்கேற்ப, விழிப்புணர்வாக, அது வெளிப்பட்டுச் செயல்படுகின்றது. அதற்கேற்ப நமது வாழ்க்கைத் தரம் அமைகின்றது. புரிகிறதா?

வெளி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தாலும், வெறும் உறையாக மட்டும் அங்கு செயல்பட்டுக்கொண்டு, உள்ளத்தால் விட்டு விலகி, உட்புறமாகத் திரும்பி, அந்த விழிப்புணர்வாகிய, ஒளி நிறைந்த வெளியிலேயே நாம் தோய்ந்திருக்கின்ற நிலையில், உறைக்குரிய வாழ்க்கை ஒருநாள் முடியும். நாம் ஒளி நிறைந்த வெளியில் கலந்து விடுவோம். பரவெளியின் நுனி, படைப்பாய் இருந்தது முடிந்து விட்ட நிலையில், பரவெளியாய் ஆகிவிடும்.

இந்த ஒரு விடயத்தை நாம் முயன்று மிகச் சரியாகப் புரிந்துகொண்டு விட்டால், பிறகு இனி வரும் வாழ்க்கை, எந்த விதத்திலும் என்னுடைய வாழ்க்கை என்ற விதத்தில் இருக்காது. பிரம்மத்தின் விருப்பமாக அது அமைந்து வாழ்ந்து முடியும்.

இதுவரை விழிப்புணர்வு நமக்குள் இருந்ததாக நாம் நினைத்து வந்திருக்கிறோம். விழிப்புணர்வில் தான் நாம் இருக்கிறோம் என்பதை இப்போது தான் புரிந்துகொண்டோம்! இல்லையா? மீண்டும் ஒரு முறை கூறுகின்றேன். பரமாத்மா எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். அவரது ஆற்றலின் ஒரு நுனி எனக்குள் விழிப்புணர்வாக இருக்கிறது. இந்த விழிப்புணர்வின் மீது நானாகக் கருதிய இந்த உறை, அதாவது இந்த உடல் எழுப்பப்பட்டிருக்கிறது. ஹ்யூமன் கவர், பீயிங்கில் போடப்பட்டிருக்கிறது.

உடலின் தொடர்பால் மனம், புத்தியாகச் செயல்பட்டாலும், நான் விழிப்புணர்வில் தான் இருககிறேன். அந்த விழிப்புணர்வு தானே ஆத்மா? ஆகையால் அமைதியும், அன்பும், கருணையுமாக எனது இயல்பு மாறுகின்றபோது, நான் ஆத்மாவாக, ஆத்ம உணர்வில் தோய்ந்த நிலையில் வாழ்கிறேன். புரிகிறதா? ஆத்மா என்பது எப்போதும் இருப்பது. உறையாகிய உடல் வந்து, வந்து போகிறது. பிறப்பு, இறப்பு எல்லாம் உறைக்கு மட்டுமே!

இந்த நிலையில் பிரபஞ்ச இயக்கம் அனைத்தையும் உற்று நோக்கினால், எல்லாமே இறையருள்! சிவம் இல்லையேல், சக்தி இல்லை! என்கிறது, சமயம். Energy ஆற்றல் being இருப்பிலிருந்து வெளிப்படுகிறது என்று சொல்கிறது விஞ்ஞானம். பிரம்மத்திலிருந்து ஆத்மா என்பது ஆன்மீகம். ஆற்றலும், ஆத்மாவும் ஒன்றுதான். எல்லாச் சக்தி அசைவுமே, பரவெளிக் கருணையிலிருந்து தான். அசையாதிருக்கும் பேரருள், சக்தியாக வெளிப்பட்டுச் செயல்படுவதால், பிரபஞ்ச இயக்கம் நிகழ்கின்றது. பால் வெளியில் சூரியக் குடும்பம் இருப்பதும், ஒரு கிரகத்தை இன்னொரு கிரகம் ஈர்ப்பதும், இறையருளினால் தானே!

எனவே படைப்புகள் எல்லாவற்றிற்கும் காரணம் ஆத்மா. பரவெளிப் பேராற்றலின் நுனியானது, ஆத்மாவாகத் தோற்றத்தோடு படைப்பாக வெளிப்படுகின்றது. உருவமற்றதாகப் பெருகிப் பரவி நிற்கின்ற பேராற்றல், உருவங்களாகத் தனது ஒரு நுனியை வெளிப்படுத்துகின்றது. பிரம்மம், சக்தியாக உருவத்தில் நின்று, இயங்கிப் பிரம்மமாகவே மாறுகின்ற விந்தை இது! இதைத்தான் பிரம்மமாய் நின்ற ஜோதி! என்று பாடி வைத்தனர். இது வரை பொருளறியாமல் சொல்லப்பட்டு வந்த இதன் உட்பொருள் தான், மேலே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதை அனுபவித்து வளர்க்க வேண்டும். இது எங்கும் நிறைந்தது. எனக்குள்ளேயும் இருப்பது. ஆகவே மரணத்தைப் பற்றி இனி எனக்குப் பயமில்லை! ஏனெனில், மரணம் உறைக்குத்தான்! பெருவெளிப் பேராற்றலின் ஒரு நுனியாகிய எனக்கல்ல!

Click here to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s