யாம் பெற்ற இன்பம் -6

ஆன்மீக சாதனையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு, வெளி உலகிற்காகச் செய்யப்படுகின்ற செயல்களும், அச்செயல்களால் உண்டாகும் விளைவுகளும் எந்த விதத்திலும் பாதிக்காது. சாதாரண வாழ்க்கை முறையில், ஒருவர் செய்கின்ற ஒவ்வொரு செயலும் ஒரு தடத்தை விட்டுச் செல்லும். ஆனால் ஆன்மீகவாதிகளுக்கு அந்தப் பதிவுகள் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம், ஆத்ம அனுபூதியால் ஏற்படுகின்ற ஞானஒளி நிலையில் அவர்களுக்கு மனமும், புத்தியும் ஒன்றாகி விடுகின்றன. இவை இப்படி ஒன்றாகி விட்ட பின், அங்கு எண்ணமில்லா நிலை ஏற்பட்டு விடுகின்றது. அதன் பின் இருப்பது உணர்வு மட்டுமே!

நான் என்று சொல்லப்படுகின்ற வெட்டவெளி ஆத்ம நிலை என்பது, எண்ணமோ, கருத்தோ, வடிவமோ அல்ல. அது நமக்குள்ளேயே இருப்பதாகிய இருப்பு நிலை. அது தான் எங்கும் இருக்கின்றது. இப்படி எங்கும் நிறைந்திருக்கும் அதைத்தான் இறையருள் என்று கூறுகின்றோம்.

வேலை செய்கின்றபோதும், எண்ணங்கள் எழுகின்றபோதும், பின்புலமாக அந்த உணர்வுகள் தான் இருக்கும். உள்ளே இருக்கின்ற அந்த சக்தியை எடுத்து, நாம் நமது வாழ்க்கைக்காகப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அந்தச் சக்திதான் இவை எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறது என்ற ஞானமும் உள்ளே உணர்த்திக் கொண்டே இருக்கின்ற நிலை இது.

இந்த உணர்வு தானாகிய தன்னைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொண்டவர்களுக்குத் தான் ஏற்படும். மற்றவர்கள் இந்தச் சிந்தனை இல்லாமலேயே செயல்படுவார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால், விழிப்புணர்வுடன் வெளி விவகாரங்களுக்காகச் செயல்பட்டு விட்டுத் திரும்ப அந்த வெட்டவெளியாகத் தான் மாறிவிடுவதே அந்த நிலை. வெட்ட வெளியே நான்! வடிவமாக என்னில் வெளிப்பட்டுச் செயல்படுகிறேன். அப்படி செயல்படுகின்ற போதே, நான் அந்த வெட்டவெளியே! என்ற உணர்வில் இருந்து செயல்படுகிறேன். இப்படிச் செயல்படும்போது, இன்பத்தில் துள்ளிக் குதிப்பதும், துன்பத்தில் உடைந்து போவதுமான நிலை ஏற்படாமல், நம்மை நாம் சம நிலையில் வைத்திருக்க முடியும். புரிகின்றதா?

உயிரியக்கமாகிய நான் வெளிப்பட்டுச் சுய உயர்வு நிலையிலேயே செயல், எண்ணம், செயல்பாடு என்று செயல்பட்டுவிட்டுத் திரும்பவும் எனது இருப்பு நிலைக்கே திரும்பி விடுவதாகிய இப்பயிற்சியைத் திரும்பத் திரும்பத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சியால் இது எமது இயல்பாகிவிடும்.

மாறாக, எனது உண்மைத் தன்மையை மறந்துவிட்டு, வெளி ஆரவாரங்களிலேயே நின்று மயங்கினால், விழிப்புணர்வு தன்னை மறைத்துக் கொண்டுவிடும். பிறகு சாப்பிடுவது, சந்ததி பெருக்குவது, சாவது என்று வாழ்ந்து விட்டுப் பிறப்பின் நோக்கமாகியத் தன்னை அடைதல் என்னும் முயற்சியை நிறைவேற்றாமல், போக வேண்டியதுதான்!

ஆத்மாவாகிய நான் என்னும் உணர்வு, ஆத்மாவை உணராத நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் எனது கவனம், அதனை நோக்கித் திரும்ப வேண்டும் என்று எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உறையிலேயே தங்கியிருக்கும் நானோ, வீடு, கார், சொத்து, சேமிப்பு என்று வெளியிலேயே சுற்றிச் சுழன்று சக்தியை வீணாக்கிக் கொண்டிருக்கின்றேன். இதை நன்றாகப் புரிந்துகொண்டு என்னை அதனிடம் நான் ஒப்படைக்கின்றபோது, அது தன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி, என்னை உயர்த்துகின்றது. இங்கு நான் என்று குறிப்பிடுவது, நம் ஒவ்வொருவரையும் தான்.

ஏனெனில் இந்தச் சக்தி எல்லா இடங்களிலும் பரவி, எல்லாமாக இருக்கிறது. ஆத்மா இல்லாத ஒரு பொருளும் இந்த உலகத்திலில்லை. நீங்கள் இயற்கையின் உயிர்ப்புத் தன்மையை உற்று நோக்கி, அனுபவித்திருக்கிறீர்களா? நம்மைச் சுற்றி இருக்கின்ற இயற்கைச் சூழலின் தோற்றங்கள் எல்லாமே, உயிர்ப்புத் தன்மையைத்தான் வெளிப்படுத்துகின்றன. கொட்டுகின்ற பனி, பச்சைப் பசும் புல்வெளி, கிறீச்சிடும் பறவைக் கூட்டம், சலசலத்து ஓடும் ஆறு, காற்றிலாடும் மரங்கள்! பூத்துத் தலையாட்டி அழகைக் கொட்டுகின்ற மலர்கள், குறுகுறுவென நம்மைப் பார்க்கும் சிறு அணில்கள் என, இப்படி எல்லாமே இயற்கையின் உயிர்ப்புத் தன்மையை நமக்கு மௌனமாக உணர்த்திக்கொண்டே இருக்கின்றன. உறைய வைக்கும் குளிர்கூட உயிர்ப்புத் தன்மையால் தான் நம்மை நடுங்க வைக்கின்றது. எல்லாமே நம் கண்களின் முன்னாலேயே விரிந்திருக்கின்றன. நாம் தான் இந்த அழகுகளையெல்லாம் கவனிப்பதில்லை.

கவிஞர்கள், கலைஞர்கள், ஆயிரம் ஆயிரம் விதங்களில் அல்லது கோணங்களில் இந்த உயிர்ப்புத் தன்மையைப் பற்றிப் பாடி வைத்திருக்கின்றனர். ஓவியங்களாக வரைந்து வெளிப்படுத்தியிருக்கின்றனர். கல்வெட்டுக்குக் கவிதை பாடுபவன் கூடப் படைப்பைப் பாடி, இயற்கையைப் பாடி, மரம், செடி, நதியைப் பற்றிப் பாடி, தேசத்தைப் பாடி, ஊரைப் பாடிப் பிறகுதான் குடும்பத்திற்கு வருவான்! அது ஒரு மரபு!

உலகிலுள்ள எல்லா இலக்கியங்களுமே இயற்கையைப் பாடாமல் துவங்குவதில்லை. கவனித்திருந்தால் இது தெரியும். நாம் தினமும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே, உயிர்ப்புத் தன்மைக்கு ஒரு சாட்சி தான்! இதுவரை இல்லாவிட்டாலும், இனியாவது நம்மைச் சுற்றி இருக்கின்ற எல்லாவற்றையும் ரசிக்கப் பழகுகின்ற தன்மை நம்மில் பெருகட்டும்! ஏனெனில், இவை அனைத்துக்குள்ளும் இருக்கின்ற உயிர்ச் சக்திதான் எனக்குள்ளும் இருக்கிறது. இந்த அகமாற்றம் ஏற்படாமல் ஆன்மீகம் வராது.

ஆன்ம சாதனையில் ஈடுபடுகின்றவர்கள், ஒரு நாளைக்கு மூன்று முறையாவது தமது மூச்சைக் கவனிக்க வேண்டும். மூச்சை வெளியில் விட்டு, உள்ளே இழுத்துச் சற்று நிறுத்தி, மீண்டும் வெளியில் விடுவதை உற்று நோக்குவதன் மூலம், சக்தியைச் சமநிலைப்படுத்த முடியும். இப்பயிற்சியின் மூலம் உள் ஆற்றலை மேம்படச் செய்ய முடியும். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.

மூச்சுப் பயிற்சி செய்கின்றபோது ஈதரிக் எனர்ஜி (Etheric Energy) எனப்படும் தெய்வீக சக்தி, சூரிய சக்தியின் வழியாக வெளிப்பட்டுப் பூமிக்கு வந்து, எனது மூச்சு வழியாகக் காற்றாக உள்ளே சென்று, வெளியேறுகின்றது. இதைப் பிராண வாயு உள் சென்று கரியமில வாயுவாக வெளியேறுவதாக விஞ்ஞானம் கூறுகின்றது. இதுவே ஆன்மீகப் பார்வையில் துாய ஆற்றல் (White energy) உள்ளே சென்று, அதே துாய ஆற்றல் வெளியில் வருவதாகக் கூறுகின்றனர்.

பிரபஞ்சம் முழுவதும் இந்தத் துாய ஆற்றல் ஒயிட் எனர்ஜியாகப் பரவி நிற்கின்றது. அது தான் எனக்குள்ளே சென்று வெளியேறுகின்றது. எனக்குள் ஏற்படுகின்ற எண்ண முடிச்சுகளால் இந்த மூச்சு ஓட்டம் தடைப்படுகின்றது. படுக்கையில் ஒரு முடிச்சு இருந்தாலே உறுத்துமே! நம் மனதில் எத்தனை எண்ண முடிச்சுகள்! அதனால் ஏற்படும் உறுத்தல்கள்! மூச்சுப் பிசகல்கள்!

என்னில் எழும் எண்ணங்களுக்கேற்ப, உணர்ச்சிகளில் மாற்றம் ஏற்படும்போது, மூச்சு விடுவதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். மூச்சு எந்த அளவிற்கு அதிகரிக்கின்றதோ, அந்த அளவிற்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது இருதயத்தைப் பாதிக்கும். மூச்சு எந்த அளவிற்கு அமைதிப்பட்டு இருக்கிறதோ, அந்த அளவிற்கு உடல் நலம் சீரடையும். மனம் அமைதி அடையும். ஆற்றல் சம நிலையில் செயல்படும்.

நம் உடலினுள் உள்ள ஆறு சக்கரங்களும், மூச்சு பாதிப்படைகின்றபோது, அவையும் பாதிப்படைந்து, ஏற்றத் தாழ்வு நிலையில் இயங்கும். இதனால் நாளமில்லாச் சுரப்பிகள் பாதிப்படையும். உடல் நலம் கெடும். எனவே, அமைதி நிலையிலேயே நாம் தொடர்ந்து இருக்க, இந்த மூச்சைக் கவனிக்கின்ற பயிற்சி, மிகவும் உதவும்.

ஏனெனில் ஆத்மா மேலெழும்பி வெளி வருவதற்குத் தொடர்ந்த அமைதி நிலை மிக மிக அவசியம். ஆத்மா என் உள்ளே எப்பொழுதும் இருக்கின்றது. அதை உணரா நிலையில் செயல்பட்ட வரை, அது தன்னை வெளிப்படுத்தாது. இந்நிலை மாறி, அதை உணர்ந்த நிலையில் செயல்படுவது, பிறகு அதுவே செயல்படுவது என்று படிப்படியாக உயர்வதற்கு இந்த முயற்சிகள் ஆத்ம சாதகர்களுக்கு உதவும்.

தனிமையை விரும்பித் தனிமையில் இருத்தல், எண்ணங்களில் சிக்கிச் சீரழியாமல், தன்னில் தான் கண்ட, வெட்ட வெளியில் தொடர்ந்து இருக்கப் பழகுதல், தினமும் மூச்சுப் பயிற்சி, தியானப் பயிற்சி ஆகியவற்றைத் தவறாமல் செய்தல், ஞானம் பெறுதலாகிய சத் சங்கத் தொடர்பில் தன்னை எப்பொழுதும் ஈடுபடுத்துதல் போன்றவை மூலம் ஓர் ஆன்ம சாதகர் தன்னைத் தொடர்ந்து உயர்த்திக் கொள்ள முடியும்.

Click here to view this article in pdf

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s